Published:Updated:

நாம் சூரியனை வணங்குகிறோம், சூரியன் யாரை வழிபடுகிறார் தெரியுமா?

நாம் சூரியனை வணங்குகிறோம், சூரியன் யாரை வழிபடுகிறார் தெரியுமா?
நாம் சூரியனை வணங்குகிறோம், சூரியன் யாரை வழிபடுகிறார் தெரியுமா?

சூரியன் இல்லையேல் இவ்வுலகம் இல்லை. பிரபஞ்சமே சூரியனின் கொடையால்தான் இயங்குகிறது. மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகளையும் சூரியனே வழங்குகிறார். அதனால்தான் காலை நீராடிய உடனே சூரியனை வழிபடுகின்றோம். நம்முடைய நன்மைக்காக நாம் சூரியபகவானை வழிபடுகிறோம். ஆனால், நமக்கெல்லாம் நன்மை தருவதற்காக சூரியபகவான் தினமும் யாரை வழிபடுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

வான மண்டலத்தில் இருக்கும் சப்த ரிஷிகளைத்தான் சூரியபகவான் வழிபடுகிறார். விண்ணில் ஏழு ரிஷிகளும் சப்தரிஷி மண்டலமாக நட்சத்திர வடிவத்தில் காட்சி தருகின்றனர்.

காஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கௌதமர், பிருகு, வசிஷ்டர் ஆகிய இந்த எழுவர்தான் சப்தரிஷிகள். இவர்களைப் பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

காஸ்யப மகரிஷி:

காஸ்யபர் சப்த ரிஷிகளுள் ஒருவராவார். இவர் மரீசி முனிவரின் புதல்வர் ஆவார். தேவர் குலம், அசுரகுலம் ஆகிய இரண்டும் இவரிடமிருந்தே தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. மேலும், இவரிடம் இருந்து தோன்றிய மனுவில் இருந்து தோன்றியதே 'மனிதகுலம்' என்றும் நம்பப்படுகிறது. இவர் தட்சனின் 13 குமாரிகளையும். விநதை, கத்துரு, பதங்கி, யாமினி ஆகிய நால்வரையும் மணந்ததாகச் சொல்லப்படுகிறது. உலகிற்குத் தேவையான அன்பு, அமைதி, பொறுமை ஆகிய நற்குணங்களைப் போதித்தவர். இவரின் போதனையால்தான் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் செழிப்போடு இருக்கிறது. அதனால் இந்தப் பிரபஞ்சம் 'காசினி' என்றும் அழைக்கப்படுகிறது.

இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.

'ஓம் சர்வ சாஸ்த்ரார்த்ததாய வித்மஹே

ஆத்ம யோகாய தீமஹி

தந்நோ காஸ்யப ப்ரசோதயாத்'

அத்ரி மகரிஷி:

இவர் படைப்புக் கடவுளான பிரம்மனின் மகனாவார். பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் சொல்லப்படுகிறது. இவரின் மனைவியின்

பெயர் அனசுயா தேவி. அனசூயா தேவிதான் தன் கற்பின் திறத்தால் மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக மாற்றினாள். அந்த மூன்று குழந்தைகளின் இணைந்த வடிவமே 'தத்தாத்ரேயர்'. மருத்துவத்தில் சிறந்தோங்கிய ஆத்ரேயரும் அத்ரி மகரிஷியிடம் இருந்து தோன்றியவரே. ரிக் வேதத்தை தொகுத்ததில் இவரின் புதல்வர்களுக்கு பெரும்பங்கு உண்டு. ரிக் வேதம், புதுமணத் தம்பதிகளை வாழ்த்தும்போது, 'அத்ரி- அனசூயைப் போல வாழ வேண்டும்' என்றுதான் வாழ்த்தவேண்டும் என்று கூறுகிறது. சுக்ரீவனுக்கு அடைக்கலம் கொடுத்து வாலியிடமிருந்து காப்பாற்றியவர் அத்ரி மகரிஷியே. இவரிடம் இருந்துதான் சந்திரனும் தோன்றினார்.

நெல்லை மாவட்டத்தில், ஆழ்வார்குறிச்சியில் கடனா நதி அருகே உள்ள அத்ரி மலையில் இவரது கோயில் உள்ளது. அங்கே ஶ்ரீ அனசுயாதேவியுடன் அத்ரி மகரிஷி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.

'ஓம் சத்கர்மபலதாய வித்மஹே

சதாக்நிஹோத்ராய தீமஹி

தந்நோ அத்ரி ப்ரசோதயாத்'

பரத்வாஜர்:

பல்வேறு சிறப்புகளைப் பெற்றவர் பரத்வாஜர். தனது மூன்று ஆயுள்களையும் வேதம் பயில்வதற்கே பயன்படுத்தியவர். ரிக்வேதத்தில் அதிக சூக்தங்கள் இயற்றியவரும் இவரே ஆவார். இவரின் தவ வலிமையைப் போற்றாத புராணங்களே இல்லை. வேதங்களைப் போன்றே மருத்துவ ஆய்விலும் எண்ணற்ற சாதனைகளைச் செய்தவர். இவர் பல்வேறு மந்திரங்களையும் உருவாக்கியுள்ளார். மகாபாரதத்தில் வரும் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் குருவான துரோணாச்சாரியார் பரத்வாஜ மரிஷியின் புதல்வரே ஆவார்.

இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.

'ஓம் தபோரூடாய வித்மஹே

சத்ய தர்மாய தீமஹி

தந்நோ பரத்வாஜ ப்ரசோதயாத்'

விஸ்வாமித்திரர்:

விஸ்வாமித்திரர் என்று சொன்னால் உலகுக்கு உற்ற நண்பன் என்று பொருள். இன்றளவும் முனிவர் என்று சொன்னவுடனே நம் நினைவுக்கு வருபவர் விசுவாமித்திரர்தான். அந்த அளவுக்கு விசுவாமித்திரரின் கோபம் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். இவர் குசநாபரின் மகனாவார். ரிக் வேதத்தில் பல பகுதிகள் இவரால் எழுதப்பட்டதே. காயத்ரி மந்திரம் கூட இவர் உருவாக்கியதே.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விஜயாபதி என்னும் இடத்தில் இவருக்குத் தனிக்கோயில் உள்ளது.

இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.

'ஓம் தநுர்தராய வித்மஹே

ஜடாஜுடாய தீமஹி

தந்நோ விஸ்வாமித்ர ப்ரசோதயாத்'

கௌதமர்:

வேதகால ரிஷிகளுள் இவரும் ஒருவராவார். இன்றளவும் போற்றப்படும் 'தர்மசூத்திரம்' இவரால் இயற்றப்பட்டதே. ரிக் வேதத்தில் இவரது பெயரில் பல்வேறு மந்திரங்கள் உள்ளன. இவரது மனைவியின் பெயர் அகலிகை. அவருக்கு வாமதேவர், நோதாஸ், ஷதானந்தா என்ற புதல்வர்களும் உண்டு.

இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.

'ஓம் மஹாயோகாய வித்மஹே

சர்வபாவநாய தீமஹி

தந்நோ கௌதம ப்ரசோதயாத்'

பிருகு:

இவர் பிரம்மதேவனால், தன் படைப்புத் தொழிலுக்கு உதவி புரிவதற்காக உருவாக்கப்பட்டவர். ஜோதிட சாஸ்திரத்தின் முதல் நூலான 'பிருகு சம்ஹிதா' இவரால் எழுதப்பட்டதே. இவர் மனைவியின் பெயர் கியாதி. இவருக்கு விததா, ததா, சுக்ரன் என்ற மகன்களும், ஶ்ரீ என்ற மகளும் உண்டு. உலகில் அறத்தைக் காக்கவேண்டும் என்பது இவரின் உன்னத நோக்கமாகும்.

இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.

'ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே

அக்ஷசூத்ராய தீமஹி

தந்நோ பிருகு ப்ரசோதயாத்'

வசிஷ்டர்:

வேதகாலத்தில் வாழ்ந்த மாமுனிகளில் இவரும் ஒருவர். மிகச் சிறப்பானவற்றையே பாராட்டும் குணம் கொண்டவர். எனவே, இவரிடம் பாராட்டு பெறுவது சிறப்பானது. வசிஷ்ட முனிவரின் மனைவிதான் அருந்ததி . இவர் பெண்களுக்கு அதிகமாக மதிப்பளிப்பவர் . இதைப் போற்றுவதற்காகவே 'ரிஷி பஞ்சமி' வழிபாடு பெண்களால் மேற்கொள்ளப்படுகிறது. இவர் ராமாயணத்தில் தசரதனுக்கு அரச குருவாக விளங்கியவர். அனைத்துப் புராணங்களிலும் இவர் போற்றப்படுகிறார்.

இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.

'ஓம் வேதாந்தகாய வித்மஹே

ப்ரம்ஹசுதாய தீமஹி

தந்நோ வசிஷ்ட ப்ரசோதயாத்'.