Published:Updated:

விதைக்குள் விருட்சம் - 9

ஆசையை அடையும் வழி... சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமிஓவியங்கள்: அரஸ்

##~##

பிரச்னைகளின் பரிமாணத்தை ஓரிரு வரிகளில் சரியாகக் குறிப்பிட முடிந்தால், அந்தப் பிரச்னை பாதி தீர்ந்துவிடும்.

- ஜான் ட்யூவி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தேர்ந்தெடுக்கும் அதிகாரம்!

ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் இயல்பான சக்தி உண்டு; உரிமை உண்டு. அது, தன் தேவைகளைத் தானே தேர்ந்தெடுக்கும் அதிகாரம். குழந்தைப் பருவத்தில் நம் தேவைகளைப் பெற்றோர்

களே கண்டறிந்து, அவற்றைப் பூர்த்திசெய்ய வழிவகுத்தாலும், ஓரளவு வளர்ந்ததும், நம் தேவைகளை நாமே தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கிடைத்தது. தங்கள் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அது நியாயமான விருப்பமாக இருந்தால், அதை நிறைவேற்றி வைப்பார்கள் நல்ல பெற்றோர்கள்.

இன்றைய குழந்தைகள், தங்கள் விருப்பத்தைக் கேட்காமல் பெற்றோர் வாங்கித் தரும் பொம்மை, உடை போன்ற எந்தப் பொருளையும் விரும்புவதில்லை. ''எனக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம்கூட எனக்கு இல்லையா?'' என்று கேட்கின்றனர். பல்பொருள் அங்காடிக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்றால், தங்களுக்கு வேண்டியதைத் தாங்களே தேர்ந்தெடுக்கின்றனர். விளையாட்டுச் சாமானோ, புத்தகமோ, தின்பண்டமோ, உடையோ எதுவானாலும், குழந்தைகளுக்குக் கூட தங்களுக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது.

நாம் பெரியவர்களாக வளர வளர, இந்தத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெரிதும் பயன்படுத்துகிறோம். இந்த உரிமை மறுக்கப்பட்டால் கோபப்படுகிறோம்; வருத்தப்படுகிறோம்; மன இறுக்கம் அடைகிறோம். வாழ்க்கையில் நாம் அடையும் இன்பமோ, துன்பமோ, இந்தத் தேர்ந்தெடுக்கும் ஆற்றலை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது.

'நல்லது கெட்டது இரண்டையும் கடவுள்தானே உருவாக்கினார்? இதில் எதை நான் தேர்ந்தெடுத்தாலும், அதன் விளைவுகளுக்குக் கடவுள்தானே பொறுப்பு?’ என்று சிலர் கேட்கலாம்.

''கடவுள் தீமையைப் படைக்கவில்லை. இருள் என்ற ஒன்று இல்லை. ஒளி இல்லாத காரணத்தால்தான் இருள் உண்டானது. கடவுள் இல்லாத ஒன்றுதான் தீமை என்பது'' என்கிறார் அணு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.

விதைக்குள் விருட்சம் - 9

விவேகம் எனும் உன்னத ஆற்றல்!

ஒளி அல்லது நல்லவை தன்மீது படாமல் வாழ்பவன் தீமையில் வாழ்பவன். அறிவைக் கொடுத்த ஆண்டவன்தான் விவேகத்தையும் நமக்குத் தந்திருக்கிறான். விவேகம் என்பது நல்லது எது, கெட்டது எது என்று தெரிந்துகொண்டு, நல்லதையே தேர்ந்தெடுக்கும் திறமை. சரியாகத் தேர்ந்தெடுத்தால், வாழ்க்கை சரியாக அமையும். தவறாகத் தேர்ந்தெடுக்கும்போதுதான் நாம் பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு துன்பப்படுகிறோம். இதை ஆங்கிலத்தில் 'Error of Judgement'’ என்று குறிப்பிடலாம். தேர்ந்தெடுப்பதிலும், முடிவெடுப்பதிலும் ஏற்படும் தவறுகளால்தான் பெரும்பாலான பிரச்னைகள் ஏற்படுகின்றன.

குருகுலம் ஒன்றில் மாணவர்களுக்கு, 'நல்லதையே தேர்ந்தெடு; தீமையைத் தவிர்த்துவிடு!’ என்று பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார் குரு. ஒரு மாணவன் எழுந்து, 'குருவே! நல்லதைப் படைத்த இறைவன்தானே தீயவற்றையும் படைத் திருக்கிறான். எனவே, இறைவன் படைத்த இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுப்பதில் என்ன தவறு?’ என்று கேட்டான். 'இந்தக் கேள்விக்கு, மதிய உணவு முடிந்ததும் பதில் சொல்கிறேன்’ என்று சொல்லிவிட்டார் குரு.

குருகுலத்தில் இருந்த பத்து மாணவர்களுக்கும் இலை போடப் பட்டது. ஒன்பது மாணவர்களின் இலையில் அன்னமும், ஒரு கிண்ணத்தில் பாலும் வைக்கப்பட்டது. கேள்வி கேட்ட மாணவனின் இலையில் சாணமும், கிண்ணத்தில் கோமயமும் (பசுவின் சிறுநீர்) வைக்கப்பட்டது. இதைக் கண்டு அந்த மாணவன் அதிர்ச்சியடைந்தான். 'குருவே! என்ன இது... என் இலையில் மட்டும் அன்னத்துக்கு பதில் சாணமும், பாலுக்குப் பதில் கோமயமும் வைக்கப்பட்டிருக்கிறதே?’ என்று கேட்டான்.

'சாணி உரம் போட்ட பூமியில் விளைவதுதான் அரிசி.அதுதான் சமைத்ததும் அன்னமாகிறது. பசுவிடமிருந்து வருவது தான் பால். ஆகவே, அந்தப் பசுவிடமிருந்துதான் சாணமும் கோமயமும் வருகிறது. எனவே, எதைச் சாப்பிட்டால் என்ன?’ என்று கேட்டார் குரு.

'பாலைக் குடிக்கலாம்; கோமயத்தைக் குடிக்க முடியாதே! அன்னத்தைச் சாப்பிடலாம்; சாணியைத் தின்ன முடியாதே!’ என்று பரிதாபமாக பதில் அளித்தான் மாணவன். 'இதை எப்படித் தெரிந்துகொண்டாய்?’ என்று கேட்டார் குரு.

விதைக்குள் விருட்சம் - 9

'என் அறிவினாலும் அனுபவத்தாலும்!’ என்றான் மாணவன். 'இந்த ஆற்றலே விவேகம். நல்லதைத் தேர்ந்தெடுத்து, தீமையை விலக்கும் ஆற்றல்தான் இறைவன் நமக்குத் தந்த விவேகம்’ என்று விளக்கினார் குரு.

தவறான ஆசைகள், அதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் தவறான முடிவுகள்... இவையே பெரும்பாலும் நமது துன்பங்களுக்குக் காரணமாகின்றன.

சொந்த வீடு வாங்கவேண்டும் என்ற ஆசையில் பலரும் வீடு வாங்குகிறார்கள். பணம் கையில் இருந்தால் செலவாகிவிடும், தங்கம் அல்லது வீட்டில் முதலீடு செய்தால் விலை உயரும், அதனால் சொத்து மதிப்பு உயரும் என்று சிலர் யோசிக்கிறார்கள். அதன்பின்பு ஏதோ ஒரு காரணத்தால், வேலை போய்விடுகிறது. புதிதாகச் சேரும் வேலையில் சம்பளம் குறைவு, திருமணமாகி குழந்தைகள் பிறந்த பின்பு ஏற்படக்கூடிய புதிய செலவுகள், வேலையில் இடமாற்றம்... இப்படிச் சம்பவங்கள் நிகழும்போது, என்ன செய்வது என்று திணறுகிறார்கள். தவணைப் பணம் கட்ட முடியவில்லை; புது ஊரில் வீட்டுக்கு வாடகை தர வேண்டும்; சொந்த வீட்டை வாடகைக்கு விடவேண்டும். நல்ல மனிதர்களைக் குடிவைக்க வேண்டும். குடி வைத்தவர்கள் முரட்டுச் சுபாவம் உடையவர் களாகவோ, வாடகையை ஒழுங்காகத் தராதவர்களாகவோ, வீட்டை காலி செய்ய மறுப்பவர்களாகவோ அமைந்துவிட்டால் அதுவும் பிரச்னையாகிவிடும்.

ஒரு சிலர், ஆர்வக்கோளாறில் அவசரப் பட்டு வீடு வாங்கிவிட்டு, தான் வாங்கிய வீடு முறைப்படி கட்டப்பட்டதல்ல, அதன் மூலப்பத்திரங்களில் ஏதோ கோளாறு, வில்லங்கம் உள்ளது என்பதைப் பிறகுதான் தெரிந்துகொள்கிறார்கள். இதனால், கோர்ட், கேஸ் என அலையவேண்டி வருகிறது. இந்த மன உளைச்சலால் உடல் நலம் குன்றுகிறது. இப்போது டாக்டரை அடிக்கடி பார்க்க நேர்கிறது. மருத்துவச் செலவு அதிகரிக்கிறது. இவ்வளவையும் சரி செய்ய பரிகாரம் தேடி, ஜோசியரையும் பார்க்கவேண்டி வருகிறது.

இத்தனை இன்னல்களுக்கும் காரணம் ஆசை, அவசரம், தேர்ந்தெடுக்கும் திறமையைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகியவையே! புதிதாக சொந்த வீடு வாங்க ஆசைப்படு வதிலோ, அதைத் தவணை முறையில் வாங்கு வதிலோ ஒரு தவறும் இல்லை. ஆனால், எந்த ஒரு காரியத்தையும் தொலைநோக்குடன் ஆழ்ந்து யோசித்து, நல்லது கெட்டதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

ஆசைகள் நியாயமானவையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவற்றை அடையும் வழிமுறைகளும் நேர்மையானவையாக இருக்க வேண்டும்.

நூற்றுக்கணக்கான பன்மொழிச் சேனல்கள் அமைந்த ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில், நாம் விரும்பிய நிகழ்ச்சியைப் பார்க்க, ரிமோட் கன்ட்ரோல் மூலம் குறிப்பிட்ட ஒரு சேனலைத் தேர்ந்தெடுக்கிறோம். அதில் ஒளி- ஒலிகளை நாம் விரும்பியவண்ணம் ட்யூன் செய்கிறோம். இதேபோல, நாம் ஆசைப்படுவதை நியாயப்படுத்தி, அதற்கான வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்து, நல்லது கெட்டதை ஆராய்ந்தறிந்து, சரியான ரிமோட் கன்ட்ரோல் மூலம் அதை முடிவு செய்தால் பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும்.

எல்லாம் சரி... இவற்றையும் மீறி பிரச்னை களில் மாட்டிக்கொண்டுவிட்டவர்கள் கதி என்ன? அவர்களின் பிரச்னைகள் தீர என்னதான் வழி? அதையும் பார்ப்போம்!

- விருட்சம் வளரும்...

விதைக்குள் விருட்சம் - 9

கடல் அலையின் கவலை!

து ஒரு பரந்த கடல். கரையைவிட்டு வெகுதூரத்தில் பொங்கி எழுந்த கடலலை ஒன்று தன்னை வருடிச் சென்று கொண்டிருக்கும் காற்றை அனுபவித்தவாறு பெருமிதத்தோடு ஆகாயத்தைப் பார்த்தது. அதன்பின், தூரத்தே தெரியும் கடற்கரையைப் பார்த்தது. கரையில் மோதிச் சிதறி நுரையாகி, கடற்கரை மண்ணைத் தொட்டு மறைந்துகொண்டிருந்த மற்றொரு அலையையும் பார்த்தது. 'கடவுளே! அலைகளின் நிலை இப்படித்தான் முடியுமா? அந்த அலையைப் போலவே நானும் கரையைத் தட்டி, நுரையாகி மறைய வேண்டுமா?’ என்று வருத்தத்துடன் வாடியது.

அப்போது, அந்த அலையைத் தொடர்ந்து, கடலின் நடுப்பகுதியிலிருந்து மற்றோர் அலை புரண்டு வந்தது. தனக்கு முன்பாகக் கரையை நோக்கிச் செல்லும் இந்த அலையைப் பார்த்து, ''ஏன் வருத்தமாக இருக்கிறாய்?'' என்று கேட்டது. ''நண்பா, அலைகளாகிய நாமெல்லாம் ஒருநாள் கடற்கரையில் மோதி காணாமல் போய்விடுவோமே என்பதை எண்ணித்தான் வருத்தமாக இருக்கிறேன்'' என்றது இந்த அலை.

அதற்கு, பின்னால் தொடர்ந்து வந்த அலையானது, ''நண்பா! அழிந்து விடுவோம், மறைந்துவிடுவோம் என இல்லாததையெல்லாம் நீயாக ஏன் கற்பனை செய்து பயப்படுகிறாய்? முதலில், நீ தனியானவன் அல்ல; கடலின் ஓர் அங்கம். கடல் இருக்கும்வரை நீயும் நானும் இருப்போம்!'' என்றது.

முதல் அலை எதைப் பிரச்னையாகக் கருதி பயந்து வருந்தியதோ, அந்தப் பிரச்னை இப்போது மாறிவிட்டது. ஒரு பிரச்னையின் காரணத்தைப் புதிய பரிமாணத்தில் பார்க்கும்போது, பிரச்னை தானே மறைந்துவிடுகிறது.