மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

வாழ்வை பூரணமாக்குவது அறிவியலா? ஆன்மிகமா? சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

டலை இயக்கும் சக்தி ஆன்மா. அது, புலப்படும் பொருள் அல்ல; உணரும் பொருள். உலகை இயக்கும் சக்தியான பரமாத்மாவின், அதாவது பேரறிவின் அம்சம் அது. ஒளி வடிவில் தென்படும் பரமாத்ம சக்தியே, பிரபஞ்சத்தின் அத்தனைப் பொருள்களிலும் ஊடுருவி இயங்கவைப்பதுடன், அதனதன் தனித் தகுதியை நிறைவு செய்கிறது.

வேதத்தின் வடிவம் ஒலி. அதன் உட்கருத்து ஒளி. அதன் செயல்பாடு அறம். ஒலியும், ஒளியும், அறமும் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கின்றன. மூன்றும் இணைந்தது வேதம். ஒட்டு தல் விடுபடாமல் இருக்க, ஒளி பொறுப் பேற்கிறது. உடலியக்கம் தடைப்படாமல் இருக்க ஆன்மா பொறுப்பேற்கும். உலக ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கும், உடல் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கும் அவற்றை இயக்கும் பொருளைப் பற்றிய ஆராய்ச்சியில் சிந்தனை தொடவில்லை என்றால், அது அரைவேக்காடாகவே நின்றுவிடும்.

கேள்வி - பதில்

? எனில், உலகுக்குத் தேவையான விஷயங்கள் குறித்த ஆய்வுகள் எல்லாம் பூரணத்துவம் ஆகாதவை என்று சொல்ல வருகிறீர்களா?

உண்மையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட சிந்தனையானது, ஆன்மாவை எட்டியதும் முற்றுப்பெற்றுவிடும். அதற்கு மேல் சிந்தனைக்குத் தகவல் இல்லை என் கிறது வேதம் (பிரமைவவாச: பரமம் வ்யோம). படித்துப் பட்டம் பெற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு, புதுப் புது கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து பெருமை பெறுவதை வாழ்வின் குறிக்கோளாகவும் சிந்தனையின் எல்லையாகவும் வரையறுக்கும் புதிய அறிஞர்கள் இன்றைக்கு நிறைய இருக்கிறார்கள்.

அப்படித் தேடலில் ஈடுபடுபவர்களில், நடுவழியில் சந்தித்த அதிசயத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அதுதான் சிந்தனையின் எல்லை என்று கருதி, பாதி வழியிலேயே சிந்தனையை முடித்துக் கொள்ளும் தரிசனங்களும் உண்டு. ஸனாதனத் தகவல்களை, நாளேடுகளில் தென்படும் தகவல்களைப்போல் எண்ணிப் புறக்கணிப்பவர்களும் ஏராளம். ஆன்மிகத் தகவல்கள் லோகாயத வாழ்க்கைக்குப் பயன்படுமா என்ற ஆராய்ச்சியில், அதன் தரத்தை அறிந்துகொள்ள முற்படாத ஆராய்ச்சியாளர்களும் இருக்கிறார்கள்.

நெய் வேண்டும் என்று முயற்சியில் ஈடுபட்டு, தயிரைக் கடைந்ததும் கிடைத்த வெண்ணெய், மோர் ஆகியவற்றைக் கண்டு அவற்றின் சுவையில் திருப்திப்பட்டு, இதற்குமேல் ஒன்றும் இல்லை என்று எண்ணி, தனது முயற்சியைக் கைவிட்டால் எப்படி?! இதுபோன்றவர்களை சிந்தனை யாளர் வரிசையில் எப்படி இடம்பெறச் செய்ய முடியும்? எள்ளை ஆட்டி எண்ணெய் வியாபாரத்தில் முனைந்திருப்பவன், புண்ணாக்கைப் பார்த்ததும் புண்ணாக்கு வியாபாரத்தை கையிலெடுப்பது போன்று, குறிக்கோளை மாற்றிக்கொள்பவர்களும் உண்டே!

கேள்வி - பதில்

? சரி! முழுமைபெற்ற ஆராய்ச்சி என்று எதை ஒப்புக்கொள்வீர்கள்?

ஸனாதன தகவல்களிலிருந்து உருப்பெற்ற அத்தனை தரிசனங்களும் சாஸ்திரங்களும் ஆன்மாவைப் பற்றிய ஆராய்ச்சியில் நிறைவு பெறும். தலையும் முண்டமும் தனித்தனியாக இயங்க இயலாது. அறிவுப் புலன்கள், செயல்பாட்டின் நிறைவை எட்டுவதற்குத் தேவைப்படும். செயல் புலன்களோ, அறிவுப் புலன்களை ஆக்கபூர்வமான செயல் களில் உந்துதலோடு ஈடுபடுத்தி, தகுதியை நிறைவு செய்யத் தேவைபடும். ஒன்றுக்கொன்று இணைந்து, இரண்டும் நிறைவை எட்டும். ஆக, ஆன்மிகத்தை ஒதுக்கி லோகாயதத்தை மட்டும் ஏற்பவன் முழுமை பெறமாட்டான். பிறப்பின் முழுமையைப் பெற ஆன்மிகம் தேவை. அதை ஒதுக்கிய தரிசனங்கள் எல்லாம் கண்களில் இருந்து மறைந்துவிட்டன.

கடவுளை ஏற்காதவர்களும் ஆன்மா இல்லை என்று சொல்லமாட்டார்கள். கண்ணுக்குத் தென்படும் உடலே ஆன்மா என்று சொல்லி, தேடலில் மனமில்லாமல் உடல் குறித்த தகவலோடு சிந்தனையை முடித்துக்கொள்வார்கள். ஆன்மா வெளியேறிய பிறகும், பூத உடலை ஆன்மாவாக எண்ணி உபசாரத்தில் ஈடுபடுவார்கள். அவர்கள், இல்லாததை இருப்பதாகப் பார்க்கும் அறியாமையில் இருந்து வெளிவராதவர்கள்.

? இதற்கெல்லாம் தீர்வாக நீங்கள் சொல்ல வருவது..?

இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாததாகவும் பார்க்கும் அறியாமையை அகற்றும் மருந்து, ஆன்மிகம். இன்றைய சமுதாய சூழல் அந்த அறியாமையை வளர்க்க உதவுகிறது. மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்பட்டு, இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டும் வகையில் நிறைய ஆன்மிக இதழ்கள் வெளிவர வேண்டும். ஆன் மிகத்தின் தத்துவங்களைக் கொச்சைப்படுத்தி, மக்களின் அறியாமையில் விளைந்த சிந்தனைக்கு தகுந்த உதாரணங்களைக் காட்டி, அவர்களை நிரந்தரமான அறியாமையில் ஆழ்த்துவது தவறு.

சிறுகச் சிறுக சிந்தனை வளத்தைப் பெருக வைத்து, அதன் தத்துவத்தை உள்வாங்கும் தகுதியை அவர்களுக்கு ஊட்டவேண்டும்.அதை விடுத்து, மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஆன்மிகம் உருமாறினால், அறியாமை நம்மிலும் இணைந்துவிடும்; ஆன்மிகம் மறந்துவிடும் சீடனுக்கு அறிவுபுகட்ட முற்பட்டார் குரு; ஆனால், கடைசியில் சீடனிடம் இருந்து அறிவு பெற்றுத் திரும்பினார் என்றொரு கதை உண்டு. தவறான முறையில் ஆன்மிகத்தைப் புகட்ட எண்ணி நாமும் அறியாமையை தழுவக்கூடாது. எது எப்படியோ? லோகாயத வாழ்வில் துயரத்தில் ஆழ்ந்த மக்களை விடுவிக்க, இன்றைய சூழலில் ஆன்மிக அறிவு ஒன்றுதான் மருந்து.

ல்லை! தங்கள் நிலைப்பாடு செயல்வடிவம் பெறாது.

சிந்தனை வளம் பெற்றவர்கள், பெறாதவர்கள் என்கிற பாகுபாடு இருக்கவே செய்யும். எல்லோரையும் சிந்தனை வளம் பெற்றவர்களாக மாற்ற இயலாது. சட்டியில் இருந்தால்தான் அகப்பைக்கு அகப்படும். இல்லாதபோது, அகப்பைக்கு வேலை இல்லையே!

? அப்படியெனில், அறியாமையில் இருப்பவர்களை கைதூக்கிவிட வேண்டாமா? அவர்களின் தகுதியை உயர்த்த முயற்சிக்கவேண்டாமா? அவர்களை அப்படியே விட்டுவிடச் சொல்கிறீர்களா?

இல்லை! நீங்கள் ஒருவிஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். முன்னேறியவனுக்கு 100 மதிப்பெண் வேண்டும் என்றால், பின்தங்கியவனுக்கு 35 மதிப்பெண் போதுமானது. அவனையும் முன்னேறியவனாக இணைத்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறோம். பின்தங்கிய ஒருவனை சித்தனை வளம் பெற்றவனாக மாற்ற இயலாத நிலையில், அவனையும் அரவணைத்துக்கொள்ள, அவனது தகுதிக்கு உகந்த வகையில் செயல்பட வைத்து, முன்னேறிய சமுதாயத்தின் பலன்களை அவனும் சுவைக்க இடமளித்து மகிழ்கிறோம்.

திறம்பட ஆட்சிபுரிந்த அரசனின் மகன், அனுபவம் இல்லாதவன் எனினும், மன்னன் மறைந்ததும் அவனை அரியாசனத்தில் அமர்த்துவார்கள். தேர்தலில் வெற்றி பெற்றவன் பதவியில் அமர்கிறான். துரதிர்ஷ்டவசமாக அவனது ஆயுள் முடிந்தது எனில், அவன் மகன் தேர்தலில் நின்று வெற்றிபெற்று பதவியில் உட்காரும் வாய்ப்பு உண்டு. இங்கெல்லாம் தகுதியைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. நாட்டுக்காக உயிர் துறந்த தியாகியின் வாரிசுக்கு பதவி அளித்து கௌரவிப்பார்கள். அங்கும் தகுதி ஆராயப்படுவது இல்லை. பிறந்த மனிதர்கள் அத்தனைபேரும் நாட்டை ஆளலாம். தகுதி பார்க்கப்படுவது இல்லை. இந்த விஷயங்களில் எல்லாம், நமது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள தகுதி தடையாக இருக்கக்கூடாது என்று எண்ணுகிறோம். சிங்கத்துக்கு இருக்கும் தகுதி  மற்ற விலங்குகளுக்கு இருக்காது. இரையை எதிர்த்துப் போராடி உணவாக்கும் தெம்பு இருக்காது. எனினும், சிங்கம் உண்டு முடித்ததும், மீதமுள்ள மாமிச உணவைப் பெற்று வாழும். ஆக, அந்த விலங்குகளின் தகுதியின்மை அவற்றின் வாழ்வைத் தடுக்கவில்லை. பகிர்ந்தளிக்கும் பாங்கு இருந்தால், தகுதி இல்லாதவனின் விருப்பமும் ஈடேறும்.

ஒருவன் ஆன்மிகம் தொடாத லோகாயதத்தி லேயே நிம்மதி பெறுகிறான். அவன் அறியாமையில் அல்லல்படுகிறான் என்பதெல்லாம் மற்றவர்கள் பார்வை! ஆனால், அவனோ அறியாமையை அறிவியலாகப் பார்க்கிறான். அவனது மனம் நெருடலைச் சந்திக்கவில்லை. அவனைப் பொறுத்தவரையிலும் பகுத்தறிவுதான் ஆன்மிகம்.

கேள்வி - பதில்

லட்டு தித்திப்பை சுவைத்து மகிழ்ந்தவனுக்கு, அவன் சுவைக்காத ஜிலேபியின் இனிப்பு அலாதியானது என்ற வாதத்தில்  மயக்கம் ஏற்படாது. மற்றொரு இனிப்பின் சுவையை அனுபவிக்காதவனுக்கு முழு இனிப்பை எட்டமுடியவில்லையே என்ற ஏக்கம் இருக்காது.

லோகாயதத்தில் அவனது மனம் நிறைவு பெற்றிருக்கும். ஏட்டிலும் உரையிலும் தென்படும் ஆன்மிக விளக்கங்கள் அவனை ஈர்க்காது. அவனைக் குறையோடு பார்ப்பவர்களிடம்தான் குறை இருக்கும். அவனைப் பொறுத்தவரையிலும் அவன் நிறைவை எட்டியவன். சுருங்கிய சிந்தனை வட்டத்திலேயே அவன் மகிழ்ந்துவிடுவான். 'சிந்தனை வளம் பெருகினால், துயரம் தொடாத இன்பத்தை எட்டலாம்’ என்று விளக்கினாலும், அதைப் புரிந்துகொள்ள இயலாத நிலையில், சிந்தனை வளத்தை எட்டாமல் போன குறையானது அவன் மனத்தில் இருக்காது.

புலன்கள் கண்டு மகிழும் விசித்திரமான உலக சுகங்களைச் சுவைத்து மகிழ்ந்து அனுபவத் துக்கு வந்த பிறகு, கண்ணுக்குப் புலப்படாத, அனுபவத்தில் வராத ஆன்மிக ஆனந்தம் இருப்பதை அவனுடைய மனம் ஏற்காது. சிறு வயது, உயிரற்ற பொம்மை விளையாட்டில் மகிழும். இளமை, இளம் மனைவியோடு இணைந்து இன்பத்தைச் சுவைக்கும். முதுமையானது இரண்டையும் துறந்து, பற்றற்று தனிமையில் இன்பம் பெறுகிறது. இப்படி, இயற்கை தந்த பாடமே வாழ்க்கையின் முதுமையை எட்ட வைக்கும்போது, ஆன்மிகம் எனும் ஊன்றுகோல் தேவைப்படாமல் போகிறது.

? இயற்கையே பாடம் கற்பிக்கும்போது, ஆன்மிக போதனைகளும் வழிகாட்டலும் எதற்கு?

எல்லாம் தெரிந்தவன் அறிஞர் என்ற அடைமொழி ஆன்மிக அறிவைப் பெற்றவனுக்குத் தான் பொருந்தும். நாம், நடைமுறையில் பலபேருக்கு இந்த அடைமொழியை அளிக்கி றோம் என்றால், அதற்குக் காரணம்- எதையும் மிகைப்படுத்தி கூறுவதுதான் நமது இயல்பு. 'நான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும்’ என்பான் ஆன்மிகவாதி. தாம் பெறாத இன்பத்தை இந்த வையகம் பெறக்கூடாது என்று நினைப்பவன் அறிவியல்வாதி.

உலகத்தைச் சுற்றி வலம் வராமலேயே தாய்- தந்தையை வலம் வந்து மாம்பழத்தைப் பெற்றார் கணபதி என்று கதை உண்டு. சிந்தனையில் நுழையாமலேயே கண்ணுக்குப் புலப்படும் உடலை ஆன்மாவாகச் சுட்டிக்காட்டுபவன், சார்வாகன். கிடைத்த 6-வது அறிவைச் செயல் படுத்த சுணக்கமுற்று, தாழ்வு மனப்பான்மையில், தேகத்தை ஆன்மாவாகச் சுட்டிக்காட்டி, தன்னை உயர்த்திக்கொள்பவன் அவன். சொல்வளத்தால் ஒன்றை மற்றொன்றாகப் பார்க்கவைப்பவன்.

அறியாமை என்பது உடலுறுப்புகளில் ஒன்றல்ல; நமது கர்ம வினையே அறியாமை வடிவில் நம்மில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.  அதை வெட்டிவிட இயலும். 6-வது அறிவின் விழிப்பு உணர்வானது, அறியாமைத் திரையை அகற்றிவிடும். ஆன்மிக ஆனந்தம் பளிச்சிடும். கல்வியின் துணையுடன் 6-வது அறிவு ஆலமரமாக வளர்ந்தோங்கினால், உண்மையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு, ஆன்மிகவாதியாக மாறி ஆனந்தநிலையை ஆண்டு களிப்பான்.

அறியாமையில் ஏற்பட்ட தகுதியின்மையை அவனது இயல்பாகச் சுட்டிக்காட்டி, முதலுதவி அளித்து, சீர்திருத்தவாதியாகக் காட்டிக் கொள்ளும் அவலம் தென்படுவது, நமது துரதிர்ஷ்டம். உபபோக சாதனங்களை கொட்டிக் கொடுத்து, அவனைக் கையாலாகாதவனாகச் சித்திரிப்பதைவிடவும், அறியாமையை அகற்றும் அருமருந்தான ஆன்மிகத்தை அளித்து, தன் காலில் நிற்கும் தகுதியை அவனுக்கு அளிப்பது மேல்! அப்படியில்லாமல், அவனைத் திருப்திப்படுத்த செய்யும் உதவியானது, சுயநலக் கண்ணோட்டத்தில் இருக்குமே தவிர, அறத்தின் பின்னணியில் இருக்காது.

? வேறு எந்தெந்த வகையில் ஆன்மிகம், நமது இலக்கை அடைவதற்கு உதவுகிறது?

சீர்திருத்தவாதிகளின் வழிகாட்டுதலை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். 6-வது அறிவுக்கு அதுவே வேலை. அதை முடக்கிவைக்கும் வழி காட்டல்களை அடையாளம் கண்டு, அறவே அகற்றவேண்டும். இதை நடைமுறைப்படுத்த சுயசிந்தனையே உதவும்; கடன் வாங்கும் சிந்தனை உதவாது. சட்டங்கள் அறியாமையை அகற்றாது. இதய பரிவர்த்தனம் ஏற்பட வேண்டும். அதை ஆன்மிகம் அளிக்கும்.

ரோபோவின் பணிவிடைகளில் பெருமை கொண்டாடும் இன்றைய சிந்தனை, ஆன்மிக வாடை அற்றது. உடல் இயக்குநரான ஆன்மாவை அகற்றிவிட்டு, அறியாமையை அரியாசனத்தில் அமர்த்தினால், வாழ்க்கை சின்னா பின்னமாகிவிடும். நாம் சந்திக்கும் அத்தனை இடர்ப்பாடுகளுக்கும், நாம் சேமித்த கர்ம வினையின் தூதுவனான அறியாமையே காரணம்.  

லோகாயத சுகங்கள் போலியானவை. அறியாமை அதை உண்மை என்று நம்பவைக்கிறது. உண்மை தெரிந்த பிறகே போலியின் உருவம் புலப்படும். அதுவரை, போலியை உண்மையாகப் பார்ப்போம். போலியான விஷயங்களில் திருப்திப்பட்டு மகிழ்வது, மனிதர்களைப் பொறுத்தவரையிலும் ஈன வாழ்க்கை ஆகும்.

வேதம், சாஸ்திரம், புராணங்கள், ஸம்பிர தாயங்கள் ஆகிய அத்தனையும் அறியா மையை அகற்றும் அரும்பெரும் தொண்டினை செய்துகொண்டிருக்கின்றன. ஆகவே, தேவை யான ஆற்றல் இருந்தும், முயற்சியில் இறங்காமல் லோகாயத வாதத்தை நம்பி அறியாமையைத் தக்கவைத்துக் கொள்வது பரிதாபம். ஆடு கசாப்புக் கடைக்காரனை நம்பும்; பாதுகாவலனை நம்பாது. எதை நம்ப வேண்டும், யாரை நம்ப வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளவே ஆறாவது அறிவை அளித்திருக்கிறார் ஈசன்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

லோகாயத வாழ்க்கையைச் சுவைப்பதே நமது படைப்பின் குறிக்கோள் என்பது உண்மை அல்ல. ஆன்மாவின் இணைப்பில் மனம் செயல்பட வேண்டும். அந்த ஆன்ம அறிவு சூன்யமானால் உண்மையான இன்பத்தின் சுவை கானல் நீராகிவிடும். மனம்தான் இன்ப- துன்பத்தை உணர்கிறது; உடல் அல்ல. உடல் குறித்த அறிவும், அதன் போஷாக்கும் இன்ப-துன்பத்தை வரையறுக்காது. உபபோக சாதனங்களின் நுண்ணிய அறிவு இன்பத்துக்குக் காரணம் அல்ல. ஆன்மிகம் தொடாத இன்பம் போலியாகும். உண்மை வேண்டும். போலி வேண்டாம்!

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.