Published:Updated:

விடை சொல்லும் வேதங்கள்: 26

ஒரு கதை... ஒரு தீர்வு! அருண் சரண்யா, ஓவியம்: சசி

''என் தம்பி எப்படித்தான் பிழைக்கப் போறானோ?'' என்று அலுத்துக்கொண்டான் நண்பன்.

அவன் தம்பி ஒன்றும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை. எனவே, அந்தத் தம்பியின் வேறு ஏதோ குணநலனை மனத்தில் கொண்டுதான் நண்பன் இப்படிச் சொல்கிறான் என்பது புரிந்தது.

''ஆதித்யாவுக்கு என்ன குறைச்சல்?  நல்லா படிச்சு முடிச்சுட்டு, நல்ல நிறுவனத்தில்தானே வேலைக்குச் சேர்ந்திருக்கான்'' என்றேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விடை சொல்லும் வேதங்கள்: 26

''நிறைய மார்க் வாங்கியிருக்கான். ஆனா, வாழ்க்கையிலே ஜெயிக்க அது போதாதே!  ஆதித்யாவுக்கு சாமர்த்தியம் போதாது'' என்றான் நண்பன்.

சாமர்த்தியம் என்பது ஒரு சிறப்புதான். ஆனால், ஏனோ அந்த வார்த்தை பெரும்பாலும் எதிர்மறை அர்த்தத்தில்தான் (குள்ளநரித்தனம் என்ற அர்த்தத்தில்) பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஆதித்யா ஏதோ ஒருவிதத்தில் அப்பாவியாக இருக்கிறான் என்று நண்பன் கூறியதாகப் புரிந்துகொண்டேன். நான் நினைத்தது சரிதான் என்பதுபோல் உறுதி செய்தது அவனது தொடர்ந்த பேச்சு.

''தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பான். 'மேலதிகாரிக்கு இணக்கமாக நடந்து கொள். அவருக்குத் தகுந்த மாதிரி நடந்து, நல்ல பேர் வாங்கு. அவரை காக்கா பிடிச்சு வெச்சுக்கோ என்றேன். பதிலுக்கு அவன் சிரித்துவிட்டுக் கிளம்பி விட்டான். அந்தச் சிரிப்பு, நான் சொன்னதை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுபோல் பட்டது.''

''இப்ப உன் தம்பிக்கு என்ன பிரச்னை உண்டாயிடும்னு நீ கவலைப்படறே?'' என்று கேட்டேன்.

''பிறரோடு அவனுக்குச் சாமர்த்தியமாகப் பேசிப் பழகத் தெரியாது. கொடுத்த வேலையை ஒழுங்கா செய்வான்; அவ்வளவுதான்! மேலதிகாரியைப் பார்த்துப் புன்னகைக்கக்கூட மாட்டான். ஏதோ சுயநலத்துக்காக அவன் சிரிப்பதாக மேலதிகாரி நினைத்துக் கொள்வாராம்.''

எனக்கு நண்பனின் பேச்சும் முடிவும் சரியான திசையில் செல்லவில்லை என்றே பட்டது. கூடவே, ஸாவ்தா மாலியின் நினைவு வந்தது.

******

ண்டரிபுரத்திலிருந்து பல காத தூரம் தள்ளி இருக்கும் ஒரு பகுதி அரண். அங்குதான் ஸாவ்தா மாலி தங்கி இருந்தார். அவருக்கென்று ஒரு பெரிய தோட்டம் அங்கே இருந்தது. கடுமையான உழைப்பாளியான அவர், பண்டரிபுர நாயகனான விட்டலனின் பரம பக்தர்.

தினமும் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, தோட்டம் முழுவதும் பாய்ச்சுவார். தான் வளர்க்கும் செடிகளில் மலரும் ஒவ்வொரு பூவையும் பார்த்துப் பரமானந்தம் அடைவார். ''விட்டலா, எல்லாம் உன் அருள்'' என்று ஆனந்தக் கண்ணீர் விடுவார்.

விடை சொல்லும் வேதங்கள்: 26

தோட்டத்தில் விட்டலனையும், விட்டலனில் தோட்டத்தையும் கண்டார். அந்தப் பகுதியில் இருந்தவர்களில் பலரும் பண்டரிபுரத்துக்கு ஒருமுறையேனும் சென்று வந்தவர்கள். வந்ததும்  ஸாவ்தா மாலியிடம் தங்களது ஆனந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். ஸாவ்தா மாலியும் அதை மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொள்வார். ஆனால், விசித்திரம் என்னவென்றால், ''அடடா, நாமும் பண்டரிபுரம் போயிருக்கலாமே'' என்று ஒருபோதும் அவர் நினைத்ததில்லை. பண்டரிபுரம் போகவேண்டும் என்ற யோசனையே அவருக்கு வந்ததில்லை.

தன் தோட்டத்தில் விளையும் ஒவ்வொரு காய் மற்றும் கனியிலும் அவர் விட்டலனையே கண்டார். பச்சைக் கொத்தமல்லியைப் பார்த்தால், பச்சைமா மலைபோல் மேனி கொண்டவரின் உருவம் அவர் மனத்தில் நிழலாடும்; மாதுளையைப் பார்த்தால் விட்டலனின் புன்னகைக்கிற உதடுகள் அவர் நினைவுக்கு வரும்.

இப்படிப்பட்ட அவரின் வாழ்நாளில், திருப்புமுனைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஆம்... ஒரு நாள், ஸாவ்தா மாலி வசிக்கும் அரணை நோக்கி, அந்த விட்டலனே கிளம்பி வந்துவிட்டான்.

விட்டலன் தன் நெருங்கிய நண்பர்களுடன் நேரடியாகவே நட்புடன் பழகியவன். அப்படிப்பட்ட ஆத்ம நண்பர்களாக நாமதேவரும் ஞானேஸ்வரரும் விளங்கினர். அன்று அவர்கள் பண்டரிபுரத்திலுள்ள விட்டலனின் சந்நிதியை அடைந்தபோது, அங்கு துளசி மாலையின் நறுமணத்தைக் காணோம். தவிர, விட்டலனின் சிலை இருந்தாலும், அதில் ஏதோ குறைவதாகப் பட்டது இருவருக்கும். 'விட்டலன் எங்கோ கிளம்பிச் சென்றுவிட்டான்’ என்பதைப் புரிந்துகொண்ட அந்த இரண்டு பக்தர்களும் விட்டலனைத் தேடிக் கிளம்பினர்.

விட்டலனின் துளசி மாலையின் நறுமணத்தையே அடையாளமாகக் கொண்டு, அவர்கள் அரணை அடைந்தார்கள். ஸாவ்தா மாலி தனது தோட்டத்தில் பூக்களைக் கொய்தவாறே விட்டலன் குறித்த எளிமையான பாடல்களை, தானே இயற்றிப் பாடிக் கொண்டிருந்தார். அங்கு ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தான் விட்டலன்.

'இது யார்? விட்டலனா? அல்லது, விட்டலனைப் போல வேடமிட்ட யாராவதா?’ இப்படியெல்லாம் ஸாவ்தா மாலி சற்றும் யோசிக்கவில்லை. வந்தது விட்டலன்தான் என்பதை உணர்ந்து,  பரவசம் அடைந்தார். அவர் பாதங்களில் விழுந்து வணங்கினார்.

விட்டலன் விளையாட நினைத்தான். ''என்னை இரண்டு திருடர்கள் துரத்திக்கொண்டு வருகிறார்கள். மிகவும் மறைவான இடத்தில் ஒளிந்துகொள்ள வேண்டும்'' என்றான்.

ஸாவ்தா மாலிக்கு சட்டென சிந்தனை ஒன்று உதித்தது. ''என் இதயத்தில் உள்ள நீ, என் இதயத்திலேயே தங்கிவிடலாமே!'' என்றபடி, அருகில் இருந்த கத்தியால் தன் மார்புப்  பகுதியைச் கிழித்துக்கொண்டார். விட்டலன் அவர் இதயப் பகுதியில் மறைந்து கொள்ள, ஒரு கம்பளியால் தன் மேல் உடம்பைப் போர்த்திக் கொண்டார் ஸாவ்தா மாலி.

நாமதேவரும் ஞானேஸ்வரரும் வந்து சேர்ந்தனர். அதுவரை வந்த துளசி மாலை மணம் அந்தக் தோட்டக்காரனைத் தாண்டியதும் நின்றுவிட்டது. அதே நேரம், விட்டலன் எங்கு இருக்கிறான் என்பதும் புலப்படவில்லை. 'விட்டலா’ என்று அவர்கள் கதற, விட்டலன் ஸாவ்தா மாலியின்  இதயத்திலிருந்து வெளிப்பட்டான். நடந்ததை அறிந்து அனைவரும் மகிழ்ந்தனர்.  ஸாவ்தா மாலியின் உடல் காயம் சரியானது.

*******

''எனவே உன் தம்பியைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம்'' என்றேன் நான்.

'இதென்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு?’ என்பதுபோல் பார்த்தவனிடம் விளக்கினேன்.

''எந்தவொரு பக்தனுக்கும் தான் வணங்கும் தெய்வத்தை அதற்கு உரிய ஆலயத்தில் சென்று தரிசிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், ஸாவ்தா மாலி அப்படி இல்லை. செய்யும் தொழிலே தெய்வம் என்று இருந்தார். அவருக்குத் தரிசனம் அளிக்க இறைவனே அவரைத் தேடி வந்தான்.

அதுபோலத்தான் உன் தம்பியும்! எந்தத் தனி நபரையும் கவர வேண்டுமென்ற எண்ணம் எதுவும் இன்றி, தன் பணியில் மட்டுமே மூழ்கி இருக்கிறான். நல்ல விஷயம்தானே? இந்த குணத்துக்கும் உரிய மதிப்பு உண்டு. அதற்கு உரிய அங்கீகாரமும் தானாகவே கிடைக்கும். சொல்லப்போனால், மேலதிகாரிகளிடம் தவறாகப் பேசியோ, தவறாக நடந்துகொண்டோ வாய்ப்புகளை இழப்பதைவிட, இப்படி மௌனமாக தங்கள் பணியைச் செய்துகொண்டிருப்பவர்களை அதிகாரிகளுக்குச் சற்றுக் கூடுதலாகவே பிடித்துப் போகவும் வாய்ப்பு உண்டு'' என்றேன்.

நண்பனின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி!

- அடுத்த இதழில் நிறைவுறும்