மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

கடவுள் ஸ்லோகங்களை தமிழில் கூறினால் பலன் உண்டா? சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

##~##

பாக்கெட் பாலால் கோயில்களில் அபிஷேகம் செய்வது சரியா? தவிர, எவர்சில்வர் பாத்திரத்தால் ஸ்வாமி விக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்யலாமா?

- எம்.ரமணன், சென்னை-83

ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். ஆயிரம் வருஷங்களுக்கு முன், ஐந்நூறு வருஷங்களுக்கு முன், நூறு வருஷங்களுக்கு முன், ஐம்பது வருஷங்களுக்கு முன் என்று காலப்போக்கில் நமது வாழ்க்கை முறையில் எத்தனையோ மாறுபாடுகளைச் சந்தித்துக் கொண்டே வந்திருக்கிறோம். அவற்றை எல்லாம் தேவையா, இல்லையா என்று சிந்திக்காமலேயே ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

பொட்டணப் (பாக்கெட்) பால் என்பது கிராமங்களில் வராது. நகரங்களில்தான் வரும். நகரங்களில் பொட்டணப் பாலை அன்றாட வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்பதால் தப்பு எதுவும் வராது. இதுவே கிராமம் என்றால், வீட்டில் மாட்டையும் வைத்துக் கொண்டு எங்கோ போய் பால் பொட்டணத்தை வாங்கிக் கொண்டு வந்து அபிஷேகம் செய்தால்தான் தப்பு!

முதலில் மண் பாண்டத்தில் சமைத்துக் கொண்டு இருந்தோம். அப்புறம் பித்தளைப் பாத்திரம் ஆயிற்று. வெண்கலப் பாத்திரம் ஆயிற்று. அலுமினியத்தைத் தாண்டி எவர்சில்வருக்கு வந்திருக்கிறோம். நமது வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்துக் கொண்ட பிறகு, பகவானுக்கு மட்டும் மாறுதல் இருக்கக் கூடாது என்பது உங்களால் முடியாத காரியம். எவர்சில்வரைத் தவிர வேறு பாத்திரமே இல்லை எனும் ஊரில், அதை வைத்துக் கொண்டு பக்திதான் பெரிசு என்று பயன்படுத்த வேண்டுமே தவிர, குழம்பத் தேவையில்லை.

கேள்வி - பதில்

'பொட்டணப் பால்தான் இருக்கிறது... அபிஷேகமே பண்ண மாட்டேன். பித்தளைப் பாத்திரம் கிடைக்கவில்லை... கோயிலுக்கே போக மாட்டேன்’ என்று சொல்வது சரியாகுமா? அணைந்து அணைந்து எரிவது மாதிரி மின்விளக்குகள் போடுகிறார்கள். ஓ.... ஓ... என்று இரைவது மாதிரி ஒலிபெருக்கிகள் வைத்திருக்கிறார்கள். அதை எல்லாம் ஏற்றுக் கொண்ட நீங்கள், பாலில் மட்டும் ஏன் பாகுபாடு பார்க்கிறீர்கள்?

? கடவுளுக்கு இரண்டு மனைவி அமைந்ததன் உண்மைப் பொருள் என்ன?

-எஸ்.சதீஷ்குமார், ராணிப்பேட்டை

எல்லாக் கடவுளுக்குமே இரண்டு மனைவி என்று இல்லையே... ஒரு மனைவி கொண்ட கடவுள் உண்டு. கிருஷ்ண பரமாத்மாவுக்கு 16 ஆயிரம் மனைவிகள். ஷோடச ஸ்த்ரீ சஹஸ்ரேசாய நம: என்பார்கள். '16 ஆயிரம் கோபிகைகளின் கணவன் கிருஷ்ணன்’ என்று பொருள்.

அவதாரம் என்றால்... எந்தக் கடவுள் அவதாரம் எடுக்கிறாரோ, அவருக்கு அவதாரத்துக்கு முன்பு யார் மனைவியோ, அவளே இந்த அவதாரத்திலும் மனைவியாக வந்துவிடுவாள். கிருஷ்ணனாக பகவான் அவதரிக்கும்போது ஸ்ரீலட்சுமியே ருக்மிணியாக வந்துவிடுவாள். ராமனாக அவதரிக்கும் போது ஸ்ரீலட்சுமி, சீதையாக வருவாள். இந்தப் புது அவதாரத்திலும் அதே மனைவியுடன் இன்னொரு கல்யாணம் நடக்கும்.

இரண்டு மனைவிகள் என்றால், நாம் நினைப்பதுபோல குடும்பம் நடத்துவது போன்ற கதையை எல்லாம் சொல்லக் கூடாது. அவர்கள் எல்லாம் சக்திகள். ருக்மிணி வந்தால், கிருஷ்ணனுடன் சக்தியும் சேர்ந்து வந்திருக்கிறது என்று பொருள். இரண்டு மனைவிகள் இருந்தாலும் நம்மைப் போல நான்கைந்து குழந்தைகள் எல்லாம் கடவுள்களிடம் பார்க்க முடியாது.

கேள்வி - பதில்

விக்னேஸ்வரர் பிரம்மச்சாரி என்கிறார்கள். அவருக்கு ஸித்தி - புத்தி என்று இரண்டு மனைவிகள் இருப்பதாகவும் சொல்வார்கள். ஸித்தி என்பது என்ன? எடுத்த காரியத்தில் வெற்றி. புத்தி என்பது நம் சிந்தை தெளிவாக இருக்க உதவுவது. இந்த இரு சக்திகளும் விக்னேஸ்வரரிடம் உண்டு. இதுதான் மனைவிகள்!

கந்தன் பழநிமலையில் பிரம்மச்சாரி. ஆனால் அவருக்கும் வள்ளி - தெய்வயானை என்று இரண்டு மனைவிகள். இவை இரண்டும் சக்தி இல்லையா? முருகனை அடைய வேண்டும் என்று தவமிருந்து வந்தவர்கள். மனிதர்களைப் போல பேப்பரில் விளம்பரம் கொடுத்து வந்தவர்கள் இல்லை. கடவுள்களை, மனிதர்கள் போல் பார்க்கக் கூடாது!

சபரிகிரீஸ்வரருக்கு பூர்ணை, புஷ்கலை என்று இரண்டு மனைவிகள். 'முழுமை... நிரம்பியவன்’ என்று இந்த இரண்டு பெயர்களுக்குப் பொருள். சபரிகிரீஸ்வரரிடம் போனால் செல்வமெல்லாம் நிரம்பி வழியும்.

இந்த பூமியை ராஜாவின் மனைவி என்று காவியம் சொல்லும். ''இந்த பூமி மற்றும் சகுந்தலை என்று எனக்கு இரண்டு மனைவிகள்’ என்று ஒரு ராஜா சொல்வதாக சாகுந்தலத்தில் ஒரு வர்ணனை வரும். அதனால் பூமி, மனைவியாகுமா?

ஆன்மிகக் கண்ணோட்டத்தில் கடவுள்களின் சக்திகளே மனைவிகள். உயர்ந்த நிலையில் தோன்றுவது இது. குழந்தை நிலையிலேயே இருப்பவர்கள், மனைவி என்பதற்கு நமக்குத் தெரிந்த பொருளையே எடுத்துக் கொள்வார்கள்.

பரிகார ஸ்லோகங்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருதத்திலேயே உள்ளன. தமிழில் இல்லையா? தமிழில் கூறினால் பலன் கிடைக்காதா?

- தி.கருணாநிதி, அனிச்சம்பாளையம்

மொழி என்பது நம் எண்ணத்தைப் பிறருக்குப் புரியவைக்கும் ஒரு கருவி. அந்தக் கோணத்தில் எல்லா மொழிகளும் ஒரே தரமானதுதான். உயர்வு - தாழ்வு கிடையாது. ஆனால், குறிப்பிட்ட தத்துவங் களை விளக்க வரும்போது, அதற்கென்று சில தொழில்நுட்ப வார்த்தைகளை உருவாக்கி, அதன்மூலம் விளக்க முற்படுவார்கள். அந்த வார்த்தைகளை இன்னொரு மொழிக்கு மாற்றுவது என்பது கஷ்டம்தான்.

ஒவ்வொரு தத்துவ விளக்கத்தையும் அணுகும்போது, அதில் என்னென்ன தொழில் நுட்ப வார்த்தைகள் பயன்பட்டிருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக கம்ப்யூட்ட ருக்கான உத்தரவுகளை நாம் நினைக்கிற மொழியில் கொடுக்க முடியுமா? முடியாது. காரணம், அதற்கான அணுகுமுறையே வேறு. அதைப் போல, ஒரு குறிப்பிட்ட சாஸ்திரத்தை விளக்குவதற் காக மட்டும் சில கருத்துகளை உள்ளடக்கிய சில மொழிகள் இருக்கும். அந்த வழியாகப் போய்த்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு என் மொழியிலே ஏன் சொல்லக்கூடாது என்று நீங்கள் கேட்பது, லட்சியத்தை அடைவதைவிட, கருவியின் மேலேயே கவனமாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. இப்படி இருந்தால் லட்சியத்தை அடைய முடியாது!

திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதிக்கு கௌஸ்துப மாலை அணிவிப்பது ஏன்? கௌஸ்துப மாலை என்பது என்ன?

- டாக்டர் கோமதி, தஞ்சாவூர்

பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்று 'கௌஸ்துபம்’ என்கிற ரத்தினம்.

திருமாலை, 'அலங்காரப் பிரியன்’ என்றும் போற்றுவர். அணிகலன்கள் அணிவதில் மகிழ்பவரான திருமால், கௌஸ்துபத்தை ஏற்றுக்கொண்டார். அவருக்கு, நாம் அணிவிக்க விரும்பும் மாலைகள் பல இருந்தாலும் அவர் விரும்பும் மாலைக்கு தனிச்சிறப்பு உண்டு. கௌஸ்துப மாலையும் அப்படியே!

பாற்கடலில்.. நாம் விரும்பும் பொக்கிஷங்களும் உண்டு, ஒட்டுமொத்த உலகை அழிக்கும் விஷமும் இருந்தது. ஆனால், திருமால், 'கௌஸ்துபம்’ என்கிற ரத்தினத்தைத் தேர்ந்தெடுத்தார். நாம் வாழும் உலகமும் பாற்கடல் போன்றதே. அதிலிருந்து, நம்மை உயர்த்தும் நன்னடத்தைகளை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். திருமாலுக்கு கௌஸ்துப மாலை அணிவிக்கப்படும்போது இந்தக் கருத்தே நம் மனதில் பளிச்சிட வேண்டும்!

கேள்வி - பதில்

உலகில் பல்வேறு நாடுகள் இருந்தும் இந்தியாவில் மட்டும் அதிக அளவில் சித்தர்களும், ஞானிகளும், அவதாரப் புருஷர்களும் தோன்றக் காரணம் என்ன?

-கூந்தலூர் வி.சந்திரசேகரன், கும்பகோணம்-1

முதலில் தோன்றிய அறிவுநூல் மறை. அதை 'எழுதாக்கிளவி’ என்பார்கள். இதை, வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஆமோதிக்கிறார்கள். 'உலகில், நாகரிகம் பல இடங்களில் பரவி, வளர்ந்து இருந்தாலும் முழுமை பெற்ற நாகரிகத்தின் உருவம், வேதத்தில் தென்படுகிறது!’ என்றார் மாக்ஸ்முல்லர் (இவர், நமது வேதத்தை அணு அணுவாக ஆராய்ந்தவர்). இதை, கீத், ப்ளூம் பீல்ட், மாக்டனல், வின்டர்நிட்ஸ் போன்றவர்கள் ஆமோதித்தும் பாராட்டியும் உள்ளனர். இவர்களது நூல்கள், ஜெர்மனி யிலும் இங்கிலாந்தின் 'இன்டியா ஆபீஸ்’ லைப்ரரியிலும் பாதுகாப்பாக இருக்கின்றன.

ஆம், அப்பழுக்கில்லாத அறத்தின் ஊற்று நம் இந்திய மண்ணில் தென்பட்டது. 'இந்தியாவில் பிறந்த முதல் மனிதனிடம் இருந்து உலகில் வாழும் மற்றவர்கள், தங்களது அறநெறிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்!’ என்று மனு கூறுவார் (ஏதத்தேச ப்ரஸுதஸ்ய ஸகாசாத்...)

எல்லா மண்ணிலும் எண்ணெய் கிடைக்குமா? எல்லா மண்ணிலும் தங்கம் கிடைக்குமா? மலை வாழைப்பழத்தை எல்லா இடங்களிலும் பயிரிட முடியுமா? முடியாது அல்லவா... இப்படி, மண் வளம் மட்டுமல்ல... தேசத்துக்கு தேசம் உயிரினங்களிலும் மாறுபாடுகள் தென்படும். பூமியின் ஒவ்வொரு பகுதிக்கும் இயற்கை அளித்த தனித்தன்மை என்று ஒன்று உண்டு.

நம் பாரதத்தின் தனித்தன்மை அது. அறம் போற்றும் நாடு; ஆன்மிகம் வளர்க்கும் தேசம்! அக்னி வழிபாட்டை அறிமுகம் செய்த வேதம், 'பாரத’ என்ற அக்னியின் பெயரை நம் தேசத்துக்குச் சூட்டியது.

உடலோடு இணைந்த ஆன்மாவுக்கு முக்கியத்துவம் தராமல், மற்ற புலன்களின் தாகத்தைத் தணிப்பதே வாழ்க்கையின் குறிக்கோள் என்ற சிந்தனை, பலரிடம் உண்டு. ஆத்மாவை அறிந்துகொள்ளும் ஆர்வம் சிலருக்கு மட்டுமே உண்டு. 'ஆன்மாவை அறிவதே சிந்தனையின் எல்லை; பிறப்பின் குறிக்கோள்’ என்கிறது வேதம் (பிரம்மை வ வாச: பரம் வ்யோம)

'உலகவியலுடன் மனிதன் இணைந்தால் போதாது; ஆன்மிகமும் இணைய வேண்டும். அதுவே, முழு ஆனந்தத்தைத் தரும்’ என்பதே, நம் சித்தர்கள் மற்றும் ஞானிகளது கருத்து ஆம், 'ஆன்மாவை அறிவதே அறிவு!’ என்பதுதான் அவர்களது கணிப்பு.

ஆராய்ச்சி எப்போது முற்றுப்பெறும்? புலன்களையோ மனத்தையோ ஆராய்ந்தால் மட்டும் போதாது. உடலில் இருக்கும் ஆன்மாவையும் ஆராய வேண்டும். அதற்கு மேலும் ஆராய்வதற்கு ஒன்று இல்லை; ஆராய்ச்சி முற்றுப் பெற்றுவிடும்.

இப்படிப்பட்ட ஆன்ம ஆராய்ச்சியில் தங்களை அர்ப்பணித்தவர்கள் நம் ஞானியர். நம் சிந்தனைக்கு எட்டாத பல விஷயங்களை... மறையின் துணையுடன், தாங்கள் அனுபவித்த தோடு, மற்றவருக்கும் பகிர்ந்தளித்தவர்கள் அவர்கள். இந்த மண்ணில் பிறந்தவர்களுக்கு ஆன்மிக சிந்தனை இயல்பு. ஆகையால், அவர்கள் இங்கு தோன்றுவதே பொருந்தும்!

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.