Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்-25

ஆலயம் ஆயிரம்! குடவாயில் பாலசுப்ரமணியன்

சேதி சொல்லும் சிற்பங்கள்-25

ஆலயம் ஆயிரம்! குடவாயில் பாலசுப்ரமணியன்

Published:Updated:

திருச்சி- நாமக்கல் நெடுஞ்சாலையில், திருச்சியை அடுத்து முசிறிக்கு மேற்கே உள்ளது ஸ்ரீநிவாசநல்லூர் கிராமம். இந்த ஊருடன் இணைந்து, பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் பெயரால் அமைக்கப்பெற்ற பழம்பெருமை வாய்ந்த மகேந்திரமங்கலம் எனும் ஊர் திகழ்கிறது. ஸ்ரீநிவாசநல்லூரில் பண்டைய சோழர் காலத்தவையாக, ஐந்து திருக்கோயில்கள் உள்ளன. அவை குரங்கநாதர் கோயில், பட்டாபிராமன் கோயிலைத் தன்னகத்தே கொண்ட விஸ்வநாதர் கோயில், ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், ஸ்ரீராமநாத ஸ்வாமி கோயில் மற்றும் தனித்த அம்மன் திருக்கோயில் ஆகியவை.

சேதி சொல்லும் சிற்பங்கள்-25

ஸ்ரீநிவாசநல்லூரின் பழம்பெயர் திருக்குரக்குத்துறை என்பதாகும். சோழநாட்டில் மயிலாடுதுறை, குரங்காடுதுறை என்ற ஊர்கள் காவிரிக்கரையில் அமைந்துள்ளது போன்று இந்த ஊரும் காவிரிக் கரையிலேயே அமைந்துள்ளது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறந்த சிவபக்தனாக விளங்கிய வாலி எனும் குரங்கினத் தலைவன் பூசித்த திருத்தலமாக இந்த ஊர் திகழ்ந்திருக்க வேண்டும். இதுபோன்றே திருவையாறு - கும்பகோணம் சாலையில் காவிரிக் கரையில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற, ஆடுதுறை பெருமாள் கோயில் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் திருவூர் ஒன்று உள்ளது. அந்த ஊரின் பழம்பெயர் குரங்காடுதுறை என்பதாகும். தேவாரப் பதிகத்தில் 'நீலமாமணி நிறத்து அரக்கனை இருபது கரத்தோடு ஒல்க வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில் வடகரை  அடை குரங்காடுதுறையே’ என்பார் காழிப்பிள்ளையார். இத்தலம் போன்றே காவிரியின் தென்கரையில் பாடல்பெற்ற தென் குரங்காடுதுறை (கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில்) உள்ளது.

தொண்டைநாட்டுக் குரங்கணில்முட்டம், சோழநாட்டு குரக்குக்கா, நடுநாட்டு வாலிகண்டபுரம் ஆகிய திருத்தலங்கள் போலவே திருகுரக்குத்துறை எனப்படும் ஸ்ரீநிவாசநல்லூர் குரங்கநாதர் கோயிலும் முக்கியத்துவம் பெற்ற ஒரு வழிபாட்டுத்தலமாகப் போற்றப்படுகிறது.

சேதி சொல்லும் சிற்பங்கள்-25

குரங்கநாதர் கோயிலில் உள்ள பழைமையான கல்வெட்டு ஒன்று, 'பிரம்மதேயமான மகேந்திரமங்கலத்து திருக்குரக்குத்துறை பெருமானடிகள்’ என்று அந்தக் கோயில் ஈசனாரைக் குறிப்பிடுகிறது. தற்போது காணப்படும் இந்தச் சிவாலயத்தை 9-ம் நூற்றாண்டில் முதல் ஆதித்த சோழன் கற்றளியாக எடுப்பித்திருக் கிறான். சதுரமான கருவறை அமைப்புடன் இரு தளக் கற்றளியாக இந்தக் கோயில் காணப்படுகிறது. இடைநாழி, முகமண்டபம் ஆகியவை இந்த விமானத்துக்கு மேலும் பொலிவூட்டுகின்றன.

கருவறையின் புறச்சுவரில் பிதுக்கம் பெற்ற கட்டுமான அமைப்புடன் மூன்று தேவ கோஷ்டங்கள் அழகிய மகர தோரண வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. தென்புறம் ஆலமர்ச் செல்வராகிய ஸ்ரீதட்சிணாமூர்த்தியும், வடபுறம் வேள்வியின் நாயகராகிய ஸ்ரீநான் முகனின் (பிரம்மன்) திருவுருவச் சிற்பங்களும் உள்ளன. மேற்குத் திசையில் திகழ்ந்திருந்த உமையொருபாகனின் திருமேனியைப் பின்னாளில் அகற்றியுள்ளனர்.

கருவறையின் புறத்தே ஆறு சிறிய கோஷ்டங்களும், முகமண்டபத்தின் பக்கச் சுவர்களில் இரண்டு கோஷ்டங்களும் உள்ளன. இவற்றில் சாமரம் வீசுவோர், அப்சரஸ் எனப்படும் தேவ மாதர் சிற்பங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மகாமண்டபத்தின் தென்புறமும் வடபுறமும் கைகட்டிய நிலையில் துவாரபாலகர் சிற்பங்கள் இடம் பெற்றிருந்து, பின்னாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென்புற கோஷ்டத்தின் மகர தோரணம் மிகுந்த வேலைப்பாட்டுடன் திகழ்கின்றது. நடுவே இரண்டு அரக்கர்களை வேல்கொண்டு தாக்கும் தேவியின் திருவுருவம் உள்ளது. அதனைச் சுற்றி எட்டு சிம்மங் களின்மீது அமர்ந்த வீரர் உருவங்களும், நான்கு பூத கணங்களின் உருவங்களும் உள்ளன.

சேதி சொல்லும் சிற்பங்கள்-25

மாடத்தின் நடுவே எட்டு கிளைகளுடன் கல்லால மரம் திகழ, அதன் கீழ், ஞானம் உரைக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ளார். ஆலங்கிளைகளில் அணில், பொக்கணம் என்னும் விபூதிப் பை, பொந்தில் ஆந்தை ஆகியவை காணப்படுகின்றன. ஜடாபாரத் துடன் திகழும் அண்ணலின் தலையில் கபாலமும் மலர்களும் உள்ளன. ஒரு காதில் பத்ர குண்டலமும், ஒரு காதில் குழையும் திகழ்கின்றன. அனலும், அக்கமாலையும் தரித்த பெருமானார், சனகாதி முனிவர் இருவருக்கு அறம் உரைக்கிறார்.

சேதி சொல்லும் சிற்பங்கள்-25

பக்கவாட்டில் மேலே ஒருபுறம் காதுபொத்தி கள் (கர்ணப்ராவிருத்தன்) இருவரும், மறுபுறம் கின்னரர் இருவரும் உள்ளனர். அவர்களுக்குக் கீழாக ஒருபுறம் வாய் பிளந்து உறுமும் சிங்கங்கள் இரண்டும், எதிர்ப்புறம் உறங்கும் சிங்கங்கள் இரண்டும் காட்சியளிக்கின்றன. காலடியில் முயலகன் கிடக்க, ஒருபுறம் மானும், ஒருபுறம் உடம்பை மூன்று சுற்றுகளாக்கிப் படமெடுத்தாடும் நாகமும் உள்ளன.

பித்தி எனப்படும் சுவரில் உள்ள தூண்க ளின் கால்களில் நடனமாடும் பெண்கள், இசைவாணர்கள், குதூகலித்து ஆடும் கணங்களின் உருவங்கள் உள்ளன. ஒரு தூணில் ஈசன் கால் உயர்த்தி நடனமாட, அதிகார நந்தி குடமுழா இசைக்க, அனுமன் தாளமிடுகிறார். இது அபூர்வக் காட்சியாகும். திருக்குரக்குத் துறை பெருமானடிகள் திருநடனமாட, குரங்கு தாளமிடுவது பொருத்தமான ஒன்றே!

ஒரு மகர தோரணத்தில் திருமால், பூவராகராகக் காட்சி தருகிறார். அழகுடைய ஜகதி, குமுதம், வேலைப்பாடுகள் மிகுந்த யாழவரிமாணம் ஆகியவை கொண்ட அதிஷ்டானத்தின் மேல் கம்பீரமாக எழுந்து நிற்கும் இந்தத் திருக்கோயில், சோழர் சிற்பக் கலையின் உச்ச நிலைப் படைப்புகளைத் தன்னகத்தே கொண்டு காட்சி தருகிறது. மொத்தத்தில், ஸ்ரீநிவாசநல்லூர் திருத்தலம், கலைப் பெட்டகத்தின் சாட்சியகம் என்றால், அது மிகையல்ல!

- புரட்டுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism