மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம்: 48

ஞானப் பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஞானப் பொக்கிஷம் ( பி.என்.பரசுராமன் )

செயங்கொண்டார் வழக்கம்பி.என்.பரசுராமன்

##~##

ழகப் பழக, எதுவும் வழக்கத்தில் வந்துவிடும். அப்படி வழக்கத்தில் வரக்கூடியவை நல்லவையாக இருந்தால், நம்மை வாழவைக்கும்; கெட்டவையாக இருந்தால், நம்மைக் கீழே தள்ளிவிடும். இது நமக்குத் தெரிந்திருந்தாலும், எது நல்லது, எது கெட்டது என்பதை நம்மால் பகுத்துணர முடியவில்லை என்பதுதான் பிரச்னையே!

அப்படிப்பட்ட நிலையில், 'அவசர கால’ உணவாக நமக்கு உதவுபவை, பழமொழிகள். அவை நமக்கு நல்லதையும் கெட்டதையும் சொல்லி, நமக்கு அறிவுறுத்துகின்றன.

'நல்லதை மட்டும் சொன்னால் போதாதா? கெட்டதையும் சொல்ல வேண்டுமா?’ என்ற கேள்வி எழும். நியாயம்தான்! ஆனால், நல்லது- கெட்டது இரண்டும் கலந்ததுதான் உலகம். ஒன்றை மட்டும் எதிர்பார்த் தால், அது நடக்காது. இன்பத்தின் கலப்பு இல்லாத துன்பமும் இல்லை; துன்பத்தின் கலப்பு இல்லாத இன்பமும் இல்லை. இதை நமக்கு உணர்த்தி, எச்சரிக்கும் விதமாகவே நல்லதையும் கெட்டதையும் சேர்த்தே சொல்லி, நமக்கு வழி காட்டுகின்றன பழமொழிகள்.

'ஹ! பழமொழிகள்தானே! நமக்குத் தெரியாததா?’ என்று, அலட்சியமாக எண்ணிவிடக்கூடாது. நமக்குத் தெரிந்த பழமொழியில்கூட, அதன் உள்ளர்த்தம் நமக்குத் தெரியாது. உதாரணமாக...

ஞானப் பொக்கிஷம்: 48

'தாயும் பிள்ளையும் ஆனாலும், வாயும் வயிறும் வேறு’ என்ற பழமொழி. இதற்கு நாம் கொள்ளும் பொருள் வேறு!

ஆனால், இந்தப் பழமொழி விஞ்ஞானபூர்வமான ஓர் உண்மையை உள்ளடக்கியுள்ளது. யாராக இருந்தாலும் சரி, அவர்கள் உணவின்றி வாழ முடியாது. அந்த உணவும் வாய் வழியாகத்தான் அவர்களின் வயிற்றுக்குப் போகவேண்டும். ஆனால், கருவுற்றிருக்கும் தாயின் வயிற்றில் உள்ள பிள்ளைக்கு, அதன் வாயில் உணவு ஊட்டமுடியுமா என்ன?

பிறகு, அந்த ஜீவனுக்கு உணவுக்கு என்ன வழி? தாயார் உணவு உண்ணுவாள். அதன் சாரம், உணவாக நேரே பிள்ளையின் வயிற்றுக்கே, தொப்புள்கொடி வழியாகப் போய்விடும். அதாவது, தாய்க்கு உணவு வாய் வழியாக! அவள் வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு உணவு நேரே வயிற்றின் வழியாக! வாய் வழியாக அல்ல! ஆக, வாயும் வயிறும் வேறு வேறு!

இன்று விஞ்ஞானம் சொல்லும் இந்த உண்மையைத்தான் அன்றே எளிமையாக, பழமொழியாகச் சொல்லிவைத்தார்கள் நமது முன்னோர்கள். இவ்வாறு வழிவழியாக, அனுபவத்தில் வந்த பழமொழிகளை ஒவ்வொன்றாகச் சொல்லி, அதற்குண்டான கதைகளையும் சொல்லி, பாடல்களாகவே பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள் அவர்கள்.

அவற்றில் பல கதைகள் புதுமையானவை. எட்டு வரிகள் கொண்ட பாடல்களில், 6 அல்லது 7 வரிகளில் கதையைச் சொல்லிவிட்டு, கடைசி வரியில் அதற்குரிய பழமொழியையும் சொல்லி, பசுமரத்தாணி போல் பதிய வைக்கும் நூறு பாடல்களைக் கொண்ட அந்த நூலின் பெயர்... செயங்கொண்டார் வழக்கம்.

பெயரில் 'வழக்கம்’ இருந்தாலும், இந்த நூல் வழக்கத்தில் இல்லாமல் வெகு காலம் ஓலைச்சுவடியாகவே இருந்தது. 1914-ம் ஆண்டுதான் இது அச்சு வாகனம் ஏறியது. அதன் பிறகு 45 ஆண்டுகள் கழித்து, அடுத்த பதிப்பு வெளியாயிற்று. அதுவும் இப்போது கிடைப்பதற்கு அரிதாக இருக்கிறது. இந்த நூலில் இருந்து ஒரு சில தகவல்களைப் பார்க்கலாம்.

ஞானப் பொக்கிஷம்: 48

கொடையில் சிறந்தவனான கர்ணன், ஒருநாள் எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தான். 'வால் கிண்ணம்’ என்று, போன தலைமுறைவரை சொல்லப்பட்ட கிண்ணம் அதுவும் தங்கக் கிண்ணத்தில் இருந்த எண்ணெயை இடது கையால் எடுத்து வலது கையில் ஊற்றி, உடம்பெங்கும் தேய்த்துத் தடவிக்கொண்டு இருந்தான். அந்தக் கிண்ணம் கர்ணனுக்கு இடதுகைப்புறம் இருந்தது. அதை எடுத்துத் தன் வலது உள்ளங்கையில் கவிழ்த்து, கிண்ணத்தைக் காலியாக்கிக் கீழே வைத்தான்.

கையில் ஊற்றிய எண்ணெயை உடம்பில் தேய்த்துக்கொள்ள இருந்த நேரத்தில், ஏழை அந்தணர் ஒருவர் வந்து, தானம் கேட்டார். உடனே கர்ணன், இடதுகைப்புறம் இருந்த தங்கக் கிண்ணத்தை அப்படியே இடது கையால் எடுத்து, அந்தணரிடம் நீட்டினான்.

அதைப் பெற்றுக்கொண்ட அந்தணர், ''கர்ணா! இடது கையால் தானம் கொடுக்கக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா? ஏன் இப்படிச் செய்தாய்?'' எனக் கேட்டார்.

''ஸ்வாமி! இடது கைப் பக்கமாக இருக்கும் கிண்ணத்தை எடுத்து வலது கைக்கு மாற்று வதற்குள், என் மனது மாறிவிட்டால்..? மேலும், வலது கைக்கு மாற்றுகிற நேரம்கூட நீங்கள் காத்திருக்கக்கூடாது என்பதற்காகவே அப்படிச் செய்தேன்'' என்றான் கர்ணன்.

அந்தணர் வியந்துபோய் கர்ணனைப் பாராட்டிவிட்டு, தங்கக் கிண்ணத்துடன் சென்றார்.

வியாச பாரதத்திலோ, வில்லிபாரதத்திலோ இந்தத் தகவல் சொல்லப்படவில்லை. ஆனால், இக்கதை, சிலரிடம் பரவி இருக்கிறது. செயங்கொண்டார் வழக்கம் எனும் இந்நூலிலும் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. இதோ பாடல்....

வாழிரவி சுதன் வலக்கையால் எடுத்துக்
கொடுக்கும் முன்னே மனம் வேறாம் என்று
ஏழை மறையோற்கு இடக் கையாலே எண்
ணெய்க்கிண்ணம் ஈந்தான் அன்றோ?
ஆழிதனில் பள்ளி கொள்ளு மால் பணியும்
செயங்கொண்டார் அகன்ற நாட்டில்
நாளை என்பார் கொடை தனக்குச் சடுதியிலே
இல்லை என்றால் நலமதாமே

(செயங்கொண்டார் வழக்கம் - பாடல் 51)

தானம் கேட்பவர்களை 'நாளைக்கு வா!’ என்று சொல்லி இழுத்தடிப்பதைவிட, இன்றே 'இல்லை’ என்று சொல்லிவிடுவது நல்லது என்ற தகவலும் இப்பாடலில் உள்ளது. இதைச் சொல்லும் பழமொழியே, பாடலின் தலைப் பாக, 'நாளை என்பார்க்கு இன்று இல்லை என்பார் நல்லவர்’ என இடம் பெற்றுள்ளது.

அடுத்து... 'யானை நிழல் பார்க்கையில், தவளை வந்து கலக்கினாற் போல’ என்று ஒரு பழமொழி உண்டு. அதற்குண்டான கதை யைப் பார்த்துவிட்டு, நூலாசிரியர் சொல்ல வருவதைப் பார்க்கலாம்.

யானை ஒன்று தன் வடிவத்தைப் பார்க்க வேண்டும் என்று (நாம் கண்ணாடியில் பார்ப்பதைப்போல) ஒரு குளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. கலங்காத, தெளிவான குளத்து நீரின் பிரதிபலிப்பில் தன் நிழலைப் பார்க்கலாம் என்பது யானையின் எண்ணம்.

போகும் வழியில் யானை, ஒரு தவளையைப் பார்த்தது. உடனே, ''சொறி பிடித்த தவளையே! போ ஓரமாய்!'' என, தவளையை இகழ்ந்தது. குளத்தை நெருங்கிய யானை, அதில் தன் நிழலைப் பார்க்க முயன்றபோது, யானையால் இகழப்பட்ட அந்தத் தவளை 'படக்’கென்று தண்ணீரில் தாவிக் குதித்துத் தண்ணீரைக் கலக்கியது. யானையின் எண்ணம் பலிக்காமல் போனது. சிறிய தவளையை இகழ்ந்ததன் பலன் இது! இனி, நூலாசிரியரின் கருத்தைப் பார்ப்போம்.

'ஸ்ரீராமர் அம்பின் நுனியில் களிமண் உருண்டையை வைத்து, கூனியின் கூனல் முதுகில் ஏவினார். இந்தத் தகவலை 'பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ் உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உன்னுவாள்’ எனக் கம்பரும் கூறுகிறார். அதை மனத்தில் வைத்திருந்த கூனி, ஸ்ரீராம பட்டாபிஷேகத்தைத் தடுத்து, ஸ்ரீராமரைக் காட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தாள். அதாவது, யானையின் நிழலைப் பார்க்க முடியாதவாறு தவளை செய்ததைப்போல, ஸ்ரீராமரின் பட்டாபிஷேகம் நடவாதபடி கூனி தடுத்தாள் என்கிறார். இந்த நூலின் ஏழாவது பாடல் இதைத் தெரிவிக்கிறது.

பானு குல ராமனுக்குப் பட்டாபி
ஷேகம் எனப் பகர்ந்த போது
கூனி ஒரு மித்திரத்தைக் கெடுத்து வனம்
உறைய விட்ட கொள்கை போல
மான் அணியும் கரத்தாரே! செயங்கொண்டாரே!
புவியின் மகிமை சேர்ந்த
அனை நிழல் பார்க்கையிலே தவளை வந்து
கலக்கிவிடும் அது மெய் தானே

பழமொழிகளையும் இதிகாசப் புராணக் கதைகளையும் அழகாகச் சேர்த்து உருவாக்கப் பட்ட 'செயங்கொண்டார் வழக்கம்’ எனும் இந்த நூல், நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபைச் சேர்ந்த முத்தப்பச் செட்டியார் என்பவரால், 200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. கதை சொல்லிகளுக்கும், எழுத்தாளர்களுக்கும், சொற் பொழிவாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள நூல் இது. குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்தால், தமிழும் நன்மையும் சேர்ந்தே வளரும்.

- இன்னும் அள்ளுவோம்...