Published:Updated:

காலக் கணிதத்தின் சூத்திரம்!

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்! சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்!

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்! சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளில் ஒன்றில் லக்னம் அல்லது சந்திரன் 'குரு த்ரிம்சாம்சகத்’தில் இருக்கும் வேளையில் பிறந்தவள் குணக் குன்றாகத் திகழ்வாள். ஒற்றைப்படை ராசியில், 10-க்கு மேல் 18 பாகைகள் வரை குரு த்ரிம்சாம்சகம் இருக்கும். இரட்டைப் படை ராசியில், 12-க்கு மேல் 20 பாகைகள் வரை இருக்கும்.

இரண்டு ராசிகளிலும் 10-க்கு மேல் 20 பாகைக்குள் குரு த்ரிம்சாம்சகம் இருப்பதால், இரண்டு ராசிகளிலும் 2-வது த்ரேக்காணம் அதில் இணைந்துவிடும். ராசியை மூன்றாகப் பிரித்தால், முதல் த்ரேக்காணம்- 10 பாகை வரை; இரண்டாவது- 20 வரை; மூன்றாவது- 30 வரை. இதை ஆத்ய த்ரேக்காணம், மத்ய த்ரேக்காணம், ஆந்த்ய த்ரேக்காணம் என்று குறிப்பிடுகிறது ஜோதிடம். தமிழில் முதல், நடு, கடைசி என்று எடுத்துக்கொள்ளலாம்.

காலக் கணிதத்தின் சூத்திரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹோரையில்... ஒற்றைப்படை ராசியில் சூரியனும், 15-க்கு மேல் 5 பாகைகள் சத்திரனின் பங்கும் இணைந்துவிடும். இரட்டைப்படை ராசியில் சந்திரனும், 15-க்கு மேல் 6 பாகைகள் சூரியனின் பங்கும் இணைந்துவிடும்.

ராசியில் முதல் 10 பாகைகளுக்கு (முதல் த்ரேக்காணத்தில்) அந்த ராசியின் அதிபதி பொறுப்பேற்பான். 10 முதல் 20 பாகைகளுக்கு  (2-வது த்ரேக்காணத்தில்) அந்த ராசியின் ஐந்துக்கு உடையவன் அதிபதியாவான். 20 முதல் 30 வரையிலான பாகைகளுக்கு (3-வது த்ரேக்காணத்தில்) அந்த ராசியின் 9-வது ராசிக்கு உடையவன் அதிபதியாவான். இங்கு, 2-வது த்ரேக்காணத்துக்கு ஐந்துக்கு (பூர்வபுண்யம்) உடையவன் பொறுப்பு ஏற்கிறான்.

ரிஷபம் - துலாம் இரு ராசிகளுக்கும் தலைவன் சுக்கிரன் (30 பாகைகளையும் தன் வசம் வைத்தவன்). ஹோரையில் சூரியனும் சந்திரனும் பங்கு பெறுவார்கள். த்ரேக்காணத்தில் ஐந்தாவது ராசிக்கு உடையவர்... அதாவது பூர்வபுண்ய ஸ்தானாதிபதி பங்கு பெறுவார். த்ரிம்சாம்சகத்தில் குரு பங்கு பெறுகிறார்.

ராசி தட்பக்கிரகம் அதாவது சுக்கிரன். ஹோரையின் தட்பக்கிரகம் சந்திரன். த்ரேக்காணத்தில் வெப்பதட்ப கிரகம் எதுவானாலும் த்ரிம்சாம்சக அதிபதிக்கு வளைந்து கொடுக்கும் கிரகமாக மாறிவிடும். ரிஷபத்துக்கு த்ரேக்காணாதிபதி புதன் - தட்பக்கிரகம். துலாத்துக்கு த்ரேக்காணாதிபதி சனி - வெப்பக்கிரகம்.

க்ஷேத்ரம், ஹோரா, த்ரேக்காணம், த்ரிம்சாம்சகம் ஆகியவற்றில் சனியைத் தவிர மற்றவை அதாவது சுக்கிரன், சந்திரன், குரு ஆகியோர் தட்பக் கிரகங்கள். குரு த்ரிம்சாம்சகத்தில் உதயமானவளை, இந்த மூன்று தட்பக்கிரகங்களின் தாக்கம் நல்ல குணம் படைத்தவளாக மாற்றிவிட்டது. ரிஷபத்தின் உழைப்பு, பொறுமை, தியாகம், செழிப்பு ஆகியனவும், துலாத்தின் நாகரிகம், சட்டத்துக்கு உட்படுதல், சீர்தூக்கிப்பார்த்தல், ஆண்மை, ஆற்றல், இரக்கம் ஆகிய பண்புகளும் இணையும்போது, பிறரை ஈர்க்கும் குணங்கள் அவளிடம் குவிந்துவிடுகிறது. 5-க்கு உடைய புதன் (2-வது த்ரேக்காணாதிபதி), விவேகத்தையும் இணைந்து செயல்படும் பாங்கையும் சேர்த்துவிடுகிறான்.

துலாத்துக்கு பூர்வபுண்ய ஸ்தானாதிபதி சனியாக இருந்தாலும்,  5-க்கு உடையவன் ஆகையால் நல்லவனாகிவிடுவான். 9-க்கு உடையவன், ஐந்தின் ஐந்து- 'பாவாத் பாவம்’ என்ற கோணத்தில் (9-மிதுனம்) புதனின் இயல்பு மற்றவர்கள் இயல்புடன் இணையும் பாங்கை பெற்றுவிடுகிறது. வெப்ப கிரகத்தின் தாக்கத்தை செயல் இழக்க வைத்துவிடுகிறது. 1, 5, 9 என்கிற த்ரேக்காணம் லக்னத்துக்கு ஒப்பாகக் கருதப்படும் என்கிறது ஜோதிடம். 1 - பிறந்த வேளை அதாவது அவனது இயல்பு. 5- முற்பிறவியில் சேமித்த கர்மவினை. 9 - அதன் செழிப்பின் அல்லது இழப்பின் அளவு. இதைக் கண்ணுற்றால் இந்த மூன்று ராசிகளும் (1,5,9) ஒன்றுக்கொன்று இணைந்து பலனை இறுதி செய்வதில் முனையும். தனித்தன்மையைத் தூக்கலாகக் காட்டாது.

த்ரிகோண ராசிகளில் (1, 5, 9) நட்சத்திரங்களை ஒரே வரிசையில் பார்க்கும் முடிவை, 'ரஜ்ஜு’ என்று- பொருத்தங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது ஜோதிடம். 1, 5, 9 ராசிகளில் வரும் இரண்டேகால் நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று ரஜ்ஜுவாக... அதுவும் ஒரே ரஜ்ஜுவாக சுட்டிக்காட்டப்படுவதில் இருந்து, இந்த த்ரிகோணம் என்ற தகுதி, பிறந்தவன் (1), பூர்வ புண்ணியம் (5), அதன் அளவு (9) என்பதெல்லாம் பொருள் படைத்ததாக மாறிவிடுகிறது. 1, 5, 9 என்ற த்ரிகோண ராசிகள், அவனது வாழ்வில் சந்திக்கப் போகும்- தசாபுக்தி அந்தரங்களில் அனுபவிக்கும் சுக, துக்கங்களுக்கு அஸ்திவாரமாக மாறிவிட்டன எனலாம்.

காலக் கணிதத்தின் சூத்திரம்!

முதல் 4 ராசிகளில் நட்சத்திரங்களை அடக்கி அதற்கு பலன் சொல்லும் முறையில்... மீதமிருக்கும் இரண்டு 'நான்கு’ ராசிகளுக்கும், இரண்டு 'ஒன்பது’ நட்சத்திரங்களுக்கும் அதே பலனை சேர்த்துள்ளதைக் கவனித்தால் ஒரு விஷயம் தெரியவரும். அதாவது,  முதல் 'நான்கு’ ராசிகளில் முழு பலனை விளக்கியாகிவிட்டது. மற்ற இரண்டு 'நான்கு’ ராசிகளின் பலன் இதிலேயே அடங்கிவிட்டது என்பது விளங்கும். அதனால் நான்கு நான்காக எண்ணிக்கையை வைத்து, மாஹேந்திரப் பொருத்தம் உருவானது. நான்கு எனும் எண்ணிக்கையை (ராசிக்கு) வைத்து 'கேந்திர’மும் உருவானது. கேந்திரமும், த்ரிகோணமும் சேர்ந்து இணைந்த கிரகத்துக்கு 'யோக காரகன்’ எனும் தகுதியை அளிக்கும் ஜோதிடம். யோகம் என்றால் சேர்க்கை; காரகம் என்றால் செய்பவன். அதாவது, 'சேர்க்கையில் நன்மை செய்பவன்’ என்று பொருள்.

கடக லக்னத்துக்கும் சிம்ம லக்னத்துக்கும் யோக காரகன் செவ்வாய். ஒரு கேந்திரத்துக்கும், ஒரு த்ரிகோணத்துக்கும் செவ்வாய் அதிபதியாக மாறிவிடுகிறார். விருச்சிகத்துக்கும், மேஷத்துக்கும் செவ்வாய் அதிபதி. இந்த இரண்டு ராசிகளுக்கும் செவ்வாய் 5, 10 ஆகவும் (5- த்ரிகோணம்; 10- கேந்திரம்), 4, 9 ஆகவும் (4- கேந்திரம்; 9-த்ரிகோணம்) மாறிவிடுகிறார். அதுபோன்று மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு சுக்கிரன் யோககாரகனாக மாறி விடுகிறார்.

வெட்பதட்ப கிரகங்கள் எதுவானாலும் யோககாரகனாக மாறினால் நன்மையை மட்டுமே செய்யும் கிரகமாக மாறிவிடும். சூரியனிடமிருந்து வலமாகவும், சந்திரனிடமிருந்து இடமாகவும் செவ்வாயும் சுக்கிரனும் {(4-9), (5-10)} அமைவதைக் கவனிக்க வேண்டும். சூரியன்- ஆன்மா, சந்திரன் - மனம். இந்த இரண்டோடும் துல்லியமான தொடர்பு செவ்வாய்க்கும் சுக்கிரனுக்கும் இருப்பது, யோககாரக அந்தஸ்தை எட்டவைத்தது. அதை அளிக்கும் தகுதி 1,5,9 என்ற த்ரிகோணத்துக்கு உண்டு.

இதிலிருந்து... மூன்று த்ரேக்காணங்களில் முதல் த்ரேக்காணாதிபதி - ராசியின் அதிபதி (1). இரண்டாவது த்ரேக்காணாதிபதி - 5-க்கு உடையவன் (5). மூன்றாவது த்ரேக்காணாதிபதி 9-க்கு உடையவன் (9). இப்படி த்ரிகோணதிபதியை சுட்டிக்காட்டுவதைக் கவனிக்க வேண்டும்.

தசைகளை வரிசைப்படுத்துவதிலும், 1-5-9 ராசிகளில் அந்தந்த நட்சத்திர வரிசைகள் இணைந்துவிடும் (அஸ்வினி, மகம், மூலம்- 1, 5, 9 ராசிகளின் முதல் நட்சத்திரம்). இப்படி, த்ரேக்காணம் என்ற பெயரில், ராசியை மூன்றாக வகுத்து பலன் சொல்லும் முறையானது, அத்தனை ராசிகளிலும் நட்சத்திரங்களிலும் பரவி... 1-5-9 அதாவது, 1- அவன்; 5- அவன் சேமித்த கர்ம வினை; 9- அதன் அளவு என்பது, ஜோதிடத்தில் முக்கியத்துவம் பெறும் ராசியாக மாறிவிட்டது. இங்குதான், கிரகங்களின் பாகுபாட்டை மறந்து ராசியின் பெருமைகள் தங்களது பங்கை இணைத்து, பலனில் மாறுபாட்டை விளைவிக்க காரணமானது. ஜோதிடத்தின் விளக்கங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து இறுதி பலனை நிர்ணயிக்கும் என்ற தத்துவம் கவனத்துக்கு உரியது.

குரு த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவளை நல்ல குணமுடையவள் என்று சுட்டிக்காட்டும் (சுகுணா...). சுக்கிரன் வெப்ப கிரகத்தோடு இணையாமல் இருந்தால் சுபக் கிரகம். புதனும் அப்படியே. சந்திரன் வளர் பிறையில் சுபர்; நல்ல பலத்தை அளிப்பார். தேய் பிறையில் கெடுதலுக்கு ஊக்கமளிப்பார். சுக்கிரன், புதன், சந்திரன் இந்த மூன்றும் தட்ப கிரகங்களானாலும் (சுபக் கிரக), என்றும் எப்போதும் சுபராக நிலைத்திருப்பதில்லை. பாபக் கிரகத்தின் சேர்க்கையில் கெட்டவர் ஆவார்கள். தேய்பிறையில், சந்திரன் சூரியனின் நெருக்கத்தில் கெட்டவராவார். குரு மட்டும் எந்தச் சேர்க்கையிலும், தனது இயல்பை முழுமையாகத் தக்கவைத்து, நல்ல பலனை ஏற்க வைப்பார். குருவின் தனிப்பெருமையின் வெளிப்பாடுதான்... 'குரு கோடி தோஷத்தை அகற்றுவார்’, 'குரு பலன் திருமணத்தை (சுப) வரவழைக்கும்’, 'குரு பார்வை மகிழ்ச்சியை அளிக்கும்’, 'குரு சேர்க்கை தோஷத்தை அழித்துவிடும்’ ஆகிய சொற்றொடர்கள்.  

காலக் கணிதத்தின் சூத்திரம்!

குரு த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவளை குணக்குன்று என்று சொல்லும் விதம்... ராசி, ராசிநாதன், ஹோரை நாதன், த்ரேக்காண நாதன், ராசியின் இயல்பு ஆகிய அத்தனையும் இணைந்த குரு த்ரிம்சாம்சகம் பலனை இறுதி செய்கிறது.

இப்படியிருக்க, ராசியோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாத ராகு- கேதுக்களை முன்னிறுத்தி பலன் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. இரண்டு சுவைகளின் சேர்க்கையில் இயல்பு தடம் மாறிவிடும். இனிப்பின் சேர்க்கை மற்ற சுவைகளின் இயல்பை அழுத்தி, தனது சுவையை அடையாளம் காட்டும். நார்த்தங்காயின் கசப்பு மற்ற சுவைகளையும் தாண்டி, ஏப்பம் விடும்போது வெளிப்படும். குரு மற்ற கிரகங்களின் சேர்க்கையில் தனது இயல்பை அளித்து, அதன் இயல்பை ஏற்கும். குருவும், சனியும் இணைந்தால்... தனது (குரு) இயல்பு சனியில் ஊடுருவும்போது, வெப்ப கிரகத்தின் உக்கிரத்தைத் தணித்து விடுவதாலும், தான் ஏற்ற வெப்ப கிரகத்தின் தாக்கத்தை அடக்கிவிடுவதாலும், குருவின் தனித்தன்மை குறையாமல் இருக்கும்.

நன்மையைச் செய்பவராகவும், நல்லதை அளிப்பவராகவும் குருவை சித்திரிப்பது, அவர் இயல்பின் பெருமை. சுக்கிரன், புதன், சந்திரன் - இவற்றில், வெப்பக் கிரகத்தின் சேர்க்கையில் இயல்பு இடம் மாறும்போது, வெப்பக் கிரகத்தின் தாக்கமானது தட்பக் கிரகத்தின் இயல்பை தலைகாட்டாமல் செய்துவிடுகிறது!

வெப்பத்தை அடக்கி, அதன் தாக்கம் இல்லாமல் செய்து, தனது இயல்பை செயல்படுத்தி, நன்மையை அளிப்பவராக குருவை வரையறுக்கிறது ஜோதிடம். அப்படியொரு கிரகம் இல்லாமல் இருந்தால், வெப்பக் கிரகத்தின் தாக்கத்தில் துயரம் மட்டுமே அனுபவத்துக்கு வரும் என்று சொல்ல வேண்டி வரும். முற்பிறவியில் சேமித்த நல்ல பலன்களை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விடும். அது, ஜோதிடத்தின் அடிப்படை தத்துவத்தையே அசைத்துவிடும்.

ராசிகளின் அடையாளங்கள் வெறும் குறியீடு அல்ல. தனது பெருமையால் அதில் அமர்ந்திருக்கும் கிரகத்தின் இயல்பை மாற்றியமைக்கும். துலா லக்னம். மேஷத்தில் செவ்வாய் (7-வது ராசியில்). இங்கு மேஷ ராசியானது, தன் அதிபனாக இருக்கும் செவ்வாயை நல்லவனாக மாற்றிவிடும். பாவத்துக்கு உடையவன் அந்த பாவத்தை அழிக்க மாட்டான்; செழிப்பாக்குவான் என்று ஜோதிடம் விளக்கும் (பாவாதிபதௌ பாவவிருத்தி:).

புருஷ ஜாதகம். துலா லக்னத்துக்கு 7-ல் மேஷத்தில் இருக்கும் செவ்வாய், 'செவ்வாய் தோஷம்’ என்று நடுங்கவைக்கும் நடைமுறை ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லாதது. மகர லக்னம். அதன் ஏழு கடகம். அங்கு சனியும் செவ்வாயும் இருந்தால், இரண்டு வெப்பக் கிரகத்தின் சேர்க்கையில் அக்னிமாருத யோகம் தோன்றி அந்த பாவத்தை... அதாவது, மனைவியை அழிப்பான் என்று விளக்காது. மாறாக, 'நல்ல மனைவி கிடைப்பாள்’ என்று பலனை மாற்ற கடக ராசியின் தன்மை காரணமாவது உண்டு (அமிநதாம்சுராசி ஸம்ப்ராப்தயோ:).

காலக் கணிதத்தின் சூத்திரம்!

புருஷ ஜாதகம்- கன்னி லக்னம். அதன் ஏழு மீனம். மீனம் நீர் ராசி. இரு மீன்கள் ஒன்றையொன்று பின்தொடர்ந்து விழுங்குவது போன்று வலம் வந்துகொண்டிருக்கும். இந்த ராசிக்கு உடையவர் குரு. பாவத்துக்கு உடையவர் பாவத்தில் இருந்தால், பாவம் செழிக்கும் என்று சொல்லாது ஜோதிடம். இங்கு, குரு அந்த பாவத்தை அதாவது மனைவியை அழித்துவிடுவார் என்று சொல்லும். கேந்திராதிபத்ய தோஷம் இருப்பதால் மனைவி தங்கமாட்டாள் என்று சொல்லும்.

ஓரிடத்தில் நடைமுறைக்கு வந்த கோட்பாடு, எல்லா இடத்துக்கும் பொருந்தாது. அதன் தரம், அதன் வலிமை, அதன் ஷோடச பலம் போன்றவை ஆராயப்படும்போது, கோட்பாடு மாறுவதும் உண்டு. இங்கு, கன்னி லக்னாதிபதி புதன். 4-க்கு உடையவர் குரு; 7-க்கு உடையவர் குரு. 4-க்கும், 7-க்கும் உடையவர் குருவே ஆவார். புதனும் குருவும் பகை. பகைவன் லக்னத்தைப் பார்க்கிறார். புதன் தனது நீச ஸ்தானத்தை, பகைவன் ராசியைப் பார்க்கிறார். இருவரும் பாராமுகமாக இருப்பதால், மீனம் ராசி தனக்கு வலுவிழந்த ராசியானதால், தான் எட்டவேண்டிய தாம்பத்தியத்தை அடைய இயலாமல் போனது. குரு பகைவன் ஆனதால், அவருக்கு எட்டவிடாமல் செய்யும் முயற்சியில் வெற்றி பெறுகிறார். இங்கு ராசியின் பங்கு பலனை மாற்றியமைக்கிறது.

நட்பு-பகை என்பதை ஒரு பொருட்டாக எடுக்காமல் இருந்தால் ஏமாந்துவிடுவோம். ஜோதிடத்தில் சின்ன சின்ன விளக்கங்களும் பலனை இறுதி செய்வதில் பங்காற்றும். கேள்வியறிவு, மொழிப் பெயர்ப்பு தகவல், ஜோதிட விளக்க உரைகள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு ஜோதிடத்தில் இறங்கினால் கரையேற இயலாது. பாமர ஜனங்களின் அங்கீகாரம் என்பது ஜோதிடனுக்கு அளவுகோல் ஆகாது. இங்கு, பிறந்தவனின் குணாதிசயத்தை இறுதி செய்ய ராசியின் ஒரு பகுதியான த்ரிம்சாம்சகம் தனிச் சிறப்பைப் பெறுகிறது.பதினாறு விதமான பலனை ஒதுக்கி, பலன் சொல்ல நினைத்தால் உண்மையை வெளிக்கொண்டு வரும் முயற்சி கானல் நீராகிவிடும்.

ஓர் ஆசிரியரிடம் முறையாகப் பயின்று, அதன் தத்துவத்தை உள்வாங்கி மக்கள் சேவையில் ஈடுபட்டால், ஜோதிடமும் பிழைக்கும்; மக்களும் பிழைப்பார்கள். அந்த நாள் வரவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்ள வேண்டும். சீர்திருத்தவாதிகள் நிறைய தோன்றியிருக்கிறார்கள். ஆனால், மக்கள் துயரத்தைத் துடைக்கும் சீர்த்திருத்தவாதி தோன்ற வேண்டும்.

மனத்தை துயரத்திலிருந்து விடுவிப்பவன் ஜோதிடன். அதைப் படித்த அறிஞர்கள் நிறைய வளரவேண்டும். அவர்களை வளர்க்கப் பாடுபட வேண்டும். பழம்பெரும் ஜோதிடப் பொக்கிஷங்கள் பலவும் மறைந்துவிட்டன. இருப்பதை அறிந்துகொண்டு காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டும். அப்படித்தான் நம் முன்னோர் செயல்பட்டார்கள். ஆகவே, நுனிப்புல் மேயாமல் ஆழமாக ஆராய்ந்து, விளக்கங்களைப் பெற்று மக்களுக்கு அளிக்க வேண்டும்.

- சிந்திப்போம்...