Published:Updated:

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்! சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்! சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
##~##

ஒரு ராசியை 30 பகுதிகளாகப் பிரித்தால் அதற்கு த்ரிம்சாம்சகம் என்று பெயர். த்ரிம்சம்- முப்பது; அம்சம்- அதில் ஒரு பகுதி. மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் - ஒற்றைப்படை ராசிகளில் முதல் ஐந்து பகுதிகள் (நாட்கள்) செவ்வாயின் த்ரிம்சாம்சகம். 5-ல் இருந்து 10 வரையிலும் சனியின் த்ரிம்சாம்சகம். 10-ல் இருந்து 18 வரை குரு; 18- 25 வரை புதன், 25 - 30 சுக்கிரன்.

ராசியின் 30 பகுதிகளை செவ்வாய், சனி, குரு, புதன், சுக்கிரன் ஆகிய ஐந்து கிரகங்களும் ஐந்து, ஐந்து, எட்டு, ஏழு, ஐந்து - என்ற கணக்கில் பங்கு போட்டுக் கொண்டிருக்கின்றன. அதாவது ராசியில் முதல் ஐந்து பகுதியை செவ்வாய், அடுத்த ஐந்து சனி, அடுத்த எட்டு குரு, அடுத்த ஏழு புதன், மீதமிருக்கும் ஐந்து சுக்கிரன். இப்படி சூரியன், சந்திரன், ராகு, கேது ஆகியவற்றைத் தவிர்த்து ஐந்து தாரா கிரகங்கள் மட்டும் த்ரிம்சாம்சகத்தில் பங்கு பெறுகின்றன. சூரியனும் சந்திரனும் ஒளி விடும் கிரகங்கள். ராகுவும் கேதுவும் இருண்ட கிரகங்கள். இவற்றுக்கு த்ரிம்சாம்சகத்தில் ஆதிக்யம் இல்லை என்பது கவனத்துக்கு உரியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய இரட்டைப் படை ராசிகளில் த்ரிம்சாம்சகத்தின் பங்கு எதிரிடையாக இருக்கும். அதாவது ஒற்றைப்படை ராசியில் செவ்வாய் - 5, சனி - 5, குரு - 8, புதன் - 7, சுக்கிரன் - 5 (ஆக மொத்தம் 30) என இருக்கும். இரட்டைப்படை ராசியில் சுக்கிரன் - 5, புதன் - 7, குரு - 8, சனி - 5, செவ்வாய் - 5 (ஆக 30) என்று விபரீதமாக கிரகங்களின் வரிசை இருக்கும். எண்ணிக்கை மாறாது (அட்டவணை 1 மற்றும் 2).

மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் தோன்றியவள் அல்லது, இந்த ராசிகளில் சந்திரன் தென்படும் வேளையில் தோன்றியவள்... இந்த இரண்டு ராசியில் ஒன்று லக்னமாகவோ, சந்திரன் இருக்கும் ராசியாகவோ இருக்கும்போது, செவ்வாயின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், திருமணம் ஆகாமலே மழலையை ஈன்றெடுப்பாள். தவறான வழியில் காம ஈர்ப்பில் ஒரு புருஷனோடு இணைந்து குழந்தைச் செல்வம் உருவாகும் அளவுக்கு நெருங்கிவிடுவாள் என்று ஜோதிடம் சொல்லும். பண்டைய நாட்களில் மறைவில் நிகழ்ந்த மகப்பேறு, தற்போது வெளிப்படையாகப் பெருகிப் போனதால், நீதிமன்றம் அந்தக் குழந்தைக்கு சமூக அங்கீகாரம் அளிக்க முன்வந்தது. பிறந்த வேளையை வைத்து, அவள் இளமையில் சந்திக்கும் அவலத்தை வரையறுத்தார்கள் முன்னோர்கள்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

மேஷத்துக்கும் விருச்சிகத்துக்கும் அதிபதி செவ்வாய். மேஷம் ஒற்றைப்படை ராசி. அதில் முதல் 5 செவ்வாயின் த்ரிம்சாம்சகம். விருச்சிகம் இரட்டைப்படை ராசி. அதில் கடைசி 5 நாட்கள் செவ்வாயின் த்ரிம்சாம்சகம். பிறந்த வேளை அதாவது லக்னம் இருக்கவேண்டும். அல்லது பிறக்கும் வேளையில் சந்திரன் அந்த இரு ராசிகளில் ஏதாவது ஒன்றில் இருக்க வேண்டும். லக்னமோ, சந்திர லக்னமோ மேஷம், விருச்சிகம் ஏதாவது ஒன்றில் அமைய வேண்டும். அதுபோல், சந்திரன் மேஷத்திலோ விருச்சிகத்திலோ ஏதாவது ஒன்றில் தென்பட வேண்டும். லக்ன த்ரிம்சாம்சகமாக, சந்திர த்ரிம்சாம்சகமாக, செவ்வாயின் த்ரிம்சாம்சகமாக இருக்க வேண்டும். அப்போது பிறந்தவள், திருமணம்வரை காத்திராமல் அவசரப்பட்டு இணைந்து குழந்தையை ஈன்றெடுத்து விடுவாள்.

இங்கு பிறந்த வேளை ராசியும், சந்திரனும் செவ்வாயின் ஆதிக்யத்தில் இருக்கும். இரண்டின் த்ரிம்சாம்சகமும் செவ்வாயின் பிடியில் வந்துவிடும். இப்படி வரும்போது செவ்வாய்தான் அவளுடைய மனநிலையை வரையறுக்கிறான். செவ்வாய் வெப்ப கிரகம், ஆராயாமல் முடிவெடுக்கும் இயல்பு அவனுக்கு உண்டு. விருப்பத்தை எட்டுவதில் ஏக்கம், பரபரப்பு, சிந்தனையை முடக்கி சூழலை மறக்கச் செய்யும். வெப்ப கிரகத்தின் ஆதிக்யம் இடையூறின்றி செயல்பட வழிவகுத்தது.

மேஷத்தில் முதல் த்ரேக்காணத்தில் பிறந்தவள், அதாவது ராசியின் 30 பகுதிகளில் முதல் பகுதி- 10 பாகைகள், இரண்டாவது பகுதி 10-ல் இருந்து 20 வரை பாகைகள், 20-ல் இருந்து 30 பாகைகள் மூன்றாவது பகுதி. ராசியை மூன்றாகப் பிரிப்பதை த்ரேக்காணம் என்கிறது ஜோதிடம். முதல் பத்து பாகையில் பிறந்தவள் எனில், அதில் முதல் 5 பாகைகள் செவ்வாயின் த்ரிம்சாம்சகமாக இருக்கும். த்ரேக்காண அதிபதியும் செவ்வாய் ஆக இருக்கும்.

ராசியை இரண்டாகப் (15, 15 பாகைகளாக) பிரித்தால், முதல் பகுதிக்கு சூரியனின் ஆதிக்யம் இருக்கும். க்ஷேத்ரம் - ராசி, ராசியின் முற்பகுதி ஹோரா த்ரேக்காணம்  மூன்றில் ஒரு பங்கு. த்ரிம்சாம்சகம் முதல் 5 பாகைகள். இதில் ஹோரையின் ஆதிக்கம் சூரியனில் இருக்கும். க்ஷேத்திரம் த்ரேக்காணம், த்ரிம்சாம்சகம் - இம்மூன்றும் செவ்வாயின் ஆதிக்யத்தில் இருக்கும். சூரியன் வெப்பக் கிரகம். செவ்வாய் வெப்பக் கிரகம். செவ்வாயின் வெப்பத்தை இரட்டிப்பாக்குவான் சூரியன். அதாவது செவ்வாயின் செயலுக்குத் தூண்டுதலாக மாறுவான். சைக்கிள் சவாரி செய்பவனுக்கு எதிர்காற்று இல்லாமல் இருந்தால் வேகம் அதிகமாகும். இளமையில் மடைதிறந்த வெள்ளம்போல் ஆசையை வளரவிட்டு, தவறான முடிவை நிறைவேற்றிவிடும் அந்தச் செவ்யாய். சூரியனிடமிருந்து வெப்பத்தைப் பெற்றவன் செவ்வாய். எல்லா கிரகங்களுக்கும் சூரியனிடமிருந்து வெப்பம் கிடைக்கிறது. சுறுசுறுப்போடு இயங்க அது நிச்சயமாக வேண்டும்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

செவ்வாயை வெப்ப கிரகமாக சித்திரிக்கும் ஜோதிடம். பூமிக்குப் பிறந்தவன்; பூமியின் இயல்பு உடையவன் என்று சொல்லும். 'குஜன்’- 'கு’ என்றால் பூமி; 'ஜன்’ என்றால் பிறந்தவன். பூமியில் வெப்பம் உண்டு. அதன் இயல்பு அதில் பிறந்தவனிலும் இருக்கும். ஆக, இயல்பு வெப்பம். சூரியனின் தொடர்பு வெப்பத்தை இரட்டிப்பாக்கும். ஆற்று மணல் பூமி. அதில் வெப்பம் இருக்கும். ஆனால் சூரியனிடமிருந்து வெப்பத்தை உள்வாங்கிய ஆற்று மணல், நடக்கும் கால்களை சூரியனை விட அதிகம் சுடும். உடம்பில் படும் சூரிய வெப்பத்தை பொறுக்க இயலும். கால்களில் படும் மணலின் வெப்பம் பொறுக்க முடியாமல் இருக்கும்.

இளமையில் அவள் மனம் செவ்வாயின் தாக்கத்தில் சிந்தனை திசை மாறி, தவறான முடிவில் இணையவைத்தது. விருச்சிக ராசியில் பிறந்தவளுக்கு கடைசி 5 பாகைகள் செவ்வாயின் ஆதிக்யம், ராசிக்கு உடையவன் செவ்வாய். ஹோரை அங்கு இரண்டாவது, அதற்கு உடையவன் சூரியன். க்ஷேத்ரம், ஹோரை, த்ரிம்சாம்சகம் அத்தனையும் வெப்ப கிரகத்தின் ஆதிக்யத்தில் (சூரியன், செவ்வாய்) அடங்கிவிடும். ஒட்டுமொத்தமாக பிறந்த வேளை செவ்வாயின் ஆதிக்யத்தில் கட்டுண்டு, இளமையில் சிந்தனை மாற்றம் வாயிலாக விபரீதத்தைச் சந்திக்கவைக்கிறது. மேஷம், விருச்சிகம் ஆகிய இரு ராசிகளிலும் லக்னம் வராவிட்டாலும் சந்திரன் இருக்கும் வேளையில் பிறந்தவளும் திருமணமின்றி மகப்பேறைச் சந்திப்பாள் என்கிறது ஜோதிடம்.

அஸ்வினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரையிலான நட்சத்திரங்கள், பாதத்துக்கு ஒரு நவாம்சம் என்ற அளவில் 9 நவாம்சத்தில் அடங்கிவிடும். மேஷத்தின் செவ்வாய் த்ரிம்சாம்சகத்தில் பிறக்க வேண்டும் என்றால் முதல் ஐந்து பாகையில் நிகழவேண்டும். அப்போது முதல் அம்சகம் அஸ்வினி முதல் பாதம் இருக்கும் நவாம்சகத்தில். 3.20 பாகைகள் முதல் அம்சகம், 5 பாகை வரை செவ்வாயின் த்ரிம்சாம்சகம் இருக்கும். ஆகையால் மேஷத்தின் அதிபதி செவ்வாய். அஸ்வினி முதல் பாதத்தில் செவ்வாயின் த்ரிம்சாம்சகம் இருக்கும். சந்திர த்ரிம்சாம்சகம் செவ்வாய். இங்கு க்ஷேத்ரம், சந்திர த்ரிம்சாம்சகம், ஹோரை த்ரேக்காணம் அத்தனையும் வெப்ப கிரகத்தின் (சூரியன்-செவ்வாய்) ஆதிக்யத்தில் வந்துவிடுவதால் அதில் பிறந்தவளும் விபரீதத்தைத் தழுவுவாள் என்கிறது ஜோதிடம்.

விருச்சிக ராசியில் சந்திரன் இருக்கப் பிறந்தவளுக்கும் இந்த கதி உண்டு. விருச்சிகத்தில் சந்திரன் செவ்வாயின் த்ரிம்சாம்சகத்தில் இருக்க வேண்டுமானால், கடைசி ஐந்து பாகையில் பிறக்க வேண்டும். கேட்டை நாலாம் பாதத்தில் சந்திரன் இருக்க வேண்டும். அங்குதான் சந்திரனின் த்ரிம்சாம்சகம் செவ்வாயாக இருக்கும். அங்கும் க்ஷேத்ரம், ஹோரா த்ரேக்காணம், த்ரிம்சாம்சகம் அத்தனையும் வெப்பக் கிரகத்தின் ஆதிக்யத்தில் (சூரியன் - செவ்வாய்) அடங்கிவிடும். அஸ்வினியும் கேட்டையும் வேதை பொருந்தாது என்ற முடிவை உண்மையாக் குகிறது இந்த விளக்கம்.

லக்னத்தில் அல்லது சந்திரனின் த்ரிம்சாம்சகம் சனியாக இருந்தால் அதாவது மேஷ ராசியில் 5.10 வரை பாகைகளில் பிறந்தால், விருச்சிகத்தில் 20-ல் இருந்து 25 வரை பாகைகளில் இருந்தால், அவள் தாசியாக மாறிவிடுவாள் என்று சொல்லும். இரண்டு ராசிகளில் ஒன்று லக்னமாகவோ சந்திரன் தென்படும் ராசியாகவோ இருந்து, லக்ன த்ரிம்சாம்சகம் அல்லது சந்திர த்ரிம்சாம்சகம் குருவாக இருந்தால் (மேஷத்தில் 10-க்கு மேல் 18 பாகைகள், விருச்சிகத்தில் 12-க்கு மேல் 20 பாகைகள்) பதிவிரதையாக மாறுவாள். கணவனை தெய்வமாக மதிப்பாள். விட்டுப்பிரியாமல் தொடர்வாள். அவன் சொற்படி செயல்படுவாள்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

புதனின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்திருந்தால் (மேஷத்தில் 18-க்கு மேல் 25 பாகை வரை; விருச்சிகத்தில் 5-க்கு மேல் 12 பாகை வரை) அகடவிகடங்களோடு செயல்படுவாள். சுயநலத்துக்கு முக்கியத்துவம் அளித்து மற்றவற்றை எதிர்ப்பாள். தனது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள உகந்த முடிவை கையாளுவாள் என்கிறது ஜோதிடம்.

சுக்கிரனின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்திருந்தால் (மேஷத்தில் 25-ல் இருந்து 30 பாகை; விருச்சிகத்தில் 1-ல் இருந்து 5 பாகை), பொல்லாப்பு, அவமானம், வீண்பழி போன்றவற்றில் சிக்கித் தவிப்பாள். அவளது நடத்தை ஏளனத்துக்கு உரியதாக மாறிவிடும் என்று ஜோதிடம் சொல்லும். பரணிக்கு அனுஷம், கிருத்திகைக்கு விசாகம் வேதை என்று பொருத்தத்தில் குறிப்பிடுவதை இந்த விளக்கம் பொருள் படைத்ததாகச் செய்துவிடுகிறது.

செவ்வாய், சனி, குரு, புதன், சுக்கிரன் ஆகிய ஐவரில் முதல் இரண்டு வெப்பக் கிரகங்கள். மற்ற மூன்றும் தட்பக்கிரகம்.இவற்றின் இயல்புக்கு உகந்த வகையில் பிறந்தவளின் செயல்பாடு நிர்ணயிக்கப்படுகிறது. நடத்தைகளை ஆராய்ந்து வெளியிடும் ஜோதிடத் தகவலை ஒதுக்கி, லக்னத்தில் இருக்கும் ராகுவையும் 7-ல் இருக்கும் ராகுவையும் பார்த்து தோராயமான பலன் சொல்லும் நடைமுறைகளில் ஜோதிடத்துக்கு உடன்பாடில்லை. ஜோதிடத்தில் புது ஆராய்ச்சியோ, காலத்துக்கும் சிந்தனைக்கும்உகந்தவாறு புதுத் தகவல்களின் இணைப்புகளோ தேவையற்றது. தெய்விக ஜோதிடம் (டிவைன் ஜோதிடம்), அறிவியல் ஜோதிடம், உபாசக ஜோதிடம், அருள்வாக்கு ஜோதிடம் போன்ற அடைமொழிகள் ஜோதிட சாஸ்திரத்தோடு இணையாது.

அப்பழுக்கற்ற இயற்கை சட்டதிட்டங்களில் பகுத்தறிவுபூர்வமான முடிவுகளை வரையறுப்பதற்கு, அது எதையும் எதிர்பார்க்காது. தெய்விகம், உபாசனை, அருள்வாக்கு போன்றவை அதன் முடிவை இறுதியாக்கத் தேவை இல்லை. ரிஷிகளும், முனிவர்களும், மந்திரத்தை உணர்ந்தவர்களும் (மந்திரத்ரஷ்டா) உலக நன்மையைக் குறிக்கோளாகக் கொண்டு, பாமரர்களை வாழவைக்க, தங்களது சிந்தனை வளத்தைப் பயன்படுத்தி, இயற்கை தத்துவத்தின் உருப்பெற்ற ஜோதிடத்தை நன்கு விளக்குவார்கள்.

மற்ற சாஸ்திரத் தகவல்கள் காலத்தின் தாக்கத்தில் மாறுபாட்டை ஒருவேளை சந்திக்கலாம். ஜோதிடம் காலத்தை வரையறுப்பதால் அதன் மாறுபாடு அந்த சாஸ்திரத்திற்கு மட்டுமே உரித்தானது. எந்தக் கால மாறுபாட்டுக்கும் ஒத்துப்போகும் விதத்தில் அதன் முடிவுகள் இருப்பதால் அதற்கு ஆராய்ச்சி தேவைப்படாது.இத்தனைத் தகவல்களையும் ஒரு செய்யுளில் விளக்கிக் கூறுகிறார் வராகமிஹிரர் (கன்யைவதுஷ்டாவ்ரஜதிஹ....).

முன்னோர்களின் அறிவுரைகளை மனத்தில் பதியவைத்து அசை போட்டு, அதன் விளக்கவுரைகளை ஆராய்ந்து, அவர்களது சிந்தனையோட்டத்தை அறிந்துகொண்டு, ஜோதிடத்தை விளக்க முற்பட வேண்டும். நொடிப் பொழுதில் கணினி வழியாக பலன் சொல்ல முற்படுவது, என்றைக்கும் பலன் அளிக்காது. பாமரர்களை ஊக்குவிக்கும் அளவுக்கு திறமையை வளர்க்க வேண்டும். அவர்களை அந்த வேளையில் மட்டும் திருப்திப்படுத்தும் நடை முறையை, சொல்வளத்தால் இறுதியாக்கக் கூடாது. ஜோதிடம் பொதுச் சொத்து. அது சின்னாபின்னமாகாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதை எல்லோரும் உணரவேண்டும். அப்படியொரு பொற்காலம் நிச்சயம் வரும்.

அடுத்த இதழில் மற்றுமோர் உதாரணத்தையும், திரிம்சாம்சகம், ஹோரா, த்ரேக்காணம் முதலானவை குறித்தும் தகுந்த அட்டவணைகளுடன் தெளிவாக அறிவோம்.

- சிந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism