Published:Updated:

ஒரு சொட்டு ஆன்மிகம்!

ஆத்ம தரிசனம்வி.ராம்ஜி

ஒரு சொட்டு ஆன்மிகம்!

ஆத்ம தரிசனம்வி.ராம்ஜி

Published:Updated:
##~##

சென்னையில், ஆர்ப்பாட்டமில்லாத ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காலைப் பொழுதில், திடுமென அப்படியொரு இனிதான சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஆம்... வேறொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த சத்குரு ஜக்கிவாசுதேவிடமிருந்து நேர்காணலுக்கான அழைப்பு வந்தது. புன்னகையுடன் வரவேற்றவர், ''இது 250-வது இதழ் அல்லவா! சக்திவிகடனுக்கு வாழ்த்துக்கள். வாசகர்களுக்கு என் ஆசிர்வாதங்கள். விகடனின் பணி தொடரட்டும்!'' என்றார் உற்சாகத்துடன்.

''உலகம் வேகமாக இயங்கிக்கொண்டிருக் கிறது; மக்கள் அதைவிட வேகமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். இது நல்லதுக்குத்தானா?'' என்று கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வேகம் தப்பா என்ன? சைக்கிளில் செல்வதை நடந்து செல்பவர் வேகம் என்பார். டூவீலரில் செல்பவர், காரில் வேகம் எடுத்துச் செல்கிறார்களே என்பார். வேகம் ஒரு தப்பே இல்லை. சொல்லப்போனால்,  வேகம்தான் திறமை. அதுதான் ஒருவருடைய தகுதி. ஆனால், உள்ளே அமைதி இருந்துவிட்டால், வேகம் சரியான இலக்கு நோக்கிப் பயணிக்கும். வாகனம்தான் நம் உடலும் மனமும். யோக சாதகம் எனும் அமைதி இருந்துவிட்டால், விழுந்துவிடுவோமோ என்று பயப்படத் தேவையே இல்லை'' என்று சொல்லிவிட்டு, மென்மையாகச் சிரிக்கிறார் சத்குரு.

'ஆனால், அப்படி வேகமெடுத்து முட்டிக் கொள்வதன் விளைவு... விவாகரத்து. இன்றைக்கு விவாகரத்துகள் அதிகரித்துக்கொண்டே இருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’

''முன்பு, கல்யாணம் என்றால், ஆயிரம் பேர் சேர்ந்து கல்யாணம் என்று இருந்தது. ஆனால், இன்றைக்கு இரண்டு பேர் மட்டுமே பேசி, முடிவு செய்து, திருமணம் செய்துகொள்கிறார்கள். பொருளாதாரச் சூழலுக்குக் கட்டுப்பட்ட வாழ்க்கை முறை வந்துவிட்டது. இங்கே அனுசரிப்புக்கும் அன்புக்கும் முக்கியத் துவம் குறைந்துவிட்டது. அன்பாக வாழ் வதுதான் முக்கியம் என்றிருந்தால், வேறு எந்த நோக்கமும் வராது. அதேநேரம், மனப் பொருத்தம் இல்லை என்றால், விலகிப் போவதில் பிழை ஒன்றும் இல்லை. அன்பு செலுத்தாமல் இருப்பதைவிட, அன்பு செலுத்துவதுபோல் பாசாங்கு செய்தபடி இன்பமாக வாழ்வதாக நடிப்பது அதைவிட மோசம் என்றுதான் சொல்ல வேண்டும்.''

ஒரு சொட்டு ஆன்மிகம்!

'இன்றைய குழந்தைகளின் சூழல்... எதிர்காலம்?’ என்று கேட்டதும், ஒரு நிமிடம் கண்கள் மூடி, பின்பு மெள்ளத் திறக்கிறார்.

''தங்களுக்குக் குழந்தைகள் தேவை என்பதை உணர்ந்தவர்கள், அந்தக் குழந்தை களுக்கு என்ன தேவை என்பதை உணராமல் எடுக்கிற முடிவுதான் பிரிவு, விவாகரத்து எல்லாமே! இப்படியான மோசமான சூழல் சமநிலையையும் தராது; வளர்ச்சியையும் கொடுக்காது.  

இன்றைக்கு ஆண்களும் பெண்களும் வேலைக்குச் செல்கிறார்கள். அதுவும் ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்க்கிற இளைஞர்களும் யுவதிகளும் நிறையப் பேர் இருக்கிறார்கள். எந்த வேலையாக இருந்தாலும், அவர்கள் அதை 'புராஜெக்ட்’ என்றே சொல்கிறார்கள்.

இங்கே, கணவனுக்கும் மனைவிக்கும், அதாவது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மிகப்பெரிய புராஜெக்ட் இருக்கிறது. கிட்டத்தட்ட 20 வருட புராஜெக்ட் அது.

எல்லா ஈகோக்களையும் கோப- தாபங் களையும் தள்ளி வைத்துவிட்டு, இந்த புராஜெக்ட் சிறப்பாக வரவேண்டும் என்று கமிட்மென்ட் வைத்துக்கொண்டு வாழ்ந்தால், நிச்சயம் வெற்றிதான். சந்தேகமே இல்லை!''

''கடவுள் தேடல் இருந்துவிட்டால், எந்தப் பிரச்னையும் இல்லை, இங்கே! கடவுளை நெருங்க என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டதும், எதிரில் மேஜை மீதிருந்த தாமரைப் பூவை எடுத்துக் காட்டுகிறார்.

''இதைப் பூவாக மாற்றியது நீங்களா? இல்லையே! சேறு பூவானது. பிறகு, நாம் மட்டும் ஏன் கடவுளை நோக்கி ஓடவேண்டும்? சரியான சூழல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. முன்பே சொன்னது போல, தகுதியை வளர்த்துக்கொள்ளவேண்டும். பொருள்தான் கடைகளில் கிடைக்கும். அருள் கிடைக்குமா என்ன? 'நான்’ எனும் நோய் இருந்துவிட்டால், அருளும் கிடைக்காது; பொருள் இருந்தும் பலனில்லை.

அதற்கு ஒரு தூண்டுகோல் வேண்டும். யாரேனும் கைப்பிடித்து மேலே ஏற்றிவிட வேண்டும். பிறகு, தூண்டியது பற்றிக்கொள்ளும். ஏற்றிவிட்டதும் பயணத்தைத் தொடங்கிவிடும். அதுதான் தகுதியின் அடையாளம். அப்போது சேறு பூவாகும். நமக்குள்ளே ஒளி பரவும். அந்த முயற்சியைத்தான் 'ஈஷா’ செய்து கொண்டிருக்கிறது.

இன்னொரு முயற்சியும் உண்டு. கிட்டத்தட்ட அதுவே என் ஆசை. ஈஷா எனும் இயக்கத்துக்குள்ளே இன்னொரு சிறிய இயக்கம்... 'ஒரு சொட்டு ஆன்மிகம்!’ நம் தமிழகத்தில் எல்லோருக்கும் ஒரேயொரு சொட்டு ஆன்மிக உணர்வைப் புகட்ட வேண்டும். ஆண்- பெண் பேதமின்றி, மதப் பாகுபாடு இல்லாமல், ஒரு புரட்சியை படிப்படியாகக் கொண்டு வரவேண்டும்.

கோயில் எனும் வழிபாட்டுத் தலம் மிகப்பெரிய ஆன்மிக அறிகுறி. நாடே கோயில். அதுவே மிகப்பெரிய அடையாளம். குறியீடு. இந்தத் தெளிந்த தன்மை உள்ளுக்குள் வந்துவிட்டால், நாடே நம்முடையது எனும் உணர்வு வந்துவிட்டால், ஆன்மிகத்தை விஞ்ஞானரீதியாகவும் உணர்ந்து தெளியமுடியும். நாட்டு மக்களுக்கு இதை இலவசமாகவே கற்றுத் தருகிறோம். 'ஒரு சொட்டு ஆன்மிகம்’ எனும் சக்தி, விரைவில் பரவி வியாபித்து நிற்கும்!'' என்று சொல்லி, அடுத்த கேள்விக்குத் தயாரானார்.

ஒரு சொட்டு ஆன்மிகம்!

''பெண்கள்- சக்திகள்! உங்கள் பார்வையில்..?''

''எதற்கு ஆண்- பெண் என்று பிரிக்கிறீர்கள்? பயணம் - பாத்ரூம் என்று பிரித்தது போதுமே! நீங்கள் ஆண் என்பதால் ஒரு பதிலோ, பெண் உட்கார்ந்திருந்தால் வேறு விதமான பதிலோ வரப்போவது இல்லை. அதேபோல், நான் ஆண் என்பதால், இப்படிக் கேள்வி கேட்கிறீர்களா என்ன? ஆண்- பெண் பேதம் வேண்டாம். எல்லாமே சக்தி! எல்லாரிடமுமே சக்தி உண்டு. அந்தச் சக்தியை சரியாக டியூன் செய்தால் போதும். அதுதான் தகுதி, திறமை, அன்பு, ஆன்மிகம், கடவுள் தேடல் எல்லாமே! இனியேனும் மக்கள் சக்தி என்று பொதுவாகச் சொல்லப் பழகுவோம்!''

''அத்தனைக்கும் ஆசைப்படு என்று நீங்கள்பாட்டுக்குச் சொல்லிவிட்டீர்களே...''- கேள்வியை முடிப்பதற்குள் கலகலவெனச் சிரிக்கிறார் சத்குரு.

''அத்தனைக்கும் என்றால் இந்தப் பிரபஞ்சம் முழுமையும் என்று சொன்னேன். மொத்தப் பிரபஞ்சத்துக்கும் ஆசைப்படுங்கள் என்றேன். மொத்த உலகையும் நேசியுங்கள் என்றேன். அவ்வளவுதான்!''

ஒரு சொட்டு ஆன்மிகம்!

'கடவுள்..?’ என்று சொல்லி நிறுத்தியதும், 'ம்... கேளுங்கள்’ என்றார். ''இதுதான் கேள்வியே..!'' என்றதும், ''அடக்கடவுளே..! கேள்வியே இதுதானா?'' என்று வெள்ளந்தியாய்ச் சிரித்தார்.

''என்னைப் பொறுத்தவரை, கடவுள் எனும் சொல்லை மிக உயிரோட்டமானதாகப் பார்க்கிறேன். உயிர்ப்பான விஷயமாகப் பார்க்கிறேன். உருவம் இல்லை. ஆனால், உயிர்ப்பான விஷயம். அதுதான் கடவுள். அதுவே பிரபஞ்ச சக்தி. நாம் பிறக்கும் முன்பே இருந்த பிரபஞ்சம், நாம் இறந்தபிறகும் இருக்கும்தானே! அப்படியெனில் நம்மைக் கடந்த அந்த சக்திக்கு முன்னே, கடவுளுக்கு முன்னே நாம் வெறும் தூசு என்று நினைக்க வேண்டுமா என்று உங்கள் மனத்தில் ஒரு கேள்வி எழலாம். வேண்டாம். அப்படியெல்லாம் நினைத்து உங்களை நீங்களே மட்டம் தட்டிக்கொள்ளாதீர்கள். நாமே கடவுள் சக்தி! இப்போது இல்லையெனினும், ஒருநாள் அந்தச் சக்தி நமக்குள்ளும் ஊடுருவலாம்!''

''எத்தனையோ மணம் வீசும் பூக்கள் இருக்க, அதென்ன காட்டுப்பூ? அதுதான் பிடிக்குமா உங்களுக்கு?''

கண்கள் மூடிச் சிரிக்கிறார். பிறகு, ''தோட்டத்தில் நீங்களோ தோட்டக்காரரோ பூச்செடிகளை நடுவீர்கள். தண்ணீர் ஊற்றுவீர்கள். வளர்ப்பீர்கள். ஆனால், காட்டுப்பூ அப்படியில்லை. அதுவே வளரும். வாழும். ஒருவகையில், நாம் எல்லோரும் காட்டுப்பூ மாதிரிதான். எப்போதோ எதனாலோ விழுந்த விதையில் இருந்து விருட்சமாக முளைக்கும் காட்டுப்பூ போல, மனிதர்களும் எங்கோ எப்போதோ கேட்கும் போதனைகளால், மளமளவென மலர்வார்கள். அப்படி மலர வேண்டும் என்பதே எல்லா உயிர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்!’' என்று சொல்லிச் சிரித்தார். பிறகு மௌனம். தாமரைப் பூவைத் தந்தார். நேர்காணல் நிறைவுற்றதைக் குறிப்பால் உணர்த்தி யதைப் புரிந்து விடைபெற்றோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism