##~## |
ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளில் ஒன்றில் செவ்வாயின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள்... அதாவது, அவள் பிறந்தவேளை (லக்னம்) அந்த த்ரிம்சாம்சகத்தில் இருந்தால், அல்லது செவ்வாய் த்ரிம்சாம்சகத்தில் சந்திரன் இருந்தால் ஒழுக்கம் இல்லாதவளாக இருப்பாள் என்கிறது ஜோதிடம்.
பிறக்கும் வேளை அவளது இயல்பை வரையறுக்கும். லக்னத்தை வைத்து ஒருவரது இயல்பை வரையறுக்க வேண்டும் என்கிறது ஜோதிடம். இரக்கமற்ற மனம், பகையை உமிழும் சிந்தனை இருக்கும். 'எனக்கு ஒரு கண் போனாலும் சரி, பிறருக்கு இரண்டு கண்களும் போகவேண்டும்’ எனும் எண்ணம் மேலோங்கியிருக்கும். பந்தம், பாசம், அன்பு, பண்பு போன்றவற்றையும் அழித்து, பகையும் துன்புறுத்தலும் மேலோங்கியிருக்கும். அதை 'துஷ்டத்தனம்’ என்று சொல்லும் ஜோதிடம். தனக்கென்று எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல், பிறருக்கு எந்த வகையிலாவது இடையூறை விளைவிப்பதே, அவளது குறிக்கோளாக மாறிவிடும். தந்தை - மகன், கணவன் - மனைவி, அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை போன்ற உறவுகள் இருந்தாலும்கூட, அதையெல்லாம் மறந்து சுயநலம் மேலோங்கிட, தனக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்கிறோம் என்பதை உணராமல், பகையில் வெற்றி பெறுவதில் முனைந்திருக்கும் அவளது மனம்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ராமாயணத்தில் தாடகையும், கைகேயியும், பாரதத்தில் கத்ருவும் உதாரணமாக இருக்கிறார்கள். காதலனை கருவியாக வைத்துக்கொண்டு கணவனை அழிக்கும் காரிகைகள் பற்றி நாளேடுகள் தகவல் தருகின்றன. பல வருடங்கள் காதலித்து திருமணத்தில் இணைந்த பிறகு, ஆறே மாதங்களில் விவாகரத்தை ஏற்றுப் பிரிந்தவர்களையும் நாளேடுகள் சுட்டிக்காட்டுகின்றன. இயல்பை மாற்ற இயலாது என்கிறது சாஸ்திரம் (ஸ்வபாவோதுரதிக்ரம:).

நூல் அறிவோ, பரிந்துரையோ அவர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த இயலாது. பாகற்காயின் கசப்பு அது தோன்றும்போதே இருக்கும். மற்ற சுவைகளின் சேர்க்கையில் அதை மாற்றினாலும் கசப்பின் தன்மையும், அதன் வீரியமும் அழியாது. நாம் உட்கொள்வதற்கான தகுதியைப் பெறுமே ஒழிய, கசப்பின் இயல்பு அனுபவத்துக்கு வந்துவிடும். கசப்பு மருந்தை இனிப்புடன் இணைத்துக் கொடுத்தாலும் கசப்பின் பலன் செயல்பட்டு, பிணியை அகற்றுவதைப் பார்க்கிறோம். படிப்பு, பட்டம், பதவி, பணம், அழகு, இளமை அத்தனையையும் முழுமையாகப் பெற்ற பிறகு, இணைப்பின் இன்பம் வேண்டும் என்று ஏங்கித் தவித்து, இணைப்பைப் பெற்றவுடன் நொடியில் அதைத் துண்டிக்கும் துணிவு துஷ்டத்தனத்துக்கு எடுத்துக்காட்டு. இருவரும் துன்பத்தைச் சந்திப்பது பரிதாபம். இங்கு இயல்பு வென்றுவிடுகிறது.
ரிஷபம் இரட்டைப்படை ராசி; துலாம் ஒற்றைப்படை ராசி. ஒற்றைப்படை ராசியில், முதல் ஐந்து பாகையும்; இரட்டைப்படை ராசியில் கடைசி ஐந்தும் செவ்வாய் த்ரிம்சாம்சகம். அதில் லக்னம், அல்லது சந்திரன் இருக்கும் வேளையில் பிறந்தவளின் இயல்பு சுட்டிக்காட்டப்படுகிறது. ராசியின் சரிபாதி சூரிய- சந்திரர்களது பங்கு. ஒற்றைப்படை ராசியின் முதல் 15 பாகைகள் சூரியனின் பங்கு. இரட்டைப்படை ராசியில், பின்பகுதி (15-ல் இருந்து 30 வரை) சூரியனின் பங்கு. அதுபோன்று சந்திரனின் பங்கு, ஒற்றைப்படை ராசியின் பிற்பகுதியிலும், இரட்டைப்படை ராசியின் முற்பகுதியிலும் இணைந்திருக்கும். ஆன்மகாரகன் சூரியன், மனத்துக்குக் காரகன் சந்திரன். ஆன்மாவும் மனமும் சம அளவில் ராசியில் இணைந்திருக்கும். சூரியனும் சந்திரனும் ராசிக்கு உடைய கிரகங்களாக மட்டும் பார்க்கப்படாமல், மற்ற கிரகங்களுடன் இணைந்து இயல்பை இறுதிசெய்யும் கிரகங்களாகத் திகழ்கின்றன.
இரண்டு ராசிகளுக்கும் (ரிஷபம், துலாம்) அதிபன் சுக்கிரன். அவனுக்குத் தனியாக இயல்பை இறுதி செய்ய இயலாது. க்ஷேத்ரம், ஹோரா, த்ரேக்காணம், த்ரிம்சாம்சகம் ஆகியவற்றின் இணைப்பு இயல்புக்கு இறுதி வடிவம் கொடுக்கும். அதேநேரம், செவ்வாயின் த்ரிம்சாம்சகம் இயல்பின் தன்மையை வெளியிடும். அதைத்தான் 'துஷ்டா’ என்ற சொல்லில் சுட்டிக்காட்டுகிறது ஜோதிடம்.
ஒற்றைப்படை ராசியில் க்ஷேத்ரம்- சுக்கிரன், ஹோரா- சூரியன், த்ரிம்சாம்சகம்- செவ்வாய். இரட்டைப்படை ராசியில் க்ஷேத்திரம்- சுக்கிரன், ஹோரா- சூரியன், த்ரிம்சாம்சகம்- செவ்வாய். வெப்ப கிரகத்தின் ஆதிக்யத்தில் இயல்பு துஷ்டத்தனமாக மாறியது என்று விளக்கம் அளிக்கும். சூரியனும் சந்திரனும் இயல்பை இறுதி செய்ய உதவுவார்கள். அவற்றை 'காரக க்ரகம்’ என்று குறிப்பிடும். செவ்வாய் இயல்பாக மாற்றுபவன். ஆராயாமல் முடிவெடுக்கும் அவசரம் அவனது இயல்பு. அதுதான் துஷ்டத்தனத்துக்கு ஆதாரம். அதற்கு பாப கிரகமான அதாவது வெப்ப கிரகமான சூரியன் உதவுகிறான். ராசியில் கிரகங்களின் அணிவகுப்பு, இயல்பின் மாறுதலுக்குக் காரணமாகிறது.
சுக்கிரன் ராசிக்கு ஒட்டுமொத்த அதிபதியாக இருந்தாலும் இயல்பை வரையறுக்க த்ரிம்சாம்சகம் வேண்டும் என்கிறது ஜோதிடம். இப்படியிருக்க, இயல்பைச் சுட்டிக்காட்டுவதில் பங்கு பெறாத ராகு- கேதுக்களை கட்டத்தில் பார்த்து இயல்பை வரையறுக்கும் துணிவு ஜோதிடத்துக்குப் பொருந்தாது. கால்சர்ப்ப யோகம், காலசர்ப்ப தோஷம், விபரீத காலசர்ப்ப யோகம் போன்றவற்றை உருவாக்கி பலன்
சொல்வதில், ஜோதிடத்தை அறிமுகம் செய்த அறிஞர்களுக்கு உடன்பாடு இல்லை. பண்டைய காலத்தில் ஜைமினியும், தற்காலத்தில் புதிய சிந்தனையாளர்களும், ஜோதிடத்தில் பலன் சொல்லும் முறையில் புது புதுமைகளைப் புகுத்தியிருக்கிறார்கள். அவர்கள் ஒருவரும் இன்று வரை வெற்றி பெறவில்லை; முக்காலமும் உணர்ந்த முனிவர்களின் சிந்தனையோடு போட்டிபோட இயலவில்லை.
பொய் தற்காலிக வெற்றியைத் தரும். துரியோதனன் சூதாட்டத்தில் வெற்றி பெற்றான். நிலைத்து நிற்கவில்லை. தோல்வியைத் தழுவினான்! வான சாஸ்திரத்திலும் தங்களது சிந்தனைக்குப் பொருத்தமான கணிதத்தைப் புகுத்தி, கணித ஆதாரத்தையே மாசுபடுத்திய புது கணித அறிஞர்கள் தோன்றினார்கள். அவர்களும் தோல்வியைத் தழுவ நேர்ந்தது.

பஞ்சாங்கம் கணித ஜோதிடத்தில் அடங்கும். புது கணித அறிஞர்கள் தங்கள் சிந்தனைக்குப் பிடித்தமான கணிதத்தைக் கையாள... மாறுபட்ட கணிதத்துடன் பல பஞ்சாங்கங்கள் வளைய வருகின்றன. அவர்களுடைய கணிதத்தின் முடிவுகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டு மக்களைக் குழப்பி வருகிறது. ஜோதிட சிந்தாந்த நூல்களுக்குத் தொடர்பு இல்லாத கணிதங்கள், பஞ்சாங்கங்களாக உருவெடுத்து, மக்களுக்கு சுணக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விஷயத்தை உள்வாங்காமல் அவசரப்பட்டு, தனது சிந்தனைகளைப் புகுத்தி புதுவடிவம் ஏற்படுத்துவது பெருமைக்கு உரியதில்லை.
ஒருசில பஞ்சாங்கங்கள் ஜோதிட சித்தாந்தத்துக்குப் பொருத்தமாக இருந்தாலும், மக்களை ஈர்க்க இயலவில்லை. இந்தப் பஞ்சாங்கங்களை ஆதாரமாக வைத்து சுளுவாக ஜாதகம் கணித்துப் பலன் சொல்லும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள். நமது சிந்தனைக்கு எட்டாத விஷயங்களை ஜோதிடம் வெளிக் கொணர உதவுகிறது. அதன் வழிகாட்டலில் நமது சிந்தனை இணைய வேண்டும். நமது சிந்தனையே வழிகாட்டியாக மாறக் கூடாது. மாறினால், எட்டாத விஷயம் எட்டாமலே போய்விடும்!
கூட்டுப்பலன் நடைமுறைக்கு வரும். தனியொரு கிரகம் இயல்புக்குப் பொறுப்பு ஏற்காது. வெப்ப கிரக சேர்க்கையில் வெப்ப கிரக த்ரிம்சாம்சகம் பலனை அளிக்கும் தகுதி பெறுகிறது. கிரகத்தின் தன்மைக்கு ஏற்ப மனநிலை தென்படுகிறது. தட்ப கிரக சேர்க்கையில், தட்பகிரக த்ரிம்சாம்சகம் பலனை அளிக்கும் தகுதி பெறுகிறது.
குரு, சுக்கிரன், புதன் ஆகியவற்றின் த்ரிம்சாம்சகம் நல்ல எண்ணங் களையும், நல்ல இயல்பையும் உடையவர்களாக சுட்டிக்காட்டும். அவர்களும் தன்னிச்சையாக பலன் அளிக்காமல், மற்ற வெட்ப தட்ப கிரகங்களின் இணைப்பில் பலனின் இறுதி வடிவத்தை வெளியிடுவார்கள். வெட்பதட்ப கிரகங்களின் இணைப்பில்தான் பலன் வடிவம் பெற வேண்டும்.

ஒன்பது கிரகங்களை ஒன்றாகப் பார்க்கும் தர்மசாஸ்திரம், பிரித்துப் பார்க்காது. நவக்கிரக வழிபாடு என்று சொல்லும். ஐம்பெரும் பூதங்கள், தனித்தனியே செயல்படாது. ஒன்று செயல்பட மற்றொன்றின் அம்சம் அதில் இணையவேண்டும். நமது சிந்தனையாளர்கள் அதை பஞ்சீகரணம்- ஐந்தின் இணைப்பு என்று சொல்வார்கள்.
நீரின் ஒரு பகுதி தனி நீராக இருக்கும். செயல்படாத நீராகவே இருக்கும். மறுபாதி மற்ற நான்கு பூதங்களிலும், நான்கு பகுதிகளாகப் பிரிந்து இணையும்போது, அது செயல்படும் தகுதியைப் பெறும். எல்லா பூதங்களும் சரிபாதி பூதங்களாக இருந்து, மறுபாதியானது மற்ற நான்கு பூதங்களிலும் இணைந்து இருக்கும். அப்போது ஐந்து பூதங்களும் செயல்படும் தகுதி பெற்று, நமக்குத் தேவையானதைத் தருவதில் திறமை பெறுகின்றன என்பது சிந்தனையாளர்களின் கருத்து.
செயல்பாட்டுக்கு மற்ற பூதங்களின் அம்சத்தின் இணைப்பு ஒத்துழைக்கிறது. உலகம் உருவாக, பஞ்சபூதங்களின் பஞ்சீகரணம் உதவியது. நமது உடலும் பஞ்சீகரணத்தில் விளைந்ததே! நவக்கிரகங்களும் ஐம்பெரும் பூதத்தின் அம்சங்களோடு இணைந் தவை. அவற்றின் அலாதியான கலவை, பல சிந்தனைகளைத் தோற்றுவிக்கக் காரணமாகிறது.
அதில் வெட்பதட்பத்தின் பங்கு முக்கியமானதால், கிரகங்களும் வெட்பதட்ப கிரகங்களாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. சுப கிரகம், அசுப கிரகம் எனும் பாகுபாடு, பலன் சொல்லும் விஷயத்தில் முக்கியப் பங்கு பெறுகிறது.
இரும்பு- பூமி பூதம்; வெப்பத்தின் தாக்கத்தில் உருமாறுகிறது. தட்பத்தின் இணைப்பில் மாறிய உருவம் நிலைத்துவிடுகிறது. உருவ மாறுதலும், அதன் தொடர்ச்சியும் இரண்டின் பங்கில் உருவாகிறது. தனித் தங்கமானது அணிகலனாக மாறுவதற்கு செப்பின் அம்சத்தின் இணைப்பு வேண்டும்.
க்ஷேத்ரம், ஹோரா, த்ரேக்காணம், நவாம்சகம், தசாம்சகம், த்ரிம்சாம்சகம் ஆகியவற்றில் வெட்ப தட்ப கிரகங்களின் கலப்படம் உண்டு. அதில் தனி வெப்ப கிரகமோ, தனி தட்ப கிரகமோ பலன் சொல்வதில் பொறுப்பு ஏற்காது. இரண்டின் இணைப்பில் உருவாகும் பலன் இறுதியானது. அதைத்தான் திரிம்சாம்சகம் வெளியிடுகிறது.
இங்கு, த்ரிம்சாம்சகம் மட்டும் தனியாக பலன் சொல்லவில்லை. ராசியின் மொத்தப் பிரிவுகளில் இணைந்திருக்கும் அத்தனை கிரகங்களும் த்ரிம்சாம் சகத்தோடு இணைந்து பலன் அளிக்கிறது என்று பொருள்.
ஆன்மாவுக்கும் மனத்துக்கும் (சூரியனுக்கும் சந்திரனுக்கும்) அதற்கு உகந்த வகையில் வெட்பதட்ப ராசிகளை அளித்து, மற்ற ஐந்து கிரகங்களுக்கு, மீதி பத்து ராசிகளை இரண்டிரண்டாக அளித்திருப் பதைக் கவனிக்க வேண்டும்.
ராசி மண்டலம் முழு உடல். தோன்றும் உபாதைகளுக்கு அதில் பரந்திருக்கும் வாதம், பித்தம், கபம் மூன்றும் காரணமாகும் என்று சொல்லும். ஆயுர்வேதமும் அதை ஆமோதிக்கும். நீர், நெருப்பு, காற்று ஆகியவற்றின் இணைப்பு உடல் ஆரோக்கியத்தை அளிக்கும். அதன் ஏற்றக் குறைச்சல் பிணியைத் தோற்றுவிக்கும் என்ற மருத்துவ சித்தாந்தமும், தட்பவெட்பங்களே மாறுதலுக்குக் காரணம் எனச் சொல்லும். ஜோதிட சித்தாந்தமும் அதுதான்.
பனிக்கட்டி வெப்பத்தில் உருகி உருவம் மாறுவதும், நீர் பனியின் தாக்கத்தில் கட்டியாகி உருவம் மாறுவதும் கண்கூடு. சிந்தனைதான் இயல்பின் வடிகால். அதை வரையறுக்க இரு வகை கிரகங்களின் இணைப்பு முக்கிய பங்கு வகிப்பதால், இயல்பை இறுதி செய்து வெளியிடுவதில், த்ரிம்சாம்சகத்துக்குத் தனிப் பங்கு இருப்பதை இந்தச் செய்யுள் விளக்குகிறது (துஷ்டா புனர்பூ:).
கரும்பைச் சிதைத்து நீர் எடுக்க வேண்டும். எள்ளை யந்திரத்தில் இணைத்து எண்ணெய் பெற வேண்டும். மந்திரத்தில் மாங்காய் விழாது என்று சொன்னவர்கள், பிறர் தலையெழுத்தை தனது மந்திரத்தில் வெளியிடுகிறார்கள்.
புது சிந்தனையின் பெருமை, புலப் படாததையும் புலப்பட வைக்கிறது. மக்களில் விழிப்பு உணர்வு ஏற்படும் போது, நல்ல நிலைமை தலைதூக்கும்!
- சிந்திப்போம்...