ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்

கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

கோசலை குமரா! ஸ்ரீராமா! பொழுது புலர்கிறதே... தெய்விகத் திருச் சடங்குகள் செய்ய எழுந்தருள்வாய் புருஷோத்தமா!

ஆஹா! இனிய மெட்டு, செம்மையான பொருள், ஆழ்ந்த கருத்து, அழகிய ராகத்துடன், திருப்பதி திருவேங்கடவனைத் துயிலெழுப்பும் தெய்விகப் பாடல் - ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்.

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தேன் குரலில் நம் செவிக்குள் பாய்ந்து, நமக்குள் இருக்கும் இறை சிந்தையையும் பக்தியையும் தட்டியெழுப்பிச் சிலிர்ப்பூட்டும் தெய்வப் பிரவாகம் - ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்.

இறைவனைத் துயிலெழுப்பவே சுப்ரபாதம். தமிழில் 'திருப்பள்ளி யெழுச்சி’ என்பார்கள். இந்த இடத்தில், 'ஆதியந்தம் இல்லாத இறைவனுக்கு ஏது தூக்கம்?’ என்றொரு கேள்வி எழலாம்.

பக்தியில் சிறந்த நிலை சரணாகதி. 'எல்லாம் அவன் செயல்’ என்று முழுக்க முழுக்க தன்னை அவனிடத்தில் ஒப்படைப்பதே சரணாகதி தத்துவம். இப்படியான பக்குவ நிலை வாய்க்க வழிபாடுகளும், இறைவனுக்கான பணிவிடைகளும் உதவி செய்யும்.

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்

சரி! எப்படி வழிபடுவது? என்னென்ன பணிவிடைகள் செய்வது?

அன்னையாய், குழந்தையாய், காதலனாய், தோழனாய் இறைவ னைப் பாடி உருகிய ஆழ்வார்களும் அடியார்களும், அதன் மூலம் இறைவனை நம்மில் ஒருவனாகக் கருதி வழிபடும் நுணுக்கத்தை அழகாய்ச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில், காலை எழுந்தது முதல் இரவு உறங்குவது வரையில் நமக்கு நாம்  செய்துகொள்ளும் அன்றாடச் செயல்கள் அனைத்தையும் அவருக்கும் செய்து அழகு பார்த்து ஆனந்திப்பது ஒரு ரசானுபவம்!

இதன் அடிப்படையிலான விளைவுதான், திருப்பள்ளியெழுச்சி பாடல்களும் வழிபாடுகளும் எனலாம். ஆழ்வார்களில் தொண்டர டிப் பொடியாழ்வாரும், சைவ சமயத்தில் மாணிக்கவாசகரும் திருப்பள்ளியெழுச்சி பாடி மகிழ்ந்திருக்கிறார்கள். விநாயகருக்கும் முருகப் பெருமானுக்கும்கூட சுப்ரபாதம் உண்டு. அவ்வளவு ஏன்? ஜைன மதத்திலும் சுப்ரபாதம் பாடப்பட்டிருக்கிறது.

இவை அனைத்துமே விசேஷமானவை. எனினும், ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. இதன் முதல் வரி, விஸ்வாமித்ர முனிவரின் திருவாக்கில் உதித்தது என்பதே அது.

ஸ்ரீராமபிரானின் பால பருவம். அயோத்தி அரண்மனைக்கு விஜயம் செய்த விஸ்வாமித்திரர், தமது யாகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் அசுரர்களை அடக்கவும் அழிக்கவும் ஸ்ரீராமனைத் தம்முடன் அனுப்பிவைக்குமாறு தசரதனிடம் கேட்டுக் கொண்டார். தசரதரோ தயங்கினார். பின்னர், குலகுரு வசிஷ்டரின் அறிவுரைப்படி ஸ்ரீராமனை அனுப்பச் சம்மதித்தார். கூடவே, லக்ஷ்மணனையும் அனுப்பி வைத்தார்.

விஸ்வாமித்திரர் அவர்களுக்கு பலா, அதிபலா மந்திரோபதேசம் செய்ததுடன், வழியில் அமைந்திருந்த பல புண்ணியத் தலங்களின் மகிமைகளையும், மகான்களின் சரிதைகளையும் விளக்கியவாறு அழைத்துச் சென்றார். இரவு வேளை வந்தது. காட்டில் ஓரிடத்தில் ஸ்ரீராமனும் லட்சுமணனும் விஸ்வாமித்ர மகரிஷியுடன்  கட்டாந்தரையில் படுத்து உறங்கினார்கள்.

பொழுது புலர்ந்தது. அரண்மனையில் பஞ்சணையில் படுத்து உறங்க வேண்டிய அரசிளங்குமரர்கள் தரையில் படுத்திருப்பது கண்டு, நெகிழ்ந்தார் விஸ்வாமித்ர மகரிஷி. மிக்க பரிவுடன் அவர்களைத் துயிலெழுப்பினார், 'கௌசல்யா சுப்ரஜா ராமா...’ என்று! ஆக, முதன்முதலில் திருமாலுக்குச் சுப்ரபாதம் அமைத்த பெருமையும் பாக்கியமும் அவருக்கு ஏற்பட்டது.

இந்த வரியைக் கொண்டே துவங்குகிறது, இப்போது நாம் படித்தும் கேட்டும் மகிழும் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்.

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்

திருமலைவாசனின் சுப்ரபாதத்தில் முதல் பகுதி பெருமானைத் துயிலெழுப்பவதாகவும், அடுத்து அவன் பெருமையை தெரிவிக்கும் விதமாகவும், அடுத்து அவனைச் சரணடைந்து, இறுதியாக அவனுக்கு மங்களம் பாடுவதாகவும் அமைந்துள்ளது. இப்பாடல்களில் வைணவ சித்தாந்தக் கருத்துக்களும், பொதுவான நீதிகளும் அடங்கியுள்ளன என்பது பெரியோர்களின் கருத்து.

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் மொத்தம் 70 ஸ்லோகங்களுடன், நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதி, யோக நித்திரையில் இருக்கும் வேங்கடவனைத் துயில் எழச் செய்வது குறித்ததாகும். இதில் 29 ஸ்லோகங்கள் காணப்படுகின்றன.

2-ம் பகுதி- ஸ்ரீவேங்கடவனைத் துதி செய்தல்; அதாவது போற்றி வணங்கும் பகுதி. இதில் 11 ஸ்லோகங்கள் உண்டு.

3-ம் பகுதியான பிரபத்தியில், திருமகளின் பெருமை குறித்தும், ஸ்ரீவேங்கடவனின் திருவடிகளில் சரணாகதி அடைவது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் 16 ஸ்லோகங்கள் உண்டு.

4-வது பகுதியான மங்களம், நிறைவுப் பகுதி. மங்களகரமான அருளை வேண்டும் வகையில் துதிக்கப்படும் இந்தப் பகுதியில், 14 ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.

அரங்கமாநகருளானுக்குத் திருப்பள்ளி யெழுச்சி பாசுரங்களைப் பாடியவர் தொண்டரடிப் பொடியாழ்வார். பிற்காலத்தில் சோளிங்கர், ஒப்பிலா அப்பன் திருக்கோயில், திருவல்லிக்கேணி போன்ற சில திவ்யதேசங் களுக்கு அந்தந்த ஸ்தலத்தைச் சார்ந்த சில மஹநீயர்கள் சுப்ரபாதம் இயற்றி, அது அந்தந்த திவ்யதேசங்களில் அனுசரிக்கப்படுகிறது.

திருமலையில் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாத தரிசனம்

திருமலை வேங்கடவனுக்கு நித்தமும் பல ஸேவைகள் நடைபெறும் என்றாலும், முதலாவதாக இடம்பெறுவது ஸ்ரீசுப்ரபாத ஸேவைதான். அதிகாலையில் அர்ச்சகர்கள், பரிசாரகர்கள், கோயில் சேவகர்கள், வீணை இசைக் கலைஞர்கள் ஆகியோர் தங்க வாசலை அடைவார்கள். அங்கே துவார பாலகரை வணங்கி, ஸ்வாமியை மனத்தில் தியானித்தவண்ணம் திருக்கதவைத் திறப்பார் அர்ச்சகர். அனைவரும் நுழைந்ததும், கதவு சாத்தப்படும்.

பிறகு, திருச்சந்நிதியில் தீபங்கள் ஏற்றப்பட, ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் ஒலிக்க... முதல் நாள் இரவு தொட்டிலில் கிடத்திய 'போக ஸ்ரீநிவாஸ மூர்த்தி’யை திருப்பள்ளி எழுந்தருளச் செய்வார்கள். பின்பு, அவரை மூலவருக்கு அருகில், எப்போதும் அவர் இருக்கும் இடத்தில் எழுந்தருளச் செய்வார்கள். ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் முடியும் தருணத்தில் சந்நிதியின் திருக் கதவுகள் மீண்டும் திறக்க, ஸ்வாமிக்கு பாலும் வெண்ணெயும் சமர்ப்பித்து, தீபாராதனை நிகழும். இதற்கு நவநீத ஆரத்தி என்று பெயர். இந்த தரிசனத்தையே சுப்ரபாத தரிசனம், விஸ்வரூப தரிசனம் என்பார்கள். அதிகாலைப் பொழுதில் தீப ஒளியில் சுடர்ஜோதியாய் அருளும் திருவேங்கடவனை, திருமகள் நாயகனைக் காணக் கண்கோடி வேண்டும்.

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்

பகவானின் அர்ச்சாவதார நிலையில் (உருவ வழிபாடு - தற்போது நாம் திருக்கோயில்களில் வழிபடும் தெய்விகத் திருவுருவங்கள்) முதன்முதலாக திருமாலுக்கு சுப்ரபாதம் பாடிய பாக்கியமும் பெருமையும் பெற்றவர் யார் தெரியுமா?

'பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர்’ என்ற மகான். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்த மகானால் அருளப்பட்டது ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம். பின்னாளில் இவருடைய வம்சத்தில் பிறந்து, அதே பெயரோடு 92 ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்த பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராச்சார்யர் சுவாமிகளால், ஸ்ரீபி.வி.அனந்தசயனம் ஐயங்காருக்கு சுப்ரபாதம் முறைப்படி கற்றுத் தரப்பட்டது.

பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராச்சார்ய சுவாமிகள் தமது வாழ்நாளில் எழுதிப் பதிப்பித்த நூல்கள் 1240-க்கும் அதிகம்! இவர் தமிழ், சம்ஸ்கிருதம், இந்தி, தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் புலமை மிக்கவர். 'திவ்ய பிரபந்த திவ்யார்த்த தீபிகை’ என்ற தலைப்பில், ஆழ்வார் பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஜனாதிபதி விருது பெற்றவர் இவர்.

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், இவரின் உரையை ரசித்துக் கேட்பாராம். 'நான் பிறப்பால் உ.வே. (உத்தமதானபுரம் வேங்கடராமையர்); நீர் அறிவால்  உ.வே. (உபய வேதாந்தி)’ என்று மகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.

உ.வே.அண்ணங்கராச்சார்ய சுவாமிகள் 'ராமானுஜர்’ என்ற பத்திரிகையையும் நடத்திவந்தார். இவரிடம் இருந்து ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் பாடும் முறையைக் கற்றுக்கொண்ட அனந்தசயனம் ஐயங்கார், தனது வாழ்நாள் முழுவதும் திருமலை சந்நிதானத்தில் சுப்ரபாத ஸேவையில், அந்தத் தெய்விகப் பாடலைப் பாடி சேவை செய்திருக்கிறார். முதன்முதலில் இசைத்தட்டு வடிவில்

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்

சுப்ரபாதத்தைப் பதிவு செய்து வெளியிட்டவரும் அனந்தசயனம் ஐயங்கார்தான். இவருக்குப் பிறகே, திருப்பதி திருமலையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலில்  சுப்ரபாதம் ஒலிக்கத் துவங்கியது.

''என் கணவர் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்த பலனே எங்கள் குடும்பத்தை இன்றைக்கு சகல சௌக்கியமா வாழவைத்துக் கொண்டிருக்கிறது'' என்று நெகிழ்கிறார் விஜயலட்சுமி அம்மாள். இவர் அனந்தசயனம் ஐயங்காரின் மனைவி. தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அவரிடம் பேசியபோது, ஆர்வமும் சிலிர்ப்புமாகப் பல சுவாரஸ்ய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

? உங்கள் கணவருக்குச் சுப்ரபாதம் பாடும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

''என் கணவர் வேதபாடசாலையில் படிக்கும்போதே, அவரை அண்ணங்கராச்சார்ய சுவாமிகளுக்கு நன்கு தெரியும். சுவாமிகள் வயதில் மிகவும் மூத்தவர். இவருடைய குரல் வளத்தை மனத்தில்கொண்டு, 'நீதான் சுப்ரபாதம் பாடவேண்டும். உனது குரல் கணீரென்று இருக்கிறது’ என்று கூறி, வாய்ப்பளித்தார்.

ஏழுமலையானும் அவன் கோயிலும்தான் அவருக்கு எல்லாம்! தேவஸ்தானத்தில் பணிபுரிந்த காலத்தில், அதிகாலை 3 மணிக்கு எழுந்து குளித்து, திருமண் காப்பு தரித்து, கோயிலுக்குச் சென்று விடுவார் என் கணவர். 10 மணிக்குத் திரும்புவார். மீண்டும் மதியம் 3 மணிக்குக் கோயிலுக்குச் சென்றுவிடுவார். பின்னர், அவர் திரும்புவதற்கு இரவு 10 மணி ஆகும்.

பெரிய பெரிய பதவியில் இருந்தவர்கள் எல்லாம் திருமலைக்கு வரும்போது, தேவஸ்தானம் சார்பாக அவர்களுக்கு கௌரவம் அளிக்கப்படும். அப்போது, இவர்தான் முன்னணியில் இருப்பார்'' என்றவர், நீலம் சஞ்சீவரெட்டி குடியரசுத் தலைவராக இருந்தபோது தங்கள் இல்லத்துக்கு வந்ததைப் பெருமையுடன் குறிப்பிட்டார்.

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்

தொடர்ந்து, ''நாங்கள் திருமலையில் இருந்தபோது சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, சதாசிவம் போன்ற பெரியவர்களும், பத்மினி, ராகினி போன்ற கலைஞர்களும் எங்கள் வீட்டுக்கு வந்து தங்கி உணவருந்தியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் இப்போது உள்ளதைப்போல அத்தனை ஓட்டல்கள் கிடையாது.  இத்தனைப் பெரிய மனிதர்கள் எங்கள் வீட்டுக்கு வரும்போது, இருக்கும் வசதிக்குள் சந்தோஷமாகத் தங்கியிருந்து, எந்தவித பந்தாவும் இல்லாமல் எங்கள் வீட்டு  எளிய  உணவை ரசித்து சாப்பிடுவார்கள்'' என்கிறார் சந்தோஷம் பொங்க.

திருப்பதி தேவஸ்தானத்தில் 36 வருஷம் தொடர்ந்து கைங்கர்யம் செய்திருக்கிறார் அனந்தசயனம் ஐயங்கார். இதுகுறித்து விவரித்த விஜயலட்சுமி அம்மாள், ''என் கணவர்  பணி ஓய்வு பெற்றபிறகும் மூன்றாண்டுகள் பணி நீட்டிப்பு கொடுத்தார்கள். அதற்குப் பிறகும் இவருக்குக் கோயிலையும் பெருமாளையும் விட்டுவிட்டு வர மனசில்லை. பணி ஓய்வுக்கான அரசு ஆணையைக் கையால் தொடக்கூட மறுத்து விட்டார். பின்னர், தபாலில் அதை வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். பெருமாளுடன் அந்த அளவுக்கு மனத்தால் ஐக்கியமாகியிருந்தார் அவர். பணி ஓய்வடைந்து ஒரு மாதம்தான்... 1979 ஜூன் மாதம் பரமபதம் அடைந்துவிட்டார்!'' என்றார் தழுதழுத்த குரலில்.

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்

? எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா அவர்களும் சுப்ரபாதம் பாடியிருக்கிறாரே?

''எம்.எஸ்-அம்மாவுக்கு இவர்தான் சுப்ரபாதமும், சகஸ்ரநாமமும் பாடும் முறையைக் கற்றுக்கொடுத்தார். சென்னையில் சேத்துப்பட்டு அருகில் கல்கி அலுவலகம் இருந்தது. அதன் அருகில் எம்.எஸ். அம்மா வீட்டுக்கே சென்று தங்கி, கற்றுக்கொடுத்தார்.

இவர் தங்குவதற்கும், இவருக்குத் தனியாகச் சமையல் செய்ய ஒருவரை நியமித்தும் வசதி செய்து கொடுத்திருந்தார்கள். நானும்கூட சில நாட்கள் அங்கே தங்கியிருந்திருக்கிறேன். எம்.எஸ் பாடிய சுப்ரபாதமும் இசைத்தட்டாக வெளிவந்தது. என் கணவர் பாடியதும், எம்.எஸ். பாடியதுமான சுப்ரபாதங்கள் ஹைதராபாத்தில் வெவ்வேறு வானொலிகளில் இன்றைக்கும்  தினமும் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. இதில் குறிப்பிடவேண்டிய விஷயம்... இவர் பாடிய பாடல்களை இசைத்தட்டாக எச்.எம்.வி. நிறுவனம் வெளியிட்ட போது, அந்தக் காலத்திலேயே அறுபதாயிரம் ரூபாய் ராயல்டியாக வந்தது. அந்தத் தொகை முழுவதையும் தேவஸ்தானத்துக்கே தரும்படி சொல்லிட்டார் என் கணவர்.

எம்.எஸ் அம்மாவுக்கும் அதேபோல் ராயல்டி தொகை வந்தபோது, அதை என்ன செய்வது என்று இவரிடம் ஆலோசனை கேட்டார். 'என் ராயல்டியை பெருமாளுக்குக் கொடுத்துட்டேன். உனக்கானதை வேத பாடசாலைக்குக் கொடுத்துடு’ என்று இவர் சொன்னதும், எம்.எஸ். மறுபேச்சு பேசாமல் அப்படியே சந்தோஷமாகக் கொடுத்துவிட்டார். எம்.எஸ். திருமலைக்கு வரும்போதெல்லாம், எங்கள் வீட்டுக்கு வந்து இவரைப் பார்த்து நமஸ்காரம் செய்துவிட்டுத்தான் செல்வார். அந்த அளவுக்கு எங்கள் குடும்பத்தின்மீது அன்பு செலுத்தினார் எம்.எஸ்.''

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்

? திருப்பதி தேவஸ்தானம், பெருமாள் வைபவத்தைப் படமாக எடுத்தார்களே, அதில் உங்கள் கணவரது பங்கு..?

''தேவஸ்தானம் எடுக்கவில்லை. சென்னையில் நாகிரெட்டிதான் படமாக எடுத்தார். தேவஸ்தானத்தில் இருந்து சொன்னதன்பேரில், என் கணவர் சென்னைக்கு வந்து 'வேங்கடேச வைபவம்’ என்ற அந்தத் திரைப்படத்தில் சுப்ரபாதம் பாடினார். பெருமாளுக்குத்  திருமஞ்சனமும் நடத்திவைத்தார். அங்கே, தேவஸ்தானம் மாதிரியே அரங்கம் அமைத்துத் திரைப்படம் தயாரித்தார்கள்'' என்று சொன்ன விஜயலட்சுமி அம்மாள், முத்தாய்ப்பாக...

''நாங்கள் இன்றிருக்கும் இந்தச் சந்தோஷமான வாழ்க்கைக்குப் பெருமாளே காரணம். எங்களுக்கு மூன்று பையன்கள், மூன்று பெண்கள். அனைவரும் திருமணமாகி, சௌக்கியமாக இருக்கிறார்கள். ஒரு தலைமுறையில் வேதம் கற்றால், அது ஏழு தலைமுறையைக் காப்பாற்றும் என்பார்கள். அது எங்கள் குடும்பத்தைப் பொறுத்த அளவில் நூறு சதவிகிதம் உண்மை! என் கணவர் பெருமாளுக்குச் செய்த கைங்கர்யம்தான் எங்கள் குடும்பத்தில் எல்லோரையும் சௌக்கியமாக வாழ வழி செய்திருக்கிறது. அவர் இப்போது இல்லையென்றாலும், அவரது ஆசி பூரணமாக இருந்து, எங்களை வழி நடத்துகிறது'' என்கிறார் பூரிப்புடன்.

'பிரதிவாதி பயங்கரம்’

- பெயர்க்காரணம்

வேதாந்த தேசிகரின் குமாரரான நயனாராசார்யரிடம் ஸாமந்ய சாஸ்திரங்கள் பயின்றார் அண்ணங்கராச்சார்யர். பின்னர், மணவாள மாமுனிகளின் பெருமையைக் கேள்விப்பட்டு, ஸ்ரீரங்கம் சென்று, அவர் திருவடிகளிலே ஆச்ரயித்து, அவர் திருவருளால் அத்யாத்ம சாத்திரங்கள் எல்லாம் கற்று, அவர் நியமித்தருளின அஷ்டதிக் கஜார்யர்களிலே ஒருவரானார்.

நயனாராசார்யரிடம் சீடராக இருந்தபோது, அத்வைதி பண்டிதர் ஒருவரை வாதத்தில் வென்றமையால் பெரிதும் மகிழ்ந்த நயனாராசார்யர் இவரை 'பிரதிவாதி பயங்கரரே’ என்று விளித்துக் கொண்டாடினார். அது முதல் இவரும் இவரது சந்ததியாரும் 'பிரதிவாதி பயங்கரம்’ என்றே போற்றி அழைக்கப்படுகிறார்கள்.

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர்

- எம்.என்.ஸ்ரீநிவாசன்

ஸ்ரீமணவாளமாமுனிகள், வைணவம் (திருமால் வழிபாடு) வளர்க்க நிறுவிய அஷ்டதிக் கஜங்களில் ஒருவர், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர். இவர், பிள்ளை லோகாச்சார்யர் என்ற ஆசார்ய புருஷரின்  வம்சமான 'முடும்பை நம்பி வம்ஸத்தவர்’.

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர் (முன்னவர்) காஞ்சியில் அவதரித்தவர். 1361-ம் ஆண்டு- பிலவ வருடம், ஆடி மாதம், புஷ்ய நட்சத்திரத் திருநாளே இவருடைய அவதார நன்னாள். கடந்த 2011-ல் இவருடைய 650-வது அவதார நன்னாள் கொண்டாடப்பட்டது.

மணவாளமாமுனிகளுடன் திருப்பதியில் கைங்கர்யம் செய்து வந்தவர், மாமுனிகளின் விருப்பப்படி, அவரது 73-வது திருநட்சத்திரத்தை முன்னிட்டு, திருவேங்கடவனுக்கு 73 ஸ்லோகங்கள் கொண்ட சுப்ரபாதத்தைச் சமர்ப்பித்தார். மணவாள மாமுனிகள், இந்தச் சுப்ரபாதத்தை தினமும் திருமலையில் வழிபாட்டில் ஓதவேண்டும் என்றும், மார்கழி மாதத்தில் மட்டும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியும், ஆண்டாளின் திருப்பாவையும் ஓதப்படவேண்டும் என்றும் நிர்ணயித்தார். அதன்படியே இன்றைக்கும் விடியற்காலையில்  சுப்ரபாதம் ஓதப்படுகிறது.

பிரதிவாதி பயங்கரம் ஸ்வாமிகள் 108 திவ்ய தேசங்களுக்கும் சுப்ரபாதம் பாடியுள்ளார் என்றும், அவை அனைத்தும் ஓலைச் சுவடிகளாக உள்ளன என்றும் சொல்வார்கள்.

அண்ணா ஸ்வாமியின் அவதாரத்தலம், காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் உள்ளது. அங்கே, 'பிரதிவாதி பயங்கரம் அண்ணா கோயில்’ என்றே ஒரு சந்நிதி அமைந்துள்ளது. அவரின் சந்ததிகள் (காதியார்) சந்நிதியை நிர்வகித்து வருகின்றனர். மேலும் கீழ்த்திருப்பதி, மாயவரம் அருகில் திருஇந்தளூர் மற்றும் திருநாங்கூர் திவ்ய தேசத்திலும் இவருக்குச் சந்நிதிகள் அமைந்துள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு