மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விடை சொல்லும் வேதங்கள்: 25

ஒரு கதை ஒரு தீர்வு! அருண் சரண்யா, ஓவியம்: சசி

'டார்ட்’ என்ற விளையாட்டை ஆடிக்கொண்டு இருந்தான் நண்பன். அம்பு போன்ற ஒரு பொருளை குறிப்பிட்ட தொலைவில் இருந்து வீச வேண்டும்; அது எதிரில் உள்ள ஒரே மையம் கொண்ட பல வட்டங்களில் ஏதாவது ஒன்றில் பட்டு நிற்கவேண்டும். மையத்தில் உள்ள மிகச் சிறிய வட்டத்துக்குள் அந்த டார்ட் பட்டு நின்றால், மிக அதிகமான பாயின்ட் கிடைக்கும். இதுதான் அந்த விளையாட்டு.

அந்த விளையாட்டு மையத்துக்கு நான் வருவதும், ஆட்டத்தில் கலந்துகொள்வதும் இதுவே முதல் முறை. நானும் டார்ட்களை வீசினேன். பெரும்பாலானவை குறி தவறின. பயிற்சி காரணமாக, நண்பன் மட்டும் குறி தவறாமல் வீசினான். பார்வையாளர்கள் கைதட்டிப் பாராட்டினார்கள்.

விடை சொல்லும் வேதங்கள்: 25

''நான் எப்பவுமே மையத்துக்குதான் குறி வைப்பேன்.  அதுதான் என் சிறப்பு. வாழ்க்கையிலும் இந்த அணுகுமுறைதான் என் முன்னேற்றத்துக் கைகொடுக்குது'' என்றான் நண்பன்.

''என்ன சொல்ல வரே?'' என்று கேட்டேன்.  

''கோயிலுக்குக் கடவுளைக் கும்பிடப் போறோம்.  இதிலே பூசாரி எதுக்கு?'' என்று கேட்டான். எனக்கு ​எரிச்சல் வந்தது. ''சுத்தி வளைக்காம, நேரடியாக சொல்லித் தொலை'' என்றேன்.  

''சொல்றேன். எங்க எம்.டி-யோட அன்புக்கு உரியவனாக நான் ஆகணும்னா, அவரிடம் நான் நேரடியாக டீல் செய்வது தான் நல்லது. அவருடைய உதவியாளர், செயலாளர்னு யாரிடமும் குழைஞ்சு நிற்கவேண்டிய அவசியமில்லை.''

''ஆக, அலுவலகத்தைப் பொறுத்தவரை உன்னுடைய அணுகுமுறை இப்படித்தானா?'' என்றேன்.

''குடும்பத்திலேயும் அப்படித்தான்!'' என்றான். அவனே தொடர்ந்து, ''என் மனைவி எனக்கு முக்கியமானவள். ஆயுள் முழுக்க அவளோடுதான் வாழப் போறேன். எங்க குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு அவளுக்குதான் அதிகம். எனவே, அவளுக்கான அங்கீகாரத்தையும் அன்பையும் நான் தரவேண்டியது அவசியம். அதை நான் மறுக்கலை. ஆனா அவங்க அப்பா, அம்மா, மாமா, ஒண்ணுவிட்ட சித்தி, சித்தப் பாக்களெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. நமக்கு யார் தேவையோ அவங்ககிட்ட முழு உண்மையாகவும், உரிய மதிப்பு கொடுத்தும் நடந்துக்கிட்டா போதும்'' என்றேன்.  

''நீ சரியான பிருங்கி!'' என்றேன்.  

நண்பனின் முகத்தில் குழப்பம்.  ''என்னது... பிருங்கியா?!  என்ன சொல்றே?'' என்றான்.

பிருங்கி முனிவர் மகா சிவபக்தர். சிவாலயத் துக்குச் சென்று, சிவபெருமானின் சந்நிதியை மட்டுமே அடைந்து, சிவனை மனமுருக வழிபட்டு விட்டு, அம்பாள் சந்நிதிக்கெல்லாம் போகாமல் திரும்பிவிடுவார் அவர். அவரைப் பொறுத்தவரை, சிவபெருமானைத் தவிர, வேறு யாருமே ஒரு பொருட்டல்ல!              

பிருங்கி முனிவரின் இந்த மனோபாவம் உமையவளைக் கோபப்படுத்தியது. ''பிருங்கியின் செயலைப் பார்த்தீர்களா?'' என்று சிவனாரிடம் கேட்டாள்.

''பார்க்காமல் என்ன? என் தீவிர பக்தன் ஆயிற்றே!'' என்று புன்னகைத்தார் சிவபெருமான்.

''என் கோபத்தைக் கிளறாதீர்கள். நேரடியாகவே கேட்கிறேன். உங்கள் பக்தன் என்னை வணங்கா மல் இருப்பது முறையா, சரியா? என்னை அலட்சியப்படுத்திவிட்டு உங்களை மட்டும் ஒருவன் வழிபட்டால் போதும் என, அவனது இந்தச் செயலை அங்கீகரிப்பதன் மூலம் உலகுக்குச் சொல்கிறீர்களா?''

சிவபெருமான் உமையவளைச் சமாதானப்படுத்தினார். ''என்ன பேசுகிறாய்? நீ வேறு, நான் வேறா? என்னில் பாதிதானே நீ!''  

விடை சொல்லும் வேதங்கள்: 25

அன்னை முகத்தில் புன்னகை மலர்ந்தது. 'என்னில் பாதிதானே நீ?’ என்று சிவபெருமான் கூறியதை வேறு கோணத்தில் சிந்தித்தாள் அன்னை. 'சிவபெருமான் சந்நிதியும் தனது சந்நிதியும் ​வெவ்வேறாக இருப்பதால்தானே, பிருங்கியால் தனது சந்நிதி பக்கம் எட்டிக்கூடப் பார்க்காமல் அலட்சியப்படுத்த முடிகிறது? நாளையிலிருந்து பிருங்கி எப்படி என்னை ஒதுக்குகிறான் என்று பார்க்கிறேன்’ என உள்ளுக்குள் சூளுரைத்தாள்.

அடுத்த நாள்... சிவபெருமானை தரிசிக்க ஆலயத்துக்குச் சென்ற பிருங்கி முனிவர் திகைத்தார். வலப்புறம் ஈசனாகவும், இடப்புறம் அன்னை பார்வதியாகவும், அர்த்தநாரீஸ்வராகக் காட்சியளித்தார் சிவனார்.

இப்படி ஒரு தரிசனத்துக்கு யாருமே கொடுத்து வைத்திருக்க வேண்டும்! ஆனால், பிருங்கி முனிவருக்குதான் பக்தி இருந்த அளவுக்குப் பிடிவாதமும் அதிகம் இருந்ததே!  

தனது தவ வலிமையால், வண்டு உருவம் எடுத்தார் பிருங்கி. உமையொருபாகனின் நடுப்புறத் தைக் குடைந்து நுழைந்தார். வண்டு உருவிலேயே, சிவபெருமான் இருக்கும் வலப்புறப் பகுதியை மட்டுமே வலம் வந்தார். இப்படி சிவ வலம் செய்த பிறகு, மீண்டும் தனது இயல்பான தோற்றத்தை அடைந்து, வெற்றிப் புன்னகையுடன் ஆலயத்தை விட்டு வெளியேறினார் பிருங்கி.

அன்னை உமையவள் கோபத்தின் உச்சியை அடைந்தாள்.  ஆதிபராசக்தியான அவள், ''அடே பிருங்கி! என்னை இந்த அளவுக்கா அலட்சியம் செய்கிறாய்? நீ உன் சக்தியை முழுவதுமாக இழக்கக்கடவது!'' என்று சபித்தாள்.  

சக்தி அனைத்தையும் இழந்த பிருங்கி முனிவர்,  துணிக்குவியல் போலத் தொய்ந்து, தரையில் விழுந்தார். தன் உருவத்தைத் தொலைத்து, எலும்புக்கூடாகக் காட்சி அளித்த பிருங்கி முனிவர் மனம் மிக நொந்தபடி தவழ்ந்தும் ஊர்ந்தும் அங்கிருந்து மெள்ள நகரத் தொடங்கினார்.

தன் பக்தரின் நிலை கண்டு வேதனைப்பட்ட சிவபெருமான், தன் கழுத்தில் சுற்றியிருந்த நாகத்தையே ஒரு கோலாக்கி பிருங்கி முனிவரிடம் தர, அதைப் பற்றியவாறுதான் பிருங்கி முனிவர் தன் மிச்ச சொச்ச காலத்தையும் கழித்தார் என்கிறது புராணம்.

பிருங்கி மட்டும் பாரபட்சமின்றிச் செயல் பட்டிருந்தால், இப்படி எலும்புக்கூடாக வலம் வரும் நிலையைத் தவிர்த்திருக்கலாமே!

''இப்ப புரியுதா?'' என்று கேட்டேன்.

நண்பன் மௌனமாக இருந்தான். நான் சொன்னதை அவன் முழுமையாக ஏற்றுக் கொண்டானா என்று தெரியவில்லை.  எனவே, விளக்கத் தொடங்கினேன்.  

''உன்னோடு நேரடியாகத் தொடர்பில்லாத சிலர் உனக்கு வேண்டப்பட்டவர்களை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை படைத்தவர்களாக இருக்கக்கூடும். உதாரணமாக, உன் மேலதிகாரி யின் உதவியாளர், உனக்கு எதிராக அவரின் எண்ணத்தைத் திசை திருப்பவும் வாய்ப்பு உண்டு. அதேபோல, உன் மனைவிக்குத் தன் உறவினர்களிடம் பாசப் பிணைப்பு இருப்பது இயல்பானதுதான். அவர்களுக்குரிய முக்கியத்துவத்தை நீ அளிக்காவிட்டால், அது உன் மனைவியின் உள்ளத்தை நிச்ச யம் பாதிக்கும். எனவே, நாளடைவில் அலு வலகத்திலும் வீட்டிலும் நீ ​நினைக்கும் எதுவும் நடைபெறாமல் போகலாம்.

எனவே, ஒருவரை மிகவும் நேசித்தால், மதித்தால், அவரைச் சார்ந்தவர்களுக்கும் உரிய அங்கீகாரம் கொடுப்பதுதான் புத்திசாலித்தனம். இல்லாவிட்டால், முக்கியமானவர்கள் என்று நீ நினைப்பவர்களேகூட வருங்காலத்தில் உன்னைவிட்டு விலகிவிடலாம்'' என்றேன்.

நண்பனின் முகத்தில் குழப்ப ரேகைகள்! பரவாயில்லை; சற்றே குழம்பட்டும். தெளிவு என்பது லேசான குழப்பத்துக்குப் பின்பு கிடைப்பதுதானே?

- தீர்வுகள் தொடரும்...