Published:Updated:

ஞானப் பொக்கிஷம்: 51

ஸ்வயம் ப்ரகாச விஜயம்பி.என்.பரசுராமன்

ஞானப் பொக்கிஷம்: 51

ஸ்வயம் ப்ரகாச விஜயம்பி.என்.பரசுராமன்

Published:Updated:

ஞானம் என்றால் தெளிந்த நல்லறிவு என்று அர்த்தம். கோடீஸ்வரர் ஒருவர் தன் சொத்துக்களை எல்லாம் பொது நன்மைக்காக எப்படி எழுதி வைக்கிறாரோ, அதுபோல ஞானத்தில் கோடீஸ்வரர்களாக மிகவும் உயர்ந்த நிலையில் இருந்த முன்னோர்கள் நமக்காக எழுதி வைத்தவையே ஞான நூல்கள்!

என்னதான் நல்ல சாலையாக இருந்தாலும், காலப்போக்கில் பழுதுபடும்போது, அதை நல்லவிதமாகச் செப்பனிட்டு, பயணத்துக்கு உதவுகிறார்கள் அல்லவா? அதுபோல, வாழ்க்கைப் பயணத்தில் மக்கள் கஷ்டப்படும்போது, மகான்கள் அந்த ஞான நூல்களை நமக்குப் புரிவதுபோல எளிமையாக விவரித்துச் சொல்லி, நம் வாழ்க்கைப் பயணம் நல்ல விதமாக நடக்க வழிகாட்டுவார்கள்.

ஞானப் பொக்கிஷம்: 51

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்படி வழிகாட்டிய மகான்களில் ஒருவர்... 20-ம் நூற்றாண்டில் அருள்மழை பொழிந்த ஸ்ரீமத் ஸ்வயம்ப்ரகாச பிரம்மேந்திர அவதூத ஸ்வாமிகள்! இவரைப் பற்றித் தமிழ்த் தாத்தா உ.வே.சா, 'ஸ்ரீமத் ஸ்வயம்ப்ரகாச பிரம்மேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்’ எனக் குறிப்பிடுகிறார்.

சாதாரணமாக, மகான்களின் வரலாறுகளை நூலாக வெளியிடும் போது, அவர்களின் வாழ்க்கை வரலாறு தனியாகவும், அந்த மகான்களின் அருள் உபதேசங்கள் தனியாகவும் வெளியிடப்படும். இரண்டும் சேர்ந்து உள்ள நூல்கள் அபூர்வம்! தவிர, மகான்களின் சரிதங்களை எழுதுபவர்கள் ஓரளவுக்கேனும் பக்குவம் பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

1935-ல் வெளியிடப்பட்ட 'ஸ்வயம்ப்ரகாச விஜயம்’ எனும் புத்தகம் இந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. தலைசிறந்த கவிஞரான வரகவி அ.சுப்ரமண்ய பாரதி இதை எழுதி உள்ளார்.

ஆலய தத்துவ நிரூபணம், அர்ச்சாவதார ஸ்தல விசேஷம், சிதம்பர ரகசியம், சிதம்பர மகிமை, ஸ்ரீநடராஜ மூர்த்தியின் சிறப்பு, ஸ்ரீநடராஜ மூர்த்தியின் தத்துவார்த்தம், ஸப்த க்ஷேத்திரங்கள்...

ஸ்ரீரங்க வரலாறு, வரலக்ஷ்மி விரதம், மஹாளயபக்ஷமும் நவராத்திரியும், விபூதி மஹிமை, பஞ்சாக்ஷர ரகசியம், ஸ்ரீகாயத்ரிதேவி, பிதுர் தேவதைகளின் செயல் என ஸ்ரீசுவாமிகள் அருளியுள்ளவை, மிக அரிதானவை. இவை அனைத்தும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

இவற்றில், சிலவற்றைப் பார்க்கலாம்!

கை- கால்களைக் கழுவிய பிறகே உணவு உண்ண வேண்டும்.

ஞானப் பொக்கிஷம்: 51

படுக்கையில் இருந்தபடியும், மூலைக்கு எதிராக இருந்துகொண்டும், இடது கையில் அன்னத்தை வைத்துக்கொண்டும், ஆசனத்தின்மீது இலையைப் போட்டுக்கொண்டும், நின்றுகொண்டு அல்லது நடந்துகொண்டும் சாப்பிடக்கூடாது; அசுத்தமான இடத்திலும், ஸந்தியா காலத்திலும் உணவு உண்ணக்கூடாது என உணவு உண்பது குறித்த தகவல்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன.

'உணவே மருந்து’ என இந்தக் காலத்தில் பிரபலமாகச் சொல்லப் படுவதை, அன்றே சொல்லியிருக்கிறது இந்த நூல்.

அடுத்து, கோயில்கள் குறித்தும் விவரித்துள் ளார் சுவாமிகள். எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் மூலஸ்தானம் என்பது சிர(தலை)ப் பதும ஸ்தானம். அதற்கு அடுத்த இடமாகிய அந்தராளம் என்பது முகம். அதையடுத்து உள்ள அர்த்த மண்டபம் - கண்ட ஸ்தானம் (கழுத்து). அதற்கு அடுத்த மகா மண்டபம் - மார்பும் தோளும் கூடிய ஸ்தானம். இவையெல்லாவற்றையும் சேர்த்து, பிராகாரம் எனப்படும் பகுதி, துடைகளும் முழங்கால்களுமாகும். கோபுரம் என்பது பாதம்.

இவ்விதமாக, அடியார்களின் சரீரகாரமாக அமைக்கப்பட்டவையே ஆலயங்கள். பகவான் அந்தச் சரீரங்களில் வசிப்பது போலவே, ஆலயத்தில் சந்நிதி கொண்டு, ஆராதனைகளை அதாவது வழிபாடுகளை உவகையுடன் ஏற்று அருள்புரிகிறார்.

ஆலய நிர்மாணம், அடியார்களின் சயனத் திருக்கோலத்தைக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது என விவரிக்கிற சுவாமிகள், கோயில்களில் உள்ள பகுதிகளை பாதம், முழந்தாள், தொடை, இடுப்பு, வயிறு, மார்பு, கழுத்து, வாய், கண்கள், மூக்கு, காது, புருவ மையம் என விரிவாகவே சொல்லி, நம் மனத்தில் பதிய வைக்கிறார்.

அதிலும், த்வஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தைச் சொல்லும்போது, த்வஜம் என்றால் தர்மம் என்று பொருள் சொல்கிறார். தேகத்தில் வீணா தண்டம்போல், மூலாதாரம் முதல் பிரம்மரந்திரம் வரைக்கும் மேல் நோக்கிச் செல்லுகின்ற பிரம்ம நாடியாக இதனைக் கூறுவார்கள், யோகீந்திரர்கள்.

உடம்பை த்வஜஸ்தம்பம்போல நேராக நிறுத்தி, இடகலை, பிங்கலை எனும் இரு நாடிகளின் வழியே போய்த் திரும்பும் பிராண வாயுவை நடு நாடியில் நிறுத்தி, சிறிதும் அசையாமல் தியானித்தால், பிராணவாயு நிற்கும்; பிராணவாயு நின்றால், மனம் நிற்கும்; மனம் நின்றால், ஐம்பொறிகளும் நிற்கும்; அவை நின்றால், விஷய சுகங்களில் ஆவல் அடங்கும்; அது அடங்கினால், உலகப் பரபரப்பு அடங்கும்; அப்படி அடங்கினால், ஆத்ம சாஷாத்காரமும் அதற்கு மேல் பிரம்மானந்தமும் தோன்றும்.

இதை உணர்த்துவதற்காகவே கோயில்களில் மூலஸ்தானத்துக்கு நேராக, கொடிமரத்தை நிலைநிறுத்தியிருக்கிறார்கள் என சுவாமிகள் தெளிவுற விவரித்துள்ளார்.

ஞானப் பொக்கிஷம்: 51

அதையடுத்து, கருவறைக்கு அருகில் நம்மை அழைத்துப் போகிறார் சுவாமிகள். கருவறையில் ஏற்றப்படும் பலவகையான தீபங்கள், கருவறையின் முன்னே தொங்கும் திரைச்சீலை ஆகியவற்றைச் சொல்லி... அவை குறித்த தத்துவங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், அழகுறச் சொல்கிறார்.

அடுத்து, பிராகாரத்தில் உள்ள ஒவ்வொரு தெய்வத்தையும் சொல்லி, அவை நம் உடம்பில் எங்கெங்கு உள்ளன எனும் தத்துவார்த்தங்கள் இந்த நூலில் எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளன.

இறைவனுக்கு அர்ச்சிக்கும் மலர்களை, 'அஷ்ட புஷ்பங்கள்’ என விசேஷமாகச் சொல்வார்கள். புன்னை, எருக்கு, செண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என எட்டு புஷ்பங்கள் மிகவும் விசேஷமானவை. இவை எல்லாமே வெளி பூஜைக்குப் பயன்படுபவை.

ஞானிகள் உள்முகமாகச் செய்கிற, அவர்களிடமிருந்து கற்றறிந்து நாம் உள்முகமாகச் செய்ய வேண்டிய பூஜைக்கும் எட்டு விதமான பூக்கள் உண்டு. அவை: கொல்லாமை, வாய்மை, ஐம்புலன் அடக்கல், பொறை, அருள், அறிவு, தவம், அன்பு எனும் அஷ்ட புஷ்பங்கள் ஆகும்.

ஸ்ரீரங்கத்தில் பகவான் எழுந்தருளியிருக்கும் திருக்கோலம், பிராகாரங்கள், பகவானின் ஆயுதங்கள் ஆகியவற்றைப் பற்றிய அற்புதமான தத்துவார்த்தங்களை அருள் உரையாக சுவாமிகள் விவரித்துத் தந்திருக்கும் பாங்கு நம்மைச் சிலிர்க்கச் செய்கிறது. ஆன்மிகத்தைப் பற்றி ஆத்மார்த்தமாகவும் பூரணமாகவும் தெரிந்து கொள்ள உதவும் இந்த நூல், 79 ஆண்டுகளுக்கு முன்னே வெளியிடப்பட்டது. அடுத்த தலைமுறையின் கைகளிலும் இருக்க வேண்டிய ஞான பொக்கிஷம் இந்த நூல்.

(நிறைவுற்றது)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism