Published:Updated:

சக்தி சங்கமம்

காந்தாரியின் கதையில் டெஸ்ட் டியூப் பேபி?! கமலா செல்வராஜுடன் வாசகர்கள் கலந்துரையாடல் - 2

சக்தி சங்கமம்

காந்தாரியின் கதையில் டெஸ்ட் டியூப் பேபி?! கமலா செல்வராஜுடன் வாசகர்கள் கலந்துரையாடல் - 2

Published:Updated:

வாசகர்களின் ஒவ்வொரு கேள்வியும் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கவே, இன்னும் உற்சாகமானார் டாக்டர் கமலா செல்வராஜ். அந்த உத்வேகத்துடன் அவர் பதில்களைச் சொல்லச் சொல்ல, குதூகலமானார்கள் வாசகர்கள்.

• ''காந்தாரியின் கரு சிதைவுற்றபோது, அதை 101 குடங்களில் பத்திரப்படுத்தி வைத்து, 101 குழந்தைகள் உருவாக வியாசர் வழிகாட்டியதாகக் கதை உண்டு. இதை டெஸ்ட் டியூப் பேபிக்கு முன்னோடி என்று சொல்லலாமா? ஒரு மருத்துவராக இதுபற்றி உங்கள் கருத்து என்ன?’' என்று சாந்தி கார்த்திகேயன் கேட்டார்.

''மகாபாரதத்தில், திருதராஷ்டிரனின் தம்பியான பாண்டுவின் மனைவிதான் குந்தி. ஒன்பதாவது மாதத்திலேயே அவளுக்குக் குழந்தை பிறந்துவிடும். 'குந்திக்கே குழந்தை பிறந்திடுச்சு. நமக்கு இன்னும் பிறக்கலையே..?’ என்று ஆவேசமாகிறாள் காந்தாரி. அவள் மனத்தில் பொறாமைக் குணம் தீயாகப் பற்றி எரிகிறது. அந்த நேரம், கர்ப்பம் தரித்திருந்தாள் அவள். கோபத்தில் ஒரு அம்மிக் குழவியால் தன் வயிற்றில் அடித்துக்கொண்டாளாம். கரு சிதைந்து, ரத்தம் கலந்த சதைத் துண்டுகள் வெளியில் வந்தன.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சக்தி சங்கமம்

உடனே வியாசரிடம் போய், 'எனக்கு 100 குழந்தை பிறக்கும்னு வரம் தந்தீங்களே... கூடவே, ஒரு பெண் குழந்தையும் வேண்டும்’ என்று கேட்டாள் காந்தாரி. வியாசர், அந்தச் சதைப் பிண்டங்களை 101 நெய்க் குடங்களில் போட்டு, அதன் மூலம் துரியோதனன் முதலான நூறு பிள்ளைகளும், 'துச்சலை’ என்ற பெண் குழந்தையும் உருவானதாக விவரிக்கிறது புராணம். அந்தக் குடங்களில் கருமுட்டை இல்லை; சதைப் பிண்டங்களே இருந்தன. வெறும் சதைப் பிண்டத்துக்கு உயிர் கொடுப்பது என்பது கடவுளின் கிருபை உள்ள ரிஷிகளின் சக்தியால் மட்டுமே சாத்தியம்! காந்தாரியின் கதைக்கும், டெஸ்ட் டியூப் பேபிக்கும் ஒருசில விஷயங்கள் பொருந்தியிருக்கலாம். ஆனால், டெஸ்ட் டியூப் பேபி என்பது மருத்துவத்தில் மனித சக்தியின் முயற்சி. புராண கால ரிஷிகளுக்கு இதைவிட இன்னும் பலமடங்கு அதிக சக்தி இருந்திருக் கலாம்'' என்று விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் கலந்து விவரித்தார் டாக்டர் கமலா செல்வராஜ்.  

•   ''அப்பா நடிப்புத்துறையில் ஜொலித்தாலும், நீங்கள் டாக்டர் படிப்பை மேற்கொண்டது, பெற்றோரின் ஆசையாலா?  அல்லது இது உங்களின் லட்சியமா?'' - என்று ஆர்வமாகக் கேட்டவர் வாசகி ராஷ்மி.

  ''நான் பள்ளிப் படிப்பை முடிச்ச கையோட, 'மேரேஜ் பண்ணிக்கிறியா? இல்ல, மேல படிக்கப் போறியா?’ன்னு அப்பா கேட்டார். அந்தக் காலத்தில் பெண்களுக்கு டாக்டர் படிப்பு மேல ஒரு பிரமிப்பும் பெருமிதமும் இருந்தது. காரணம், மருத்துவத் துறை என்பது சேவை எண்ணத்தை வளர்க்கும் துறை! எனவே, 'மெடிக்கல் படிக்கிறேம்பா’ என்று நான் சொன்னதும், உடனே என்னை அதில் சேர்த்துவிட்டார். அதான் அப்பா. எங்க விருப்பம்தான், அப்பாவோட விருப்பம்!

இன்னொரு விஷயம்... அப்பா, பாப்ஜி அம்மாவைப் பெண் பார்க்கப் போனபோது, அப்பா டாக்டருக்குப் படிக்கறதா இருந்தாத்தான் பொண்ணைக் (பாப்ஜியை) கல்யாணம் பண்ணித் தரமுடியும்னு தாத்தா ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாராம். அப்பாவும் சரின்னு சொல்லிட்டு, பாப்ஜி அம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாராம். ஆனா, பல காரணங்களால டாக்டருக்குப் படிக்க முடியாம போனதுல, அப்பாவுக்கு ரொம்பவே வருத்தம். நான் மெடிக்கல் படிக்கிறேன்னு சொன்னதும், அப்பாவுக்கு அப்படியொரு சந்தோஷம்! தான் படிக்க‌ ஆசைப்பட்டதை மகள்கள் படிக்க ஆசைப்படுறது தெரிஞ்சு, அவருக்கு ரொம்பப் பெருமை! என் அக்கா ரேவதி, நான், தங்கை ஜெயா மூன்று பேருமே மருத்துவம் படித்தோம்'' என்று சொல்லும்போதே கமலா செல்வராஜின் கண்களில் மின்னுகிறது பெருமிதம்.   

சக்தி சங்கமம்

•  ''உயிர் காக்கும் மருந்து மாத்திரைகளால் மனித வாழ்நாள் அதிகரித் திருப்பதாகக் கூறுகிறது ஆய்வு. இது நல்ல விஷயம்தான். ஆனால், வயோதிகத்திலும் பல முதியவர்கள் நோய்வாய்ப்பட்டு இறப்புக்காக ஏங்கும் நிலை வந்திருக்கிறது. மருத்துவக் கண்டுபிடிப்பில் இப்படியான பாதிப்பும் இருக்கிறதுதானே?'' - கல்லூரி மாணவி ஜெ.பி.ரினியின் கேள்வி இது.

  ''வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கறதாலதான், ஓரளவுக்காவது நாம ஆரோக்கியத்தோடு வாழமுடியுது. கேன்சர், ஹார்ட்ல பாதிப்புன்னு இருந்து, அதற்குரிய மருந்து எடுத்துக்கலேன்னா என்னாகும், சொல்லுங்க?

இன்னிக்கி பொல்யூஷன் அதிகம். நவீன உலகில், புதுப்புது கண்டுபிடிப்பு களோடு, புதுப்புது வியாதிகளும் பெருகிடுச்சு. சுகாதாரமற்ற சூழல்ல நாம வாழ்ந்துட்டிருக்கோம். இன்றைய நவீன வாழ்க்கை முறையில், புதிய மருத்துவ விஞ்ஞானத்தால்தான் ஓரளவாவது மனிதன் நிம்மதியா வாழமுடியுது. அதுவும் இல்லேன்னா, கேட்பாரற்ற வயோதிக நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிச்சுதான் இருக்கும்'' என்று சொல்லும்போது, டாக்டரின் குரலில் வேதனையும் அக்கறையும் தெரிந்தன.  

சக்தி சங்கமம்

•  ''அறுவைச் சிகிச்சையில் நம் இந்தியாவே முன்னோடி என்பதற்கு உதாரணமாக சுஸ்ருத முனிவர், அகத்தியர், தேரையர் ஆகியோரைச் சொல்வார்கள். இவர்களின் மருத்துவம் பற்றி மருத்துவ நூல்களில் குறிப்பு ஏதும் உண்டா? ஆயுர்வேதத்தில் விரிவான தகவல்கள் உண்டு என்கிறார்களே?'' என்று கேட்டார் லலிதா ஜெயகுமார்.

சக்தி சங்கமம்

''இந்தியாவில், மருத்துவத்தின் முன்னோடி மாநிலமா தமிழகம்தான் இருந்திருக்கு. சங்க காலம் தொடங்கி சித்தர் காலம் வரை கிடைக்கிற குறிப்புகளைக் கொண்டு, மருத்துவ வரலாறு ஆராயப்பட்டு வருகிறது. பண்டைக்காலத் தமிழர்கள், மருந்தையும் மருந்துப் பொருளையும் பயன்படுத்துவதில் சிறந்தவர்களாகத் திகழ்ந் தார்கள் என்பதற்கு, சிந்துவெளி நாகரிக அகழ்வு ஆராய்ச்சியில் கிடைத்துள்ள பொருள்களே சாட்சி! இன்றைய தமிழ் மருத்துவர்களும் ஆயுர்வேத மருத்துவர்களும் பயன்படுத்துகிற பல மருத்துவப் பொருள்கள், அங்கே கண்டெடுக் கப்பட்ட பொருள்களோடு ஒத்துப் போவது ஆச்சரியம். இதன்மூலம், வேத காலத்துக்கும் முன்பாகவே பழந்திராவிட மருத்துவம் இந்தியா முழுவதும் பரவியிருந்திருக்குன்னு தெரியுது. அது பின்னாளில், சித்த மருத்துவம், ஆயுர்வேதம் என இரண்டு நிலைகளாகப் பரிணாமம் பெற்று வளர்ந்திருக்கிறது. இதை நினைக்க நினைக்க பிரமிப்பு கூடிக்கிட்டேதான் போகுது!

பதிற்றுப்பத்து, புறநானூறு, சீவக சிந்தாமணி போன்ற அரிய தமிழ்க் காப்பிய நூல்களில் போர்க்கள மருத்துவம், அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்பட பல மருத்துவ முறைகள் குறிப்பிடப்பட்டிருப்பது உலகையே வியக்க வைக்கிற விஷயம்!'' என்று கண்கள் விரியச் சொல்கிறார் டாக்டர்.

  ''உங்கள் அப்பா புராண வேடங்களில் நடிப்பதைப் பார்க்கும்போது என்ன நினைப்பீர்கள்?'' என்று கேட்டார் வாசகி பூமா.

''அப்பாவும் ஆண்டவனுக்கு நிகர்தானே! ஆனா, அவர் கடவுள் வேஷமிட்டு நடிச்சாலும், அவரை அப்பாவாத்தான் பாப்பேன். 'எவ்ளோ பிரமாதமா நடிச்சிருக்கார்’னு நினைச்சுக்குவேன். சின்ன வயசுல பாட்டிதான் எனக்கு நிறைய ஆன்மிகக்கதைகளைச் சொல்லி வளர்த்தாங்க. புராணங்கள், ஸ்லோகங்கள், பூஜைகள்னு அவங்க சொல்லிக் கொடுத்ததையெல்லாம் அப்பா, விஷ§வலா சினிமா மூலமாவே எனக்கு கத்துக் கொடுத்தார்னு எடுத்துக்கிட்டேன்'' என்று சொல்லிவிட்டு, குழந்தைபோல் தோள் குலுக்கிச் சிரிக்கிறார் கமலா செல்வராஜ்.

•   ''வெளிநாடுகள் பலவற்றுக்குப் போயிருக்கிறீர்கள். அங்கே, எந்த நாட்டுக் கோயில் உங்களை மிகவும் கவர்ந்தது?'' என்று வாசகர் கார்த்திகேயன் கேட்டார்.

சக்தி சங்கமம்

 ''வெளிநாடுகளுக்குப் போகும்போதெல்லாம் அங்கே உள்ள கோயிலுக்குப் போகாம இருக்கவே மாட்டேன். எல்லா கோயில்களுமே ரொம்பச் சுத்தமா, அமைதியான சூழலோட ரம்மியமா இருக்கும். ஆனா, அங்கே உள்ள கோயில்கள்ல பூ, ஊதுவத்தி, எண்ணெய்னு எந்த வாசனையும் இருக்காது. அர்ச்சகர் ஸ்லோகம் சொல்லி, இறைவனுக்கு அபிஷேகம் செய்வார். ஆனாலும் ஒரு ஈர்ப்பு, ஒரு லயிப்பு, பிரமிப்புன்னா அது நம்மூர் கோயில்கள்லதான் இருக்கு! நம்மூர்ல இருக்கிற சின்ன கோயில்கூட, சக்தி வாய்ந்ததா, தெய்வாம்சம் நிறைஞ்சதா இருக்கும்!''

•   ''உங்களின் குல தெய்வம் எது? எந்தத் தெய்வத்தை வழிபட்டாலும், வழிபடாவிட்டாலும், நாம் நமது குல தெய்வத்தை கட்டாயம் வழிபடவேண்டும் என்கிறார்களே, அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' - இது வாசகி பூமாவின் கேள்வி.

''குழந்தைப் பிறப்பு என்பதே குலதெய்வத்தின் அருள்தான்.  நான் இந்து. என் கணவர் கிறிஸ்துவர். எங்கள் குழந்தைகளை இந்துவாகத் தான் வளர்த்திருக்கிறோம். என் அப்பா கௌடின்ய கோத்திரம். என் குழந்தைகளுக்கும் அதுதான். கும்பகோணத்துக்குப் பக்கத்தில் திருப்பழனம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரிதான் எங்க குலதெய்வம். அங்கே அப்பா சின்னதா ஒரு மண்டபம்கூட கட்டிக் கொடுத்திருக்கார். தாத்தா, பாட்டி, பாட்டிக்கும் பாட்டினு பரம்பரை பரம்பரையா வசிச்ச வீட்டுக்குள்ளே நுழைஞ்சா, ஒரு சிலிர்ப்பு ஏற்படும் இல்லியா? குலதெய்வக் கோயிலுக்குப் போகும் போதும் அப்படியான உணர்வு வந்து, நம்மளை ஏதோ பண்ணும். இதைப் பலமுறை உணர்ந்திருக்கேன்.

ஒவ்வொருவரும் அவங்கவங்க குலதெய்வத்தைக் கட்டாயம் வழிபடணும்கிறது என்னோட கருத்து. மற்ற தெய்வங்கள் எல்லாம் ஸ்பெஷலிஸ்ட்டுகள்னா, நம்ம குல தெய்வம் நமக்கு ஃபேமிலி டாக்டர் மாதிரி!'' என்று கமலா செல்வராஜ் மெல்லிய புன்னகையோடு சொல்ல, பிரியா விடை பெற்றுக் கிளம்பினார்கள் வாசகர்கள்.

''தங்களின் தினசரி வழிபாட்டு முறைகள் என்னென்ன? இக்கட்டான அறுவை சிகிச்சையைச் செய்யத் தொடங்கும் முன் நீங்கள் இறைவனைப் பிரார்த்திப்பதுண்டா?''

- கே.விஸ்வநாத், பெங்களூரு-38

''ஒவ்வொரு நொடியும் என் மனசுக்குள் பிரார்த்தனை ஓடிக்கிட்டேதான் இருக்கும். அம்மாவோட விளக்கை பத்திரமா வைச்சிருக்கேன். தினமும் அந்த விளக்கை ஏத்திட்டுதான் பூஜை பண்ணுவேன். நாள் தவறாம ஈசனுக்கு வில்வம் சார்த்துவேன். தினமும் சாயந்திரம் 5 மணியிலேருந்து 6 மணி வரைக்கும் பூஜை செய்வேன். ஒவ்வொரு நாளும் அதுதான் என் மருத்துவத் தொழிலுக்கு மிகப்பெரிய பக்கபலமா இருக்கு.

சக்தி சங்கமம்

சில பிரார்த்தனைகள் உடனுக்குடன் நிறைவேறி, சிகிச்சை வெற்றியடைஞ்சு, நோயாளியிடம் நல்ல குணம் தெரியும்போது, சிலிர்ப்பா இருக்கும். பொதுவா, ஆஸ்பத்திரிக்குள் யாரும் அடியெடுத்து வைக்காத நிலை வரவேண்டும். அந்த அளவுக்கு மனிதனின் ஆரோக்கியம் அதிகரிக்கணும். இதுதான் நான் கடவுளிடம் வைக்கிற ஒரே முக்கியமான வேண்டுதல்!

தொகுப்பு: எஸ்.ரேவதி படங்கள்: ஆ.முத்துக்குமார்

அடுத்த இதழில்...

சக்தி விகடன் வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம்