Published:Updated:

விதைக்குள் விருட்சம் - 10

விவேகம் எனும் மகா சக்தி!சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமிஓவியங்கள்: அரஸ்

விதைக்குள் விருட்சம் - 10

விவேகம் எனும் மகா சக்தி!சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமிஓவியங்கள்: அரஸ்

Published:Updated:

ஸ்ரீஆதிசங்கரர் அருளிய விவேக சூடாமணி எனும் நூலில், மனிதனுக்குள் இருக்கும் விவேகம் பற்றியும், அந்த அற்புத சக்தியைக் கொண்டு என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பது பற்றியும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

விதைக்குள் விருட்சம் - 10

உயிருள்ள எல்லா ஜீவன்களிடமும் மட்டுமல்ல, உயிரற்ற பொருள் களிலும் விவேகம் எனும் அற்புத சக்தி அடங்கியுள்ளது. ஒரு கல்லை எடுத்துக் கொள்வோம். அது ஒரு ஜடப்பொருள்தான். அது பல சக்திகளை உருவாக்கவல்லது. ஆனால் அந்த உண்மை, அந்தக் கல்லுக்குத் தெரியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாவரங்கள் கல் போன்ற ஜடப்பொருளைவிட, சற்று உயர்ந்த நிலையில் உள்ளன. அது தன்னைச் சுற்றியுள்ள பஞ்சபூத சக்திகளைப் புரிந்துகொண்டு, பூமியில் வேரூன்றி நின்று, வளர்ந்து பூ, பழம் எனப் பல நன்மைகளை உலகுக்குத்  தருகின்றன. தாவரங்களுக்கும் உணர்வுகள் உண்டு. தொட்டாற்சிணுங்கி என்ற தாவரத்தின் இலைகளைத் தொட்டால், அவை தன்னைச் சுருக்கிக்கொள்ளும்.

வண்ணங்களும் நறுமணமும்தான் மலர்களின் சக்தி. அதைக் கொண்டே வண்டுகளையும் வண்ணத்துப் பூச்சிகளையும் ஈர்த்து, அதன் மூலம் மகரந்தச் சேர்க்கையை உருவாக்கி, காயாகி, பழமாகி பயன் தருகின்றன.

புழு, பூச்சி, பறவை, விலங்கினங்களுக்கும்கூட விவேகம் என்னும் அற்புதமான சக்தி இருக்கிறது. ஒவ்வொரு மிருகமும் தனக்கான இரையைத் தேடும்போதும், தன்னைக் காத்துக்கொள்ளவும் இந்த அற்புத சக்தியைப் பயன்படுத்துகிறது. 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ என்று ஒரு பழமொழி உண்டு. இது புலியின் விவேகத்துக்கும் வைராக்கியத்துக்குமான எடுத்துக்காட்டு.

காட்டில் திரியும் யானை ஒரு சாக பட்சிணி. அதாவது, தாவர உணவை மட்டுமே சாப்பிடும். காட்டில் புலி, சிங்கம் போன்ற மிருகங்களால் கொல்லப்பட்டுக் கிடக்கும் விலங்குகளின் மாமிசத்தை அவை எந்த நிலையிலும் உணவாகக் கொள்வதில்லை. இது, யானையின் விவேகம். மிருகங்களுக்கும் அறிவு உண்டு; விவேகம் உண்டு. ஆனால், இந்தச் சக்தி தனக்கு இருக்கிறது என்பது அவற்றுக்குத் தெரியாது. அதனால்தான் அவற்றை ஐந்தறிவு உள்ளவை என்கிறோம்.

ஆனால், மனிதனோ தன்னிடம் அறிவும் விவேகமும் இருப்பதை அறிவான். அந்த அறிவு இட்டுச்செல்கிற வழியில், விவேகம் காட்டுகிற பாதையில் அவன் எளிதாகப் பயணிக்கிறான். இந்தச் சக்தியே ஆறாவது அறிவு!

விதைக்குள் விருட்சம் - 10

மூவகை மனிதர்கள்

ஆறறிவு படைத்த மனிதரில், மிருக மனிதன், மனித மனிதன், தெய்வ மனிதன் என மூன்று பிரிவுகள் உண்டு. ஆசைகளுக்கும் உணர்ச்சி களுக்கும் மட்டுமே அடிமையாகி தன்னிச்சையாக, தனக்காக மட்டுமே வாழ்பவன் மனித மிருகம். ஒரு மானை வேட்டையாடி, அதன் உடலைக் கிழித்து, அதன் மாமிசத்தைச் சுவைத்து உண்ணும்போது, அந்த ஜீவன் எத்தகைய துன்பத்தை அனுபவிக்கிறது என்பதைச் சிங்கமோ, புலியோ உணருவதே இல்லை. அவற்றுக்குத் தன் பசி ஒன்றே பிரதானம். அதுபோல், தன் இச்சைகளைப் பூர்த்தி செய்ய, பிற மனிதர்களை வேட்டையாடி அவர்களின் கஷ்ட நஷ்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்கிறவன், மிருக மனிதன் வகையைச் சேர்கிறான்.

இத்தகைய மிருக குணம் இல்லாமல், தார்மிகச் சிந்தனையுடன், பிறருக்குத் தீங்கு விளைவிக்காமல் தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்பவன் மனித மனிதன். இப்படியாக வாழ்பவனுக்குத் தன்னம்பிக்கை, நியாய உணர்வு, தர்மத்தைக் கடைப்பிடிக்கும் வைராக்கியம், துணிவு, தியாக உணர்வு, இரக்க குணம் போன்ற நல்ல பண்புகள் இருக்கும். அவனுடைய வெற்றிக்கும், உயர்வுக்கும் இந்தச் சக்திகள் பெரிதும் துணை செய்கின்றன. அவனுக்கும் பிரச்னைகள் வரும். ஆனால், அவன் மனம் தளராமல் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளைத் தேடி அடைவான்.  

இதனினும் உயர்ந்த நிலையில் உள்ளவரை தெய்வ மனிதன் என்பார்கள். தர்ம நியாயங்களை முழுவதுமாக வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் ஆகிய ஆறு துர்குணங்களை அறவே விடுக்க வேண்டும். 'எவரிடமும் வெறுப்பில்லாமல், எல்லா ஜீவன்களையும் நேசித்து, அவற்றிடம் கருணைகாட்டி, சுக துக்கங்களைச் சமமாகக் கருதி, மன்னிக்கும் மனப்பான்மையுடன், மனநிறைவுடன், தன்னடக்கத்துடன் வாழ்பவனே மனிதர்களில் உயர்ந்தவன். அவனே தெய்விக மனிதன்'' என்று கீதையில் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

இந்த தெய்விக குணத்தைப் பெறுவதே, மகத்தான மானிட சக்தியின் கொள்கையாகவும் இலக்காகவும் இருக்கவேண்டும்.  வாழ்க்கையில் எந்த பிரச்னை வந்தாலும், அவற்றைச் சமாளித்து ஒரு நல்ல தீர்வு காணத் துணை செய்பவை ஒரு மனிதனின் தெய்விகப் பண்புகள்தான். அதுவே, அவனின் அமானுஷ்ய சக்தியாக வெளிப்படுகிறது.

மனிதன் பாதி; மிருகம் பாதி!

நம் எல்லோரிடமும் கொஞ்சமாவது மிருகத் தன்மை இருக்கத்தான் செய்யும். அதில் கோபம், ஆத்திரம், ஆவேசம், வஞ்சம் தீர்க்கும் எண்ணம் ஆகியவை மிக மோசமானவை.

நாம் ஒரு பிரச்னையில் மாட்டிக்கொண்டால், 'இதற்கு நான் பொறுப்பில்லை. என் மீது எந்தக் குற்றமும் இல்லை. என்னை இந்த நிலைக்குத் தூண்டிவிட்டவர்கள் மற்றவர்களே!’ என்று நினைக்கிறோம். 'எனக்கு வந்திருக்கும் பிரச்னைகளுக்கு நான் எந்த வகையில் காரணம்?’ என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டு, பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயன்றால், பிரச்னைகள் நம்மை பயமுறுத்தாது. இன்றைய மனிதர்களில் பலர், மனிதன் பாதி, மிருகம் பாதி என்ற இரு பரிமாணத்துடனே வாழ்கின்றனர். அவர்களின் பிரச்னைகளுக்குப் பெரும்பாலும் அவர்களே காரணம்! இதை உணர்ந்து, நல்லவற்றைத் தெரிந்து, அவற்றைப் போற்றிச் செயல்பட்டால், பாதிப் பிரச்னைகள் வரவே வராது; அப்படியே வந்தாலும், அவற்றுக்கு நம்மால் தீர்வு காணமுடியும்.

உதாரணமாக, நெரிசலான சாலைகளில் தினமும் நடக்கும் சம்பவத்தை யோசித்துப் பாருங்கள். சாலையில் ஒரு காரும், மோட்டார் சைக்கிளும் லேசாக இடித்துக்கொள்கின்றன. உடனே இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கோபமாக, ''ஏன்யா? அறிவு இருக்கா? என்ன வண்டி ஓட்றே? என்ன அவசரம் உனக்கு?'' என்று சத்தம் போடுகிறார்கள். காரோட்டி, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவன்தான் தவறாக ஓட்டினான் என்று முடிவு செய்கிறான். மோட்டார் சைக்கிள்காரனும் தன் மீது தவறில்லை, காரோட்டி மீதுதான் தவறு என நினைக்கிறான்.

இதனால், இரண்டு பக்கமும் கோபமும் ஆத்திரமும் ஆவேசமும் அதிகரிக்கிறது. பரஸ்பரம் கன்னாபின்னாவென திட்டித் தீர்க்கிறார்கள். ஒருகட்டத்தில், வண்டியில் இருந்து இறங்கி, கைகலப்பில் இறங்குகிறார்கள். இத்தனைக்கும் இரண்டு வண்டிகளுக்குமே பெரிய அளவில் சேதாரம் ஆகியிருக்காது. ஆனாலும், அகங்காரமும் கோபமும் அடுத்தவர் மீது பழி சுமத்தும் மனோபாவமும் சூழலையே கெடுத்து, நேர விரயத்துக்கும் எரிபொருள் விரயத்துக்கும் காரணமாகிவிடும். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் வண்டிகள் செல்ல வழியின்றி, நீளமாக வரிசை கட்டி, டிராஃபிக் ஜாம் ஆகியிருக்கும்.

யோசித்துப் பார்த்தால், பிரச்னையாக இல்லாதவற்றைக்கூட நாமே பிரச்னையாக்கிக் கொள்கிறோம்! மிகப் பெரிய பிரச்னைகள்கூட, 'மன்னித்துவிடுங்கள்’, 'ஸாரி’ என்கிற ஒற்றை வார்த்தையால் உடனே முடிவுக்கு வந்து, காணாமல் போய்விடக்கூடியவை.

'இந்தப் பிரச்னைக்கு நானும் காரணமாக இருக்கலாம்’ என்று நினைத்துவிட்டாலே, பல பிரச்னைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிடும்.

- விருட்சம் வளரும்...

விதைக்குள் விருட்சம் - 10

பிரச்னை ஒரு பிரச்னையல்ல!

ன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்டுச் சுவர்களில் வரிசையாக ஆணிகள் அடித்துப் படங்களை மாட்டிக் கொண்டிருந்தான் ரகு. அப்போது அவனுடைய மகன், ''அப்பா, ப்ரியா நம்ம புதுக் கார் மேல ஆணியால் கிறுக்குறா!’ என்று கத்திக் கொண்டு ஓடி வந்தான்.

ரகு பதறியபடி வெளியே ஓடிப் போய்ப் பார்த்தான். எதிரே ஆணியும் கையுமாக வந்த குழந்தை ப்ரியாவை கோபத்தில் ஓங்கி அறைந்தான். அவள் நிலை தடுமாறிக் கீழே விழ, கல்லில் தலை மோதி, காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்தது.

பதறிப்போன ரகு, குழந்தையை அள்ளியெடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான். தலைக்குக் கட்டுப் போட்டு, மருந்து, மாத்திரைகளுடன் திரும்பினான்.

மருந்து உட்கொண்ட மயக்கத்தில் குழந்தை தூங்கிவிட, அவளை உள்ளே படுக்க வைத்து விட்டு, வாசலுக்கு வந்த ரகு, அப்போதுதான் காரை பார்த்தான். அதில், 'Daddy I Love You’ என்று ஆணியால் கிறுக்கியிருந்தாள் ப்ரியா. குழந்தை எழுதியிருந்த வாசகத்தைக் கண்டதுமே அவன் நெஞ்சம் நெகிழ்ந்தது; காரில் ஆணியால் கீறிவிட்டாள் என்கிற கோபம் மறைந்தது. குழந்தையை அவசரப்பட்டு அடித்துவிட்டதை எண்ணிக் குலுங்கி குலுங்கி அழுதான் ரகு.

ஆமாம்... பிரச்னைகள், சில தருணங்களில் பிரச்னைகளாகவே இருப்பதில்லை!