Published:Updated:

சிக்கல்கள் தீர்ப்பார் செக்கச் செவேல் கணபதி!

கோவாரத்னகிரி கணபதிபுலே கோயில்

சிக்கல்கள் தீர்ப்பார் செக்கச் செவேல் கணபதி!

கோவாரத்னகிரி கணபதிபுலே கோயில்

Published:Updated:

கார்வாரில் (கர்நாடகா) தொடங்கி, பான்வெல் (மகாராஷ்டிரம்) எனும் இடம் வரை நீண்டிருக்கிறது கொங்கணி பிரதேசம்.   இதில் கோவாவும் அடங்கும். அழகான கடற்கரை, சாயத்ரி மலைத் தொடர் என ரம்மியம் கூட்டி நிற்கும் - இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதியைச் சுற்றிலும் அழகிய கோயில்கள் பல உள்ளன. அவற்றில்  குறிப்பிடத்தக்கது, கணபதிபுலே எனும் இடத்தில் உள்ள கஜானன் ஆலயம்!

பச்சை போர்த்திய குன்றின் அடிவாரத்தில், கடற்கரைக்கு அருகில், சிவப்பும் வெள்ளையுமான நிறத்தில் பளிச்சிடுகிறது திருக்கோயில்.  உள்ளே சுயம்புமூர்த்தியாக அருள்கிறார் பிள்ளையார். ஸ்ரீஸித்தி விநாயகரான இவரை 'மேற்கு துவார பாலன்’ எனப் புராணங்கள் போற்றுகின்றன.

சிக்கல்கள் தீர்ப்பார் செக்கச் செவேல் கணபதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மொகலாயர்கள் ஆட்சிக் காலத்தில், இந்த இடம் தாழை வனமாக இருந்ததாம். இந்த வனத்தில், பிடே எனும் அந்தணர் ஒருவர் வசித்து வந்தார். எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகள் வந்தபோதும், இடர்ப்பாடுகள் ஏற்பட்டபோதும், மனம் தளராமல் காற்றை மட்டுமே சுவாசித்து, ஆனைமுக அண்ணலை மனத்தில் ஏற்றி கடுந்தவம் மேற்கொண்டார் பிடே.

சிக்கல்கள் தீர்ப்பார் செக்கச் செவேல் கணபதி!

அவருடைய தவத்தில் மகிழ்ந்த கணபதி பெருமான், 'இதோ, இந்த மலையும் வனமும் சேர்ந்த பகுதிக்கே வந்துவிட்டேன். தினமும் எனக்கு பூஜைகள் செய். இந்தப் பகுதியே சுபிட்சமாகும்’ என அருளினார்.

இந்த நிலையில், பிடே வளர்த்து வந்த பசுக்களில் ஒன்று தினமும் தானாகவே ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று பால் சொரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது, அங்கே அழகிய கணபதியின் விக்கிரகத் திருமேனி காணப்பட்டது. அதைக் கண்டு நெக்குருகிப் போனார் பிடே. அங்கேயே ஸ்ரீகணபதி பெருமானுக்குச் சிறிய அளவில் கோயில் கட்டி, நித்யானுஷ்டானங்களுடன் சிறப்புற பூஜைகளைச் செய்து வந்தார். கணபதி பெருமான் கோயில்கொண்ட அந்தப் பகுதி, பின்னாளில் 'கணபதி புலே’ என அழைக்கப்பட்டது. புலே என்றால் மணல் மேடு என்று பொருள்.

மிக அற்புதமாக அமைந்திருக்கும் திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் மண்டபம், முழுக்க முழுக்க கொங்கணி தேசத்துப் பாணியில் அமைக்கப்பட்டு, கண்களைக் கவருகிறது. கோயிலைச் சுற்றி உள்ள இயற்கை வளத்தை ரசிப்பதற்காக சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு தேக்கு மரக்கட்டைகளால் ஆன கூரையுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் கதகதப்பாகவும் இருக்குமாம் அந்தக் கூரை! திருக்கோயிலின் வடக்குப் பகுதியில் ஸ்வாமிக்கான ஆபரணங்கள் வைக்கும் அறையும், தெற்குப் பகுதியில் பள்ளி அறையும் உள்ளன. சங்கடஹர சதுர்த்தி மற்றும் முக்கிய நாட்களில் ஸ்ரீகணேசரின் விக்கிரகத் திருமேனியை அலங்கரித்து, ஸ்வாமி பல்லக்கில் வலம் வரும் நிகழ்ச்சி சிலிர்க்கவைக்கும்.

சிக்கல்கள் தீர்ப்பார் செக்கச் செவேல் கணபதி!

விநாயக சதுர்த்தி அன்று இந்தப் பகுதி மக்கள் அனைவருமே இங்கு வந்து, ஸ்வாமி தரிசனம் செய்கிறார்கள். மூர்த்தம் சிறியதுதான் என்றாலும், மொழுமொழுவென அழகு ததும்ப, செக்கச்செவேலனக் காட்சி தருகிறார் விநாயகர். இவருக்குச் செந்தூரம் சார்த்தி வணங்கு வது சிறப்பு. வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில், சூரிய கிரணங்கள் நேராக மூலஸ்தான விக்கிரகத் திருமேனியில் விழுவது விசேஷம்!

சிக்கல்கள் தீர்ப்பார் செக்கச் செவேல் கணபதி!

கோயிலின் பின்னணியில் இருக்கும் மலையையும் ஸ்ரீகணபதியின் சொரூபமாகவே போற்றுகிறார்கள் பக்தர்கள். வாய்ப்பு கிடைக்கும் போது, கணபதிபுலே சென்று விநாயகரைத் தரிசித்து வாருங்கள், வினைகள் யாவும் நீங்கி வாழ்க்கை செழிக்கும்.

- ஜி.பிருந்தா, சென்னை-24

எங்கே உள்ளது?

கோவாவில் இருந்து மும்பை செல்லும் ரயில் வழித்தடத்தில் உள்ளது ரத்னகிரி ரயில் நிலையம். இங்கிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது கணபதிபுலே கோயில். ஆலயத்துக்கு அருகிலேயே தங்கும் விடுதி மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்ளன.