மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம் சிவம் சாகசம்! - 36

சித்தம் அறிவோம்...இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியம்: ஜெயராஜ்

##~##

'பாரப்பா பரம்பிரம்ம ஒளியினாலே
பத்தியே நரம்புவழி பாயும்போது
ஆரப்பா இருகண்ணில் ஒளியதாகி
அண்டமெலாம் ஏகமாய் தெரியலாச்சு;
காரப்பா நரம்பெற்ற விழுது வட்டம்
கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுமுனையாச்சு;
வீரப்பா காதுக்கும் நாக்குக்குந்தான்
வெற்றி பெற இன்னமுந்தான் உரைக்கக் கேளே!’

- காகபுஜண்டர் ஞானம்

தஞ்சலி, சிவபெருமானைத் துதி செய்து, 'சரண ஸ்ருங்க ரஜித ஸ்தோத்திரம்’ என்கிற ஒரு ஸ்தோத்திரத்தை அருளியுள்ளார். இதற்கு என்ன சிறப்பு என்றால், இதில் கொம்பெழுத்தோ, துணை எழுத்தோ கிடையாது. இந்த இரண்டும் இடம்பெறாதபடி, வார்த்தைகளைச் சிந்தித்து, இறையைத் துதி செய்வதென்பது  சவாலான விஷயம். அதைப் பதஞ்சலி சாதித்துள்ளார்.

ஆனால், அவர் ஏன் அப்படிச் செய்தார்?

காளமேகப் புலவர்கூட, தனது கவிதா ஞானத்தை நிரூபிக்க, இப்படிச் சவாலான கவிதைகளைப் பாடியுள்ளார். உதாரணத்துக்கு ஒரு பாடல்...

சித்தம் சிவம் சாகசம்! - 36

'தாதிதூ தோதீது, தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே, துதித்துத்தே தொத்தீது
தித்தத்த தோதித் திதி’

இந்தப் பாடலில், மெய்யெழுத்தாகிய 'த்’ எழுத்தை மட்டுமே பயன்படுத்தி, அதாவது 'த’கர வரிசையில் அமைந்த எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி, காளமேகம் கவிதை புனைந்திருப்பார். உலகில் எந்த ஒரு மொழி யிலும் இப்படி ஒரே எழுத்தைக் கொண்டு கவிதை பாடப்பட்டதாகச் சரித்திரம் இல்லை.

அந்த நாளில், தலைவியானவள் காதல் வயப்பட்ட நிலையில் அன்னத்தையும் கிளியையும் தூதாக அனுப்புவது உண்டு. அதன் அடிப்படையில், இந்தப் பாடலின் பொருளைப் பார்ப்போம்.

'தாதியை தூதனுப்பலாம்; ஆனால், அவளி டம் தன் காதலைச் சொல்வது ஆபத்தில்கூட முடியலாம். எனவே 'தாதி தூது தீது!’ அவள் தலைவியின் காதலை, தலைவியின் தாயிடம் கூறிவிட்டால் என்னாவது?

கிளி மூலம் செய்தி அனுப்பலாம். ஆனால், அதனால் சில சொற்களே பேச முடியும். எனவே, கிளி எனும் 'தத்தை தூது ஓதாது’. ஆகவே, தூதி எனப்படும் தோழியின் தூதுதான் சரி.

இப்படி, தூது பற்றி விரியும் இந்தப் பாடல், தமிழ் இலக்கிய உலகில் பல ஆச்சரியங்களில் ஒன்றாகும்.  தமிழுக்கு இது ஆச்சரியம்போல, சம்ஸ்கிருதத்தில் பதஞ்சலி முனி படைத்த சரண ஸ்ருங்க ரஜித ஸ்தோத்திரமும் ஓர் ஆச்சரியம்தான்!

அது சரி... துணையெழுத்தையும், கொம்பெழுத்தையும் பதஞ்சலி ஏன் தன் ஸ்தோத்திரத்தில் பயன்படுத்தவில்லை?

வேடிக்கையான, அதே நேரம் அனைவரும் மறுக்காமல் ஒப்புக்கொள்ளக்கூடிய, சிந்தனைக்கு உரியதான ஒரு காரணத்தைக் கூறுகிறார் மகா பெரியவர்.

பதஞ்சலியோடு இறைவனின் திருநடனக் காட்சியைக் காணும் பேறு பெற்ற வியாக்ர பாதருக்குப் புலிக் கால்கள்; பிருங்கிக்கு மூன்று கால்கள்; நந்திக்கோ இரண்டு கால்களோடு, தலையிலும் இரண்டு கொம்பு. இந்த மூவருக்கும் உள்ள கொம்போ, கால்களோ, இரண்டுமே பதஞ்சலிக்கு இல்லை. அவை இருப்பதால், அந்த மூவரும் இறைவனின் களிநடனக் காட்சியைக் கண்மூடாது, அப்படி இப்படித் திரும்பாமல், நடனத்துக்கான இசை யையும் கேட்டு இன்புறுபவர்கள் ஆகிறார்கள்.

சித்தம் சிவம் சாகசம்! - 36

பதஞ்சலிக்கோ பாம்பு வடிவம். பாம்புக்கு ஏது கால்? எங்கே இருக்கிறது கொம்பு? அட, காதாவது இருக்கிறதா? இந்த மூன்றும் இல்லாத ஒரு பிறப்பாக இருந்தபோதிலும், இவர்களின் பக்திக்குத் துளியும் சளைக்காத பக்தி தன் பக்தி என்று காட்டவே, இந்த மூவருக்கும் இருக்கும் கால், கொம்பு எதுவும் இடம்பெறாதபடி அந்த ஸ்தோத்திரத்தை உருவாக்கினாராம் பதஞ்சலி.

இது பெரியவர் வேடிக்கையாகச் சொல்லும் ஒரு விஷயம். உண்மையில், அந்த நால்வரும் மகாஞானிகள். அவர்களிடம் பேதங்கள் இருக்கமுடியுமா என்ன? இப்படி எல்லாம் உடல் உறுப்புகளை வைத்து உயர்வு தாழ்வு கற்பித்துக்கொள்வார்களா என்ன? அதுவும், இறைவனின் திருநடனத்தைக் காணும் பேறுபெற்றவர்கள், எத்தனைப் புண்ணியம் செய்தவர்களாக இருக்க வேண்டும்!

பதஞ்சலியின் ஸ்தோத்திரத்தில் ஏன் கொம்பும், காலும் இல்லை என்பதற்குக் காரணம் தேடியபோது, ஒருவேளை இப்படி இருக்குமோ என்று மற்ற மூவரைத் தொட்டு ஒரு சுவையான கற்பனை தோன்றி, அதை வைத்தே மகாபெரியவர் அவ்வாறு கூறினார். அதனாலேயே, பதஞ்சலியின் அந்த ஸ்தோத் திரத்தை மறக்கமுடியாதபடி ஒரு நெருக்கம் நமக்கும் அதனோடு ஏற்பட்டு விடுகிறது.

சரி, பதஞ்சலியிடம் திரும்ப வருவோம். சித்தபுருஷர்களில் இவர்தான் மனம் குறித்து அதிகம் சிந்தித்தவர். உயிர்களில் மனம் வாய்க்கப் பெற்ற ஒரே உயிரினம்தான் மனித இனம்! மனத இனம் என்பதே மனித இனம் என்றானது என்பர்.

மனம் வந்தாலே காலம் வர முடியும். யோசித்துப் பாருங்கள்... மனம் இல்லை என்றால், நேற்று- இன்று- நாளை என்னும் அடையாளங்கள் எப்படித் தோன்றமுடியும்?

ஆடும் மாடும்கூட உயிரினம்தான். ஆனால் அவற்றுக்குத் தான் யாரென்றே முதலில் தெரியாது. தான் வாழ்வது, ஒரு பூவுலகில் என்பதும் தெரியாது. அவ்வளவு ஏன்... வாழ்வது என்றால் என்னவென்றே அவற்றுக்குத் தெரியாது, உடம்பு என்ற ஒன்று அவற்றுக்கு இருப்பதால், உயிர் என்ற ஒன்று அதனுள் இயங்குவதால், உறுப்புகள் செயல்பட்டு, அதன் காரணமாகப் பசிக்கிறது. அப்படிப் பசிக்கும்போது, அனிச்சையாக முதலில் தாய்ப்பால் குடித்தும், பின்பு தாவரங்களை சாப்பிட்டும் அவை உயிர் வாழ்கின்றன.

அப்படியான சூழலில், அடிப்படையாக சில அறிவுச் செயல்பாடுகள் அதனிடம் ஏற்பட்டு, தன் இனம் என்று தனித்து உணராமலே, வாசத்தை அடிப்படையாகக் கொண்டு தன் இனத்தோடு கூடித் திரிந்தும், அப்படித் திரியும் போது காயம்பட்டால் வலி ஏற்படப் போய் அதை உணர்ந்து எச்சரிக்கை வயப்பட்டும், பின்பு உடம்பின் ரசாயன மாற்றங்களால் காமுறுதல் ஏற்பட்டும், முழுக்க முழுக்க உணர்வுபூர்வமாக மட்டுமே அவை வாழ்ந்துவிட்டு, மடிந்து போகின்றன.  இதுதான் மனமற்ற உயிர்களுக்கான வாழ்க்கை முறை. மனிதனுக்கு மட்டுமே மனம் என்ற ஒன்று வாய்த்தது. அதன் காரணமாக, அறிவைத் தூண்டிவிட்டு பேச்சு, மொழி என்று அவன் விரிந்தான். இந்த வேளையில், டார்வின் தியரியையும் இங்கே கொஞ்சம் சிந்திப்பதில் தவறில்லை. தொடக்கத்தில் மனிதனும் மிருகமாகத்தான் இருந்தான். மிருகங்களில் கூடுதல் அறிவு இவனுக்கு இயற்கையாக இருந்தது. கைகளாலும், கால்களாலும் மிருகம் போல நடந்தவனை அந்த அறிவுதான் மெள்ள மெள்ள மாற்றத்தொடங்கியது. முதலில் நிமிர்ந்து நிற்கப் பழகினான். முன்னிரண்டு கால்களை கைகளாக மாற்றிக்கொண்டான். பின்பு, பக்கவாட்டில் வளராமல் மூங்கில் போல உயரமாக வளரத் தொடங்கி னான். வாயால் ஒழுங்கற்ற சத்தங்களை எழுப்பியவன், காலப்போக்கில் அந்தச் சத்தத்துக்குள் ஓர் ஒழுங்கை உருவாக்கி, அதன் மூலம் மொழியை உருவாக்கினான். எல்லோருக்கும் பொதுவான சத்தம் இருந்தால்தானே குழப்பமின்றி வேகமாக இயங்கமுடியும் என்பதை உணர்ந்து, தான் உருவாக்கிய மொழிக்கு வரி வடிவம் எனும் எழுத்தை உருவாக்கினான். பின்பு, சத்தத்துக்குள் ஒரு தாளம், லயம் இருப்பதைக் கண்டுகொண்டு, இசையை உருவாக்கினான்.

வேகமாகப் பயணிக்கும் நிர்பந்தம் ஏற்பட்ட போது, சக்கரம் என்ற ஒன்றைக் கண்டறிந்தான். மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு இது. தரையில் உருளும் சக்கரம்போல, நீரில் மரக்கட்டைகள் மிதப்பதை வைத்து படகு, கப்பல் என பல கண்டுபிடிப்புகளைச் செய்தான். அவற்றால் தன் வசிப்பிடம் கடந்து, உலகின் மற்ற பாகங்களை எல்லாம் கண்டறிந்தான். ஆக, ஒன்றிலிருந்து படிப்படியாகவே மாற்றங்கள் ஏற்பட்டன.

இதுதான் சுருக்கமான டார்வின் தத்துவம். இதில் பெரிதாக மறுப்பதற்கு ஒன்றுமில்லை.

மனிதன் மிருகமாக இருந்ததாகக் குறிப்பிட்டு, அதற்கு ஆதாரமாக டார்வின் சுட்டிக் காட்டியது, மனித வடிவில் இருக்கும் குரங்கு களைத்தான். இந்தக் குரங்கு வடிவம்தான் இன்றைய மனித வடிவத்தின் ஆதி மூலம்! என்றால், இந்தக் குரங்கு இன்றைய நாகரிக மனித நிலைப்பாட்டை அடைய எவ்வளவு காலம் ஆகியிருக்கும் எனும் கேள்விக்குள் புகுந்தால், லட்சக்கணக்கான ஆண்டுகள் அதற்குத் தேவைப்பட்டிருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியும்.

சித்தம் சிவம் சாகசம்! - 36

இந்த லட்சக்கணக்கான ஆண்டுகளில் இந்த மாற்றத்தைச் சாதித்தது மனிதனின் அறிவுதான். மனிதன் ஒவ்வொன்றாக அறியத் தொடங்கினான். அறிய வருவதே அறிவென்றா னது. இந்த அறிவின் வடிவம்தான் மொழி, எழுத்து என்றாகி, பின்பு எண்ணங்களாகி, மனித மனம் முழுக்க இன்று திருவிழாக் கூட்டம் போல நிரம்பி வழிந்தபடி உள்ளது.

வழியும் இந்த எண்ணங்களில் இரவு- பகல் போல, இனிப்பு- கசப்பு போல, நல்ல எண்ணங்கள்- தீய எண்ணங்கள் என இரண்டு வித எண்ணங்கள் உருவாகிவிட்டன. இதில் நல்ல எண்ணங்கள் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருவதாகவும், தீய எண்ணங்கள் துக்க உணர்வைத் தருவதாகவும் உள்ளன. இப்படி, எந்த ஒன்றும் இரண்டு விதமாக இருந்தால்தான் ஒன்றின் அருமையை நாம் தெரிந்து கொள்ளமுடியும். இதைச் சுருக்கமாக, 'இயல்பு’ என்றும், 'தன்மை’ என்றும் கூறலாம்.

இந்த மனித இயல்பைப் பெரிதும் ஆராய்ந்தவர் சிக்மண்ட் ஃப்ராய்ட். இவரை 'உளவியலின் தந்தை!’ என்று போற்றுகிறது உலகம். மொராவியா எனும் ஊரில், 1856-ம் வருடம் மே மாதம் 6-ம் தேதி பிறந்த ஃப்ராய்ட், அடிப்படையில் விலங்கியலும், உடற்கூறியலும் கற்ற ஒரு மருத்துவர். இவர் தனக்கு வந்த கனவுகளை வைத்து, அதை பகுப்பாய்வு செய்து, கனவுகளுக்கும் ஆழ்மனத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் இருப்பதைக் கண்டறிந் தார். அது குறித்து 'கனவுகளின் பொருள் விளக்கம்’ என்று ஒரு புத்தகமே வெளியிட்டார். அதன்பின், படிப்படியாக உளவியலில் ஓர் உச்ச நிலையைத் தொட்டார். சிகரெட் பிடிக்கும் பழக்கம் காரணமாக, புற்றுநோய் இவரைத் தாக்க, 1939 செப்டம்பர் 23-ல் இறந்து போனார். மனித மனத்தைப் பற்றிய இவரது ஆய்வுக் கட்டுரைகள் இன்றும் உளவியல் விரும்பிகளுக் குப் பெரும் பாடமாக உள்ளன. அந்தக் கட்டுரைகளை அவ்வளவு சுலபமாகப் படித்துப் பொருள் கொண்டு விடவும் முடியாது. உளவியலில் தீவிர ஈடுபாடும் நாட்டமும் உள்ளவர்களாலேயே ஃப்ராய்டின் உளவியல் சிந்தனைகளைப் புரிந்துகொள்ளமுடியும்.

பதஞ்சலியைப் பற்றிச் சிந்திக்கும்போது, ஃப்ராய்ட் பற்றிய பார்வை எதற்கு எனும் கேள்வி எழலாம். ஃப்ராய்டின் கட்டுரைகள் ஆங்கிலத்தில் உள்ளவை. ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கே அவர் சிந்தனைகள் போய்ச் சேர்ந்திடும். மொழிமாற்றம் செய்யப்பட்டிருந் தாலும் மூலத்தில் உள்ள சிறப்பு, மொழி மாற்றத்தில் அப்படியே பிரதிபலிக்கும் என்று கூறமுடியாது. ஃப்ராய்டின் தத்துவங்களும் சிந்தனைகளும் உலகின் 700 கோடி மக்களுக்குப் பொதுவான ஆங்கில மொழியில் இடம்பெற்று, அவரை 'உளவியல் தந்தை’ என்று உயரத்தில் வைத்திருக்கின்றன. ஆனால், நமது பதஞ்சலியின் உளவியல் சார்ந்த கருத்துக்களை அறியும்போது, பதஞ்சலிக்குள் நூறு ஃப்ராய்டுகள் இருப்பதை உணர முடிகிறது.

ஃப்ராய்ட் 'உளவியல் தந்தை’ என்றால், பதஞ்சலியை 'உளவியலின் கடவுள்’ என்றே சொல்லலாம். ஃப்ராய்ட் எண்ணங்களோடு நின்றுவிட்டார். பதஞ்சலி, எண்ணங்களாகிய மனம் கொண்ட வீடாகிய உடம்பு பற்றியும், அதன் உள்ளிருக்கும் சக்கரங்கள், அவற்றின் செயல்பாடுகள் பற்றியும்  சிந்தித்திருக்கிறார்.

மேலும், பதஞ்சலி சொல்வதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சிந்திக்கப்பட்டவை என்பதுதான்.

- சிலிர்ப்போம்...