##~##

''அழுகிற குழந்தையை அள்ளியெடுத்து அணைத்து, ஆற்றுப்படுத்துகிறவள் அன்னை. ஆனால், தெய்வநாயகி அம்பாளோ அன்னைக்கும் மேலானவள். அவளிடம் நாம் நம் கஷ்டங்களைச் சொல்லி, அழத் தேவையில்லை; நமக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளைப் பட்டியல் போட்டுப் புலம்பத் தேவையில்லை. 'இந்த ஜென்மம் எடுத்ததே போதும்மா! நாய் படாத பாடு பட்டுக்கிட்டிருக்கேன்’ என்று நம் துக்கங்களையும் அவமானங்களையும் சிறிதும் பெரிதுமாக எடுத்துரைத்துத்தான் அவளுக்கு உணர்த்தவேண்டும் என்பது இல்லை. அவள் சதாசர்வ காலமும் நம்மைக் கவனித்துக்கொண்டே இருக்கிறாள். அவளின் சந்நிதிக்கு முன்னே சென்று அமர்ந்து, கண்கள் மூடி, அவளை மனதார நினைத்தாலே போதும்... நம் மனக்கஷ்டங்கள் அனைத்தும் மாயமாக மறைந்துவிடும்.''

- எழுச்சூர் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீதெய்வநாயகி அம்பாள் குறித்து, பக்தர்கள் இப்படித்தான் மெய்யுருகிச் சொல்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வீடு, வேலை, குடும்பம், பதவி உயர்வு, உறவுகள்னு எங்கே பார்த்தாலும் சிக்கல்களும் பிரச்னைகளும் இருந்துட்டுதான் இருக்கு. இதுல தவிச்சு மருகிக் கண்ணீர்விட்டு, வேதனையோடு இருக்கிற எத்தனையோ பேர், இங்கே ஸ்ரீதெய்வநாயகி அம்பாள் சந்நிதிக்கு வந்து, ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்து வேண்டிக்கிட்டாப் போதும்; செவ்வரளி மாலையும், தாமரைப் பூவும் சமர்ப்பிச்சு, நெய் விளக்கேத்தி வைச்சு வழிபட்டாப் போதும்... அவங்க துயரங்களைப் போக்கி, நல்லது பண்ணி அருள்வா தெய்வநாயகி அம்பாள்'' என்கிறார், இந்தக் கோயில் திருப்பணியில் ஈடுபட்டு வரும் ராமமூர்த்தி.

குருவருள்... திருவருள்! - 9

பெற்றவளுக்குப் பிள்ளையைப் பார்ப்பதைத் தவிர, வேறென்ன வேலை? அவர்களின் கண்ணீரைத் துடைத்து, அவர்கள் சிரிப்பதைக் கண்டு ரசிப்பதைத் தவிர அவளுக்கு வேறென்ன சந்தோஷம்? இங்கே, எழுச்சூர் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர் கோயிலில், அம்பாள் ஸ்ரீதெய்வநாயகி தன் மைந்தன் ஸ்ரீசண்முகரைப் பார்த்தபடி இருக்கிறாள் அல்லவா! மகனைப் பார்த்துக்கொண்டே இருக்கிற பூரிப்புடன், தன்னை நாடி வருவோருக்கெல்லாம் நிம்மதியையும் சந்தோஷத்தையும், அமைதியையும், வாழ்வில் உயர்வையும் வரமெனத் தந்து மகிழ்கிறாள் அம்பிகை.

''என் அம்மா இறந்து எட்டு மாசமாச்சு! வீட்ல எனக்கும் மனைவிக்கும் ஏதாவது சண்டைன்னா, எங்க அம்மா அதட்டுற அதட்டுல சட்டுனு அமைதியாயிடுவேன். ஆனா, அம்மா போனதுக்கப்புறம், சமீப காலமா எனக்கும் என் மனைவிக்கும் இடையில் ஏற்படுற சண்டை, தடுப்பார் இல்லாததால ரெண்டு, மூணு நாள் வரைக்கும் தொடருது. ரெண்டு பேரும் முகம் கொடுத்துப் பேசிக்கறதுகூட கஷ்டமாயிடுது. எங்க சண்டையைப் பார்த்துட்டு குழந்தைங்க மலங்க மலங்க விழிக்கும்போது, ரொம்பக் கஷ்டமா இருக்கும். இனிமே சண்டை போடக் கூடாதுன்னு முடிவெடுப்போம். ஆனாலும், ஏதாவது ஒருவிதத்துல சண்டை முளைச்சிடுது...'' என்று, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வாசுதேவன் தயங்கியபடியே தெரிவித்தார்.  

அவரே தொடர்ந்து, ''ஒருநாள், வாலாஜா பாத்ல பெயின்ட்டிங் வேலைக்காக வந்தேன். முடிச்சுட்டுக் கிளம்பும்போது, சக்திவிகடன்ல எழுச்சூர் கோயில் பத்திப் படிச்சது ஞாபகம் வர, 'அட, அந்த ஊர் இங்கே வாலாஜா பாத்துக்குப் பக்கத்துலதானே இருக்கு! ஓர் எட்டுப் போய்ப் பார்த்துட்டுப் போகலாமே’னு தோணுச்சு. சரின்னு கோயிலுக்குப் போனேன்.

அம்பாள் சந்நிதிக்குப் போய், அப்படியே கண்மூடி மௌனமா உட்கார்ந்துட்டேன். அப்ப யாரோ யார்கிட்டயோ பேசிட்டிருந்தது காதுல விழுந்துச்சு. 'வீட்டுக்கு வீடு வாசப்படி. புருஷன் பொண்டாட்டி சண்டை இல்லாத வீடே கிடையாது. எப்பப் பார்த்தாலும் பொண்டாட்டியே விட்டுக்கொடுக்கணும்னு ஏன் நினைக்கிறே? நீயும்தான் கொஞ்சம் விட்டுக்கொடேன். குடும்பம் தன்னால உருப்படும்’னு சொல்லிட்டிருந்தாங்க. ஏதோ எனக்கே குறிப்பா சொன்ன அசரீரி வாக்கு மாதிரி இருந்துச்சு அது. ரெண்டு நிமிஷம் கழிச்சுக் கண் திறந்து பார்த்தா எதிரே அம்பாளோட முகம். கையெடுத்துக் கும்பிட்டேன். என்னைக் கருணையோடு பார்த்து, சிரிக்கிற மாதிரியே இருந்தது, அம்பாள் முகம்!  அன்னிக்கு விட்டேன், என் கோபம் மொத்தத்தையும்! அன்னியிலேர்ந்து மனைவியே தப்பா புரிஞ்சுக்கிட்டு, என்னை எதுனா சொன்னாலும், நான் அமைதியாத்தான் இருப்பேன். இப்ப புது மனுஷனா இருக்கேன். குடும்பம் அமைதியும் சந்தோஷமுமா இருக்கு. எல்லாத்துக்கும் ஸ்ரீதெய்வநாயகி அம்பாள்தான் காரணம்!'' என்று தழுதழுக்கிறார் வாசுதேவன்.

குருவருள்... திருவருள்! - 9

எழுச்சூர் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர் கோயிலில் உள்ள ஒவ்வொரு சந்நிதியும் சாந்நித்தியம் நிறைந்ததுதான். தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்றாலும், கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்றாலும், இந்தக் கோயிலுக்கு ஒருமுறை வந்து, ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசித்தால் போதும்... வியாபாரத்தில் பெரிய லாபமும், கல்வியில் அதிக மதிப்பெண்ணும் நிச்சயம் பெற முடியும்.

குருவருள்... திருவருள்! - 9

திங்கட்கிழமையிலும், பிரதோஷ காலங்களிலும் இங்கு வந்து வழிபட்டால், மனோதிடம் பெறலாம்; நினைத்த காரியம் அனைத்தும் ஈடேறி, நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும் என்பது ஐதீகம்!  

''பிரதோஷம்போல, இங்கே மகா சிவராத்திரியும் விசேஷமா இருக்கும். அந்த நாளில், சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் அமர்க்களப்படும். சமீபகாலமா, இந்தக் கோயில் பத்தித் தெரிஞ்சவங்க எல்லாரும் குடும்பத்தோடு வந்து, ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் வஸ்திரம் வாங்கிச் சார்த்தி வழிபடுறது அதிகரிச்சுக்கிட்டே இருக்கு.

என் அப்பா இந்தக் கோயில் திருப்பணிக்காக முழுமூச்சாகச் செயல்பட்டார். அப்ப வழிபாட்டுக்கோ பூஜைக்கோ யாரும் வரவே முடியாத சூழல்லதான் கோயில் இருந்துச்சு. அப்பவே ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் வஸ்திரம் சார்த்தி, சின்னதா பூஜை பண்ணிடுவார் அப்பா. அதேபோல, என் சகோதரர்களும் இப்ப பூஜைகளைப் பாத்துக்கறாங்க. மனசுக்கு நிறைவா இருக்கு. இதைவிட வேற என்ன வேணும், சொல்லுங்க?'' என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொல்கிறார், கோயில் திருப்பணி மற்றும் நிர்வாகத்தில் ஈடுபட்டு வரும் கிருஷ்ணகுமார்.

இந்தக் கோயிலில் இன்னொரு விசேஷம்... ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போதும், ஸ்ரீநல்லிணக்கேஸ்வரருக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுகிறது. அந்த நாளில் இங்கு வந்து, சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபட்டால், இழந்ததைப் பெறலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு, வழக்கில் வெற்றி, குடும்பத்தில் நிம்மதி ஆகியவற்றைப் பெறலாம் என்பது ஐதீகம்!

குருவருள்... திருவருள்! - 9

அதேபோல், காஞ்சி சங்கர மடத்தின் 54-வது பீடாதிபதியான ஸ்ரீவியாஸாசல சுவாமிகளின் அதிஷ்டானத்திலும் விசேஷ பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். அந்த நாளில், காய்கறிகளும் கனிகளுமாக நைவேத்தியம் செய்து வழிபட்டால், வளமாகவும் நலமாகவும் வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.

பரந்துபட்ட உலகில் உள்ள எல்லோரும் ஆரோக்கியத்துடனும் பேரன்புடனும் தானே வாழ ஆசைப்படுகிறோம்! ஒருமுறை எழுச்சூர் வாருங்கள். இறைவனைத் தரிசியுங்கள். இனம்புரியாத நிம்மதியுடனும் நிறைவுடனும் திரும்பிச் செல்வீர்கள்!

- அடுத்த இதழில் நிறைவுறும்

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர், ரா.மூகாம்பிகை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism