Published:Updated:

சக்தி சங்கமம்

‘அர்ப்பணிப்பே வழிபாடு... உழைப்பே நைவேத்தியம்!’வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.- வாசகர்கள் கலந்துரையாடல் - 2

சக்தி சங்கமம்

‘அர்ப்பணிப்பே வழிபாடு... உழைப்பே நைவேத்தியம்!’வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.- வாசகர்கள் கலந்துரையாடல் - 2

Published:Updated:
##~##

'இந்துக்களின் முழுமுதற் கடவுள்
காவல் தெய்வம்
இன்று காவல்துறையின் கண்காணிப்பில்...
ஓ! இன்று விநாயகர் சதுர்த்தி!’

- சென்ற இதழ் சக்தி சங்கமம் கட்டுரையில் வெளியான இந்தக் கவிதையும், அதையொட்டிய கேள்வியும் தன்னுடையதே என்று, இதழ் வெளியான அன்றே நம்மைத் தொலைபேசியில் அழைத்து, உரிமையுடன் சுட்டிக்காட்டி யிருந்தார் வாசகி அருணா எஸ். ஷண்முகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதோ... அடுத்து வருவதும் அவரது கேள்வியே! சுவாரஸ்யமாகத் தொடர்கிறது வெ.இறையன்புவுடனான வாசகர்கள் கலந்துரையாடல்.

? ''இன்றைய உலகில் எண்ணற்ற பல மதங்கள் இருக்கின்றன. அதன் காரணமாகவே பல சச்சரவுகள் தோன்றுகின்றன. எனவே, மதங்கள் தேவையா?'' - அருணா எஸ். ஷண்முகத்தின் இந்தக் கேள்விக்கு விரிவாக பதிலளித்தார் இறையன்பு.

சக்தி சங்கமம்

* ''மதங்கள் தேவையா, தேவை இல்லையா என்பது பிரச்னை அல்ல. இன்னும் இரண்டு மதங்கள்கூட உருவாகலாம். ஏன்... ஒரே மதத்தில்கூடப்  பிரிவுகள் உண்டே! இந்து மதத்திலேயே சைவம், வைஷ்ணவம் எனப் பிரிவுகள் உண்டு. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சமயக் கொள்கையில் பிடிப்பு; நம்பிக்கை. அப்படித்தான் இருக்கும். அதுதான் இயல்பும்கூட! எனவே, எத்தனை மதங்கள் வேண்டுமானாலும் நம்மிடையே இருக்கட்டும்; அதில் பிரச்னை இல்லை. நமது நம்பிக்கைதான் உசத்தியானது, மற்றதைவிட மேம்பட்டது என்று நினைக்கும்போதுதான் பிரச்னை ஆரம்பமாகிறது. ஒவ்வொரு சமயமும் தனித்தன்மை வாய்ந்தது என்று நினைத்தால், இந்த உலகில் எல்லோரும் சுமுகமாக வாழ்வதற்குப் போதிய இடம் இருக்கிறது.

ஒரே வீட்டிலேயே ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமாகக் கடவுளை வழிபடுகிறார்கள். ஒருவருக்கு அம்பாள், ஒருவருக்கு சிவன், ஒருவருக்குப் பிள்ளையார், ஒருவருக்கு முருகன், ஒருவருக்குப் பெருமாள் என்று ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் பல தெய்வ வடிவங்களை வழிபட லாம். ஆனாலும், குடும்பம் ஒன்றே என்று இணக்கமாக இருக்கிறார்கள் அல்லவா?

அப்படி ஒவ்வொரு மதத் தினரும் இந்த உலகமே தனது குடும்பம் என்றும், அடுத்த மதத்தினரைத் தமது சகோதரன் என்றும் நினைக்கத் தொடங்கி விட்டால், பிரச்னை ஏற்பட வழியே இல்லை. ஆனால், இதெல்லாம் தானாக நிகழ வேண் டும்; அரசு உத்தரவு போட்டு முறைப்படுத்த முடியாது.''

? ''கடவுள் நம்பிக்கை என்றால் என்ன? ஆன்மிகம் என்றால் என்ன? கடவுள் நம்பிக்கைதானே ஆன்மிகம்?'' - கேட்டவர், வாசகர் பி.ஸ்ரீராம்.

* ''கடவுள் நம்பிக்கை என்பது ஆன்மிகம் அல்ல. கடவுள் நம்பிக்கை அற்றவர்களிலும் ஆன்மிகவாதிகள் உண்டு! நம் வாழ்க்கைதான் ஆன்மிகம்.

காலையில் எழுந்ததும் நம்முடைய உள்ளங்கைகளைப் பார்க்க வேண்டும், பார்த்தால் நல்லது என்ற நடைமுறை உள்ளது. தரையில் கால் வைக்கும் போதுகூட, மண்ணிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு கால் வைக்கும் பண்பு சில கிராமங்களில் உண்டு.

அதே போல், நம் நாட்டில் இரவு வேளைகளில் கீரை, காய், பூக்களைப் பறிக்கக்கூடாது என்பதைக்கூட ஒரு பண்பாடாகவே வைத்திருக்கிறோம். இவை நம் நாட்டின் பண்புகள். இத்தகைய அபூர்வ பண்பு களை வேறு எந்த நாட்டிலும் காண முடியாது. ஆக, நான் முன்பு சொன்னபடி நமது வாழ்க்கையை முறைப் படி வாழ்ந்து முடிப்பதே ஆன்மிகம். வாழ்க்கையை நேசிப்பதும், வாழ்க்கையை அனுபவிப்பதும்தான் ஆன்மிகம்!''

சக்தி சங்கமம்

?  ''ஆனால், பெரும்பாலா னோர் கடவுளை வழிபடுவது தான் ஆன்மிகம் என்று நினைக்கிறார்களே?'' என்று கேட்டார் மாணவி காவ்யா சம்பத்.

* ''அது நம்முடைய தவறு. ஆன்மிகம் என்பதன் உண்மையான அர்த்தத்தை நாம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. சாப்பிடுவதில் ஆன்மிகம் இருக்கிறது; குளிப்பதில் ஆன்மிகம் இருக்கிறது; நாம் மற்றவர்களுக்கு உதவுவதில் ஆன்மிகம் இருக்கிறது.

பண்டிகைகள் எதற்கு? நம்மிடம் இருப்பதை இல்லாதவரிடம் பகிர்ந்து கொள்வதற்குத்தான். தீபாவளி என்றால், நீங்கள் வீட்டிலே வெடி வெடித்து, தனியாக இனிப்பு உண்டு மகிழ்வதற்கு அல்ல. உங்கள் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு, உங்களுக்குத் தெரிந்து வறுமை நிலையில் இருப்போருக்குப் புதுத் துணிகள் எடுத்துக் கொடுத்து அவர்களை மகிழ்விப்பதற்குத்தான்!

அப்படிக் கொடுக்கும் போதுதான் அது ஆன்மிகமாக மாறும். இல்லையென்றால் அது  வெற்றுக் கொண்டாட் டம்தான். ஆன்மிகம் என்பது வயோதிகத்துடனோ இறைவனுடனோ தொடர்புடையதல்ல; அது வாழ்க்கையோடு தொடர்பு உடையது! வாழ்க்கையைக் கொண்டாடுவது, வாழ்க்கையைப் பயன் உள்ளதாக ஆக்கிக்கொள்வது என்று ஆன்மிகத்துக்கு ஒரு விளக்கம் கொடுத்து வாழக் கற்றுக்கொண்டால், வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் சிறப்பாக அணுக முடிவதுடன், சந்தோஷமாகவும் வாழ முடியும்.

ஒவ்வொரு நாளும் இரவு படுக்கும்போது, இன்றைக்கு யாருக்கு உதவி செய்தோம், யாருக்கு ஆறுதல் சொன்னோம், யாருக்கு மன தைரியம் அளித்தோம், யாருடைய துயரத்தைப் பகிர்ந்து கொண்டோம், யாரைப் பாராட்டினோம், யாருக்கு உணவளித்தோம், யாரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தோம் என்று நினைத்துப் பாருங்கள். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் செய்திருப்பீர்களேயானாலும், நீங்கள் ஆன்மிகமான நாளை வாழ்ந்திருக்கிறீர்கள் என்று பொருள்.''

? ''அப்படி என்றால், கடவுளுக்கும் ஆன்மிகத்துக்கும் தொடர்பு இல்லையா?'' - மாணவர் வெங்கட் எழுப்பிய கேள்வி இது.

* ''உங்களுக்கு புத்தரைப் பற்றிக் கூறுகிறேன். கடவுள் இல்லை என்றவர் புத்தர். ஆனால், அவரைவிடக் கடவுள் தன்மை உடையவர் இருக்கிறாரா என்று யோசி யுங்கள். எனவே கடவுளுக்கும், நீங்கள் கடவுள் தன்மை உடையவராக இருப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும், ஒருவர் கடவுள் தன்மையோடு இருக்கலாம். அப்படிப் பட்டவர்கள் அன்புமயமாக இருப்பார்கள். எல்லோருக்கும் உதவுவார்கள். எல்லோருக்கும் மரியாதை கொடுப்பார்கள்.

சக்தி சங்கமம்

பெரியார் அப்படி இருந்திருக்கிறார். சிறிய பிள்ளைகளுக்குக்கூட மரியாதை கொடுப்பார். அவர் ஒருமுறை, தொண்டர் ஒருவர் அழைத்ததன்பேரில் நாலைந்து பேரோடு அவரது வீட்டுக்குச் சாப்பிடச் சென்றார். சாப்பாட்டில் பருப்பு நன்றாக இல்லை. ஆனாலும், எதுவும் சொல்லாமல், அதை ரசித்து ருசித்துச் சாப்பிட்டார். மணியம்மை கேட்டதற்கு, ''அவனே பாவம், ஏழை! அவன் நம்மை அன்புடன் அழைத்துச் சாப்பாடு போடும்போது, நானே அதை ரசித்துச் சாப்பிடவில்லை என்றால், வேறு எவன் சாப்பிடுவான்? அப்புறம் அவன் மனசு கஷ்டப்படாதா?'' என்றாராம். இதுதான் ஆன்மிகம். அடுத்தவர் மனத்தைப் புண்படுத்தாமல் இருப்பதைக்காட்டிலும் மிகச் சிறந்த ஆன்மிகம் வேறு இல்லை.''

? ''எனில், ஆன்மிகத்தின் அடிப்படை மனித நேயம் என்று கொள்ளலாமா?'' என்று கேட்டார் ஸ்வர்ணலக்ஷ்மி.

* அன்பும் கருணையுமே அடிப்படை. சந்திக்கிற மனிதர்கள் மீது மட்டுமல்ல, பார்க்கிற உயிர்கள் மீதும் கருணை ஊற்றாகப் பெருக்கெடுத்துக் கசிகிறவனே உண்மையான ஆன்மிகவாதி.  வள்ளலார், தம்மைக் கருணையின் வடிவமாகவே இறைமை படைத்ததாகக் குறிப்பிட்டு மகிழ்கிறார். நமக்குள் அன்பு அதிகரிக்கும்போது நாம் ஆன்மிகத்தைத் தொடுகிறோம். கருணை ஊற்றெடுக்கும்போது, கடவுளின் கழல்களைப் பிடிக்கிறோம். வெறுப்பு வெளிப்படும்போது நரகத்தின் வாயிலில் நிற்கிறோம்.''

? ''தொலைக்காட்சி, செய்தித்தாள்களில்... ஆன்மிகப் போலிகளிடம் சிக்கிக்கொண்டு, அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு, அவர்களின் வழியே ஆன்மிகம் என்று ஏமாந்து வாழ்க்கையைத் தொலைத்து நிற்பவர்கள் பற்றிய செய்திகள் இன்றைக்கு அதிகம் வெளியாகின்றன. இதற்கு என்னதான் தீர்வு? உண்மையை உள்ளபடி அறிந்து கொள்வதற்கான வழிவகை என்ன?'' - இது மாணவர் வெங்கட்டின் கேள்வி.

* ''அதிகம் விளம்பரமாகிறவர்கள் போலிகளாகத்தான் இருக்க முடியும் என்பதை நீங்களே புரிந்துகொள்ள வேண்டும்.  உண்மை யானவர்கள் விளம்பர வெளிச்சத்தை நாடுவது இல்லை. போலிகளே, தங்கள் தலையைச் சுற்றி செயற்கையாக ஓர் ஒளிவட்டத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள்.  

நமது இந்திய சிந்தனை மரபு  ஆழமானது.  வாழ்வின் அனைத்து நுட்பங்களையும் அது முன்வைக்கிறது. காலையில் எழுந்ததும் பூமியை மிதிப்பதற்கு முன் மன்னிப்பு கேட்கக் கற்றுத் தருகிறது. குடிக்கிற குவளை நீரையே கங்கை, யமுனையின் சங்கமமாக மாற்றக் கற்றுத் தருகிறது. நமக்குத் தேவை இறைமையே தவிர, இடைத்தரகர்கள் இல்லை. நாம் நமக்குள் தேட முற்பட்டால், ஏமாற வேண்டிய அவசியமும் இல்லை; ஏக்கம் அடைந்து நிற்கவும் தேவையில்லை.''

? ''மேலைநாட்டுத் தத்துவ நூல்கள், பல விஷயங்களில் நமது உபநிடதங்களைப் பின்பற்றியிருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். இது பற்றி உங்கள் கருத்து?'' என்று ஸ்ரீராம் கேட்க, அருவி மாதிரி தகவல்களைக் கொட்டி அசத்திவிட்டார் இறையன்பு.

''எமர்சன் எழுதிய 'பிரம்மா’ என்ற கவிதை முழுக்க முழுக்க பகவத்கீதையை அடியொற்றியது. டி.எஸ்.எலியட் நோபல் பரிசுபெற்றவர். அவருடைய 'தரிசு நிலம்’ கவிதையில் 'ஓம் சாந்தி’ என்ற உபநிடத வாக்கியத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்.  வால்ட் விட்மன், இந்தியச் சிந்தனை மரபில் மிகவும் நாட்டம் கொண்டவர்.  ஜார்ஜ் குல்ஜீஃப், அவருடைய தத்துவ ஆக்கத்தை நமது உபநிடதங்களின் சாரங்களைக் கொண்டு வடிவமைத்தார் என்பதைத ஊஸ்பென்ஸ்கி எழுத்துக்களின் மூலம் உணரமுடிகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, வெகு காலத்துக்கு முன்பே மிக நுட்பமான செய்திகளை அனுபவங்களின் மூலமாக உணர்ந்து, உண்மைக்கு அருகில் நம் முன்னோர்கள் பயணித்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.''

? ''தாங்கள் ரசித்து வாசித்த ஆன்மிக நூல் எது? எங்களைப் போன்ற இளைஞர்கள் படிப்பதற்கு ஏதேனும் நூல்களை சிபாரிசு செய்யுங்களேன்?'' என்று கேட்டுக்கொண்டார் ஸ்ரீராம்.

* ''மாண்டூக உபநிடதம், கடோபநிடதம் ஆகிய இரண்டும் மிகச் சிறந்த உபநிடதங்கள். இரண்டையும் படித்திருக்கிறேன். உள்ளுணர்வு, ஆழ்மனம், உச்சமனம் போன்றவற்றை அறிந்துக்கொள்ள உதவுவது மாண்டூக உபநிடதம். மரணத்துக்குப் பின்னான வாழ்க்கையை நசிகேதன் மூலமாக நமக்கு உணர்த்துவது கடோபநிடதம். நசிகேதன் என்னைக் கவர்ந்ததால், என் 'சாகாவரம்’ நாவலின் நாயகனுக்கு அந்தப் பெயரை வைத்தேன்.  

புத்தரைப் பற்றி 'Thich Nhat Hanh’ எழுதிய நூலும், லாவோட்சு எழுதிய 'டாவோ டீச்சிங்’ நூலும், ஜே.கிருஷ்ணமூர்த்தியின் 'அறிந்த வற்றிலிருந்து விடுதலை’ என்ற நூலும், ஓஷோவின் 'தந்த்ரா உச்சபட்சக் கோட்பாடு’, கலீல்ஜிப்ரானின் 'தீர்க்கதரிசி’, கிப்ளிங்கின் 'கிம்’, ஹெர்மன் ஹெசியின் 'சித்தார்த்தா’, தாகூரின் 'கீதாஞ்சலி’, திருமூலரின் 'திருமந்திரம்’, வள்ளலாரின் 'அருட்பா’, ரிச்சர்ட் பாக்கின் 'மாயைகள்’, மார்லோவின் 'டாக்டர் ஃபாஸ்டஸ்’, ஹெமிங்வேயின் 'கடலும் வயோதிகரும்’, ரோஷி ஃபிலிப் கப்பலேயின் 'கிழக்கில்’, ஜென்னின் 'உதயம்’ போன்ற சில நூல்களையெல்லாம் அவசியம் நீங்கள் படிக்க வேண்டும். இன்னும் தரமான நூறு ஆன்மிக நூல்களை என்னால் குறிப்பிட முடியும்.  

ஜெயகாந்தனின் 'குருபீடம்’, ஆன்மிகம் இழையோடும் சிறுகதைதான். டால்ஸ்டாயின் சிறுகதைகள், தாஸ்தாவெய்ஸ்கியின் சிறுகதைகள், கிரேக்கத்தில் சில நாடகங்கள், டி.எஸ்.இலியட்டின் காக்டெயில் விருந்து, சோஃபியின் உலகம் போன்றவை ஆன்மிகம் தழுவிய அனுபவப் பதிவுகள்.''

சக்தி சங்கமம்

? ''தமிழகத்தில் ஜென் கதைகளை மேற்கோள்காட்டி விளக்கியதில் நீங்களே முன்னுதாரணம் எனச் சொல்லலாமா? ஜென் இலக்கியங்களில் உங்களுக்கு ஈடுபாடு வந்தது எப்படி? எப்போது?'' - கேட்டவர் ஹேமா ராமன்.

* ''அருளுரை என்கிற நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி நடத்திய போது ஜென், தாவோ போன்றவற்றைப் பற்றிப் பேசுபவர்கள் அப்போது யாருமில்லாததால், என் நண்பர் முருகன் ஐ.ஏ.எஸ் என்னைப் பேசுமாறு கேட்டுக்கொண்டார்.  அப்போது அவற்றை மையமாகக் கொண்டு, பல வாழ்வியல் நெறிகளை நான் எடுத்துச் சொன்னேன். நான் சொன்னேன் என்பதைவிட என் மூலமாக அவை வெளிப்பட்டன என்றுதான் கூறவேண்டும்.  

ஆன்மிகம் என்பதை பெரிய மாயாஜாலமாக உருவகப்படுத்தாமல் சாதாரண நிகழ்வு களோடு தொடர்புகொண்டதாக எளிமைப் படுத்தியது ஜென்னின் பங்களிப்பு. ஜென் துறவிகளின் வாழ்க்கை பாசாங்குகள் அற்றது.  தன்முனைப்பை முழுவதுமாக விலக்கிவிடச் சொன்னது ஜென். 1988-ம் ஆண்டு 'லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி’யில் பயிற்சி பெறுகிறபோது, எனக்கு அந்த இலக்கியங்களில் ஆர்வம் ஏற்பட்டது. நான் வாசித்த ஜென் கதைகளும், ஹைக்கூ கவிதைகளும், அவை குறித்த வியாக்கியானங்களும் என்னைக் கவர்ந்து இழுத்தன.  தொடர்ந்த வாசிப்பு, எனக்குள் பல விரும்பத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியது.  என் சொல்லில் மட்டும் இல்லாமல், செயல்களிலும் அவற்றை வெளிப்படுத்த எனக்கு நாட்டம் ஏற்பட்டது. அது இப்போதும் நடந்துகொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன்.''

? ''எத்தனையோ துறைகளில் மிகச் சிறப்பாகப் பணிபுரிந்த அனுபவம் உங்களுக்கு உண்டு. அலுவல் நிமித்தமாகவோ, வேறு சொந்த விஷயங்களிலோ, உங்களை மனச்சோர்வுக்கு ஆளாக்கும் அல்லது சவால்களைச் சந்திக்கவைக்கும் தருணங்களை நீங்கள் கடப்பது எப்படி?'' - வி.பி.பலராமன் கேட்ட இந்தக் கேள்விக்கு மெல்லிய புன்னகையுடன் பதிலளித்தார் இறையன்பு.

சக்தி சங்கமம்

* ''சவால்கள்தான் நம்மைச் சாதிக்கத் தூண்டுகின்றன.  மலையே இல்லாமல் சிகரத்தை அடைவது எப்படிச் சாத்தியம்? சிகரத்தை அடையும் முயற்சியில் சிராய்ப்புகள் ஏற்படுவது சகஜம்தானே! நமக்காகப் பணியாற்றும்போது, தோல்வி ஏற்பட்டால், சோர்வு ஏற்படும்.  பொதுநலனுக்காகப் பணியாற்றுகிறபோது, மனச்சோர்வு மணித்துளியில் மறைந்துபோகும்; கணநேரத்தில் கரைந்து போகும்.  தோல்விக்கான காரணங்களைத் துல்லியமாகப் பட்டியலிட்டால், அடுத்த அடியை இன்னும் அழுத்தமாக எடுத்து வைக்க ஆர்வம் பிறக்கும்.  உயர்ந்த நோக்கத்துக்காக காலை முன்னே வைத்தால், உலகமே ஒன்றுதிரண்டு நம் உடல் வியர்க்காமல் இருக்க வெண்சாமரம் வீசத் தயாராக இருக்கிறது என்பதே அனுபவப் பிழிவு.''

? ''இறுதியாக ஒரு கேள்வி சார்! எங்களைப் போன்ற இளைஞர்களுக்குத் தாங்கள் சொல்ல விரும்பும்  அறிவுரை என்ன? இன்றைய இளைஞர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயம் என்று எதைச் சொல்வீர்கள்?'' என்று ஸ்வர்ணலக்ஷ்மி கேட்டார்.

* ''மூத்தவர்களை மதிப்பதும், அவர்களது அனுபவங்களைக் காது கொடுத்துக் கேட்பதுமே இளைஞர்கள் தங்களை இன்னும் மெருகேற்றிக்கொள்ளத் தேவைப்படுகிற நெறி! நேரத்தையும் பணத்தையும் விரயமாக்கும் தீய பழக்கங்களில் ஒருபோதும் சிக்கிக் கொள்ளாமல் வாழ்வதுதான் அவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை.  ஒவ்வொரு நிமிடமும் முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதுதான் அவர்களுக்கான கடமை.''

இறையன்பு சொல்லி முடிக்க...

''சார்... நீங்கள் சொன்னீர்களே, ஆன்மிகமான வாழ்க்கை என்று! இன்றைக்கு எங்களுக்கு அது வாய்த்தது என்றுதான் சொல்ல வேண்டும். கடவுள்- ஆன்மிகம் குறித்த புதியதொரு பாடம் கற்ற திருப்தியும் சந்தோஷமும் எங்களுக்கு'' என்று அனைவரும் கோரஸ் குரலில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகச் சொல்ல, அனைவருக்கும் நன்றி சொல்லி விடைகொடுத்தார் இறையன்பு.

- தொகுப்பு: எஸ்.கண்ணன் கோபாலன்

படங்கள்: ரா.மூகாம்பிகா

? ''பக்தி யோகம், கர்ம யோகம்... இரண்டில் நீங்கள் எதைத் தெரிவு செய்வீர்கள்?''

- பி.வாசுதேவன், திருத்துறைப்பூண்டி

* ''கர்மயோகமே சிறந்தது. செய்கிற எந்தவொரு பணியையும் அற்பப் பணியாகக் கருதாமல், அர்ப்பணிப்போடு செய்தால், அதுவே வழிபாடு. முழுக் கவனத்தையும் அந்தச் செயலிலேயே செலுத்தினால், அதுவே தியானம். நேர்மையோடு உழைத்தால் அதுவே நைவேத்தியம். பரவசத்தோடு பணி செய்தால், அதுவே படையல். ஊக்கத்தோடு உழைத்தால், அதுவே ஊதுவத்தி. கவித்துவத்துடன் சேவை ஆற்றினால், அதுவே கற்பூரம்.  பிரமாதமாகச் செய்தால், அதுவே பிரசாதம். செய்கிற தொழிலை தெய்விகத்தின் அங்கமாகக் கருதி, தெய்விகத்துடன் சங்கமமாகி சலிப்பின்றி உழைத்தால், பருத்தி ஆடையும் பட்டாடை ஆகும்.  பளபளப்பு தானே வந்து ஒட்டிக்கொண்டு பரவசம் தரும். உடலில் வழிகிற வியர்வையே இறைமைக்குத் தெளிக்கிற பன்னீராக மாறும்.''

சக்தி சங்கமம்

? 'தெய்வம் மனுஷ்ய ரூபேண’ என்பார்கள். அப்படியான அனுபவம் உங்களுக்கு உண்டா?''

- கே.கார்த்தீ, சென்னை-17

* ''எத்தனையோ அனுபவங்கள். அந்நிய தேசத்தில் விபத்து நேர்ந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அவசர அவசரமாக எங்களை மீட்டு, தங்க மணித் துளிகளுக்குள் அருகில் இருந்த மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தார்களே, அவர்கள் அனைவரும் இயற்கை அனுப்பிய இறைத் தூதர்கள்தாமே?!''

? ''நீங்கள் கோயில்களுக்குப் போவதுண்டா? மனிதன் ஒழுக்கமாக வாழ கோயில்கள், கடவுள் நம்பிக்கை இதெல்லாம் அவசியம் என்று நினைக்கிறீர்களா?''

- கே.இன்பதுரை, கும்மிடிப்பூண்டி

* ''ஆழ்ந்து தியானிக்கவும், அழகை ரசிக்கவும் ஆலயங்களுக்கு அவ்வப்போது போவது உண்டு.  மகத்தான கோயில்களின் முன் மற்ற அனைத்தும் அணுவைக்காட்டிலும் சின்ன துளி என்று அறிந்து, அத்தனை அகங்காரத்தையும் அறவே உதிர்க்கும் அனுபவத்துக்காகவே தஞ்சை பெரிய கோயிலுக்கு அடிக்கடி செல்வதுண்டு. காளிகாம்பாள் கோயிலுக்கு வாரம் தவறாமல் செல்வது உண்டு. ஒழுக்கமாக வாழ்பவனுக்குக் கோயில், கடவுள் நம்பிக்கை இதெல்லாம் அவசியம் என்று கருதவில்லை. நம்பிக்கையைத் தாண்டியும் நேர்மையோடும் பண்போடும் நடந்து கொள்ளும் பலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களும் என்னைப் பொறுத்தவரை ஆன்மிகவாதிகளே!''

? ''மிகச் சிக்கலான தருணங்களில், நெருக்கடி நேரங்களில் கடவுள் நம்பிக்கை அல்லது நமக்கும் மேலே இருக்கும் ஏதோ ஒரு பெரிய சக்தி நம்மைக் கைதூக்கி விடும் என நம்பலாமா?''

- கே.பெரியசாமி, திருக்கோயிலூர்

* ''நம்பிக்கை மாத்திரம் போதாது. உன்னிப்பாகச் செயலாற்றவும் வேண்டும். உண்மையாக இருப்பவர்கள், 'நான் தவறு செய்யவில்லை; எனவே, நான் தண்டிக்கப்பட மாட்டேன். கடவுள் என்னைக் கைவிட மாட்டார்’ என்று ஆழ்ந்து எண்ணுவது, துயரங்களிலிருந்து விடுபடுவதற்கான ஊக்கத் தையும் உந்துதலையும் நிச்சயம் அவர்களுக்கு அளிக்கும்.''

? ''ஆழ்நிலை தியானம், யோகா இவற்றில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?''

- கே.குமார், திருக்கழுக்குன்றம்

''அவற்றை நான் வெறுமே நம்புவது இல்லை; கடைப்பிடிக்கிறேன்.''

? ''பல கூட்டங்களில் உங்களைப் பார்த்திருக்கிறேன். சற்றும் அயர்ச்சியோ, சோர்வோ இன்றிச் சுறுசுறுப்பாக, புன்னகை தவழும் முகத்தோடு அதில் பங்கேற்பதைக் கவனித்திருக்கிறேன். எப்படி

சக்தி சங்கமம்

உங்களுக்கு இது சாத்தியமாகிறது? இதே போல் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் நான் என்னை வைத்திருக்க என்ன வழி?''

- தி.ராஜாராமன், கும்பகோணம்

* ''எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க, சுயநலம் இல்லாமல் பணியாற்று வதுதான் சுருக்கமான வழி. மனிதர்களை நேசித்தால், மலை போன்ற சுமையும் பனிபோல விலகும்;  மலைக்க வைக்கும் அலுப்பும் மளமளவென அகலும்!''

அடுத்த இதழில்... சக்தி விகடன் வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் மருத்துவர் கமலா செல்வராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism