Published:Updated:

நல்லன எல்லாம் அருளும் ஸ்ரீநாகராஜர்!

நாக வழிபாடு! ஜே.வி.நாதன்

நல்லன எல்லாம் அருளும் ஸ்ரீநாகராஜர்!

நாக வழிபாடு! ஜே.வி.நாதன்

Published:Updated:
##~##

பாரதத் தாயின் பாதமாகத் திகழும் புண்ணிய க்ஷேத்திரமாம் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந் துள்ளது நாகர்கோவில். இங்குள்ள ஆலயத்தின் பெயரும் இந்த ஊரின் பெயரும் ஒன்றாகத் திகழ்வது, இந்தத் தலத்தின் சிறப்பம்சம். ஆமாம்! ஊரின் நடுநாயகமாக அழகுற அமைந்திருக்கிறது, ஸ்ரீநாகராஜர் ஆலயம்.

கர்நாடக மாநிலம் 'குக்கே’ சுப்ரமணியர் ஆலயம், கேரளாவில் சர்ப்பக் காவுகள் என்ற பெயரில் எண்ணற்ற கோயில்கள்... இவை போன்று, தமிழகத்தின் இந்தக் கோயிலும் நாகர் வழிபாட்டை பிரதான மாகக் கொண்டது. துவக்கத்தில் இந்த ஊருக்குக் கோட்டாறு என்றே பெயர். பிற்காலத்தில், இங்கிருக்கும் ஸ்ரீநாகராஜர் ஆலயத்தின் சாந்நித்தியமும் பிரசித்தியும் ஊருக்கும் நாகர்கோவில் என்றே பெயரைப் பெற்றுத் தந்துவிட்டது என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாகர் வழிபாடு சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய நான்கு சமயங்களுக்கும் பொதுவானது. கழுத்திலும் கைகளிலும் தலையிலுமாக நாகாபரணம் பூண்டவன் சிவபெருமான். திருமால் பாம்புப் படுக்கையில் பள்ளிகொண்டிருப்பவர். சமண சமய தீர்த்தங்கரர் பார்சுவநாதரின் திருவுருவமும் படமெடுத்திருக்கும் நாக உருவத்துடன் சேர்ந்து திகழும். புத்தமத பிக்குகளும்

நல்லன எல்லாம் அருளும் ஸ்ரீநாகராஜர்!

நாகத்துக்குக் கோயில் அமைத்து வணங்கி வந்துள்ளார்கள். இலங்கைத் தீவில் பாம்பின் மீது அமர்ந்த நிலையிலும், துயில் கொள்ளும் நிலையிலும் புத்தபிரானின் திருவுருவச் சிலைகளைத் தரிசிக்கமுடியும்.

நாகர்கோவில் ஸ்ரீநாகராஜர் ஆலயம் குறித்து செவிவழிக் கதையொன்று உண்டு. இளம் பெண்ணொருத்தி புல் அறுக்கப் போனாள். அவளுடைய அரிவாள் எதிர்பாராதவிதமாக ஐந்து தலை நாகம் ஒன்றின் தலையில் பட்டு ரத்தம் பீறிட்டது. பயந்து போனவள், ஊர்க்காரர் களிடம் விஷயத்தைச் சொல்லி அழைத்து வந்தாள். அவள் சுட்டிக்காட்டிய இடத்தில் ரத்தம் கொட்டிக் கிடப்பதைக் கண்டு ஊர்க்காரர்கள், அந்த இடத்தில் சிறு கோயில் கட்டி ஐந்து தலை நாகத்துக்கு சிலை வைத்து வழிபட ஆரம்பித்தனர்.

கி.பி. 1516 முதல் 1535 வரை களக்காடு நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஸ்ரீவீரஉதயமார்த்தாண்ட வர்மன் என்ற கேரள மன்னன், சோழர் குலத்து இளவரசியை மணந்தான். தொழுநோயால் வருந்திய இந்த மன்னன், இங்கு வந்து வழிபட்டு பிணி நீங்கப் பெற்றான் என்கிறார்கள். இவனே, பழைய கோயிலை கேரள கட்டடக்கலைப் பாணியில் பெரிதாகக் கட்டி புதுப்பித்தான் என்பதை, கல்வெட்டு தகவலால் அறிய முடிகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் கருவறை யின் பின்புறத்தில், தொழுநோய் முதலான பிணிகளை அகற்றும் 'ஓடவள்ளி’ என்ற கொடி படர்ந்திருந்தது என்றும், அரசு அதிகாரி ஒருவர் அதை வெட்டி அகற்றிவிட்டார் என்றும் ஊர் மக்கள் கூறுகின்றனர். மேலும், திருக்கோயிலின் உள்ளேயும் கோயிலைச் சுற்றிலும் உள்ள தோட்டங்களில் நாகலிங்க மரங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களை நாகராஜரின் குறியீடாகக் கருதுகிறார்கள் உள்ளூர் மக்கள்.

நல்லன எல்லாம் அருளும் ஸ்ரீநாகராஜர்!

ஆலயம் மிக ரம்மியமாகத் திகழ்கிறது. நுழைவாயிலின் இருபுறமும் சுமார் ஆறு அடி உயரத்தில், ஐந்து தலை களுடன் படம் எடுத்த கோலத்தில் இரண்டு பாம்புச் சிலைகள் உள்ளன. வடக்குப்புறம் உள்ள நாகத்தின் படம் அகன்று காணப்படுவதால் அதை பெண் நாகம் என்றும், தெற்குப்புறம் உள்ளது ஆண் பாம்பை சித்திரிப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 'தெற்குப்புறத்தில் உள்ளது நாகராஜர், வடக்குப் புறம் உள்ளது நாகராணி அல்லது பத்மாவதி. இந்தப் பாம்பின் கீழே தவக்கோலத்தில் திகழ்வது சமணர்களின் 23-வது தீர்த்தங்கரரான ஸ்ரீபார்சுவநாதர்’ என்று சமண நூலான உத்தரபுராணம் குறிப்பிடுகிறது.

இந்த ஆலயத்தில், ஐந்து தலை நாக உருவில் அருள்கிறார் மூலவர் ஸ்ரீநாகராஜர். ஐந்து தலை நாகம் குடை பிடிக்க பாமா-ருக்மிணி தேவியருடன் அருள்புரிகிறார் ஸ்ரீஅனந்த கிருஷ்ணன். இந்த இரு மூர்த்திகளின் சந்நிதிக்கும் நடுவில் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் சந்நிதி. ஸ்ரீநாகராஜருக்கு பூஜை முடிந்ததும், ஸ்ரீஅனந்தகிருஷ்ணனுக்கும் ஸ்ரீகாசி விஸ்வநாதருக்கும் பூஜைகள் நடக்கின்றன. ஆலயத்தின் இறுதி பூஜை அர்த்தஜாம பூஜை ஆகும். இது ஸ்ரீஅனந்த கிருஷ்ணருக்குச் செய்யப்படுகிறது.

நல்லன எல்லாம் அருளும் ஸ்ரீநாகராஜர்!

ஆலய உபதேவதைகளாக ஸ்ரீகன்னிமூலை கணபதி, ஸ்ரீ பால முருகன், ஸ்ரீதர்மசாஸ்தா, ஸ்ரீதுர்கா, நாகமணி பூதத்தான், நின்ற திருக்கோலத்தில் குழலூதும் கிருஷ்ணன் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். ஆலயத்துக்கு வெளியே நாக தீர்த்தக் குளம், அதையொட்டி 'நாகர் திட்டு’ என்று அழைக்கப் படும் பகுதியில், பெரிய அரச மரத்தின் அடியில் வரிசையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாகர் சிலைகள் நடுவில் ஸ்ரீகணபதி. பக்தர்கள் பால் கொண்டு வந்து, இங்கிருக்கும் நாகர் சிலைகளுக்கு தாங்களே அபிஷேகித்து வழிபடுகிறார்கள். மூலவருக்கு பால் பாயஸம் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.

மூலவர் ஸ்ரீநாகராஜராக இருப்பினும், கொடிமரம் ஸ்ரீஅனந்த கிருஷ்ண ஸ்வாமிக்கு மட்டுமே இருக்கிறது. அதன் உச்சியில் கருடனுக்குப் பதிலாக ஆமையின் உருவம் காணப்படுகிறது. பாம்புக் கோயிலில் அதன் பகைவனான கருடனை வைக்காமல் ஆமையை (கூர்மாவதாரம்)  அமைத்துள்ளார்கள்.

நல்லன எல்லாம் அருளும் ஸ்ரீநாகராஜர்!

ஸ்ரீதுர்கைக்கும் இங்கு தனிச் சந்நிதி உண்டு. ராகு, கேது முதலிய கிரகங்களால் பாதிக்கப்படும் மக்கள், செவ்வாய் அன்று ராகு காலத்தில் இந்த துர்கையை வழிபட்டுப் பலனடைகிறார்கள்.

''மற்ற ஆலயங்களில் எல்லாம் நாகர் சிலை களைச் செய்து பிரதிஷ்டை செய்திருப் பார்கள். ஆனால், இங்கு அருளும்  மூலவர் சுயம்பு மூர்த்தி. அதேபோல், கருவறையின் கூரையும் ஓலையால் அமைந்ததுதான். ஒருமுறை மன்னன் ஒருவன் கருவறைக்கு மேல் கோபுரம் கட்ட முடிவு செய்தான். ஆனால், அன்று இரவே அவனது கனவில் தோன்றிய நாகராஜர், 'எனக்குக் கோபுரம் வேண்டாம். இப்படியே இருக்கட்டும்’ என்று கூறிவிட்டாராம். எனவே, இன்றுவரையிலும் ஓலைக் கூரையுடன் திகழ்கிறது கருவறை. ஸ்ரீநாகராஜர் அவதார நட்சத்திரம் ஆயில்யம். நாக தோஷம் உள்ளவர்கள், இந்த நட்சத்திர நாளில் இங்கு வந்து மூலவருக்கு பாலபிஷேகம் செய்து வழிபட, பிரச்னைகள் யாவும் பறந்தோடிவிடும். அதேபோன்று இங்கு தரப்படும் பிரசாதமும் விசேஷம் வாய்ந்தது. புற்றுமண், புஷ்பம், சந்தனம் மூன்றையும் இலையில் வைத்துத் தருவோம். இது, சகல நோய்களுக்கும் நிவாரணியாகத் திகழ்கிறது'' என்கிறார், ஸ்ரீநாகராஜர் ஆலய மேல் சாந்தி (தலைமை அர்ச்சகர்) நாராயணன் நம்பூதிரி.

நல்லன எல்லாம் அருளும் ஸ்ரீநாகராஜர்!

தினமும் காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் நடைபெறும். காலை 5:30 மணிக்கு உஷத் பூஜை. இது முடிந்ததும் உஷத் சீவேலி (ஆலயத்தைச் சுற்றி ஸ்வாமி ஊர்வலம்)  நடக்கும். தொடர்ந்து 6 மணிக்கு ஸ்ரீபலி, 10 மணிக்கு பாலபிஷேகம், அடுத்து நவகலச அபிஷேகம், காலை 11-க்கு உச்சி பூஜை, தொடர்ந்து உச்சிகால சீவேலி முடிந்ததும் நடை சாற்றப் படும். மீண்டும் 6:30-க்கு  ஆலயம் திறக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இரவு 8-மணிக்கு அத்தாழ பூஜை; அத்தாழ சீவேலி. 8:30-மணிக்கு கோயில் நடை சாற்றப்படும்.

கோயில் வளாகத்தில் ஒருகாலத்தில் ஆயிரக்கணக்கில் உயிருள்ள பாம்புகள் இருந்தனவாம். அவற்றைக் குறைக்கவே சுமார் 800 வருடங்களுக்கு முன் சிவபெருமான்  (ஸ்ரீகாசிவிஸ்வநாதர்) இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டார். அதன்பின் ஜீவ சர்ப்பங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது.

தை மாதம் 10 நாட்கள் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. திருவிழா, ஸ்ரீ அனந்த கிருஷ்ணனுக்கு மட்டுமே. மூலவர் ஸ்ரீநாக ராஜருக்கு ஆவணி மாதம் எல்லா ஞாயிற்றுக் கிழமையும் திருவிழாதான்! ஆவணியில் வரும் ஆயில்ய நட்சத்திர நாள் ஸ்ரீநாகராஜருக்கு ரொம்பவும் விசேஷம். இது தவிர, கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை ஆகியவையும் திருவிழாக்களாகக் கொண்டா டப்படுகின்றன!

நல்லன எல்லாம் அருளும் ஸ்ரீநாகராஜர்!

சரும நோய் தீருதல், விவாகத் தடை நீங்குதல், சந்தான பாக்கியம், கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஆகியவற்றுக்கு பக்தர்கள் பால் கொண்டுவந்து இங்குள்ள நாகர் சிலை களுக்கு ஊற்றி வழிபடுகிறார்கள்.  மனத்தில் எந்தப் பிரார்த்தனையை சுமந்து வந்தாலும், நல்லதொரு தீர்வும் வரமும் தந்து நலமுடன் வாழ வைக்கிறார் ஸ்ரீநாகராஜர்.

படங்கள்: ரா.ராம்குமார்

அள்ள அள்ளக் குறையாத புற்றுமண்!

குமரி மாவட்டக் கோயில்கள், தென்னகத் திருக்கோயில்கள் போன்ற பல நூல்களை ஆய்வுக் கண்ணோட்டத்தில் எழுதிப் புகழ்பெற்ற டாக்டர் பத்மநாபன், ஸ்ரீநாகராஜர் ஆலயத்தின் தலவரலாற்றையும் எழுதியுள்ளார்.  

''கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரி என்ற மலையில் நாகர்கள் வாழ்ந்து வந்ததாக வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ராமாயண காலத்திலேயே நாகர்கள் ஆதிக்கம் இப்பகுதியில் இருந்தது தெரியவருகிறது.திருஞானசம்பந்தரின் தேவாரத்தி லிருந்தும், கல்வெட்டுத் தகவல்களில் இருந்தும் 'கோட்டாறு’ எனும் இந்தப் பெருநகரில் சமணம் ஓங்கி வளர்ந்திருந்தது என்பதை அறியலாம்.  ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளில் பள்ளி என்றே குறிப்பிடப்படுவதால் 16\ம் நூற்றாண்டு வரை இங்கு சமணர் ஆதிக்கம் அதிகமாக  இருந்தது தெரிகிறது.

மூலவரின் கருவறைக்கு விமானமும் கிடையாது; பீடமும் கிடையாது. மூலவர் தண்ணீரில்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். பிரசாத பயன்பாட்டுக்காக எவ்வளவோ காலமாக எடுத்து வந்தாலும், மூலவரைச் சுற்றியுள்ள புற்று மண் குறையாதது, அதிசயம்தான்! கனவில் பாம்பு துரத்துவதாகக் கனவு காணும் பக்தர்கள், இந்தக் கோயிலுக்கு நேர்ந்துகொண்டு ஆலய வளாகத்தில் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்கிறார்கள். இதில் பிற மதத்தவர்களும் அடக்கம் என்பது சிறப்பம்சம். இது ஒரு சக்தி வாய்ந்த திருத்தலம் என்பது என் அனுபவம், நம்பிக்கை!'' என்கிறார் டாக்டர் பத்மநாபன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism