Published:Updated:

ஆலயம் தேடுவோம்

காரைச் சித்தர் வழிபட்ட கோயிலில் கும்பாபிஷேக விழா எப்போது? நாகரசன்பேட்டை ஸ்ரீநாகநாத ஸ்வாமி கோயில்எஸ்.கண்ணன் கோபாலன்

ஆலயம் தேடுவோம்

காரைச் சித்தர் வழிபட்ட கோயிலில் கும்பாபிஷேக விழா எப்போது? நாகரசன்பேட்டை ஸ்ரீநாகநாத ஸ்வாமி கோயில்எஸ்.கண்ணன் கோபாலன்

Published:Updated:

'தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்பதற்கு ஆதர்சமாகத் தென்னாட்டில்தான் எத்தனை எத்தனை சிவாலயங்கள்!

ரிஷிகள் வழிபட்டது, முனிவர்கள் வழிபட்டது, சித்தர்கள் வழிபட்டது, சுயம்புவாகத் தோன்றியது, மன்னர்கள் நிர்மாணித்தது என்றெல்லாம் எண்ணற்ற பல சிவ ஸ்தலங்கள் தென்னாட்டில் மட்டுமல்லாது, நம் பாரத தேசம் எங்கும் அருளளி பரப்பித் திகழ்கின்றன. புராதனமான அத்தகைய ஆலயங்கள் காலப்போக்கில் சிதிலம் அடைவதும், மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பெற்று பொலிவு பெறுவதும்கூட நடைமுறையில் நாம் பார்க்கவும், கேட்கவும் கூடிய விஷயம்தான்.

புராதன ஆலயங்கள் ஒருகட்டத்தில் சிதிலம் அடைந்துவிட்டாலும், காலம் காலமாக வேத மந்திரங்கள் ஒலிக்க பூஜைகள் நடைபெற்றதன் காரணமாக, பிரபஞ்ச வெளியில் கலந்துவிட்ட இறை சாந்நித்தியமானது, உரிய காலத்தில் எவரையேனும் கருவியாகக் கொண்டு, அத்தகைய ஆலயங்களைப் புனர் நிர்மாணம் செய்ய வைத்து, நின்றுபோன பூஜைகளும் வழிபாடுகளும் மீண்டும் தொடர்ந்து நடைபெறும்படியாகச் செய்துவிடுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்படி ஓர் அற்புத ஆலயம்தான், இப்போது நாம் தரிசித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீநித்ய கல்யாணசுந்தரி சமேத ஸ்ரீநாகநாத ஸ்வாமி திருக்கோயில்.

ஆலயம் தேடுவோம்

கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள நாகரசன்பேட்டையில் அமைந்துள்ள இந்த ஆலயம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. அந்தக் காலத்தில் சேஷகணேசபுரம் என்ற பெயரில் அழைக்கப் பெற்று வந்த இந்தத் திருத்தலம், பின்னர் நாகரசபுரம் என்று அழைக்கப்பட்டு, தற்போது நாகரசன்பேட்டை என்று வழங்கப்படுகிறது.

''இங்குள்ள இறைவன் மிகுந்த வரப்ரசாதி. இத்தலத்துக்கு வந்து நாகநாத ஸ்வாமியை வழிபட்டால், விஷப் பாம்புகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அது மட்டுமில்லாமல், நாகதோஷத்தால் புத்திரபாக்கியம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீநாகநாத ஸ்வாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டால், நாக தோஷம் நிவர்த்தியாகி, புத்திர பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்'' என்கிறார் ஆலயத் திருப்பணிகளை முன்னின்று கவனித்து வரும் சந்திரசேகரன்.

மூன்றாவது தலைமுறையாக இந்தத் திருக்கோயிலில் பூஜைகள் செய்து வரும் ஷண்முகசுந்தர சிவாச்சார்யர், ''அம்பாள் நித்ய கல்யாணசுந்தரி. இவள் தன் பெயருக்கு ஏற்ப, பெண்களின் திருமணத் தடையைப் போக்கி, மனம் நிறைந்த குடும்ப வாழ்க்கையை அருள்வாள். பல்வேறு காரணங்களால் திருமணம் தடைப்பட்டுக் கொண்டி ருக்கும் பெண்கள், அம்பிகைக்கு ஒரு மண்டலம் நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொண்டால், நல்ல பண்புள்ள கணவனை அடைவார்கள்'' என்று குறிப்பிட்டார்.

''இந்தக் கோயிலுக்கு முன்பாக இருந்த வெளவால் நந்தி மண்டபத்தின் அமைப்பைக் கொண்டுதான், இந்த ஆலயம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதாகத் தெரிய வந்தது. அந்த மண்டபம் தற்போது இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு இடிந்துவிட்டது'' என்கிறார், நாகரசன்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், ஆலயத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருப்பவருமான சரவணன்.

இந்தக் கோயிலில் ஸ்ரீநாகநாத ஸ்வாமியுடன், ஸ்ரீஜ்வரஹரேஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்புரியும் இறைவனையும் நாம் தரிசிக்கலாம். கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்கள், மிளகு ரசம் வைத்து, ஸ்ரீஜ்வரஹரேஸ்வரருக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாகப் பருகினால், எப்பேர்ப்பட்ட கடுமையான காய்ச்சலும் விரைவில் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

ஆலயம் தேடுவோம்

ஆலயம் சிதிலமடைந்த நிலையிலும்கூட, ஷண்முகசுந்தர சிவாச்சார்யரின் தகப்பனார் நாகமணி குருக்கள், பாட்டனார் நடராஜ குருக்கள் ஆகியோரால் இரண்டுகால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தன.  கோயிலைப் பற்றி இன்னொரு சுவாரஸ்யம்... சித்த புருஷர் ஒருவர், இந்தக் கோயிலை வழிபட்டு அருள் பெற்றுள்ளார்.

நாகரசன்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீகாரைச் சித்தர் என்பவரே அந்த மகான். 1918-ல் அவதரித்த ராகவன் என்பவரே பின்னர் ஸ்ரீகாரைச் சித்தராகி, பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார். ஸ்ரீநித்ய கல்யாணசுந்தரியின்மீது அதீத பக்தி கொண்டிருந்த இவர் அருளிய 'கனக வைப்பு’ என்ற பாடல்திரட்டில், இத் தலத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், 'சேஷகணேச புரத்தினிலே சித்தருளை தரிசித்தேனே’ என்றும், 'நாகரஸம் பேட்டையிலே நான் கண்டுய்ந்த ஞானரஸக் கோட்டையினை நாட்டுவேனே’ என்றும் போற்றிப் பாடியுள்ளார்.

ஸ்ரீகாரைச் சித்தரின் பாடல் பெற்ற இத்திருக்கோயில் எத்தனை காலம்தான் சிதிலமடைந்து இருப்பது? தம்மிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த ஸ்ரீகாரைச் சித்தர் வழிபட்ட ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட வேண்டும் என்று அம்பிகை திருவுளம் கொண்டாள். அதற்கான முதல் கருவியாக அவள் கொண்டது ஆர்.நாகராஜன் என்பவரைத்தான்.

நாகராஜன், காரைச் சித்தரிடம் இந்தக் கோயிலின் வரலாறு பற்றி ஒருமுறை கேட்டபோதுதான், இது மிகப் பழைமையான கோயில் என்பதும், நாகர்களால் வழிபடப்பெற்றது என்பதும் தெரியவந்தது. 500 வருடங்களுக்கு முன்பு ஞானகுரு தீர்த்த சித்தர் என்பவர், அப்போது சேஷ கணேசபுரம் என்று அழைக்கப்பெற்ற நாகரசன் பேட்டைக்கு வந்திருந்தார்.

அப்போது, முழுவதுமாகச் சிதிலமடைந்து கிடந்த கோயிலுக்கு எதிரே ஒரு குழந்தை படுத்திருப்பதையும், நாகம் ஒன்று குழந்தை யின் அருகில் வந்து படமெடுத்து, சில நிமிடங்கள் குழந்தையின் முகத்தைப் பார்த்துவிட்டு, பின்பு வலம் வந்து சென்றதையும் கண்டார். அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்த சித்தர், அது தெய்விக அம்சம் பொருந்திய குழந்தை என்பதையும், சிதிலம் அடைந்திருக்கும் கோயிலை அவனே பின்னாளில் புதுப்பித்துக் கட்டப்போகிறான் என்பதையும் தம் ஞானதிருஷ்டியால் அறிந்தார். குழந்தையின் தாயிடம் சென்று, தாமே அந்தக் குழந்தையை அங்கேயே வளர்ப்பதாகக் கூறினார். வறுமையில் கஷ்டப்பட்ட தாயும் அதற்குச் சம்மதித்தாள். சில வருடங்களில் அந்தத் தாய் இறந்துவிட, அந்தக் குழந்தை ஞானகுரு தீர்த்த சித்தரின் முழுப் பராமரிப்பில் வளர்ந்துவந்தது. ஞானகுரு தீர்த்த சித்தரால் வளர்க்கப் பெற்ற அந்தக் குழந்தைதான் வல்லவச் சித்தர் என்ற சித்த புருஷர் ஆவார். அவர்தான் 500 வருடங் களுக்கு முன்பு சிதிலம் அடைந்து காணப்பட்ட ஸ்ரீ நாகநாத ஸ்வாமி கோயிலைப் புதுப்பித்துக் கட்டியவர்.

வல்லவச் சித்தரின் குருவான ஞானகுரு தீர்த்த சித்தரின் சமாதி, நாகரசன்பேட்டையில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள சாந்தவெளி என்ற ஊரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அமைந்துள்ளது.      

ஆலயம் தேடுவோம்

ஸ்ரீகாரைச் சித்தர் தினசரி ஸ்ரீநித்ய கல்யாணசுந்தரி அம்பாளை லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்து வழிபட்டபோது, உடன் இருந்து தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர் ஆர்.நாகராஜன். அவரையே தன் திருக் கோயில் திருப்பணிக்கு முதல் கருவியாகக் கொண்டாள் அம்பிகை.

''எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே கோயில் சிதிலமடைந்து இருந்தது. 1965-ம் ஆண்டு, ஒரு பௌர்ணமி நாளில் ஸ்ரீலலிதா சஹஸ்ர நாமம் பாராயணம் செய்து அம்பாளை வழிபட்டேன். அப்போது ஏதோ ஓர் உள்ளுணர்வு என்னைத் தூண்ட, கருவறைக்கு ஓடிச் சென்று பார்த்தேன். அம்பாளுக்குப் பின்புறச் சுவரில் இருந்த ஒரு பொந்தில், ஏதோ ஒரு பொருள் துருத்திக்கொண்டிருந்தது. அதை வெளியில் எடுத்துப் பார்த்தேன். அது ஸ்ரீசக்ரம். அதை அம்பாளின் சந்நிதியிலேயே பிரதிஷ்டை செய்து, பூஜைகள் நடைபெறச் செய்தேன்.

அதன் பிறகும்கூட பல ஆண்டுகள் ஆலயம் அப்படியேதான் இருந்தது. 1992-ம் ஆண்டு, என் தமையனாரின் மகன் சந்திரசேகரன் தன்னுடைய பணிகளுக்கு இடையில், எப்படியாவது திருக்கோயிலை புனருத்தாரணம் செய்துவிட வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்ததில், ஓரளவுக்கு திருப் பணிகள் நடந்தேறி, கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 1993-ம் ஆண்டு, ஆலயத்தில் சதசண்டி ஹோமமும் நடைபெற்றது.

ஆலயம் தேடுவோம்

கோயிலை முழுவதுமாகப் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்துவிடத் தீர்மானித்து, கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஊர் மக்களுடன் கலந்து பேசி, திருப்பணிக் கமிட்டியும் தொடங்கப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன'' என்கிறார் ஆர்.நாகராஜன்.

இந்த ஆலயத்தை நாம் தரிசிக்கச் சென்றபோது ஸ்வாமி, அம்பாள் சந்நிதிகளுடன், ஸ்ரீமஹா கணபதி, ஸ்ரீவள்ளி-தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீஜ்வரஹரேஸ்வரர், ஸ்ரீபைரவர், ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி சந்நிதிகளும் புதுப்பிக்கப்பட்டு இருந்ததைக் கண்டோம். ஸ்ரீதக்ஷிணா மூர்த்தியின் திருவுருவம் கல்லில் வடிக்கப்பட்டதாக இருந்தாலும், செப்பு விக்கிரகம் போல் காட்சி தருகிறது. இன்னும் சுற்றுச்சுவர் எழுப்பி, விமானங்களுக்கு வர்ணம் பூசிவிட்டால், திருப்பணிகள் பூர்த்தியாகி, கும்பாபிஷேகம் நடைபெற்றுவிடும்.

நாகரசன்பேட்டை ஸ்ரீநாகநாத ஸ்வாமி கோயிலின் திருப்பணி என்ற தேரோட்டம் தொடங்கிவிட்டது. அது வெற்றிகரமாக நிலைக்கு வந்து சேர வேண்டாமா? அப்போதுதானே கும்பாபிஷேகம் நடத்த முடியும்?  அற்புதமான இந்தத் தலத்தின் திருப்பணி சீக்கிரமே நிறைவடைய நம்மால் ஆன உதவிகளைச் செய்து, இறையருள் பெறுவோமே!

படங்கள்: கு.கார்முகில்வண்ணன்

எங்கே இருக்கிறது? எப்படிச் செல்வது?

கும்பகோணத்தில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது நாகரசன்பேட்டை. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சேறைக்குப் பேருந்து மூலம் சென்று, அங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள நாகரசன்பேட்டைக்கு ஆட்டோ மூலம் செல்லலாம்.