மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்-24

சேதி சொல்லும் சிற்பங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சேதி சொல்லும் சிற்பங்கள் ( குடவாயில் பாலசுப்ரமணியன் )

ஆலயம் ஆயிரம்! சிதம்பரம் நடராஜர் ஆலயம்முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

##~##

காயப் பெருவெளியாகத் திகழும் தில்லைப் பொன்னம்பலத்தை நடுநாயகமாகக்கொண்டு திகழும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில், மேற்குக் கோபுரத்தின் அடித்தளமாக விளங்கும் உபபீட வர்க்கத்தில் உள்ள மாடங்களிலும், மேல்நிலையில் உள்ள மாடங்களிலும் எழிலான சிற்பங்கள் காட்சி தருகின்றன. அந்தச் சிற்பங்களில் பெரும்பாலானவற்றின் பெயர்களை அந்தந்த மாடங்களுக்கு மேலாக, அந்தக் கோபுரத்தை எடுப்பித்த இரண்டாம் குலோத்துங்க சோழன், கல்வெட்டாகப் பொறித்துள்ளான். இதனால், அந்தத் தெய்வங்களின் பெயர்களை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

உபபீடத்தில் உள்ள 46 கோஷ்ட மாடங்களில், சிவ பெருமானின் எந்த வடிவமும் இடம்பெறவில்லை. மாறாக, பிற தெய்வ உருவங்கள், வாயிற்காவலர்கள், மருத்துவத் தெய்வங்கள், எண்திசைக் காவலர்கள், ஒன்பது கோள்தெய்வங்கள், நதி தெய்வங்கள், மகரிஷிகள் என ஏழு வகைப் பகுப்பில் மொத்தம் 46 சிற்பங்களைக் காணலாம்.

தெய்வத் திருமேனிகளாக க்ஷேத்திரபாலர், ஸ்ரீசண்டீசர், ஸ்ரீதிரிபுரசுந்தரி, ஸ்ரீகணபதி, ஸ்ரீபத்ரகாளி, ஞானசக்தி, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீபிரம்மன், ஸ்ரீதுர்கை, கிரியாசக்தி, ஸ்ரீநாகராஜன் ஆகிய தெய்வங்களின் திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. துவாரபாலகர் எனும் வாயிற்காவலர் சிற்பங்கள் உள்வாயிலில் இரண்டும், வெளிவாயிலில் இரண்டும் காணப் படுகின்றன. அவற்றுக்கு மேலாக 'வைஜயன்’ என்றும், 'ஞானேஸ்வரர்’  என்றும் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன.

சேதி சொல்லும் சிற்பங்கள்-24

பொதுவாக, நான்கு வாயில்கள் இருக்கும் சிவாலய கர்ப்பக்கிரகத்தில் காணப்படும் நான்கு ஜோடி வாயிற்காவலர்களை முறையே, நந்தி- மகாகாளன், ஹேரம்பன்- பிருங்கி, துர்முகன்- பாண்டூரன், சீதன்- அசிதன் என்று ஆகம, சிற்ப நூல்கள் குறிக்கின்றன. ஆனால், தில்லைக்கோயில் ஆகமப்படி, அங்கு காவலர்களாக வைஜயனும் ஞானேஸ்வரரும் திகழ்கின்றனர். மருத்துவ தெய்வங்களாக ஸ்ரீதன்வந்திரியும், ஸ்ரீஅஸ்வினிதேவர் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

இங்கு உள்ள தன்வந்திரி, தாடி மீசையுடன் மருந்துக்குடுவை ஏந்திய முனிபுங்கவராகவே காணப்படுகிறார். அஷ்டதிக் பாலர்களாக கிழக்கில் இந்திரனும், தென்கிழக்கில் அக்னியும், தெற்கில் யமனும், தென்மேற்கில் நிருதியும், மேற்கில் வருணனும், வடமேற்கில் வாயுவும், வடக்கில் குபேரனும், வடகிழக்கில் ஈசானனும் அமைந்துள்ளனர். அளகேஸ்வரன், வாயுபகவான், நிருதி, அக்னிதேவர், ருத்ரதேவர் என்ற ஐந்து எழுத்துப் பொறிப்புகள் மட்டுமே அவர்கள் இடம் பெற்றுள்ள கோஷ்டங்களுக்கு மேலாகக் காணப்படுகின்றன.

நவகோள் தெய்வங்களாக கீழ்நிலை மாடங்களில் சூரியன், ராகு, கேது, சந்திரன், சனி, சுக்கிரன், புதன், செவ்வாய், வியாழன் ஆகிய ஒன்பது பேரும் உள்ளனர். சூரியனின் திருவடிவம் நான்கு முகங்கள், எட்டுக் கரங்களுடனும், தேவியர் இருவருடனும் காணப்படுகிறது. இது சிவசூரியனின் வடிவம்.

சேதி சொல்லும் சிற்பங்கள்-24

சந்திரன் இங்கு மட்டுமே சிம்மவாகனத்துடன் காணப்படுகிறார். ராகு- கேது இருவரும் மனிதத் தலையும், இடுப்பு வரை உள்ள உருவமும், தலைக்கு மேல் பாம்புப் படமுமாக இணைந்து ஒரே சிற்பமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. நவக் கிரகங்கள் வரிசையில் ராகு- கேது, சந்திரன், சனிபகவான், சுக்கிரன், புதன் என்ற ஆறு பேர் மட்டுமே ஐந்து கோஷ்டங்களுக்கு மேலாகக் காணப்படுகின்றனர்.

சேதி சொல்லும் சிற்பங்கள்-24

நதி தெய்வங்களாக கங்காதேவி என்றும், யமுனை என்றும் கல்வெட்டுக்கள் உள்ள கோஷ்டங்களில் முறையே மகரத்தின்மீது நின்றவாறு கங்காதேவியும், ஆமைமீது நின்றவாறு யமுனையின் திருவுருவமும் உள்ளன. மகரிஷிகளாக நாரதர், வியாக்ரபாதர், தும்புரு, அகஸ்தியர், பதஞ்சலி, திருமூலர் ஆகியோரின்  திருவுருவங்கள் அற்புதச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

மேல்நிலை ஆவர்ணத்தில் துவாரபாலகர் உருவங்கள் நீங்கலாக 22 மாடங்களில் சிவ மூர்த்தங்களைச் சிற்பங்களாகத் தரிசிக்கலாம். கஜசம்ஹார மூர்த்தி, லிங்கோத்பவர், சோமாஸ்கந்தர், பிக்ஷ£டனர், ஹரிஹரர், திரிபுராந்தகர், நிருத்தமூர்த்தி, வீணாதரர், தட்சிணாமூர்த்தி, பாசுபத மூர்த்தி, கிராதார்ஜுன மூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், கங்காதரர், சந்திரசேகரர், கல்யாணசுந்தரர், கங்காளர், விருஷபாந்திகர், ஆலிங்கன சந்திரசேகரர், ஊர்த்துவதாண்டவர், கௌரிபிரஸாத மூர்த்தி, காலாந்தகர், சண்டேசனுக்கிரகர் என்னும் 22 சிவனார் கோலங்களையும் மேற்குக் கோபுரத்தில் கண்டு மகிழலாம்.

இதே அமைப்பு முறையில், மற்ற மூன்று கோபுரங்களிலும் கீழ் நிலை ஆவர்ண தெய்வங்களும், மேல்நிலை சிவனார் வடிவங்களும் காணப்படுகின்றன. ஆனால், அந்தக் கோபுரங்களில் அஷ்டதிக் பாலகர் உருவங்களும், நவகோள் தெய்வ உருவங்களும் அந்தந்த கோபுரங்கள் இருக்கும் திசைக்கு ஏற்ப, அவரவருக்கு உரிய திசையிலேயே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சம். தில்லைக் கோபுரங்கள், நுழைவாயிலில் அமைந்துள்ள கட்டடங்கள் என்பதாக மட்டுமே அல்லாமல், சிற்பக் களஞ்சியங்களாகவே விளங்குகின்றன.

- புரட்டுவோம்