Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

கல்யாணம் வைபோகமே...வீயெஸ்வி, ஓவியம்: சசி

கலகல கடைசிப் பக்கம்

கல்யாணம் வைபோகமே...வீயெஸ்வி, ஓவியம்: சசி

Published:Updated:

ங்கள வாத்தியம், மாப்பிள்ளை அழைப்பு, காசி யாத்திரை, இடையிடையே ஃபில்டர் காபி அல்லது குளிர்பான உபசரிப்பு, தேடிவந்து குசலம் விசாரித்து உறவைப் புதுப்பிக்கும் சொந்த பந்தங்கள்... இரு மனம் இணையும் திருமண வைபோகத்தில் இப்படியான ரசானுபவங்கள் நிறையவே உண்டு.

ஆனால், சமீபத்திய கல்யாணம் ஒன்றில் இதையெல்லாம் ரசிக்க முடியாமல் செய்துவிட்டது, உடன் வந்திருந்த என் நண்பரின் சலிப்பும் புலம்பலும். முகூர்த்த நேரம். மணமேடையைச் சுட்டிக் காட்டியவர், ''அங்கே பாரும்... இப்பெல்லாம் எல்லாக் கல்யாணங்களிலும் புரோகிதர்கள் உபன்யாசகர்களா மாறிடறாங்க.  தாங்கமுடியலே இவங்க அறுவையை!'' என்றார் கோபமாக.

கலகல கடைசிப் பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் புரியாமல் மேடையை நோக்கினேன். கல்யாணம் நடத்தி வைக்கும் புரோகிதர், கார்டுலெஸ் மைக்கை கையில் பிடித்தபடி, ''எல்லோரும் ஒரு பத்து நிமிஷம் பேசாம அமைதியா இருங்கோ'' என்று சொல்லிவிட்டு, கல்யாணத்தின் சாஸ்திர சம்பிரதாயங்களை விளக்கத் தொடங்கினார். ''சூரிய கிரஹணம், சந்திர கிரஹணம் இதெல்லாம் கொஞ்ச நாழியில அல்லது சில மணி நேரத்துல விலகிடும். ஆனா, பாணிக்கிரஹணம் ஆயுசு முழுக்க இருக்கும்!'' என்று ஜோக் அடித்தவர், கல்யாணத்தின் முக்கியப் பகுதியான சப்தபதியின் தாத்பர்யத்தை விளக்கினார். ''திருமாங்கல்யம் அணிவிக்கிறதைவிடவும் இந்த சப்தபதிதான், மணமக்கள் தாம்பத்திய வாழ்க்கையில அடியெடுத்து வைக்கிறதுக்கான முக்கிய சடங்கு. அதனால, அது முடியற வரைக்கும் யாரும் மேடை ஏறி வந்து, தம்பதிக்குக் கைகொடுக்க வேண்டாம். அப்புறம்... கல்யாணம் நடக்கிற இந்த மேடைங்கிறது ஒரு புனிதமான இடம். அதனால, மேடை ஏறி வர்றவங்க தயவுசெஞ்சு காலணிகளை கீழேயே கழட்டிப் போட்டுட்டு வாங்க!'' என்றார்.

''நல்ல விஷயம்தானே சொல்றார்! இதை ஏன் அறுவைன்னு எடுத்துக்கறீங்க?'' என்றேன் நண்பரிடம்.

''நல்லதாவே இருக்கட்டும்... ஆனா, எதுக்கும் இடம், பொருள், ஏவல் வேண்டாமா? கல்யாணத்தை ரசிக்க விடாம இப்படித்தான் அட்வைஸ் மழை பொழியறதா?'' என்றார் நண்பர் கடுகடுப்புடன்.

''அதுசரி, உங்களுக்குக் கல்யாணம் ஆனது எப்போ?'' என்றேன். ''1983-ல். இந்தியா உலகக்கோப்பையைத் தட்டிச் சென்ற வருஷம் அது!'' என்றார் பெருமிதம் பொங்க.

''பாருங்க... உங்க கல்யாண வருஷத்தை ஞாபகம் வெச்சுக்கவே இன்னொரு விசேஷ சம்பவம் தேவைப்படுது! அப்படித்தான் இதுவும். கல்யாண சம்பிரதாயங்களைப் பற்றி சம்பந்தப்பட்ட இடத்துல சொன் னால்தான், அது பசுமரத்தாணியா மனசுல பதியும். உங்களுக்கும் எனக்கும் வேணா இந்த நடைமுறைகள் தெரிஞ்சிருக்கலாம். ஆனா, தெரியாதவங்க எத்தனையோ பேர் இருக்காங்களே! அவங்களுக்கு இது உபயோகமா இருக்கும் இல்லையா? நல்ல இடத்துல நல்ல விளக்கங்களைச் சொல்றதும் கேட்கிறதும் தப்பில்லையே?'' என்றேன்.

நண்பருக்குப் புரிந்தது. சந்தோஷத்துடன் மணமக்களை வாழ்த்த, அட்சதையைக் கையில் எடுத்தார். அப்போது, வாழ்த்து அட்டை விநியோகித்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன், எங்கள் கையிலும் ஒன்றைத் திணித்தான். அதில் இடம்பெற்றிருந்த பாடல்...

நல்லாரைக் காண்பதுவும் நன்றே, நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே- நல்லோர்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று!