Published:Updated:

உற்சாகப் பூரிப்பில் மாணவர்கள்!

அல்லிக்கேணி ஹயக்ரீவ ஹோமத்தில்...யக்ஞ தரிசனம்!

உற்சாகப் பூரிப்பில் மாணவர்கள்!

அல்லிக்கேணி ஹயக்ரீவ ஹோமத்தில்...யக்ஞ தரிசனம்!

Published:Updated:
##~##

சென்னை திருவல்லிக்கேணி மார்க்கெட் பகுதி, கடந்த 5.2.14 ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே வழக்கத்தை விட மிகுந்த பரபரப்புடன், தெருகொள்ளாத கூட்டத் துடன் காட்சி தந்தது. அது... மாணவச் செல்வங்களின் கூட்டம்!

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெறவும் ஸ்ரீஹயக்ரீவ ஹோமம் ஒன்றை நடத்தியது சக்திவிகடன். தமிழகம் மட்டுமின்றி பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, டில்லி எனப் பல மாநிலங்களிலிருந்தும் வாசகர்கள் தங்கள் குழந்தைகளின் பெயர் மற்றும் நட்சத்திரங்களை எழுதி, கூப்பனைப் பூர்த்தி செய்து அனுப்பியிருந்தார்கள். வெளிநாடுகளில் வாழ்கிற தமிழர்களும் தங்கள் குழந்தைகள், பேரக் குழந்தைகளின் பெயர்களைச் சேருங்கள் என்று சக்திவிகடன் ஃபேஸ்புக் (முகநூல்) மூலம் கேட்டிருந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விண்ணப்பித்த மாணவர்களின் பெயர்கள் தாங்கிய பட்டியல், பேனாக்கள், ஸ்ரீஹயக்ரீவ ஹோமம் முடிந்ததும் அங்கே கூடும் மாணவர்களுக்குத் தருவதற்கான மஞ்சள் கயிறு ஆகியவற்றை, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில் அருளும் ஸ்ரீஅழகிய சிங்கப்பெருமாள் திருவடியில் வைத்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்தச் சந்நிதி புகழ்மிக்க சந்நிதி.

'பள்ளி யிலோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம்
ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறிவெகுண்டுதூண் புடைப்பப் பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக் கேணி கண்டேனே’

உற்சாகப் பூரிப்பில் மாணவர்கள்!

- என்று திருமங்கை ஆழ்வார் பாடிய திருத்தலம் இது. பிரக லாதனுக்கு உதவிய ஸ்ரீநரசிம்மர், இங்கே குழந்தைகளுக்குக் கல்விச் செல்வத்தை வாரி வழங்கவேண்டும் எனப் பிரார்த்தித்தபடி ஹோமம் நடைபெறவுள்ள மண்டபத்துக்கு வந்தோம். அதற்குள் திருவல்லிக்கேணி, 'கங்கைகொண்டான் மண்டபம்’ கட்டுக்கடங்காத கூட்டத்தில் நிரம்பி வழிந்தது.

உற்சாகப் பூரிப்பில் மாணவர்கள்!

ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் தாயார், ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் ஆகிய விக்கிரகங்களை சேஷபட்டர் கொண்டுவந்து மேடையில் வைத்தார். அதையடுத்து திருவிளக்கு ஏற்றப்பட்டு, ஸ்ரீஹயக்ரீவ ஹோமம் துவங்கியது. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயிலின் பெரிய முறை,பரம்பரை பிரதான அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டர் தலைமையில், மாமல்லபுரம் ஸ்ரீஸ்தல சயனப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீதர பட்டாச்சார்யர், திருவல்லிக்கேணி கோயிலின் சின்ன முறை அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டர், சேஷ பட்டர், பாலாஜி பட்டர் ஆகியோர் குழுவாக இருந்து, ஹோமத்தை மிகச் சிறப்பாக நடத்தி வைத்தார்கள்.

சங்கல்பம் செய்து ஹோமம் துவங்கியதும், மாணவர்களின் பெயர் மற்றும் நட்சத்திர விவரங்களை மைக்கில் வரிசையாகச் சொல்லிக்கொண்டே வந்தோம். இந்த வேளையில், அங்கு வந்திருந்த வாசகர்களும் தங்கள் குழந்தைகளின் பெயர் மற்றும் நட்சத்திரங்களைக் கொடுக்க... அதையும் ஏற்றுக்கொண்டோம். கிட்டத்தட்ட, ஹோம பூஜை ஆரம்பிக்கும்போது பெயர்ப் பட்டியலை வாசிக்கத் தொடங்கி, ஹோமம் நிறைவுறும் தருணம் வரை பட்டியல் வாசிக்கப்பட்டது. 'அடேங்கப்பா... ஐயாயிரத் துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டிருக்கும் போலிருக்கே...'' என்று வாசகர்கள் பிரமிப்பும் மகிழ்ச்சியுமாகத் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஹோமம் நிறைவடைந்ததும், அங்கே கூடியிருந்த மாணவர்களுக்கு பேனா மற்றும் மஞ்சள் ர¬க்ஷ வழங்கப்பட்டது. அத்துடன், நைவேத்தியப் பிரசாதமாக வெண்பொங்கல் வழங்கப்பட்டது.

''சக்தி விகடன் நடத்தும் ஹோமம்னா சும்மாவா? ஆத்மார்த்தமா நடத்தி வெச்சாங்க. குழந்தைகள் உற்சாகமாயிட்டாங்க. ஹோமத்தின் சக்தியை உணர்ந்து, எங்களைப் போன்ற வயசானவங்க பூரிச்சுப் போயிட்டோம்'' என்று உணர்ச்சிப்பெருக்குடன் சொன்னார் மயிலாப்பூர் வாசகர் சதாசிவம். அவரது கருத்தையே அனைவரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். அந்த நிறைவும் மகிழ்வும் வாசகர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் என்றென்றைக்கும் இருக்கவேண்டும் என்பதே சக்திவிகடனின் விருப்பம்!

- வி.ராம்ஜி

படங்கள்: ஆ.முத்துகுமார்

திருவல்லிக்கேணி ஸ்ரீஹயக்ரீவர் ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட மஞ்சள் ரக்ஷை அடுத்த இதழுடன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism