Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள் - 26

ஆலயம் ஆயிரம்முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

சேதி சொல்லும் சிற்பங்கள் - 26

ஆலயம் ஆயிரம்முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Published:Updated:

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்

கோடு என்ற சொல்லுக்கு மலை என்றும், மலையுச்சி என்றும் அர்த்தம் சொல்வார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு திருத்தலம், அழகிய மலையின்மீது அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.

சேதி சொல்லும் சிற்பங்கள் - 26

நாமக்கல்லில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவிலும் ஈரோட்டில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருச்செங்கோடு.

செங்கோடு அதாவது செங்குன்றமாக, செம்மலையாகத் திகழ்கிறது திருச்செங்கோடு. செவ்வண்ணக் கல்லால் அமைந்த இந்தச் செங்கோட்டு மலையை, புலரும் காலைப் பொழுதிலும், அந்திச் செவ்வான வேளையான பிரதோஷ காலத்திலும் தரிசித்தால், செங்கோடு என்பதன் பொருளை அறியலாம்.

செங்கோட்டின் பெரிய மலைமுகட்டுக்கு நாகமலை என்றும், சிறிய முகட்டுக்கு நந்திமலை என்றும் பெயர். இந்த மலையை நாகாசலம், நாகமலை, நாககிரி, உரககிரி என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

மலையின்மீது ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் ஒருபுறமும், ஸ்ரீபாண்டீஸ்வரர் கோயில் இன்னொரு புறமும் உள்ளது. அடிவாரத்தில் செங்குன்றூரின் நடுவே ஸ்ரீகயிலாசநாதர் கோயில் உள்ளது. ஆக, இங்கே வந்தால் மூன்று சிவாலயங்களை ஒரு சேர தரிசிக்கலாம்.

திருப்பைஞ்ஞீலி, திருஈங்கோய்மலை முதலான தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி வழிபட்ட ஞானசம்பந்தர், வழியெங்கும் பல தலங்களை தரிசித்து வழிபட்டபடியே, திருச்செங்குன்றூர் எனும் திருச்செங்கோட்டுக்கு வருகிறார். இறைவனைக் கண்ணாரத் தரிசித்து பதிகம் பாடியவர், அடுத்து திருநணா என்கிற பவானிக்குச் சென்றுவிட்டு, மலையின் மீதும் இறைவனின் மீதும் கொண்ட ஈர்ப்பால், மீண்டும் திருச்செங்கோடு வந்து தங்கினாராம். அத்தனை அழகும் கம்பீரமும் வாய்ந்தது இந்த மலை.

சேதி சொல்லும் சிற்பங்கள் - 26

மலையடிவாரத்தில் இருந்து செல்ல, அதாவது நகரின் நடுப்பகுதியில் இருந்து படிக்கட்டுகள் உள்ளன. அதேபோல், ஊருக்குக் கிழக்கே உள்ள சாலையில் இருந்து மலையுச்சிக்கு வாகனங்களில் செல்வதற்குச் சாலை வசதியும் உள்ளது. படிகளின் வழியே செல்லும்போது பெரிய மலை(நாகமலை)க்கும் சிறிய மலைக்கும் (நந்திமலை) இடையே அமைந்துள்ள நாகர்பள்ளம் எனும் இடத்தைக் காணலாம். இங்கே, ஆதிசேஷன் ஐந்து தலைகளையும் விரித்துப் படமெடுத்த நிலையில் லிங்கத் திருமேனியைச் சுமந்துகொண்டிருக்கும் சுமார் 60 அடி நீளச் சிற்பக் காட்சியைக் கண்டு பிரமித்துப் போவீர்கள். இந்த நாகத்தின்மீது குங்குமம் தூவி வழிபடு கின்றனர். நாக தோஷம் உள்ளவர்கள், சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.  

சேதி சொல்லும் சிற்பங்கள் - 26

அடுத்துத் திகழும் அறுபதாம் படியில் பிணக்குகள், வழக்குகள் உள்ளோர் சத்தியம் செய்து, தங்கள் பகையை முடிப்பதும் இங்கே வழக்கம்!  

வடக்கு வாயிலில் அமைந்துள்ளது, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரின் பிரதான கோபுரம். கோயிலின் உள்ளே திகழும் சுற்று மண்டபங்கள் அனைத்தும் கலைநயம் மிகுந்த அற்புதப் படைப்பு களாகக் காட்சி தருகின்றன. குதிரை மீது அமர்ந்திருக்கிற போர் வீரர்களின் சிற்பங்கள் மண்டபத் தூண்களில் கம்பீரத்துடன் நிற்கின்றன. குதிரைகளின் உடலழகும், வாளேந்திய வீரர்களின் ஆவேசம் கூடிய மிடுக்கும், இடையிடையே அமைந்த தெய்வத் திருவுருவங்களும், விலங்குகளும் பறவைகளும் என சிற்பங்கள் பிரமிக்க வைக்கின்றன.

சேதி சொல்லும் சிற்பங்கள் - 26

முருகக் கடவுள் வலது கையில் வேலாயுதத் தின் தண்டத்தையும், இடது கரத்தில் சேவலையும் தாங்கியபடி செங்கோட்டு வேலவனாகக் காட்சி தரும் அழகனைக் காண்பது அரிது! இந்தச் சிற்ப அமைப்பும், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரின் திருவடிவமும் சிற்பக் கலைஞர்களின் திறனுக்குச் சான்றாகும்.

சேதி சொல்லும் சிற்பங்கள் - 26

அதையடுத்து பின்புறம் நுழைவாயில் ஒன்று உள்ளது. இங்கே, மேற்கு நோக்கிய நிலையில் சந்நிதி கொண்டிருக்கிற ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை தரிசிக்கலாம். நின்ற திருக்கோலத்தில், மேலே உயர்த்திய வலது கரத்தில் தண்டாயுதத்தை ஏந்தியபடி, இடது கையை இடுப்பில் வைத்துக்கொண்டு, உமையொருபாகனாக, சிவனார் காட்சி தரும் அழகே அழகு!

மகர குண்டலம் வலது செவியில் திகழ, பத்ர குண்டலமான ரத்தின தோடு, இடது செவியை அலங்கரிக்கிறது. உடலின் ஒரு பாகம் ஆணுக்கு உரிய ஆடை அலங்காரத்தோடும், இன்னொரு பாகம் பெண்ணுக்கு உரிய நளினத்தோடும் அமைந்துள்ளது. முருகக் கடவுளின் திருவுருவமும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரின் திருவுருவமும் வெள்ளைப் பாஷாணத்தால் செய்யப்பட்ட சிற்ப வடிவங்கள் என்பார்கள்.

வெளித் திருச்சுற்றில் ஆதிகேசவப் பெருமாள் கோயில், கலை நயம் மிகுந்த சிற்பங்களுடன் காணப்படுகிறது. ஸ்ரீதேவி- பூதேவியுடன் ஆழியும் சங்கும் தரித்தவராக ஸ்ரீஆதிகேசவனின் திருமேனி நின்ற திருக்கோலம், கொள்ளை அழகு! வெளிப்பிராகாரத்தில், ஸ்ரீநாகேஸ்வரர் எனும் லிங்க மூர்த்தி தனிக்கோயிலில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் புறச் சுவர்கள் முழுவதும் கலை நயம் மிகுந்த சிற்பங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளன.

மலைமீது அமைந்துள்ள ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் ஆலயம், கலைப் பெட்டகமாகவே திகழ்கிறது.

- அடுத்த இதழில் நிறைவுறும்