Published:Updated:

ஊரைக் காக்கும் ஈஸ்வரன்!

ஊரப்பாக்கம் ஸ்ரீஊரணீஸ்வரர்மஹேந்திரவாடி உமாசங்கரன்

ஊரைக் காக்கும் ஈஸ்வரன்!

ஊரப்பாக்கம் ஸ்ரீஊரணீஸ்வரர்மஹேந்திரவாடி உமாசங்கரன்

Published:Updated:
##~##

ஊர் மக்களுக்கு ஓடிச் சென்று உதவுகிற, அவர்கள் நேசிக்கிற நபரிடம் இருக்கும் செல்வமானது, ஊராருக்குப் பயன்படும் குளம் நீரால் நிறைந்திருப்பதைப் போலாகும் என்கிறார், தெய்வப் புலவர் திருவள்ளுவர். ஊருணி எல்லோருக்கும் பயன்படுவதுபோல், ஒருவரிடம் உள்ள செல்வமும் எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்று இதன்மூலம் வலியுறுத்துகிறார் வள்ளுவப் பெருந்தகை.

ஊருக்கே பயன் தரும் ஊருணியைப் போற்றும் வகையில், 'பேரூரணி’, 'மயிலூரணி’, 'புரசூரணி’, 'பேராவூரணி’ என்றெல்லாம் ஊர்களுக்குப் பெயர் வைத்துள்ளதை, தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை தன் 'ஊரும் பேரும்’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை, தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் வழியில் உள்ளது ஊரப்பாக்கம். வண்டலூரை அடுத்து, ஊரப்பாக்கம் டீக்கடை பஸ் ஸ்டாப்பில் இறங்கினால், இரண்டு நிமிட நடையில் சிவன் கோயிலை அடையலாம்.

ஒருகாலத்தில், இங்கே ஊருணி இருந்து, தற்போது பாழ்பட்டுக் கிடக்கிறது என்கிறார்கள் மக்கள். அந்த ஊருணிக்கரையில்தான் அற்புதமான சிவாலயம் அமைந்துள்ளது. அங்கே குடிகொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் - ஸ்ரீஊரணீஸ்வரர்.

ஒருகாலத்தில், ஊருணிக்கரையில் உள்ள புளியமரத்தடியில், பூஜைகள் ஏதுமின்றி இருந்த சிவலிங்கத்தை எடுத்துப் பிரதிஷ்டை செய்து, வழிபட்டு வருகின்றனர் பக்தர்கள். தற்போது, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உத்திராபதி மற்றும் சிவனடியார்களால் திருப்பணி செய்யப்பட்டு வருகிறது.

ஊரைக் காக்கும் ஈஸ்வரன்!

ஸ்ரீஊரணீஸ்வரர், ஸ்ரீபூர்ணாம்பிகை, ஸ்ரீபிள்ளையார், ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீநந்திகேஸ்வரர் ஆகியோர் பாலாலயம் செய்யப்பட்டு, கொட்டகை ஒன்றில் ஒன்றாக இருந்தபடி அருள்பாலிக்கின்றனர். அங்கே ஸ்ரீஆஞ்சநேயரும் காட்சி தருகிறார்.

சுமார் 10 கோடி ரூபாய் செலவில், திருப்பணிகள் செய்யத் திட்டமிட்டுள்ளனர், கோயில் நிர்வாகிகள். சிவனாரின் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்குமான அஸ்திவாரப் பணிகள் நடைபெற்றுள்ளன. இந்தச் சந்நிதிகளை முழுவதும் கருங்கற்களால் அமைக்க முடிவு செய்துள்ளனர். ஸ்ரீ திருமால் மற்றும் ஸ்ரீஅனுமனுக்கு சந்நிதிகள் நிறைவுற்றுவிட்டன.

சிவனார், மேற்குப் பார்த்தபடி சந்நிதி கொண்டிருப்பது விசேஷம் என்பார்கள். இதோ... இங்கே, மேற்கு நோக்கியபடி சந்நிதி கொண்டிருக்கிறார் ஈசன். கோயிலின் பெருமையை அறிந்து உணர்ந்த காஞ்சி மகாபெரியவா, பக்தர் ஒருவரை அனுப்பி, கோயிலைப் பற்றி மேலும் விசாரித்துத் தெரிந்துகொண்டாராம்.

சென்னை- ஸ்ரீகாளிகாம்பாள் கோயில் சாம்பமூர்த்தி சிவாச்சார்யர் ஒருமுறை இங்கு வந்து பார்த்துவிட்டு, 'இது சாந்நித்தியம் நிறைந்திருக்கும் ஆலயம்’ என்று சிலாகித்துச் சொல்லிச் சென்றாராம்.  

ஊர் மக்களால்  இந்தக் கோயிலில் பல விழாக்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. விரைவில் திருப்பணியும் இனிதே நடைபெற்று, கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் என ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் ஊர்மக்கள்.

செல்வந்தர்கள் மற்றும் சிவநேசர்களின் மனத்துள் ஸ்ரீஊரணீஸ்வரர் புகுந்து, திருப்பணிக்குக் கட்டளையிடட்டும்.ஸ்ரீபூரணாம் பிகை குடியிருக்கும் கோயிலில் திருப்பணிகள் பூர்த்தி அடைந்து சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெறட்டும்!

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism