Published:Updated:

திருமூர்த்திமலை ஸ்ரீஅமணலிங்கேஸ்வரர் கோயில்

விரலி மஞ்சளும் வரடிக்கல்லும்!

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றும் சிறப்புப் பெற்ற திருத் தலங்களில், திருமூர்த்திமலை ஸ்ரீஅமணலிங்கேஸ்வரர் தலமும் ஒன்று! திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டைக்குத் தெற்கே, ஆனைமலைத் தொடரில் திருமூர்த்தி அணைக்கு அருகில் உள்ளது இந்த ஆலயம். இந்தத் தலத்தில் சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் அருள்பாலிக்கின்றனர் என்பது சிறப்பு.

திருமூர்த்திமலை ஸ்ரீஅமணலிங்கேஸ்வரர் கோயில்

குன்றையே சிவமாகவும் கோயிலாகவும் போற்றுகின்றனர் பக்தர்கள். இது குடவரைக் கோயில். இந்தத் தலத்தின் நாயகனாம் சிவனாருக்கு மும்மூர்த்தி ஆண்டவன், திருமூர்த்தி, தெற்குசாமி, கஞ்சிமலையான், தென்கைலாசமூர்த்தி எனப் பல திருநாமங்கள்!

அத்திரி மகரிஷி, தம் துணைவியார் அனுசூயா வுடன் வாழ்ந்து, தவம் செய்த பூமி இது. மூன்று தெய்வங்களைக் குழந்தைகளாக்கி, அனுசூயா பாலூட்டிய தலம் இது என்கிறது ஸ்தல புராணம். மலையில், அருவிப் பகுதியில் பஞ்ச லிங்கம் உள்ளது. அத்திரி மகரிஷியும் அனுசூயாவும் தினமும் வந்து,  பூஜித்துச் செல்கிறார்கள் என்பது நம்பிக்கை!

மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும் மாங்கல்ய தோஷம் விலகவும் விரலி மஞ்சளால் சப்த கன்னியருக்கு பூஜைகள் செய்வது மிகுந்த பலனைத் தரும். இங்கே உள்ள தோணி நதியில் நீராடி, ஸ்ரீஅமணலிங்கேஸ்வரரை மனதாரப் பிரார்த்தனை செய்தால், பஞ்ச பூத தலங்களில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள். ஸ்ரீவிநாயகப்பெருமானுக்கு அருகில் உள்ள வரடிக் கல்லின்மீது தேங்காய் மற்றும் பழம் வைத்து வழிபடுகிற சடங்கும் இங்கே பிரசித்தம்!

திருமூர்த்திமலை ஸ்ரீஅமணலிங்கேஸ்வரர் கோயில்
திருமூர்த்திமலை ஸ்ரீஅமணலிங்கேஸ்வரர் கோயில்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து இந்தப் பிரார்த்தனையை செய்து பலன் பெற்றுள்ளதை விவரிக்கிறார் கோயில் குருக்கள். கல்வி, நல்ல வேலை, மன நிம்மதி ஆகியவற்றுக்காகவும் இங்கு வந்து வேண்டிச் செல்கிறார்கள் பக்தர்கள்.  சிவனார் ஞான குருவாகத் திகழும் தலம் என்ப தால், ஸ்ரீதட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்புற நடை பெறுகிறது. நினைத்தது நிறைவேற, வெளிப்புற பாறையில் திகழும் மும்மூர்த்தியர் போன்ற திருவுருவங்களின் நெற்றியில் பதியும்படி, சந்தன உருண்டையைத் தூக்கிப் போட்டுப் பிரார்த்திப்பதும் நடைபெறுகிறது.

மகா சிவராத்திரி, ஆடி அமாவாசை, மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

- மா.அ.மோகன் பிரபாகரன்

படங்கள்: மு.சரவணக்குமார்

அடுத்த கட்டுரைக்கு