சித்தம் அறிவோம்... இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியம்: ஜெயராஜ்

'நெத்திக் கண் த்ரிகால வர்த்தம் சொல்லும்
நீண்ட சித்தி கண்டவுடன் திதியுஞ் சிஷ்டி
முத்திக்கண் விளைவிதுவே பொருளே சித்தி
மொய்க்கு மல்லா சம்மாரம் தன்னைச் சுத்தி
வத்திக் கண்ணாகாது எந்த நாளும்
வறுமையது ஏகிடுமே கண்ணுக்கெட்டா
வெத்திக்கண் இப்படியே செவியாந்தூரம்
மேல் விளைவ தறிந்தவரும் கேட்டும் பார்த்தே....’
- காகபுஜண்டர்
பதஞ்சலியின் யோகத்துக்கு குண்டலினி யோகம் அடிப்படை அமைத்துக் கொடுக்கிறது. குண்டலினியை கராத்தே, கம்புச் சண்டை பழகுவதுபோன்று பழகிவிட முடியாது. இதற்கு மன வலிமையே பிரதானம். அடுத்து, ஒழுங்கான வாழ்க்கை முறை. அதற்கும் பிறகு, தகுந்த குருவின் வழிகாட்டல். இதெல்லாம் இல்லாமல் இந்த யோகத்தைப் பயில முடியாது. சுருக்கமாகச் சொல்லப்போனால், கோடியில் ஒருவருக்கே இது சாத்தியம்.
குண்டலினி யோகம் செய்ய முடிந்தவருக்கு, மனம் மற்றும் உடல் பற்றிய தெளிவு மிகவும் இருக்கும். அப்படிப்பட்டவர்களால் மட்டுமே பதஞ்சலி யோக சூத்ரத்தைப் புரிந்துகொள்ள முடியும். இந்த யோக சூத்ரத்துக்கு ஒரு பெரும் சிறப்பு என்னவென்றால், இது மதங்களுக்கு அப்பாற்பட்டது. இதன் அடிப்படை நோக்கம், மனிதனின் மகத்தான சக்தியான மனோ சக்தியை உணர்தல். பிறகு அதை அதிகரிக்கச் செய்து, தன்னுடைய ஆதிநிலையை உணர்ந்து, அதில் சென்று சேர்தல். இதையே சமாதி என்கிறோம். அதாவது, ஆதி நிலைக்குச் சமமான நிலையை அடைவதே சமாதி!
அடுத்ததாக, அனைத்துக்கும் மேலான சக்தியோடு... அது ஆதி சக்தியோ, பரம்பொருளோ, பரமாத்மாவோ அதனுடன் தன்னைக் கொண்டு சேர்த்துவிடுதல். இதுதான் யோகம்! இந்த யோக நிலையை அடைய 8 அங்கங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவை: 'இயம, நியம, ஆசன, பிராணாயாம, பிரத்தியாஹார, தாரண, தியான, சமாதி’ ஆகியன. இந்த எட்டு படிகளை 'அஷ்டாங்க யோகம்’ என்பர். இந்த அஷ்டாங்க யோகத்தை நான்கு பாதங்களாகப் பிரித்து, யோக சூத்திரம் வகுக்கப்பட்டுள்ளது. அவை: சமாதி பாதம், சாதனா பாதம், விபூதி பாதம், கைவல்யா பாதம்.
இதை நூல் வடிவில் வாசித்து, நாமாகச் சிந்தித்து உணர்தல் ஒரு விதம். குருவின் வியாக்கியானத்துடன், பள்ளிப் பாடம் பயில்வது போன்று கற்பது இன்னொரு விதம். எப்படிக் கற்றாலும் சரி, இந்த யோக சூத்திரத்தை ஒருவர் புரிந்துகொண்டுவிட்டால், அவரை கவலை அணுகாது. அவர், உலகின் எப்படிப்பட்ட இன்பங்களிலும் சிக்கி மயங்கிவிடமாட்டார்; திடமனத்துடன் இருப்பார். தலை மீது ஆகாயமே இடிந்து விழப்போகிறது என்றாலும், 'ஆஹா! இந்த அனுபவம் எப்படிப்பட்டது என்று பார்த்துவிடு வோமே’ என, பயமற்று இருப்பார். மனிதன் கடைத்தேற பதஞ்சலி அளித்த ஞான அமுதம் என்றே இந்த யோக சூத்திரத்தை சான்றோர் உலகம் போற்றுகிறது.

பதஞ்சலி குறித்து மேலும் பல சுவையான சம்பவங்களோடு கூடிய கதைகள் நிறையவே உள்ளன. அவரும் வியாக்ரபாதரும் ஒன்றாகச் சேர்ந்து பல விஷயங்களைச் சாதித்துள்ளனர். பதஞ்சலிக்கு உரிய இன்னொரு சிறப்பு, சைவர்கள் மட்டுமின்றி, வைணவர்களும் அவரை வியந்து போற்றுவதுதான்.
சித்தர்களில் வைணவச் சார்பு கொண்ட சித்த புருஷர்களே அநேகமாக இல்லை எனலாம். சிலர் இடைக்காடரை வைணவ சித்தராகச் சுட்டிக்காட்டுவார்கள். மற்றபடி, சித்தர் பெருமக்கள் சம்பந்தமெல்லாம் சிவத்தோடுதான். இது ஏன் என்று யோசித்தால், பல விடைகள் காத்திருக்கின்றன.
சிவபெருமானுக்குப் பட்டு பீதாம்பர ஆடைகள் இல்லை. தங்கக் கிரீடம், வைரக் கடுக்கன், நவரத்ன ஆரம் எனும் வசீகரங்கள் இல்லை. கட்டவிழ்ந்த சிகை, கழுத்தில் நாகமே அணி, இடுப்பில் புலித்தோல், இடையில் உடுக்கை மற்றும் டமருகம், உடம்பெல்லாம் பிணச் சாம்பல் பூச்சு. சித்தர்களும் வசீகரத்துக்கு இடம் தராதவர்கள்; சடையாண்டிகள். காவி, கந்தல் என எதையும் உடுத்துபவர்கள். அதுவும் வேண்டாத திகம்பரர்களும் உண்டு. சிவனுக்குப் பிரியமான இடங்களில் மயானமும் ஒன்று. சித்த சந்நியாசிகளும் மயானத்தை மிகவே விரும்புவார்கள். பிராந்தர் என்ற சித்தர் மயானத்தையே தமது வசிப்பிடமாகக் கொண்டார்.

அதுவே, பெருமாள் சர்வாலங்கார நாயகன்; காத்து ரட்சிப்பவர்; இச்சைகளைப் பூர்த்தி செய்பவர்; அதனாலேயே பொன், பொருள் வேண்டுவோர் திருமாலை வணங்குவார்கள். திருமாலின் மார்பிலேயே மகாலட்சுமி உறைவதால், அவளுடைய அருள் மாலனின் அருளுடன் கலந்தே உள்ளது. சித்தர்களுக்குத் தேவை பொருள் இல்லை; அருள்தான்! அதிலும், கர்மவினைகள் அழிந்து சாம்பலான நிலையில் அருளை எட்டுவதே அவர்களின் நோக்கம். அதற்கான இலக்கு, சிவமே! 'இதனாலேயே சித்தன் போக்கு, சிவன்போக்கு’ என்று கூறப்பட்டது.
மேலும், மாலடியார்கள் சரணாகதி புரிபவர்கள்; அந்தத் திருமாலிடத்தில் தங்களை ஒப்படைத்துவிடுபவர்கள். உடல் குறித்த எந்த விசாரங்களும் இல்லாதவர்கள். சித்தர்கள், தங்களுக்குள் இருக்கும் உயிரே சிவம்தான் என்பவர்கள். இதனால், தங்களையே சிவம் என்று கூறாமல் கூறுபவர்கள்.
'காண வேண்டும் என்று நீர் கடல் மலைகள் ஏறுவீர்
ஆணவம் அது அல்லவோ அறிவில்லாத மாந்தரே
வேணும் என்று அவ்வீசர் பாத மெய்யுளே தரிப்பரேல்
தாணுவாக நின்ற சீவன் தான் சிவன் அது ஆகுமே’
- என்கிறார் சிவவாக்கியர். மாலவனின் அடியார்கள் இப்படிக் கூறியது இல்லை. தன்னுடைய ஜீவனை திருமால் என்று கூறியது இல்லை. 'அவன் பரமாத்மா, நான் ஜீவாத்மா; அவன் வேறு, நான் வேறு! சரணாகதியாலே அவன் நம்மை ஆட்கொண்டு, தன்னுள் ஏற்றுக்கொள்கிறான்’ என்பதே வைணவக் கொள்கை. இப்படி, கொள்கையே வேறாக இருப்பதால், சித்தம் வைணவச் சம்பந்தம் கொள்ளவில்லை.
மீண்டும் பதஞ்சலியிடம் வருவோம். பதஞ்சலி யோக சூத்திரத்தைக் கற்றுணர்வது என்பது, பள்ளிக்குச் சென்று படிப்பது போன்றதல்ல! இதைக் கற்றுணர விதி இருக்க வேண்டும். இதற்கும் விதிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். நிறையவே இருக்கிறது!
விதிப்பாடு என்பது நம் கர்ம வினையால், நாமே உருவாக்கிக் கொண்ட ஒன்று. ஒரு மனிதன் கடைத்தேற, நான்கு 'தி’க்கள் வேண்டும் என்பர். அதாவது, நல்ல விதி; அதன் காரணமான நல்ல மதி; அதன் காரணமான நல்ல நிதி; அதன் காரணமான நல்ல கதி. இந்த நான்கும் வேண்டும். இதில், விதிப்பாடு சரியாக இல்லாவிட்டால், மற்றவை அமைவதைப் பொறுத்தே நம் வாழ்வு என்றாகிவிடும். விதிக்குச் சரியான இடம் இருந்தால், அந்த வாழ்வே அலாதியானதுதான். பதஞ்சலி யோக சூத்திரம் என்பது ஞானச் செல்வம். இதை ஒருவர் பெற்றுவிட்டால், காற்றை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்துவிட முடியும். உடம்பிலும் வியர்வை, சிறுநீர், மலத்துக்கு இடமற்றுப் போய், நாவில் சுரக்கும் எச்சில்கூட அமுத குணம் கொண்டதாகிவிடும்.
இமயமலைச் சாரலில் பதஞ்சலி யோக சூத்திரத்தை முழுவதுமாய் அறிந்த பல யோகிகள் உள்ளனர். இவர்களை வடவர்கள் 'பாபா’ என்பர். இவர்களில் ஒரு பாபாஜி மாதக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பார். எதற்கும் எழுந்து செல்லமாட்டார். எதுவும் அவருக்கு தேவையில்லை. காற்று மட்டுமே அவருக்குப் போதுமானது. அவரது தேவைகளை வானகம் பூர்த்தி செய்துவிடுகிறது.
இப்படி ஒருவர் இந்த பூமியில் பஞ்சபூதங்களுக்கு நடுவில், பசி எனும் கொடிய எதிரியைத் தமக்குள் வைத்துக்கொண்டு சும்மா இருக்கமுடியுமா என்று கேட்டால்... இப்படி எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் என்பதே பேருண்மையாகும். இதுபோன்ற பாபாக்களை நாம் பார்ப்பதற்கும் ஒரு விதி வேண்டும்.

அவர்களை நாம் பார்க்க, அவர்கள் நம்மைப் பார்த்திட... நமது உடம்பின் ஆராவில் பெரும் மாற்றத்தை ஒரு பார்வையால் ஏற்படுத்த முடிந்தவர்கள் அவர்கள். இதற்கு 'நயனதீட்சை’ என்று பெயர். அவர்களிடம் நாம் நம் மனக்குறைகளைச் சொல்லி அழத் தேவையே இல்லை. நம் உடம்பின் ஆராவே அவர்களுக்கு அதைக் காட்டிக் கொடுத்துவிடும். நம் உடம்பின் 'ஆரா’ என்பது, நமது எண்ணப் போக்கு, அன்றைய நட்சத்திர கதி, ஜாதக ரீதியாலான நமக்கான தசாபுக்தி, அந்தரம், சூட்சுமம் ஆகியவற்றை எல்லாம் கொண்டதாக இருக்கும். அவர்கள் தங்கள் பார்வையாலேயே ஊடுருவ வல்லவர்கள். அதனால் ஆராவை வைத்தே, இன்னார் அருளாளர், இவர் பொருளாளர், இவர் பெரும் இருளாளர் என்பதையெல்லாம் உணர்ந்துவிடுவார்கள்.
பெரும் கருணையோடு பலரது துன்பக் கதிர்களைத் தங்கள் பக்கம் உறிஞ்சி இழுத்துக் கொண்டு அனுப்புவார்கள். இதனாலேயே அவர்களைத் தரிசிப்பவர்களில் பலரும் மனம் லேசாகிப் போனது போலவும், பரவசத்தை அடைந்ததாகவும் உணர்வார்கள். இப்படியான அனுபவத்தை காஞ்சி மகா முனிவர் ஆயிரக் கணக்கானோருக்கு அளித்துள்ளார். பாபாக்களும் பலருக்கு அளித்துள்ளனர். சிலர் இந்த பாபாக்களிடம் சீடர்களாகி, பல யோக ரகசியங்களையும் கற்றுள்ளனர். பல கோடி ரூபாய் சொத்து இருப்பதைவிட மேலானது, ஒரு யோகத்தை முழுவதுமாகக் கற்று வைத்திருப்பது. அதே நேரம், பலருக்கு இவர்கள் உபதேசிப்பது இல்லை. சம்பந்தப்பட்டவர்களால் கற்க முடியாது என்பது ஒருபுறம்; கற்க முடிந்தாலும் அதை அவர்கள் நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதுவும் ஒரு முக்கியக் காரணம்.
ஒருமுறை, பாபா ஒருவரிடம் தனக்கு யோகம் கற்றுத்தர வேண்டினார் ஒருவர். பாபாவும் அவருக்குக் கற்றுத் தர முன்வந்தார். முன்னதாக, அவருக்கு மூன்று கட்டளைகள் இட்டார். முதல் கட்டளை- ஆயிரம் பேருக்குக் குறைவின்றி அன்னதானம், அடுத்ததாக, ஏழைப் பெண்ணுக்குத் தாலி வாங்கித் தந்து, திருமண உதவி செய்வது, 3-வது வைதீக பிராமணர்களுக்கு வஸ்திர தானம் தந்து, அவர்களின் ஆசியைப் பெறுவது. தவிர, ஏழு நதிகளில் நீராடி, பசு மாட்டுக்குக் கீரையும், காக்கைக்கு அன்னமும் வழங்கிவிட்டு வரும்படி கூறினார்.
பாபா ஏன் இப்படிக் கூறினார் என்பதன் பின்னே பெரும் சூட்சுமம் உள்ளது!
(அடுத்த இதழில் நிறைவுறும்)