Published:Updated:

சிதம்பரம் நடராஜரின் ஆனித்திருமஞ்சனம்... ஜூன் - 21-ல் தொடக்கம்!

சிதம்பரம் நடராஜரின் ஆனித்திருமஞ்சனம்... ஜூன் - 21-ல்  தொடக்கம்!
சிதம்பரம் நடராஜரின் ஆனித்திருமஞ்சனம்... ஜூன் - 21-ல் தொடக்கம்!

டலின் மூலமே, 'ஆக்கல்', 'காத்தல்', 'அழித்தல்', 'மறைத்தல்', 'அருளல்' என்கிற ஐவகைத் தொழிலைச் செய்துவருகிறார் நடராஜப் பெருமான். ஆடிக்கொண்டே இருந்தால், உடல் உஷ்ணமாவது இயற்கைதானே? அதிலும் உத்தராயண காலத்தின் கடைசி காலமான ஆனி மாதத்தில் அது வரை தாங்கிய அத்தனை உஷ்ணங்களையும் இறைவன் தீர்த்துக்கொள்ள ஆனித்திருமஞ்சனம் நடைபெறுகிறது.

அன்றைய நாளில், நடராஜப் பெருமானுக்கு பல்வேறு திரவியங்கள் மூலமாக அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆடல் நாயகன் குளிர்ந்தால், அண்ட சராசரங்களும் குளிர்ந்த பயனைப் பெறுமல்லவா? அதுவரை அனுபவித்த அக்னி நட்சத்திரக் கோடை தணிந்து, மண் குளிர்ந்து, சகல ஜீவராசிகளும் செழித்து வளர வேண்டும் என்பதே இந்த நாளின் நீராட்டுதலின் தத்துவம்.

சிதம்பரம், உத்திரகோசமங்கை, திருவாரூர் உள்ளிட்ட பல கோயில்களில் இந்த ஆனித்திருமஞ்சன விழா சிறப்பாக நடைபெற்றாலும், எல்லா சிவாலயங்களிலும் இந்த நாள் சிறப்பான அபிஷேகத்துடன் கொண்டாடப்பட்டுத்தான் வருகிறது. குளித்து, நீறிட்டு, கோயில் சென்று அபிஷேகம் பார்ப்பது எல்லாம் வீட்டில் ஓய்வாக இருப்பவர்களுக்குத்தான் சாத்தியப்படும்.

சரி, விரட்டுகிற கடிகாரத்துக்குப் பின்னே ஓடும் நபர்கள், `நியமப்படி கோயில் செல்லவோ, பூஜை செய்யவோ, விரதம் அனுஷ்டிக்கவோ முடியாதே...’ என்று கவலைகொள்வது சகஜம்தான். வேலைக்குச் செல்பவர்கள் இந்த ஆனித்திருமஞ்சன நாளில் என்னவெல்லாம் செய்யலாம். அது பற்றி ஸ்ரீ நடராஜ ரத்ன தீக்ஷிதர் சொல்வதைப் பார்ப்போமா?

லிங்கத்திருமேனி ஈசனுக்கு அன்றாடம் ஆறு வேளை அபிஷேகம் என்றால், நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு முறைதான் அபிஷேகம். அதுவும் இந்த ஆனித்திருமஞ்சனம் சாயரட்சை அபிஷேகம். சிதம்பரத்தில் ஜூன் 21-ம் நாள் கொடியேற்றத்தோடு தொடங்கும்.

ஆனித்திருமஞ்சன விழா பத்து நாள்கள் அன்றாடம் யாகசாலை பூஜைகள், இரு வேளை பஞ்சமூர்த்தி புறப்பாடுகளோடு விசேஷமாக நடைபெற உள்ளது. ஒன்பதாவது நாள் மூலவர் நடராஜர், அம்பாளோடு தேரில் உலா வருவார். பின்னர், ஆயிரம் கால் மண்டபத்தில் 100 தீட்சிதர்கள் கலந்துகொள்ளும் ஏககால லட்சார்ச்சனை நடைபெறும். பத்தாம் நாள் விடிகாலை நடராஜருக்கு மஹா அபிஷேகம் நடைபெறும். அதன் பின்னர் சிதம்பர ரகசிய பூஜை ஆகாச ரகசியத்தைக் கூறும் எந்திரத்துக்குச் செய்யப்படும்.

புனுகு, ஜவ்வாது சட்டம் சார்த்தி அந்த எந்திரம் பூஜிக்கப்படும். இது, பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. வியாக்ரபாதருக்கும் பதஞ்சலிக்கும் அகிலத்தின் ரகசியத்தையும், அணுக்களின் செயலையும் விளக்கிக் கூற, நடராஜர் தில்லையில் ஆடிக் காட்டியதால், இங்கு ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை இரண்டுமே முக்கிய திருவிழாக்கள்.

எல்லா சிவமூர்த்தங்களும் ஒடுங்கும் இதயப் பகுதி என்றும், 'உலகின் மையப்புள்ளி' என்றும் சிதம்பரம் போற்றப்படுகிறது. 'ரூபம்' என்ற நடராஜ வடிவம், 'அரூபம்' என்ற ஆகாச வடிவம், 'அருவுருவம்' என்ற லிங்கத்திருமேனி என மூவகை வடிவத்தையும் தில்லையில்தான் காண முடியும்.

கூடுமானவரை ஆனித்திருமஞ்சனம் போன்ற விழாக்களை ஆலயம் சென்று தரிசிப்பதே சிறந்தது. இருந்தாலும், வர முடியாதவர்கள், அந்த நாளில் அதிகாலை நேரத்திலேயே தங்கள் வீட்டுப் பூஜை அறையில் உள்ள சிவலிங்கத்துக்கோ, நடராஜ விக்கிரகத்துக்கோ உங்கள் நித்திய வழக்கப்படி பூஜை செய்து வணங்கலாம். முடிந்தவர்கள் தீக்ஷை பெற்ற சிவாச்சாரியார்களைக்கொண்டோ, அர்ச்சகர்களைக்கொண்டோ வீட்டு பூஜை அறையில் உள்ள சிவமூர்த்தத்துக்கு அபிஷேகம் செய்வது சிறப்பானது. அபிஷேகத்துக்குப் பிறகு அன்னத்தை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.

சரி, இதைச் செய்வது சற்றுக் கடினம் என்பவர்கள் அருகில் உள்ள சிவாலயத்துக்கு முதல் நாள் மாலையிலேயே சென்று அபிஷேகத்துக்குத் தேவையான பால், பழம், பன்னீர், தேன் என உங்களால் இயன்றதை வாங்கிக் கொடுக்கலாம். இது அந்த அபிஷேகத்தைக் கண்ட பலனை உங்களுக்குக் கொடுக்கும். பொருளாகக்கூட உங்களால் உதவ முடியவில்லையா? கவலை வேண்டாம்.

நீங்கள் எந்த மாதிரியான வேலையில் இருந்தாலும், சிவனை மனதில் எண்ணி தியானியுங்கள். தேவார, திருவாசகங்களைப் பாராயணம் செய்யுங்கள். முடிந்தால் அருகே இருப்பவருக்கு உணவு வாங்கிக் கொடுங்கள் போதும். உங்களது ஆனித்திருமஞ்சன பூஜை முழுமையாகக் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று நினையுங்கள்.

மாலையில் வேலை முடிந்ததும், குடும்பத்தோடு சென்று அருகில் உள்ள சிவாலயம் சென்று தரிசனம் செய்யுங்கள். சிதம்பரத்தில் பத்து நாள்கள் உற்சவம் என்பதால் , அந்த நாள்களில் உங்களுக்கு சௌகரியமான எந்த நாளிலும் நடராஜரை வந்து தரிசித்து புண்ணியம் பெறலாம்.