மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம்: 49

ஞானப் பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஞானப் பொக்கிஷம் ( பி.என்.பரசுராமன் )

தொண்டைமண்டல சதகம்பி.என்.பரசுராமன்

##~##

செய்யவேண்டியவை என்னென்ன, செய்யக்கூடாதவை என்னென்ன, சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன என்பனவற்றையெல்லாம் தெரிந்துகொள்ளும் ஆவல், இப்போது பலரிடம் பரவலாக இருக்கிறது. ஆனால், பலப்பல நூல்களைப் படித்துத்தான் அவற்றைத் தெரிந்துகொள்ளவேண்டியதாக இருக்கிறது. ஒவ்வொரு நூலாகத் தேடிப்பிடித்து வாங்கிப் படித்து, அது என்ன சொல்ல வருகிறது என்பதை அறிந்துகொள்வதற்குள்... அப்பப்பா! மூச்சு வாங்குகிறது! காலமும் ஓடியே போய் விடுகிறது.

அவையெல்லாம் சேர்ந்து ஒரே நூலில் நறுக்கென்று இருந்தால், எவ்வளவு சௌகரியமாக இருக்கும்?

இருந்தால் என்ன இருந்தால்..? மேற்சொன்ன அனைத்துத் தகவல்களும் ஒரே நூலில் உள்ளன. அதுவும் பாடல்களாகவும், விருத்தி உரை என்ற பெயரில் விரிவான உரையாகவும் உள்ளன. அந்த நூலின் பெயர்- தொண்டை மண்டல சதகம். 'இஃது தொண்டை மண்டல வேளாளர்மீது படிக்காசுப் புலவர் இயற்றியது’ என முகப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த நூல், 1887-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

பலப்பட்டடை சொக்கநாதப்புலவர் முதலான மேதைகள் எல்லாம் சாற்றுகவி கொடுத்திருக்கிறார்கள். நூலின் முதல் பாடலிலேயே, நூலாசிரியர் ஒரு புதுமை செய்திருக்கிறார். நூலைத் துவங்கும்போது விநாயகரைத் துதித்துத் துவங்குவது வழக்கம். ஆனால், இந்த நூலோ,

ஞானப் பொக்கிஷம்: 49

புண்டர நுதல் இரண்டு
புயமிசை இருந்து இரண்டு
குண்டல நிகர் இரண்டு
குமரரை வணக்கம் செய்வாம்

எனத் துவங்குகிறது. அதாவது, 'மூன்று கீற்றுகளாக விபூதி விளங்கும் திருநெற்றியை உடைய சிவபெருமானின் இரண்டு திருத் தோள்களிலும் ஏறியிருந்து,- அவரது திருச்செவியில் அணியப்பட்டு விளங்கும் இரண்டு குண்டலங்களைப்போல விளங்குகின்ற, அவருடைய இரண்டு திருக்குமாரர்களாகிய விநாயகக் கடவுளையும் சுப்பிரமணியக் கடவுளையும் யாம் வணங்குதல் செய்வோம்’ என இதற்கு உரை வரையப்பட்டுள்ளது.

தொண்டை மண்டல வேளாளப் பெருமக்களின் பெருமையைப் பாடும் இந்நூல், தொண்டை மண்டலத்தில் உள்ள சைவ வைணவத் திருத்தலங்களை வரிசையாகச் சொல்லி, அவற்றுக்கு இடையே உள்ள தூரத்தையும் தெளிவாகச் சொல்கிறது. மட்டுமின்றி, அந்தக் கோயில்களின் ஸ்வாமி- அம்பாள் திருநாமங்கள், தீர்த்தங்கள் எனப் பலவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சல்லிய கரணி, சந்தானகரணி, சமநீயகரணி, சஞ்ஜீவகரணி எனும் நான்கு விதமான அபூர்வ மூலிகைகள், அவற்றின் சக்திகள், மூலாதாரம் முதல் ஆறு ஆதாரங்களில், எங்கெங்கு எந்தெந்த அட்சரங்களை எப்படியெப்படி தியானம் செய்யவேண்டும் என்ற தகவல்களை இந்த நூல் விரிவாகக் குறிப்பிடுகிறது.

உயிரே போனாலும் சரி, சிலவற்றை அடுத்தவர்களிடம் அளிக்கக் கூடாது என ஒரு பட்டியலையே இந்நூல் குறிப்பிடு கிறது. மனைவி, அடைக்கலப் பொருள், அடைக்கலமாக வந்தவர், ஒழுக்கம், தன் வீடு, மனைவி கொண்டு வந்த சீதனப் பொருள், தன் குழந்தை, குழந்தை இருக்கும்போதே தனது பொருள் ஆகியவற்றை அளிக்கக்கூடாது என்கிறது.

ஞானப் பொக்கிஷம்: 49

சோதிடத் தகவல்களும் ஏராளமாக உள்ளன. எது எதற்கு எந்தெந்த ஹோமம் செய்யவேண்டும் என விவரித்து, பல வகையான இஷ்ட ஹோமங்களை விவரித்துச் சொல்கிறது.

ஞாயிறு சிறுமழை நயமதிவெள்ளம்
ஆரல் போரேஆம் கரண் மதிமகன்
வியாழன் விளைவே வெள்ளிபெருமழை
மந்தன் பாழென மதித்தனர் கொளலே

- எனும் பாடல் ஓர் அருந்தகவலைக் கூறுகிறது.

'ஆடிமாத வளர்பிறை பஞ்சமி...
ஞாயிற்றுக் கிழமையில் வந்தால் - சிறிதளவு மழை
திங்கட்கிழமை - வெள்ளம்வரும்
செவ்வாய் - சண்டை உண்டாகும்
புதன் - பெருங்காற்று
வியாழன் - நல்ல விளைச்சல்
வெள்ளி - பெருமழை
சனி - விளைச்சல் இல்லை’ என்பதே அப்பாடலின் பொருள்.

வேளாளர்கள் என்றாலே தொண்டை நாடு, தொண்டைநாடு என்றாலே வேளாளர்கள் எனப் பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்துமே விவரிக்கின்றன. அந்த அளவுக்கு அவர்கள் புகழ் பெற்றவர்கள்; சத்தியசந்தர்கள்; வள்ளல்கள்; அரசர்களாலும் மதிக்கப்பட்டவர்கள்.

சோழ மன்னர்களில் மிகவும் புகழ் பெற்றவ ரான கரிகால்சோழன், இவர்கள் வசித்துவந்த 24 கோட்டங்களுக்கு எல்லை வகுத்து, இவர்களுக்கு மிகுந்த உயர்வை அளித்தார். காரணம், அந்த வேளாளர்கள் அனைவரும் புராணங்கள், காவியங்கள், ஆகமங்கள் ஆகிய வற்றையெல்லாம் கற்றுணர்ந்து, அதன்படியே நடப்பவர்கள்.

ஞானப் பொக்கிஷம்: 49

இத்தகவலைச் சொல்லும் பாடல்!

காவியமாகிய காமீகம்
கண்டு கங்கா குலத்தோர்
ஓவிய பாத்திரராக
இருபத்து நான்குஉயர்ந்த
மேவிய கோட்டத்திலும்
கரிகால் வளவன் மிக்க
வாவிய மேன்மை கொடுத்து
அளித்தான் தொண்டை மண்டலமே.

இப்பாடலில் சொல்லப்பட்ட 24 கோட்டங் களின் பெயர்கள், அவற்றில் அடங்கிய 79 ஊர்களின் பெயர்கள், அவை அமைந்திருந்த  திசைகள் ஆகியவை பற்றி இந்நூலில் அற்புதமான முறையில் விவரிக்கப்பட்டுள்ளது (அவற்றில் பல இடங்கள் தற்போது இல்லை). அத்துடன், 24 கோட்டங்களைத் தெளிவாக விளக்கும் ஒரு 'பிளான்’ படமும் இந்நூலில் உள்ளது.

இப்பாடலிலேயே, ஆகமங்களைப் பற்றிய விரிவான தகவல்கள் சொல்லப்பட்டிருக் கின்றன. ஆகமங்கள் உருவான விதம், கும்பம் தயாரிக்கும் முறை முதலான தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

-  திருமணப் பொருத்தம் தொடங்கி, பந்தற்கால் நடுவது, அரசாணிக்கால் தயாரிக் கும் முறை, கல்யாணம் நடைபெறும் விதம் என இந்நூல் விவரிக்கும் முறை ஒரு நேர்முக ஒலிபரப்பைப் போல உள்ளது.

கம்பரை சடையப்ப வள்ளல் ஆதரித்தார்; கம்பராமாயணம் உருவாகக் காரணமாக இருந்தவரே சடையப்ப வள்ளல்தான். அப்படிப்பட்ட சடையப்ப வள்ளலைப் பற்றி ஓர் அபூர்வமான தகவலைச் சொல்கிறது இந்நூல்.

தெள்ளத் தெளிந்தவர் செய்
தக்கதோர்முறை செய்யிலையா
எள்ளத்தனை மலையத்தனையாம்
என்பது இன்று அறிந்தோம்
உள்ளற்கரிய துடையாடை
கீறியது ஒன்றுமொரு
வள்ளல் தகைமையோடு
ஒத்துளதால் தொண்டை மண்டலமே

கருத்து: நல்ல நூல்களைப் படித்து, தெளிந்த அறிவுடையவர்கள் தாம் செய்யத்தகுந்த காரியங்களில் ஒன்றை அதிகமாகச் செய்யாமல் சிறிதளவே செய்தாலும், அது எள்ளளவாக இருந்தாலும் அடுத்தவர்க்கு மலையளவாக இருக்கும். இதற்கு உதாரணம் சடையப்ப வள்ளல் தனது துடை ஆடையைக் கிழித்தார். அது சிறிய செயலாக இருந்தாலும், அரசனும் பிரமிக்கத் தகுந்த பெரும் செயலாக இருந்தது.

இப்பாடல் சொல்லும் அந்த வரலாறுதான் என்ன?

சடையப்ப வள்ளல் பெருஞ்செல்வர்.அவருடைய பேரும் புகழும் நற்குணங்களும் கண்டு, ஊரார் அவருக்குப் பாராட்டு விழா நடத்தினார்கள். இந்தத் தகவல், அப்போது அரசாண்டு கொண்டிருந்த சோழ மன்னருக்குத் தெரிய வந்தது. 'என்ன இது... சடையப்பருக்குப் பாராட்டு நடந்திருக்கிறது. ஆனால், மரியாதை நிமித்தமாக இன்னும் அவர் நம்மை வந்து பார்க்கவில்லையே! ம்ஹும்... அவரை இப்படியே விட்டு வைக்கக்கூடாது’ என்று தீர்மானித்த அரசர், சடையப் பரிடம் இருந்த விலை உயர்ந்த பொருள்களை எல்லாம் பறித்துவர உத்தரவிட்டார்.

அப்போதும் சடையப்பர் போய் அரசரைப் பார்க்கவில்லை. நாட்கள் சில கடந்தன. சீனத்து வியாபாரி ஒருவர் அரசரிடம் வந்து, ஒரு பட்டாடையைக் காட்டி, ''இதன் விலை, இழை ஒன்றுக்கு ஆயிரம் பொன்!'' என்றார். மிக மிக விலை உயர்ந்ததான அந்தப் பட்டாடையை வாங்கவேண்டும் என்று அரசர் விரும்பினார்.

ஓர் இழை ஆயிரம் பொன் என்றால், ஒரு வேட்டியில் எத்தனை இழைகள் இருக்கும்! அவ்வளவு பொன்னுக்கு எங்கு போவது?

அரண்மனைப் பொக்கிஷத்தில் இருக்கும் அத்தனை பொன்னையும் கொட்டிக் கொடுத்தாலும் அப்பட்டாடையை வாங்க முடியாது என்பது அரசருக்குத் தெரியும். அதனால், மனம் இல்லாமல் அந்த சீன வியாபாரியை அனுப்பிவிட்டார் அரசர்.

ஞானப் பொக்கிஷம்: 49

அந்த வியாபாரி சடையப்பரிடம் போய் விஷயத்தையும் விலையையும் சொல்ல, சடையப்பர் அந்தப் பட்டாடையை விலைக்கு வாங்கி, அணிந்துகொண்டார். இந்தத் தகவல் அரசரின் காதுக்கு வர, அவமானமும் பொறாமையும் தாங்கமுடிய வில்லை அவருக்கு. சடையப்பரை அரசவைக்கு வரச் சொல்லி ஆளனுப்பினார். அப்போதும் அவர் வரவில்லையாதலால், பலவந்தமாக இழுத்து வரச் செய்தார்.

சடையப்பர் வந்ததும் அவரிடம், ''நான் அழைத்தும் நீங்கள் ஏன் வரவில்லை?'' எனக் கோபத்தில் வெடித்தார் மன்னர். சடையப்பர் அமைதியாக, ''மன்னா! என் தொடையில் சிலந்தி. அதனால்தான் வரவில்லை'' என்றார். சிலந்தி என்பது ஜந்து அல்ல; ஒருவித தோல் படை!

மன்னரின் பார்வை சடையப்பரின் பட்டாடை மீதே வன்மத் துடன் பதிந்திருந்தது. ''நீங்கள் சொல்வதை நம்ப மாட்டேன். ஏதோ சாக்குப்போக்கு சொல்கிறீர்கள்!'' என்றார் மன்னர்.

'அத்தனை பேர் அமர்ந்திருக்கும் சபையில், சடையப்பர் தன் பட்டாடையைத் துடை வரை தூக்கி, சிலந்தியைக் காண்பிப்பார். அது அவருக்குப் பெரிய அவமானமாக இருக்கும்’ என்று நினைத்தார் அரசர்.

சடையப்பரோ, அரசர் உட்பட சபையில் இருந்த யாருமே எதிர்பாராதவாறு, கத்தியால் தன் துடைப் பகுதியில் மட்டும் பட்டாடையைக் கிழித்து, ''மன்னா! இதோ பாருங்கள்... சிலந்தி வந்து புண்ணாக ஆகியிருக்கிறது!'' என்றார்.

ஆடிப் போய்விட்டார் மன்னர். 'என் செல்வத்தைவிட மிகவும் விலைகொண்ட பட்டாடையை இவர் வாங்கியதுகூட ஆச்சரியமல்ல! அதை மிகவும் அலட்சியமாகக் கிழித்ததுதான் பெரிய ஆச்சரியம்!’ என்று வியந்து, கர்வம் ஒடுங்கி, சடையப்பரிடம் மன்னிப்பு கேட்டார்.

அப்படி, செல்வத்தைவிட மானமே உயர்ந்தது என வாழ்ந்தவர் சடையப்பர். இப்படியான பல தகவல் குறிப்புகள் அடங்கிய தொண்டை மண்டல சதகம் எனும் இந்நூல் அற்புதமான உரையுடன் வெளியிடப்பட்டுள்ளது.

ஜோசியத் தகவல்கள், வேதங்களை எப்போது சொல்லலாம்- எப்போது சொல்லக் கூடாது, தானம் எந்த நேரத்தில் வாங்கலாம்- எப்போது கொடுக்கலாம், சிராத்தம் ஏன் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், சிராத்தத்தின் வகைகள், ஏகம்பவானம், ஒளவையார், அந்தகக்கவி ஆகியோரின் வரலாறுகள் எனப் பலப்பல விஷயங்கள் நிறைந்த இந்நூல், ஓர் அருந்தமிழ் ஞானப் பொக்கிஷம் என்பதில் சந்தேகம் இல்லை.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட, படித்து உணரவேண்டிய தமிழ்ச்சுவை நிறைந்த நூல் இது!

- இன்னும் அள்ளுவோம்...