மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விடை சொல்லும் வேதங்கள்: 24

ஒரு கதை ஒரு தீர்வு! அருண் சரண்யா, ஓவியம்: சசி

##~##

கையில் இனிப்புகளுடன் வீட்டுக்கு வந்திருந்தான் நண்பன். எம்.பி.ஏ தேர்வில் வெற்றி பெற்றுள்ள தாகத் தெரிவித்தான்.

அவனை மனதாரப் பாராட்டினேன்.  அது ஒரு சாதனைதான்.  தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டே, தரமான பல்கலைக்கழகம் ஒன்றில் மாலைநேர வகுப்புகளில் படித்து, இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறான் அவன்.

தொடக்கத்தில் அவனால் வகுப்புகளுக்குத் தொடர்ச்சியாகச் செல்ல முடியவில்லை. சில நாட்கள் அலுவலகத்திலேயே தாமதமாகிவிடும். அப்போது வகுப்புகளுக்குச் செல்ல முடியாமல் போகும். சில நாட்களில் உடல் களைப்பு காரண மாக வகுப்புகளுக்குச் செல்ல முடியாது.

நாளடைவில் எப்படியோ சுதாரித்துக்கொண்டு வேலை, கல்வி இரண்டையும் பேலன்ஸ் செய்து, இப்போது வெற்றிக் கனியோடு நிற்கிறான். ''இருந்து சாப்பிட்டுவிட்டுப் போயேன்!'' என்றேன்.

''இல்லை. இன்னொரு நாள் வந்து சாப்பிடறேன். இன்னும் பிரேம், ஹரி இவங்க வீட்டுக்கெல்லாம் போய் இனிப்பு கொடுக்கணும்'' என்றான். எனக்கு ஒரு சின்ன நெருடல் உண்டானது. அதை அவனிடமே கேட்டுவிட்டேன். ''மனோகர் வீட்டுக்குப் போகலியா?  பக்கத்திலேதானே இருக்கு. அவனும் ஊரிலேதான் இருக்கான்'' என்றேன்.  

விடை சொல்லும் வேதங்கள்: 24

நாங்கள் எல்லோரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.  எங்களில், மனோகர் கொஞ்சம் வித்தியாசமானவன்.  நல்லவன் என்றாலும், பேச்சு கொஞ்சம் இடக்குமுடக்காக இருக்கும். பிறர் மனத்தைப் புண்படுத்துகிறோம் என்ற எண்ணமே இல்லாமல், வாய்க்கு வந்ததைப் பேசிவிடுவான். மற்றபடி, நாங்கள் எல்லோரும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.

'மனோகரின் வீட்டுக்குச் சென்று இனிப்பு கொடுக்க வில்லையா?’ என்று கேட்டதும், நண்பனின் முகம் இருண்டது.

''வேண்டாம். அவன் பேச்சையே எடுக்காதே! இனிமே அவனைச் சந்திப்பதை குறைச்சுக்கலாம்னு இருக்கேன். முக்கியமா, நான் எம்.பி.ஏ. முடிச்ச விஷயத்தை அவனிடம் பகிர்ந்துக்கப் பிடிக்கவில்லை. என்னை எவ்வளவு ஏளனப் படுத்தியிருக்கான் தெரியுமா? இந்த ஜன்மத்திலே நான் எம்.பி.ஏ முடிக்கமாட்டேன், இரண்டு வருஷப் படிப்பை ஐந்தாறு வருஷத்துக்காவது இழுத்தடிப்பேன், இதே கம்பெனியில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் குப்பை கொட்டுவேன்... இப்படியெல்லாம் அபசகுனமாகப் பேசி டிஸ்கரேஜ் பண்ணவன் வீட்டுக்கு நான் ஏன் போகணும்? நான் எம்.பி.ஏ முடிச்ச விஷயத்தை  அவன்கிட்டே எதுக்கு ஷேர் பண்ணிக்கணும்?'' என்று படபடத்தான்

அவன் பொங்கிப் பொங்கிப் பேசிக் கொண்டிருக்கும்போதே, யமுனை நதி தொடர்பான ஒரு கதை என் மனத்தில் எட்டிப் பார்த்தது.

யமுனை ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன் இருந்தாள். அவளின் வருத்தத்துக்கான காரணத்தைக் கேட்டாள் கங்கை.

''உலகில் உள்ள எல்லாச் சகோதரர்களும் தங்கள் சகோதரியை அடிக்கடி சந்திக்கிறார்கள்.  பாசத்துடன் இருக்கிறார்கள்.  ஆனால், என் அண்ணன் யமதர்மன் இப்போதெல்லாம் என்னை வந்து பார்ப்பதுகூட இல்லை. அதுதான் வருத்தமாக இருக்கிறது!''  என்றாள் யமுனை.

தோழி மனம் வருந்துவதைக் காணச் சகிக்க முடியாமல், யமதர்மனைப் போய்ச் சந்தித்தாள் கங்கை.

''நீ வந்து பார்க்கவில்லை என்று மிகவும் துக்கப்படுகிறாள் உன் தங்கை. அவளை ஒரு நடை போய் பார்த்துவிட்டு வரக்கூடாதா?'' என்று கேட்டாள்.

''என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் கங்கா. நான் யமுனையை இனி சந்திப்பதாக இல்லை'' என்றான் யமதர்மன். திடுக்கிட்ட கங்கை, அதற்கான காரணத்தைக் கேட்டாள்.

விடை சொல்லும் வேதங்கள்: 24

''கிருஷ்ணாவதாரம் நினைவிருக்கிறதா? வசுதேவருக்கும், தேவகிக்கும் சிறையில் அவதரித் தார் கண்ணன். அப்போது ஒலித்த அசரீரியின் கட்டளைப்படி, குழந்தை கண்ணனை கோகுலத்தில் விடுவதற்காகக் கிளம்பினார் வசுதேவர். யமுனை அவருக்கு வழிவிடவில்லை. போதாக்குறைக்கு, தன்னில் வெள்ளத்தை வேறு உண்டாக்கிக்கொண்டாள். கண்ணபிரானையே அவமதித்த, அலட்சியப்படுத்திய அவளுடன் எனக்கென்ன பேச்சு?'' என்றான் யமதர்மன்.

கங்கை என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றாள். அப்போது வானிலிருந்து ஓர் அசரீரி ஒலித்தது.

'யமதர்மா, யமுனையை நிந்திக்காதே! கண்ணனான என்மீது கொண்ட அன்பினால்தான் அவள் அப்படிச் செய்தாள். நான் அவதரித்ததை யமுனை அறிந்துகொண்டாள். என்னைச் சுமந்தபடி,  தன்னைத் தாண்டித்தான் வசுதேவர் செல்லப் போகிறார் என்று தெரிந்ததும், என் பாதங்களைக் கழுவி புண்ணியம் தேடிக்கொள்ள விரும்பினாள்.

ஆனால், மழைத்தூறல் காரணமாக வசுதேவர் கூடையில் வைத்து என்னைத் தன் தலைமீது வைத்துக்கொண்டுவிட்டார். எனவேதான், யமுனை தன் நீர்ப்பெருக்கைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தாள்.  வசுதேவரின் நாசிக்கருகே அவள் உயர்ந்தவுடன், குழந்தை உருவில் இருந்த நான் என் பாதத்தைச் சற்றே வெளியில் நீட்டி, யமுனையைத் தொட்டேன். தன் நோக்கம் நிறைவேறியவுடன், யமுனையின் வெள்ளம் குறைந்து, வேகம் அடங்கியது. இரண்டாகப் பிளந்து வழிவிட்டாள். அவள் செய்தது தெய்வக்குற்றமாக இருந்தால், அவளுக்கு தண்டனை கிடைத்திருக்குமே!  மாறாக, அவள் செய்தது தெய்வ ஆராதனை! அதனால்தானே யமுனா நதிதீரங்களாகப் பார்த்து, என் பால்யலீலைகளை நடத்தி, அவளை மகிழ்வித்தேன்' என்றது அக்குரல்.

யமதர்மன் ஆனந்தம் அடைத்தான்.  யமுனையை வாழ்த்தினான்.  'யமுனா நதியில் நீராடுவோருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்.  யம பயமும் இருக்காது' என்று அருளினான்.  

''இந்தக் கதையை நீ எதுக்குச் சொல்றேன்னு எனக்குப் புரியுது. ஆனா, யமுனை நல்ல எண்ணத்திலே செயல்பட்டிருக்கா. இந்த மனோகர் என் மனசை ரணப் படுத்திக்கிட்டேல்ல இருந்தான்?'' என்றான் நண்பன்.

''யமுனையை யமதர்மன் தப்பா புரிஞ்சுகிட்ட மாதிரிதான், நீயும் மனோகரை தப்பா புரிஞ்சுட்டிருக்கே. கண்ணன்மீது கொண்ட அளவில்லாத பக்தியால்தான், அவனது பாதத்தைத் தொட யமுனை முயற்சி செய்தாள். அது வெள்ளம் என்கிற இடைஞ்சலாக வசுதேவருக்கோ, மற்றவர்களுக்கோ படலாம். ஆனால், அவள் நோக்கத்தை நாம் மறந்துவிடக்கூடாது.

மனோகரின் நோக்கமும் நீ இந்தத் தேர்வை வெற்றிகரமாக முடிக்கணும் என்பதுதான். அவன் சொன்ன வார்த்தைகள் உன்னை ரணப்படுத்தி இருக்கலாம்.  ஆனா, ஓர் உண்மையை நீ ஒப்புக்கொள்ளத்தான் வேணும். மனோகர் உன்னை இது விஷயமா குத்திக் குத்திக் காண்பிக்கலேன்னா, நீ இத்தனை ஆக்ரோஷமா தேர்வுக்குத் தயாராகியிருப்பியா?'' என்றேன்.

சிறிது தயக்கத்தோடு, ''ஆமாம். இந்தத் தேர்வை வெற்றிகரமாக முடித்து, அவன் சொன்னதைப் பொய்யாக்கணும், அவன் முகத்தில் கரியைப் பூசணும்கிற வெறியிலதான் நான் இந்தப் பரீட்சைக்குத் தயாரானேன்!'' என்றான் நண்பன்.

அதற்குமேல் நான்  எதுவும் பேசவேண்டி யிருக்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு, நண்பன் விடைபெற்றுப் புறப்பட்டான்.

பிரேம், ஹரியின் வீடுகளுக்குப் போவதற்கு முன் அவன் மனோகரின் வீட்டுக்குத்தான் போவான் என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்தது.

- தீர்வுகள் தொடரும்...