Published:Updated:

ஸ்ரீபகவன்நாம போதேந்திராள்

நாடக காவியம்குருவே சரணம்! வீயெஸ்வி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கும் ஊர் கோவிந்தபுரம். இந்த ஊரை நினைத்த மாத்திரத்தில், மகான்கள் மூவரின் பெயர்கள் நெஞ்சில் அலைமோதும். ஸ்ரீபகவன்நாம போதேந்திராள், ஸ்ரீதர ஐயாவாள், மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் ஆகிய அம்மூவரும் ராம நாமத்தின் மகிமையை உலகறியச் செய்த உத்தம புருஷர்கள்.

ஸ்ரீபகவன்நாம போதேந்திராள்

ஸ்ரீபகவன்நாம போதேந்திராள், காஞ்சி மடத்தின் 59-வது பீடாதிபதியாகத் திகழ்ந்த வர்; திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள், போதேந் திராளுக்கு சம காலத்தவர்; மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள், மேலே குறிப்பிட்ட இருவருக்குப் பின், நூறு ஆண்டுகள் கழித்து அவதரித்தவர். கோவிந்தபுரத்தில், போதேந்திராள் ஜீவ சமாதி அடைந்த இடத்தைக் கண்டறிந்து, அதிஷ்டானம் அமைத்தவர் இவர்.

இனி, ஸ்ரீபோதேந்திராளின் வாழ்க்கைக் கதை.

அது 17-ம் நூற்றாண்டு.

காஞ்சிபுரத்தில், மந்தனமிச்ர அக்ரஹாரத்தில் ஓலைகள் படர்ந்த சிறு குடிலில் வசித்து, மடத்துக்கு ஊழியம் பார்த்துக் கொண்டிருந்த பாண்டுரங்கன்- சுகுணா தம்பதிக்கு, மணமாகி வருடங்கள் பல கடந்தும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. அக்கம்பக்கத்து பெண்மணிகளின் ஏளன வார்த்தைகள் சுடுகின்றன. மறுமனை, பிரார்த்தனை, பரிகாரம் என்றெல்லாம் யோசனை கள் சொல்லப்படுகின்றன.

கணவரிடம் தன் மனக்குறையைப் பகிர்ந்து கொள்கிறாள் சுகுணா. ''மடத்தில் நம்ம குருவிடம் தெரியப்படுத்துவோம். குழந்தை பாக்கியம் வேணும்னு வெளிப்படையாக் கேட்கவேண்டாம். மனசுல வேண்டிண்டு நமஸ்கரிப்போம். ஞான திருஷ்டில அதைத் தெரிஞ்சுண்டு அனுக்கிரகம் பண்ணிடுவார்...'' என்கிறாள்.

காஞ்சி மடம் சென்று, 58-வது பீடாதிபதியாக அருள்மழை பொழிந்துகொண்டிருக்கும் விஸ்வாதிகேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் மனம் உருகப் பிரார்த்தித்துக் கொள்கிறார்கள், பாண்டுரங்கனும் சுகுணாவும்.

1692-ம் வருடம், புரட்டாசி மாதம், பவுர்ணமி நாளன்று கோடி சூரியன் உதித்த மாதிரி ஆண் குழந்தை பிறக்கிறது சுகுணாவுக்கு. புருஷோத்தமன் என்று நாமகரணம் செய்துவைக்கிறார்கள். அவதார புருஷனுக்கு இருக்கவேண்டிய அத்தனை லட்சணங்களும் புருஷோத்தமனிடம் இருப்பதாக ஊர் மெச்சுகிறது.

ஸ்ரீபகவன்நாம போதேந்திராள்

நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, பிரம்மோபதேசத்துக்குத் தயாராகிறான் புருஷோத்தமன். மகனின் பூணூல் கல்யாணத்துக்கு, பெரியவாளிடம் ஆசி வாங்கி வரவேண்டும் என்று செல்கிறார்கள் அவன் பெற்றோர்.

மடத்தில் வேறொரு பெரியவரிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார் விஸ்வாதிகேந்திர சரஸ்வதி சுவாமிகள். பக்கத்தில் ஒரு சின்னஞ்சிறு சிறுவன்.

''என் பேர் பரசுராமன். இவன் தாய் தந்தையை இழந்த குழந்தை. அஞ்சு வயசு. ஸ்ரீ மடத்துப் பாடசாலையிலே...'' என்று தயக்கத்துடன் இழுக்கிறார் பெரியவர்.

''பிரேமை இருந்தா லோகமே நமக்குச் சொந்தம்தானே? என்ன பேர் வெச்சிருக்கே?'' என்று வினவுகிறார் சுவாமிகள்.

''இன்னும் நாமகரணம் பண்ணலே...''

குழந்தையை உற்றுநோக்கும் சுவாமிகள், 'தீர்க்கமான கண்கள், விசாலமான நெற்றி, இவன் ஞானத்தின் சாகரம்... இளம் பிராயத்திலே சமாதி அடையறது எல்லோர் மனசுக்கும் கிலேசமாகத்தான் இருக்கும்’

''குழந்தைக்கு ஞானசாகரம்கற நாமகரணத் தோட உள்ளே அழைச்சுண்டு போய் விட்டுடலாம்...'' என்று உத்தரவாகிறது.

அடுத்து, பாண்டுரங்கன் கைகட்டி, வாய் பொத்தி சுவாமிகள் முன் நிற்க, பக்கத்தில் புருஷோத்தமன்.

''யார் இந்தக் குழந்தை?'' என்று சுவாமிகள் கேட்க, ''பெரியவா அனுக்கிரகத்துல பிறந்த குழந்தை...'' என்கிறார் பாண்டுரங்கன்.

ஸ்ரீபகவன்நாம போதேந்திராள்

சுவாமிகள் இதழோரத்தில் மெல்லிய புன்னகை.

''என் குழந்தைன்னு இவனை என்கிட்டேயே குடுத்துடுவியா?''

சுவாமிகளின் அருள் அறிந்து புருஷோத்த மனுக்கு பிரம்மோபதேசம் செய்து, அவனை மடத்துக்கு அனுப்பிவைக்கத் தீர்மானிக்கிறார்கள் பெற்றோர். அம்மாவைப் பிரிய மனம் இல்லா தவனாக, அவளை இறுகக் கட்டிக்கொள்கிறான் புருஷோத்தமன்.

''நீ அங்கே போய் சமர்த்தா இருக்கணும்... பெரியவா சொல்படி நடக்கணும்...'' என்கிறாள் சுகுணா.

''நீ என்னோட இருக்கமாட்டியா அம்மா...'' என்று பிள்ளை ஏங்குகிறது.

''இல்லேடா... உன்னோடு சேர்ந்து வேதம் படிக்க, விளையாட, மடத்துல ஞானசாகரன் இருக்கான். அவன் உனக்குத் துணையா இருப்பான். அவனுக்கு நீ துணையா இருக்கணும்'' - சமாதானம் சொல்கிறார் தந்தை.

''கடைசிவரைக்கும் ஞானசாகரனும், நீயும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரியாம ஒத்துமையா இருக்கணும்...'' என்ற சுகுணா, மகனின் பிஞ்சுக் கரம் பிடித்து கணவனிடம் கொடுக்க, மடம் நோக்கி நடக்கிறார்கள் தந்தையும், தனயனும்.

'தவம் இருந்து உங்களுக்கு சத்புத்ரனா இவன் பிறந்தது, இப்படி ஒரு பாக்கியம் உங்களுக்குக் கிடைக்கத்தான்...’ - அசரீரி ஒலிக்கிறது.

நாட்கள் நகர்கின்றன. புருஷோத்தமன் வளர்கிறான். கூடவே, அவனுடைய அறிவும். மடத்தில் வேத, வேதாந்தங்கள் அவனுக்குக் கற்பிக்கப்படுகின்றன. கற்பூரமாக அவற்றைக் கிரகித்துக்கொள்கிறான் புருஷோத்தமன்.

''புருஷோத்தமா, குருகுலவாசத்துல நீ கத்துக்க வேண்டியதையெல்லாம் கத்துண்டுட்டேனு உன் குரு சொல்றார். ஆனா, நீ கத்துக்க வேண்டியது இன்னும் ஒண்ணு இருக்கு. பிரம்ம வித்தையை நீ கத்துக்கணும். அதைத் தனிப்பட்ட முறையில் நானே உனக்குக் கத்துக் கொடுக்கறேன்...'' - புருஷோத்தமனிடம் சுவாமிகள் சொல்ல, மடத்தில் அனைவருக் கும் ஆச்சரியம்!

சில நாட்களில், மடத்துச் சிப்பந்திகளுடன் காசி யாத்திரை சென்றுவிடுகிறார் சுவாமிகள்.

''காசிக்குப் போன பெரியவா இப்போதைக்கு வரமாட்டார். திரும்பிவர்றதுக்கு ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ ஆகலாம்...'' என்று சொல்லி, ஞானசாகரனையும் வற்புறுத்தி அழைத்துக்கொண்டு, காசிக்குக் கிளம்புகிறார் புருஷோத்தமன். சுவாமிகளிடமிருந்து பிரம்ம வித்தையை நேர்முகமாகக் கற்கவேண்டும் என்கிற ஆர்வம்.

''காசி யாத்திரை போற வழியிலே எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துட்டா, அந்த இடத் திலேயே என்னை சம்ஸ்காரம் பண்ணிட்டு, காசிக்குப் போய் கங்கைல மூழ்கி, உன் பிராணனை நீ தியாகம் பண்ணிடனும்...'' என்கிற நிபந்தனையுடன் புருஷோத்தமனுடன் புறப்படுகிறான் ஞானசாகரன். அப்படியே நடக்கிறது. போகும் வழியில் ஞானசாகரனின் உயிர் பிரிந்துவிடுகிறது.

கங்கைக் கரை. விஸ்வாதிகேந்திரர் அருகில் தலைகுனிந்து நிற்கும் புருஷோத்தமன்.

''அப்படியா! மித்ரனுக்குக் கொடுத்த சத்தியவாக்கைக் காப்பாத்தணும்ணு, ஆத்மஹத்தி செஞ்சுக்க முடிவு பண் ணிட்டியா? கொடுத்த வாக்கை நிறை வேத்தணும்தான். ஆனா, பகவான் கொடுத்த பிராணனை மாய்ச்சுக்க நமக்கு அதிகாரம் இல்லையே! சரி, பகவத் சங்கல்பம் எப்படியோ அப்படியே நடக்கட்டும். போய், கங்கைல மூழ்கு...''

புருஷோத்தமன் கங்கையில் மூழ்கும் சமயம், அசரீரியாக கங்காதேவி யின் குரல்... 'புருஷோத்தமா! ஞான சாகரன் உன்னிலும் உயர்ந்தவன். உன்னை சந்நியாச ஆச்ரம வாழ்க்கைக்கு அர்ப்பணிக்கணும்னு உன்னை வழிநடத்தி வந்தான். நீயோ பாக்கியமாகக் கிடைத்த மனுஷ ஜன்மாவை கங்கையாகிய என்னுள் அழித்துக் கொள்ளத் துணிந்துவிட்டாய். உன்னை மாய்த்துக் கொள்வதன் மூலம் என் புனிதத்தைக் களங்கப்படுத்தப் போகிறாயா?’

ஸ்ரீபகவன்நாம போதேந்திராள்

செய்வதறியாமல் சுவாமிகளிடம் ஓடோடி வருகிறான் புருஷோத்தமன்.

''புருஷோத்தமா! சத்தியவாக்கை நிறைவேத்த முடியலேனு சஞ்சலப்படாதே. உனது பூர்வாஸ்ரம வாழ்க்கையைத் துறந்து, சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்வது புனர்ஜன்மத்துக்குச் சமம். மித்ரன் ஒருவனுக்காக உயிரைத் தியாகம் செய்வதை விடவும், பலகோடி ஜீவன்களின் நலனுக்காக உன் பிராணனை தானம் செய். அதுதான் பிரம்மவித்தை. அதை உணர்ந்து, பிரம்மத்தோடு ஐக்கியமாகி வாழ்பவன் பிரம்ம ஞானியாகிறான்'' என்று உபதேசிக்கும் சுவாமிகள், அவனுக்கு காவி உடை அளித்து, அருள்பாலித்தார். அவனுக்கு தீட்சை அளித்து, தண்டம் கொடுத்தார்.

''புருஷோத்தமா! நீ பூர்ணத்துவம் அடைந்து விட்டாய். இன்று முதல் நீ போதேந்திர சரஸ்வதி என்று அழைக்கப்படுவாய். காஞ்சி காமகோடி பீடத்தில் அமரும் முன்பு, நீ பூரி சென்று பகவான் ஜகந்நாதரைத் தரிசிக்க வேண்டும். அந்த ஊரில் இருக்கும் லக்ஷ்மிகாந்தகவி என்பவரிடம் 'நாம கௌமதி’ என்ற நூல் உள்ளது. அதைப் படித்து, ராம நாமத்தின் மகிமையை நீ உலகுக்குப் பரப்ப வேண்டும்'' என்று ஆசி வழங்கினார்.

போதேந்திராள் பூரி சென்றடைந்தபோது, அங்கே லக்ஷ்மிகாந்தகவி உயிருடன் இல்லை. அன்னாரின் மகன் ஜகன்னாதன் வசமிருந்த 'நாம கௌமதி’ நூலைப் பெற்று, அகல் விளக்கு வெளிச்சத்தில் ஒரே இரவில் அதைப் படித்துத் தெளிகிறார் போதேந்திராள்.

அப்போது, மிலேச்சர்களால் அபகரித்துச் செல்லப்பட்டு, தாசியாக அமர்த்திக்கொள்ளப்பட்ட, தட்சிண தேசத்தைச் சார்ந்த பத்தினிப் பெண் ஒருத்தி, பரிகாரம் தேடி அவ்விடம் வந்தாள். ''நீ உத்தமின்னு உனக்குத் தெரியும். ஆனா, உலகம் நம்பணுமே? சீதாதேவிக்கே அக்னிப் பரீட்சை தேவைப்பட்டது. அது மாதிரி, நீ உத்தமிதான் என்பதை ஊரார் ஒப்புக்கவும், ராம நாம மகிமையை உலகுக்கு உணர்த்தவும் உனக்கு ஒரு ஜலப் பரீட்சை நடத்தப்போகிறேன்'' என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்தார் போதேந்திராள்.

''ராம நாமத்தை ஜபித்தபடியே ஜகன்னாத தீர்த்தத்தில் மூழ்கி ஸ்நானம் செய்! வெளியே வரும்போது, மிலேச்ச ஆடை மறைந்து, மஞ்சள் குங்குமத்துடன் இந்து சுமங்கலியாக வந்தால், நீ உத்தமி என்பதும், ராம நாமம் சத்யம் என்பதும் உலகுக்கு ஊர்ஜிதமாகிவிடும்!'' என்றார்.

அப்படியே நடக்க, அந்தப் பெண்மணி உத்தமி என ஊராரால் போற்றப்படுகிறாள்.

பின்னர், பூரியிலிருந்து காஞ்சிபுரம் சென்று, மடத்தில் சில காலம் தங்கி, நூல்கள் பல எழுதி, பின்னர் ராம நாமத்தைப் பரப்புவதையே தம் அவதார நோக்கமாகக் கொண்டு பயணம் புறப்படுகிறார் போதேந்திராள்.

பெரம்பூரில், அந்தணர் ஒருவரின் வீட்டில் மடாதிபதிக்கு பிக்ஷை. இலையில் அன்னம் பரிமாறப்படுகிறது. ம¬ணையில் உட்காரும் போதேந்திராள் கண்மூடி ராம நாமம் ஜபிக்கிறார். மற்றவர்களையும் ஜபிக்கச் சொல்கிறார்.

அந்த வீட்டுத் தம்பதியின் குழந்தை, பிறவி யிலேயே பேசும் திறன் அற்றவன். அவனால் ராம நாமம் ஜபிக்க இயலவில்லை. போதேந்திராளுக்கு அதிர்ச்சி! ''ராமா! உன் நாமத்தை இக் குழந்தையின் வாயால் நான் எப்படிச் சொல்லவைப்பேன்? குழந்தையின் நாவில் உன் நாமா வராதபோது எனக்கு பி¬க்ஷ அவசியம்தானா?'' என்றபடியே இலையைவிட்டு எழுந்துவிடுகிறார்.

அபவாதத்துக்கு ஆளாகிவிட்ட குற்ற உணர்ச்சி யில், குழந்தையின் பெற்றோர் பெரியவாளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அவர் பிக்ஷை செய்துகொண்டிருந்த இலையிலிருந்த பலகாரங்களை குழந்தை எடுத்துச் சாப்பிட்டுவிட, பெற்றோர்கள் அதை அடிக்கிறார்கள்.

''ஆமா... ஆமா...'' என்று குழந்தை அழ, அதுவே 'ராமா... ராமா...’ என்று வெளிப்பட, குழந்தை ராம நாமம் முழங்கிய திருப்தியில் போதேந்திராள் பிக்ஷையை ஏற்க... 'குழந்தை பேசிட்டான்’ என்று பரம சந்தோஷம் பெற்றவர்களுக்கு!

போதேந்திராளின் பயணம் தொடர்கிறது.

ஸ்ரீபகவன்நாம போதேந்திராள்

வழியில் ஆற்காடு நவாபிடமிருந்து அழைப்பு. ஆற்காடு முழுவதும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு, பலரும் பலியாகிக் கொண்டிருக்கும் பரிதாபத் தகவல் அறிந்து, அவர்களுக்கு ராம நாமத்தின் பலத்தை எடுத்துரைக்கிறார் போதேந்திராள். நவாபும் இணைந்து ராம நாமம் ஜபிக்கிறார். ஊரில் பரவியிருந்த கொடிய நோய் மறைகிறது. மக்கள் மகிழ்கிறார்கள்.

இப்படி, போகுமிடமெல்லாம் ராம நாமத்தின் மகிமையை, அதன் வீர்யத்தை உபதேசித்தபடியே கோவிந்தபுரம் வந்தடைகிறார் போதேந்திராள்.

அது புரட்டாசி மாதம். மகாளய பட்சம். யதி மகாளயம் என்று சொல்லப்படும் கிருஷ்ணபட்ச துவாதசி திதி.

ஊர்க் குழந்தைகள் மணலில் வீடு கட்டியும், பள்ளம் தோண்டியும் விளையாடிக் கொண்டிருக்கின்றன. ''தாத்தா, நீங்களும் எங்களுடன் விளையாட வாங்களேன்!'' என்று போதேந்திராளை அழைக்கின்றன.

விளையாட்டில் வித்தை காட்டத் தீர்மானிக்கிறார் அந்த மகான்.

''நீங்க எப்போதும் கால்களை மட்டும் மண்ணுக்குள்ளே புதைச்சு விளையாடுவீங்க இல்லையா? இன்னிக்கு நான் உட்கார்ந்துப்பேன். என் சரீரம் மூழ்கற வரைக்கும் என்னை மண்ணால மூடணும்...''

''நீ செத்துப் போயிடுவே தாத்தா...''

''மாட்டேன்!''

''தலைவரைக்கும் மூடிட்டா, மண்ணுக் குள்ளே உனக்கு பயமா இருக்காதா?''

''துணைக்கு என் ராமன் உடன் இருக்கானே...''

குழந்தைகள் மண் கொண்டு மூட, கோவிந்தபுரம் பூமியில் ஸ்ரீ பகவன்நாம போதேந்திராள் ஜீவ சமாதி அடைந்து, அந்தப் பகுதி புனிதமடைகிறது.

போதேந்திராளின் பூர்வாசிரம கதைக்கும், சந்நியாசி ஆசிரம வரலாறுக் கும் நாடக வடிவம் கொடுத்து மேடையேற்றி அசத்தியிருக்கிறார் பாம்பே ஞானம். வெள்ளி விழா காணும் இவருடைய 'மகாலட்சுமி பெண்கள் நாடகக் குழு’வின் நடிகைகள், ஒவ்வொரு பாத்திரத்துக்கும் உயிரூட்டி யிருக்கிறார்கள்.

தொடர்ந்து நான்கு நாட்கள், நாரத கான சபாவில் அரங்கம் அலை மோத... காட்சிக்குக் காட்சி கைத்தட்டல்களால் மேல் கூரை அதிர... இப்படி ஒரு நாடகம் பார்த்து ரொம்ப நாளாச்சு!

மேடையில் ஆண் வாசமே கிடையாது. குழந்தை வேடம் முதல் முதியவர் வரை அத்தனை பாத்திரங்களையும் பெண்களே ஏற்று பிரமிக்க வைக்கிறார்கள். மொத்தம் 36 பேர்!

ஆரம்பத்திலும், நடுநடுவே கொஞ்சமும் பாம்பே ஞானமும், இன்னொருவரும் மேடைக்கு வந்து கதையை விவரிப்பது, நாடகத்தை வேகமாக வளர்த்திச்செல்ல உதவுகிறது.

பச்சிளம் புருஷோத்தமனை மடத்துக்கு அனுப்பி வைக்க முடிவானதும், புருஷோத்தமன் அம்மாவின் இடுப்பை இறுகக் கட்டிக் கொண்டு விம்முவது உருக்கம். மடத்தில் ஞானசாகரன்- புருஷோத்தமனுக்கு இடையே நட்பு வளர் வதையும், காசிக்குப் போகும் வழியில் மித்ரன் உயிர் இழப்பதையும் நாடகம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

நாடகம் நெடுகிலும் ஒலிக்கும் வேத கோஷங்களும், பஜனைப் பாடல்களும் சூழலின் புனிதம் கூட்டுவதற்கு உதவுகின்றன. இசை அமைத்திருக்கும் ஆர்.கிரிதரன் நிறையவே மெனக்கிட்டிருக்கிறார்.

ஆறு மாத ஆராய்ச்சிக்குப் பின் உரு வாகியிருக்கும் இந்த நாடகத்தில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விஷயம்- மொத்த வசனங்களையும் முன்கூட்டியே பதிவுசெய்து வைத்துக்கொண்டு ஒலிக்கச் செய்திருப்பது. டப்பிங் கலைஞர்கள் இருபது பேர் குரல் கொடுத்திருக்கிறார்கள். நடித்திருக்கும் அத்தனை பேரும் இம்மி பிசகாமல் ஆடியோவில் ஒலிக்கும் வசனத்துக்கு ஏற்ப, அதே மாடுலேஷனில் உதட்டை அசைத்து நடித்திருப்பது சூப்பர்!

க்ளைமாக்ஸ் காட்சியில், ராம நாமத்தை ஜபித்துக்கொண்டே குழந்தைகள் கோலாட்ட நடனம் ஆடும்போது, மெதுவாக திரை விலக, போதேந்திராளின் அதிஷ்டானத்துக்கு மங்கள ஆர்த்தி காட்டுவது நல்ல முத்தாய்ப்பு!

சென்னையில் நாடகத்தை மேடை ஏற்றும்முன் ஜெயேந்திரரின் ஆசியைப் பெற காஞ்சிபுரம் சென்றாராம் பாம்பே ஞானம்.

''பேஷா நடத்துங்கோ! காஞ்சியிலும் இந்த நாடகம் நடத்த ஏற்பாடு பண்றோம்...'' என்று வாழ்த்திய ஜெயேந்திரர், ஞானத்திடம் சொன்ன இன்னொரு விஷயம்...

''மகா பெரியவா முதன்முதலா என்னை மடத்துக்கு வந்துவிடும்படி அழைத்தது, கோவிந்தபுரத்தில் போதேந்திராளின் அதிஷ்டானத்தில்தான்!''

படங்கள்: 'க்ளிக்’ ரவி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு