'நீறில்லா நெற்றி பாழ்’ என்று சொல்லி வைத்தார்கள், முன்னோர்கள். நெற்றியில் விபூதியோ, குங்குமமோ, திருமண்ணோ, சந்தனமோ ஏதேனும் திருச்சின்னம் ஒன்றை இட்டுக்கொள்வது, மிகுந்த பலம் சேர்க்கும். முகத்தில் பொலிவையும் மனத்துள் அமைதியையும் தரும்.

''எப்பவும் நெற்றியில் விபூதி அணியும் தாத்தாவையும் அப்பாவையும் பார்த்து வளர்ந்த என் மகன் சீனிவாசனுக்கு, அவங்களைப் போலவே பக்தியில் ஒரு ஈடுபாடும் ஆர்வமும் இயல்பாவே வந்துடுச்சு. இவனும் அவங்களைப் போலவே எப்பவும் நெத்தியில் விபூதியோடதான் இருப்பான்'' என்கிறார், சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த வாசகி ஜெயலட்சுமி.

தொடர்ந்து, அவரின் மகன் சீனிவாசன் பேசினார். ''பெங்களூர்ல ஒரு கம்பெனில வேலை பார்த்தேன். ஒருகட்டத்துல, புராஜெக்ட் முடிஞ்சிருச்சுன்னு சொல்லி வேலையை விட்டு அனுப்பிட்டாங்க. என்னடா செய்றதுன்னு தவிச்சுப் போயிட்டேன். சென்னைக்கு வந்து, ஆறு மாசம் வேலை தேடி அலைஞ்சேன். நல்லா படிச்சிருந்தும் நல்ல வேலை கிடைக்கலையேனு கலங்கிப் போய் தவிச்சுக்கிட்டிருந்தப்பதான், எழுச்சூர் கோயிலுக்கு அம்மாவோடு யதேச்சையா போனேன். 'நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் பண்ணலை. எனக்கு ஒரு நல்ல வழி காட்டுப்பா’னு வேண்டிக்கிட்டேன். அதுக்குப் பிறகு, ஒரே வாரத்துல வேலை கிடைச்சுது. நல்ல உத்தியோகம். நிறைவான சம்பளம். இப்ப என் மொத்த குடும்பமுமே மகிழ்ச்சியும் நிம்மதியுமா இருக்கு'' என்று நெகிழ்ந்து சொல்கிறார் சீனிவாசன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குருவருள்... திருவருள்! - 10

சென்னையில் உள்ள முக்கியப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார் வள்ளியம்மாள்.

''வாழ்க்கைல சின்னச் சின்னதான பிரச்னைகள். தவிர, ரொம்ப காலமாவே முதுகு வலியில தவிச்சுக்கிட்டிருந்தேன். மருந்து, மாத்திரைன்னு சாப்பிட்டும் பிரயோசனம் இல்லை. அந்த நேரத்துலதான், எழுச்சூர் கோயிலுக்குப் போயிட்டு வந்தேன். அன்னிக்கு ஆசிரியர்கள் தினம் (செப். 5). 'நான் நிம்மதியா இருந்தாதான் நல்லா பாடம் நடத்த முடியும். பசங்களும் அதைக் கேட்டு, சரியா உள்வாங்கிக்க முடியும். பயமோ பதற்றமோ இல்லாம பரீட்சை எழுதி, நிறைய மார்க் எடுத்துப் பாஸாக முடியும். இந்தக் குழந்தைகளுக்காகவாவது என் பிரச்னைகள் எல்லாம் பனிக்கட்டியா கரைஞ்சு காணாமப் போகும்படி செய்யப்பா!’னு வேண்டிக்கிட்டேன்.

குருவருள்... திருவருள்! - 10

அப்புறம், அடுத்தடுத்து மாத சிவராத்திரி, பிரதோஷம்னு முக்கிய விரத தினங்கள்ல, நல்லிணக் கேஸ்வரரையும் ஸ்ரீதெய்வநாயகியையும் வந்து தரிசனம் பண்ணிட்டு, கோயில்ல ஒரு 15 நிமிஷம் கண் மூடி உட்கார்ந்துட்டுப் போனேன். எல்லாப் பிரச்னைகளும் தடதடன்னு முடிவுக்கு வந்துடுச்சு. இப்ப நானும் என் கணவருமா அடிக்கடி எழுச்சூர் கோயிலுக்குப் போய் தரிசனம் பண்ணிட்டிருக்கோம். அதேபோல, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், என்னோடு வேலை பார்க்கற டீச்சர்ஸ்கூடயும் இங்கே வந்து கும்பிட்டுட்டுப் போறதை வழக்கமா வைச்சிருக்கேன்.

சக்திவிகடன் மூலமா திருப்பட்டூர் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, அங்கே நாலஞ்சு தடவை போய் தரிசனம் பண்ணியிருக்கோம். திருப்பட்டூர் பிரம்மாவோட அருளாலயும், எழுச்சூர் நல்லிணக்கேஸ்வரரோட அருளால யும் சௌக்கியமா, நிம்மதியா இருக்கோம்'' என்று நெக்குருகிச் சொல்கிறார் ஆசிரியை வள்ளியம்மாள்.

குருவருள்... திருவருள்! - 10

''பத்து வருடங்களுக்கு முன்பு வரை, வழிபாடுகளோ விசேஷங்களோ எதுவும் இல்லாமல் இருந்த கோயில்தான் இது. பின்னர் சிவனடியார்களின் பெருமுயற்சியா லும் பக்தர்களின் பேருதவியாலும் திருப்பணிகள் நடந்து, கும்பாபிஷேகமும் செய்யப்பட்டு, இன்றைக்கு வருடம் முழுவதும் பூஜைகளும் விழாக்களும் அமர்க்களப்படுகின்றன.

குருவருள்... திருவருள்! - 10

சென்னை மட்டுமின்றி, வெளியூரில் இருந்தும் ஏராளமான சக்திவிகடன் வாசகர்கள் தினமும் இங்கு வந்து தரிசனம் செய்துவிட்டுச் செல்கிறார்கள். அவர்களே சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் வந்து, 'வேண்டுதல் நிறைவேறிவிட்டது’ என்று சந்தோஷத்துடன் சொல்லி, கோயிலின் வளர்ச்சிக்கும் நித்தியப் படி பூஜைக்கும் நிதியுதவி தந்து விட்டு, மனநிறைவுடன் செல்கிறார்கள். இதுதான் எழுச்சூர் ஸ்ரீநல்லிணக் கேஸ்வரர் ஆலயத்தின் மகிமை! ஸ்ரீதெய்வநாயகி அம்பாளின் சாந்நித்தியம் இது. முக்கியமாக, ஸ்ரீவியாஸாசல சுவாமிகளின் அருளாசி!'' என்று, கோயில் நிர்வாகக் கமிட்டியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் கிருஷ்ணகுமார் பெருமிதத்துடன் சொல்கிறார்.  

எழுச்சூர் திருத்தலத்துக்கு ஒருமுறை வாருங்கள். பிறகு, நீங்களே உங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் இங்கே அழைத்து வருவீர்கள். எப்போதும் உங்களுக்குப் பக்கத்துணையாக இருந்து, உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் வழிநடத்துவார், ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர்.

ஸ்ரீநல்லிணக்கேஸ்வரரே போற்றி!
ஸ்ரீதெய்வநாயகி அம்மையே போற்றி!

(நிறைவுற்றது)

படங்கள்: ரா.மூகாம்பிகை

எங்கே இருக்கிறது?

சென்னை தாம்பரத்தில் இருந்து படப்பை வழியே காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ளது ஒரகடம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், கிளை பிரிந்து செல்லும் வழியே சென்றால், எழுச்சூர் கிராமத்தையும் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர் ஆலயத்தையும் அடையலாம்.

ஒரகடம் வரை செல்ல பஸ் வசதி உண்டு. ஒரகடத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism