மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம் சிவம் சாகசம்! - 37

சித்தம் அறிவோம்... இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியம்: ஜெயராஜ்

ல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் எழுத்து, மொழி இவற்றை எல்லாம் உருவாக்கியிருப்பானா என்கிற கேள்வியும் சந்தேகமும் எழுகிறது. சில குகை ஓவியங்கள், வரிவடிவங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், அந்த அளவிலான அறிவோடு உளவியல் குறித்துச் சிந்திக்கமுடியாது என்பதே அடிப்படையான உண்மை.

சித்தம் சிவம் சாகசம்! - 37

சரி, பதஞ்சலியின் யோக சூத்திரம் மனிதர்களைப் பார்த்து என்னதான் சொல்கிறது? அதைச் சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

முதலில், எது யோகம் என்று சிந்திப்போம். இன்று, யோகம் எனும் சொல் இரண்டு விதமாகப் பொருள் கொள்ளப் படுகிறது. ஒன்று அதிர்ஷ்டம் சார்ந்ததாகவும், மற்றொன்று உடற்பயிற்சி சார்ந்ததாகவும் பொருள்கொள்ளப்படுகிறது.

மகிழ்வும் நிம்மதியுமாக வாழ்பவர்களை 'அவன் பெரிய யோகக்காரன்...’ என்போம். தினமும் பலவிதமான உடற்பயிற்சிகளைச் செய்பவர்களை, 'யோகாசனங்கள் செய்பவர்’ என்கிறோம். ஒன்று மனம் சம்பந்தமானது; மற்றொன்று உடல் சம்பந்தமானது. யோகம் எனும் சொல் 'இணைத்தல்’ என்கிற பொருளை உடையதாக அகராதி வழி தெரியவருகிறது.

யுஜ் எனும் சமஸ்க்ருத 'யோக்’, 'யோகம்’ என்றானது. ஒரு மனிதன் தன்னை வேறாகவும், உலகை வேறாகவும் கருதுகிறான். ஒன்று உள் சார்ந்தது; மற்றொன்று வெளி சார்ந்தது!

இரண்டாகத் தெரியும் இது உண்மையில் ஒன்றே! அது எப்போது தெரியும் என்றால், தன்னைத் தனியாகக் கருதுபவன் பிரபஞ்சத்தோடு இணைந்துவிடும்போது! அவனை அப்படி இணைக்கத் தேவைப்படுவதுதான் யோகம். இதை விரிவுபடுத்தி, ஜீவாத்மா பரமாத்வோடு இணைந்துவிடலாம்.

பதஞ்சலியின் யோக சாஸ்திரத்தை அறிந்துகொண்டு யோகம் புரிவதற்கு, மனம் மற்றும் உடல் என்னும் இரண்டும் பலமாகவும் ஆரோக்கியத்தின் உச்சமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

மனத்தெளிவு என்பது அதை அடக்கி ஆள்வதில் கைவரப் பெறும். உடல் பலம் என்பதும் மனத்தெளிவோடு தொடர்பு உடையதே! 'எதை உண்ணலாம், எதை உண்ணக் கூடாது, எதை எப்போது உண்ணலாம், எப்படி உண்ணலாம்’ என்பதெல்லாமும் மனத்தை ஆட்சி செய்யும் அறிவின் செயல்பாடுதானே?

சித்தம் சிவம் சாகசம்! - 37

நம் வசம் நமக்கென்று இருக்கும் நமது உடம்பைப் பற்றி எத்தனை பேருக்கு தெளிவாகத் தெரியும்? நமது உடல் உறுப்புகளின் பெயர்கள் தெரிந்திருப்பது என்பது நமக்கு நம் உடம்பைப் பற்றி முழுக்கத் தெரிந்து விட்டதாகாது. நம் உடல் உறுப்புகளின் பெயர்கள்கூட ஓரளவுக்கே நமக்குத் தெரியும். பல உறுப்புகள் நமக்குள் இருப்பதே நமக்குத் தெரியாது.

72,000 நாடி நரம்புகள் நமக்குள் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்றால் நம்பமுடியுமா? நம் உடம்பில் உள்ள கேசம் என்னும் மயிர்க்கால் களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? மூன்றரைக் கோடி! நம் வயிற்றுக்குள் மடங்கிச் சுருண்டுகிடக்கும் குடலின் நீளம் எவ்வளவு தெரியுமா? 32 முழம்! இது, யூகி முனி என்னும் சித்தர் சொன்னதாகும்.

நாம் சுவாசிப்பதால்தான் உயிர் வாழ்கிறோம். அந்தக் காற்றில் ஆக்சிஜன் குறையும் போது, நமக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. நாம் இப்படி உள் இழுக்கும் வாயு பிராண வாயு எனப்படும் ஆக்சிஜன். நம்முள் இருந்து வெளியேறும் வாயு கரியமில வாயு. மரங்களும் சுவாசிக்கின்றன. இரவில் மரத்தின் அடியில் உறங்கக்கூடாது, அது நம் உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று கூறக் காரணம், இரவில் மரம் வெளியேற்றும் கரியமில வாயுதான். குறிப்பாக, புளியமரம் இதை மிகுதியாக வெளியேற்றும். எனவே, புளியமரத்தின் அடியில் தூங்கக்கூடாது என்றனர்.

காற்றைப் பற்றி நமக்கு இதுபோல சில விஷயங்கள்தான் தெரியும். ஆனால், சித்த புருஷர்கள் காற்றைப் பத்து கூறுகளாகப் பிரித்து, தசவாயுக்கள் நம் உடலில் செயலாற்று வதைக் கண்டறிந்து கூறியுள்ளனர். அவை முறையே 'அபானன், பிராணன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்ஜெயன்’ என்று அழைக்கப்படுகின்றன.

இதில், அபானன் வாயுவால்தான் மலஜலம் கழிக்கிறோம். இதன் செயல்பாடு உந்தித் தள்ளுவதாகும். கைகால்களை அசைத்து இயங்கும்போது, தசைகள் வியானன் என்னும் வாயுவால்தான் இலகுவாக இயங்குகின்றன. வயிறு இயங்கக் காரணம் சமான வாயு!  பேசுவதும், பார்ப்பதும், சிரிப்பதும் கூர்மன் எனும் வாயுவால்! தும்முவதும் இருமுவதும் கிருகரன் வாயுவால் நிகழும். கோபத்துக்குக் காரணமான வாயு- தேவதத்தன். ஒருவர் இறந்த பிறகும்கூட, இந்த வாயு உடலில் செயலாற்றும். இதுதான் உடல் ஊதிப் பருத்து வெடிக்கவும், அழுகவும் காரணமாக உள்ளது.

இப்படி நம் உடம்புக்குள் செயலாற்றும் வாயுக்களின் செயல்பாட்டைப் புரிந்து அறிந்து, அவற்றைக் கட்டுப்படுத்தி, குரங்குபோலக் கட்டிவைக்கவும் முடிந்தவர்களாக இருந்தனர் நமது சித்த புருஷர்கள்.

வாயுக்களைத் தொடர்ந்து நாம் அறியவேண்டியது, நம் உடல் எந்த வகையை அடிப்படையாகக் கொண்டது என்பதாகும்.

நம் நாடித்துடிப்பானது ஆமை போல மிக நிதானமாகத் துடித்தால், அது பித்த வகை உடம்பு; பாம்புபோல நெளியும் உணர்வு ஏற்பட்டால், வாத உடம்பு; வெள்ளம் பாய்வதுபோல உணர்ந்தால் சிலேத்துமம். நமது உடம்பின் வகை தெரிந்து அதற்கேற்ப ஏற்புடைய உணவு எது, ஏற்பில்லாத உணவு எது என்று தெரிந்து சாப்பிடுவதில்தான் ஆரோக்கியம் ஒளிந்துள்ளது.

அடுத்து, நம் உச்சி மண்டையாகிய கபாலத்தில் ஒரு திரவம் சுரக்கும். இது அமுதத்துக்குச் சமமானது. உள்நாக்கை விலக்கிக்கொள்ள, இது நேராக நம் வயிற்றில் விழும். இது பயிற்சியால்தான் சாத்தியமாகும். பசித்தலுக்குக் காரணமாக ஜடராக்னியை இந்த அமுதச் சொட்டு அவித்து, பசியே இல்லாதபடி செய்வதோடு, நம்மைப் புத்துணர்ச்சியோடும் வைத்திருக்கவல்லது!

இந்த அமுதச் சொட்டு வயிற்றில் விழும்போது, வயிற்றில் அமிலம் அதிகம் சுரக் காதபடி இருக்க, மனத்தைச் சாந்தமாகவும் பேரமைதியுடனும் வைத்துக்கொள்ள வேண்டும். படபடப்பும் ஆவேசமான எண்ணங்களும் வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரக்க வைக்கும். அதற்காக 'கேசரி முத்திரை’ எனும் முத்திரையில் அமர்ந்து மனத்தை அடக்கிட, அதனாலும் பசி அடங்கிவிடும்.

அடுத்து, நமது உடம்பில் ஆதார சக்கரங்கள் ஏழு இருப்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கே சக்கரம் என்பது, நிற்காத இயக்கத்தைக் குறிப்பதாகும்.

ஏழு ஆதாரச் சக்கரங்கள்...

* சகஸ்ராரம்: உச்சந்தலையில் இருப்பது. ஆயிரம் இதழ்கள் கொண்ட வெள்ளைத் தாமரை போன்றது இது.

*ஆக்ஞை: நெற்றிப்பொட்டில் இயங்குவது. இரண்டு இதழ் கொண்டது.

* விசுத்தி: 16 இதழ்கள் இதற்கு. தொண்டைப் பாகத்தில் உள்ளது.

* அனாகதம்: 12 இதழ்கள் கொண்டது. கழுத்துக்குக் கீழே முதுகுத் தண்டில், நடு முதுகுக்கு சற்றுமேல் இயங்கும் சக்கரம் இது.

* மணிபூரகம்: 10 இதழ்கள். ஊதா நிறம் கொண்டது. நடு முதுகுக்குச் சற்றுக் கீழ் இயங்குவதாகும்.

* சுவாதிஷ்டானம்: 6 இதழ்களுடன், ஆரஞ்சு நிறத்தில் உள்ளது.

* மூலாதாரம்: முதுகுத் தண்டின் முடிவுப் பகுதியில், சிவப்பு நிறத்தில் 4 இதழ்களோடு இருப்பதே மூலாதாரமாகும்.

இந்தச் சக்கரங்களுக்கு அதி தேவதைகள் உண்டு. இந்தத் தேவதைகளின் செயல்பாட்டுடன், இந்தச் சக்கரங்களின் செயல்பாடு பொருந்திப்போகும். அந்த வகையில்...

மூலாதாரத்துக்கு, கணபதி அதிதேவதை; சுவாதிஷ்டானத்துக்கு பிரம்மா; மணிபூரகம்- விஷ்ணு; அனாகதம்- ருத்ரன்; விசுக்தி- இந்த ஆதாரச் சக்கரத்துக்கு ஜீவனே அதிதேவதை; ஆக்ஞை- இதில் ஜீவன் யோக நிலை அடைந்து, யோகியாகிவிடுகிறது; சஹஸ்ராரம்-  இதில் விடுதலை கிடைப்பதால், இதன் அதிதேவதையாக பரமாத்மா உள்ளார்.

மேற்கண்ட எந்த ஒரு தக வலையும், இன்றைய மருத்துவ விஞ்ஞானம் கூறாது; கூறவும் அதனால் முடியாது. கண்களுக்குப் புலனாவது மட்டுமே இன்றைய மருத்துவ விஞ்ஞானத்துக்குக் கணக்காகும்.  

இனி, ஓர் உடம்பின் மிக முக்கிய உயிர்த் திரவமான விந்துவுக்கு வருவோம். ஆணின் உயிர்த் திரவம் விந்து; பெண்ணின் உயிர்த் திரவம் சுரோணிதம். ஆணின் முதல் விந்துத்துளி, அவன் பிறந்தது முதலே அவனோடு இருந்து, அவன் வளர வளரத் திரண்டு நிற்கும் ஒன்று. அவனுக்கு அது அவனின் பெற்றோர் மூலம் கிடைத்தது. அவர்களுக்கு அவர்களின் பெற்றோர் மூலம் கிடைத்தது. ஆக, இதை ஒரு ரிலே ரேஸ் எனலாம். அப்படி முன்னோரின் சேர்க்கையால் தலைமுறை கடந்து வரும் உருவாக்கமே உடலாகும். இதனுள் உயிர்புகுதல் என்பது, கர்ப்பம் தரித்த காலத்தில் ஒரு குறிப் பிட்ட நாளில் நடைபெறுகிறது. இப்படித்தான் மனித இனம் உருவாகி இன்று 700 கோடியை அடைந்துள்ளது. இனியும் இதன்படியே இந்த இனம் தொடரும்.

சித்தம் சிவம் சாகசம்! - 37

இதில், ஆணின் முதல் விந்துத்துளி என்பது மிக பலமானது; பவித்ரமானது. அதேபோல் பெண்ணின் சுரோணிதமும்! பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானம் செய்வது ஆணின் விந்தணுதான். அதிலும் பவித்ரமான முதல் விந்துத்துளி, பெண்ணின் முதல் சுரோணிதத்துடன் கலந்து, அதன் சேர்க்கையில் உருவாகும் உடம்பும் உயிரும்தான் 'தலைப்பிள்ளை’ எனும் பெயர் பெறுகிறது.

இங்கே, தலை என்பது முதல் என்பதையும் குறிக்கும்; தலையில் இருந்து இறங்கிய விந்துவின் சேர்க்கையால் வந்த பிள்ளை ஆதலால், தலைப்பிள்ளை என்பதையும் குறிக்கும். இந்தத் தலைப்பிள்ளைக்கு நல்லது- கெட்டதுகளில் முன்னுரிமை தரப்படக் காரணம், தலைமுறைகளின் தவறாத தொடர்ச்சி இவன். ஏழு தலைமுறைகளின் தொடர்பைக் கொண்டிருப்பவன். அந்தத் தொடர்பானது உடற்கூற்றில், குரல் அமைப்பில், தலைமுடியில், கண் சிமிட்டுவதில், நடப்பதில், திரும்பிப் பார்ப்பதில், சாய்ந்து படுத்துத் தூங்குவதில், சிரிப்பதில், தும்முவதில், கோபப்படுவதில் என்று சகலத்திலும் இடம்பெற்றிருக்கும். இந்த ஏழு தலைமுறையினரின் பாவ- புண்ணியங்கள் எண்ணங்களாக அவர்களுக்குள் இருந்து, அந்த எண்ணங்களே நாதமாகி, விந்துவில் படிந்திருக்கும். அதன் தொடர்ச்சியில் தலைப் பிள்ளைகள் தொடர்பவர்களாக இருப்பதால், நான்கு தலைமுறைக்கு முன் ஒரு தாத்தா அன்னதானம் செய்த புண்ணியமும் சரி, ஆறு தலைமுறைக்கு முன் ஒரு தாத்தா திருடித் தின்ற பாவமும் சரி... அதற்கான எண்ணப்பதிவாக தலைப்பிள்ளைகளிடம் வெளிப்பட்டு, அவர்களின் நன்மை- தீமையாக வடிவெடுக்கும். இன்று நம் கண் எதிரில் பெரும் பாவம் புரிபவன் சந்தோஷமாக வாழ்வதும், மிக நல்லவர் கஷ்டப்படுவதும் இதன் அடிப்படையில்தான்.

நாம் கடவுளைக்கூட ஏமாற்றிவிடலாம்; நம்மை நாம் ஏமாற்ற முடியாது. நமக்குத் தெரியாமல் ஒன்று எப்படி நம்மிடம் நடக்க முடியும்? நாம் செய்த வினை யாவும் எண்ணங் களாக, அழியாத நினைவுகளாக நமக்குள்தான் வாழ்ந்துகொண்டே இருக்குமே! அதுவே விந்துவில் பதிவாகி, தொடர்கிறது. நாம் வேறு, நம் பிள்ளைகள் வேறு அல்ல; உடம்பு மட்டும்தான் மாறுகிறது; உள்ளம் மாறாமல் தொடர்கிறது. இதை வைத்தே, 'எண்ணம் போல் வாழ்க்கை’ என்றனர்.

மனிதன் கண்டுபிடித்த ஒரு மைக்ரோசிப், விரல் நகம் அளவுகூட இல்லை. அதில் பல திரைப்படங்களை அடைத்து, நினைத்தபோது அதை வெளிப்படச் செய்து, பார்க்கிறோம். ஒலி- ஒளி என இரண்டுமே அந்த நுண்ணிய 'சிப்’பில் அடங்கிவிடுகிறது. மனிதனின் ஒரு கண்டுபிடிப்புக்கே இத்தனை ஆற்றல் இருந்தால், மனித விந்து இதைப் போலப் பல்லாயிரம் மடங்கு ஆற்றல் மிக்கது என்பதைச் சொல்லித்தான் புரியவைக்க வேண்டுமா என்ன?

அதனாலேயே, விந்தின் மகிமையைப் பாதுகாக்க ஒழுக்கம் வலியுறுத்தப்பட்டது; வளமான எண்ணங்கள் வலியுறுத்தப்பட்டன; கற்பு நெறி உருவாக்கப்பட்டது. இதைக் கட்டிப் பேணமுடிந்தவர்கள் பிரம்மசாரிகள் எனப்பட்டனர்.

- சிலிர்ப்போம்...