Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

கீழ மருத்துவக்குடி கோயிலில் மங்கல விழாக்கள் எப்போது? வி.ராம்ஜி

ஆலயம் தேடுவோம்!

கீழ மருத்துவக்குடி கோயிலில் மங்கல விழாக்கள் எப்போது? வி.ராம்ஜி

Published:Updated:
##~##

கோயில் நகரம் எனும் பெருமை பெற்றது கும்பகோணம். கும்பகோணத்தில் மட்டுமல்லாது, அதைச் சுற்றியுள்ள பல ஊர்களிலும் பிரமாண்டமான கோயில்கள் உள்ளன.

ஓர் ஊரில் இருந்து மற்றொரு ஊருக்குக் கிளம்பிச் செல்லும் வழியில் குறைந்த பட்சம் இரண்டு கோயில்களையேனும் பார்த்துவிடலாம். அதேபோல், அந்த ஊரில் இருந்து கிளை பிரிந்து செல்லும் சாலை வழியே சென்றால், இன்னொரு கிராமத்தை அடையலாம். அங்கேயும் அழகியதொரு ஆலயம் கம்பீரமாய் நின்றிருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கோயில்கள் எல்லாமே பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் காலத்தில், மிக நேர்த்தியுடனும் ஈடுபாட்டுட னும் கட்டப்பட்டவை ஆகும். அப்படிக் கோயிலைக் கட்டிக் கொடுத்து விட்டு, மன்னர்கள் சும்மா இருந்துவிடவில்லை; பூஜைக்கு அந்தணர்கள், அவர்களுக்கு வீடுகள், நைவேத்தியத்துக்கு நிலங்கள், நெல்மணிகள், அதை விதைக்கவும் அறுக்கவும் வேளாளர்கள், இறைவனுக்கு அணிவிக்கும் பூக்களுக்காக நந்தவனங்கள், ஆடுகள், மாடுகள் என நிவந்தங்கள் பல கொடுத்து, அறப்பணி செய்திருக்கிறார்கள்.

ஆலயம் தேடுவோம்!

கோயிலில் திருவிழா நடப்பதற்கும், ஸ்வாமி திருவீதியுலா வருவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டி ருக்கிறது. ஸ்வாமி வீதியுலா வருவதற்கு வாகனங்கள் தயார் செய்யப்பட்டு, அதற்கு வர்ணங்கள் தீட்டப்பட்டு என கோயில் தொடர்பான ஒவ்வொன்றையும் கண்ணும் கருத்துமாகச் செய்திருக்கிறார்கள் மன்னர்கள்.

எல்லா ஊரிலும் ஒரே நாளில் திருவிழா என்று இல்லாமல், இந்த மாதத்தில் இந்தக் கோயிலில் விசேஷம் என்றும், அடுத்த மாதம் வேறு ஊர் கோயிலில் திருவிழா என்றும், அதையடுத்து இந்தக் கோயிலில் ஸ்வாமி திருவீதியுலா வருவார் என்றும், எல்லா மாதங்களிலும் விழாக்களும் கொண்டாட்டங்களும் நடத்துவதற்காகத் திட்டமிடப்பட்டு, விழாக்கள் விமரிசையாக நடந்தேறியுள்ளன.

கும்பகோணத்துக்கு அந்தப் பக்கம் தாராசுரம், ஆவூர், ஊத்துக்காடு என வரிசையாக எல்லா ஊர்களிலும் கோயில்கள் இருக்கின்றன. இந்தப் பக்கம் திருநாகேஸ்வரம், ஒப்பிலியப்பன், அய்யாவாடி, அம்மன்குடி எனப் பல கோயில்களைத் தரிசிக்கலாம்.

சென்னை செல்லும் வழியில் பெட்டிகாளியையும், மாயவரம் செல்லும் வழியில் ஆடுதுறை, குத்தாலம், திருவிடைமருதூர் என்று பல தலங்களையும் தரிசிக்கலாம். இந்த ஊர்களில் இருந்து கிளை பிரிந்துசெல்லும் வழியில் சூரியனார்கோயிலையும், திருமண வரம் தரும் திருமணஞ்சேரி திருத்தலத்தையும் தரிசிக்கலாம்.

ஆடுதுறையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது கீழ மருத்துவக்குடி. சோழர்களின் ஆட்சியில், இங்கே மிகப் பெரிய மருத்துவச் சாலை, அதாவது மருத்துவமனை இருந்ததாகச் சொல்வர். இந்தக் கிராமத்தில் ஸ்ரீஉடைய வேதீஸ்வரர் எனும் திருநாமத்துடன் சிவனார் அருளாட்சி செய்யும் ஆலயம் உள்ளது. இங்கு அம்பாளின் திருநாமம்- ஸ்ரீமாதுமை அம்பாள். ஒருகாலத்தில் விழாக்களுக்கும் விமரிசையான கொண்டாட்டங்களுக்கும் குறைவில்லாத கோயிலாகத் திகழ்ந்தது இந்த ஆலயம்.

காலப்போக்கில் காற்றிலும் மழையிலும் கோயில் கட்டடங்கள் சிதிலமாகிப் போக, பூஜை செய்யவோ வழிபாடுகள் மேற்கொள்ளவோ இயலாத வகையில், கட்டடங்களும் தூண்களும் இடிந்தும் பெயர்ந்தும் விழுந்துவிட்டன.

அதையடுத்து, சந்நிதிகளும் சிதைந்துவிட, இறைத் திருமேனிகள் மட்டுமே எஞ்சின. அந்த சாந்நித்தியம் மிக்க திருவிக்கிரகங்களும் மண்ணில் புதையுண்டு கிடந்தன. ஒருசில விக்கிரகங்கள் மட்டும் மேட்டில் நின்றபடி, சாலையைப் பார்த்தவாறு இருந்தன. '''பக்தர்கள் யாராவது வருவார்களா?’ என்று அந்த விக்கிரகங்கள் ஏக்கத்தோடு சாலையைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றும் எங்களுக்கு'' என்கிறார்கள் திருப்பணிக் குழுவினர்.

ஆலயம் தேடுவோம்!

''ஆடுதுறைக்குள் நுழைந்து, காவிரியின் தென்கரைப் பகுதியில், இரட்டை மாட்டு வண்டிகள் பூட்டிக் கொண்டு, வரிசை கட்டி வாகனங்கள் சென்றால், கீழ மருத்துவக்குடி கோயிலில் திருவிழா துவங்கிவிட்டது என்று, கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்த எல்லோரும் அறிந்துகொள்வார்கள். அதையடுத்து நடைப்பயணமாகவும் மாட்டுவண்டிகளில் ஏறியும் ஏராளமான பக்தர்கள் மருத்துவக்குடியில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீஉடைய வேதீஸ்வரரைத் தரிசிக்க வந்து இறங்குவார்கள்.

வந்த இடத்தில், விளைச்சல் குறித்தும், குடும்பம் குறித்தும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வார்கள். மகனுக்கும் மகளுக்கும் அங்கே வரன் தேடும் படலமும் துவங்கும். எல்லாம் நல்லபடியாகத் தகைந்து வந்தால், அங்கேயே ஸ்ரீவேதீஸ்வரரைச் சாட்சியாகக் கொண்டு, வெற்றிலைத் தட்டு மாற்றிக்கொள்வார்கள். பிறகு அறுவடை முடிந்த கையோடு திருமணத்தைக் கோலாகலமாக நடத்திவிட்டுக் குடும்ப சகிதமாக, ஸ்ரீஉடைய வேதீஸ்வரரையும் ஸ்ரீமாதுமை அம்பாளையும் தரிசித்து, தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.

இதெல்லாம் ஒருகாலம்! கும்பாபிஷேகம் நடந்தும், கொண்டாட்டங்கள் நடந்தும் பல வருடங்களாகிவிட்டன. பூஜைகள் இல்லாமலும் நைவேத்தியம் இல்லாமலும் ஸ்வாமியும் அம்பாளும் இருப்பதைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. தற்போது, திருப்பணிகள் நடந்துவருகின்றன. எங்கள் ஊர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதைக் காண ஆவலாகக் காத்திருக்கிறோம்'' என்று ஏக்கத்துடன் சொல்கிறார்கள் ஊர்மக்கள்.

கோலாகல விழாக்கள் நடந்த கோயில், பழையபடி கொண்டாட்டங்களுடன் திகழ வேண்டாமா? கீழ மருத்துவக்குடி யில் உள்ள சிவ ஸ்தலம் சீர்பெற்றுப் பொலிவுடன் இருந்தால்தானே, நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமுமாக நாம் வாழ முடியும்?

ஆலயம் தேடுவோம்!

அம்மையும் அப்பனும் அழகிய சந்நிதியில் இருந்தால்தானே, அவர்களின் சாந்நித்தியம் நம்மையும் நம் குடும்பத்தையும் வாழ்வாங்கு வாழச் செய்யும்? பழையபடி வீதியுலாவும், வீதியுலாவுக்குத் தேவையான வாகனங்களும் செப்பனிடப்பட்டு, கோயிலும் சீரமைக்கப்பட்டு, விரைவில் திருப்பணிகள் முழுமை பெற, ஒவ்வொரு சிவ பக்தரும் தங்களால் இயன்றதைச் செய்தால், மகேசனின் ஆலயத்தில் மங்கல வாத்தியங்களும் வேத கோஷங்களும் ஒலிக்கத் துவங்கிவிடும்.

இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவேனும் ஸ்ரீஉடைய வேதீஸ்வரர் ஆலயம் கும்பாபிஷேகம் காண்பது நமது கைகளில்தான் இருக்கிறது!

படங்கள்: கு.கார்முகில்வண்ணன்

எங்கே இருக்கிறது?

ஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது ஆடுதுறை. இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு பயணித்தால், கீழ மருத்துவக்குடி கிராமத்தை அடையலாம். காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள இந்த அழகிய ஊரில், ஸ்ரீஉடைய வேதீஸ்வரர் எனும் அற்புதமான கோயில் உள்ளது. ஆடுதுறையில் இருந்து கீழமருத்துவக்குடிக்கு பஸ் வசதி மிகவும் குறைவு. ஆடுதுறையில் இருந்து ஆட்டோவில் செல்வதே உத்தமம்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism