சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்

திருவந்தவார்-திரிபுரசுந்தரி சமேத திருவந்தீஸ்வரர் திருக்கோயில்இ.லோகேஷ்வரி

தோஷங்களிலேயே பிரம்மஹத்தி தோஷத்தைவிடவும் பெரிய தோஷம் எதுவும் இல்லை. இந்த தோஷத்தில் இருந்து எவருமே தப்பமுடியாது என்பதற்கு உதாரணமாக எத்தனையோ இதிகாச, புராண நிகழ்ச்சிகள் உள்ளன.

பிரம்மனின் கர்வத்தை அடக்க, சிவபெருமான் தம் அம்சமான பைரவரை அனுப்பி, பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்துவரச் செய்தார். இதனால், பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட, சிவனாரின் யோசனைப்படி அவர் தென்னாட்டு சிவத் தலங்களைத் தரிசித்து, தோஷம் நீங்கப்பெற்றாராம்.

ஆலயம் தேடுவோம்

ராவணனைக் கொன்றதால், ஸ்ரீராமனையே பிரம்மஹத்தி தோஷத்தால் பீடித்தது. அவர் ராமேசுவரத்தில் சிவபெருமானை பூஜித்து, தம்முடைய தோஷம் நீங்கப்பெற்றார். சோமசுந்தரக் கடவுளின் ஆணைப்படி திருவிடைமருதூர் திருத்தலத்து மல்லிகார்ஜுனப் பெருமானை வழிபட்டு, வரகுணபாண்டியன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றதாகக் கூறப்படுகிறது.      

பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்யும் ஒரு திருக்கோயிலையே நாம் இப்போது தரிசிக்கச்செல்கிறோம்.  புராதனமான இந்தக் கோயில், விக்கிரமச் சோழன் காலத்தில் கட்டப்பட்டுக் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில். அதன்பின்பு, எப்போது கும்பாபிஷேகம் நடைபெற்றதென்று யாருக்குமே தெரியவில்லை. சோழர்கள் இந்தக் கோயிலைக் கட்டியதற்கும், மானியங்கள் வழங்கியதற்கும் ஆதாரமாகப் பல கல்வெட்டுகளை இன்றைக்கும் காண முடிகிறது.

செங்கல்பட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில், புக்கத்துறை கூட்ரோடு-  உத்திரமேரூர் செல்லும் வழியில், திருவந்தவார் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது இந்தச் சிவாலயம்.

பல வருடங்களாகப் பராமரிப்பின்றி, கோபுரம் இடிந்து விழுந்தும், கோயில் மதில்களின்மேல் செடிகள் முளைத்தும், வெகு காலம் பூட்டியே இருந்த கோயில் இது. அன்றாட பூஜைகள்தான் என்றில்லாமல், விசேஷ நாள்களில்கூட மூலவருக்கு ஒரு சின்ன அபிஷேகமும் நடைபெற்றதில்லை.

எம்பெருமான் 'திருவந்தீஸ்வரர்’ என்ற திருநாமத்துடனும், அம்பிகை 'திரிபுரசுந்தரி’ என்ற பெயரிலும் அருளாட்சி செய்துவருகின்றனர். விநாயகர், ஆறுமுகன், வள்ளி, தெய்வயானை, சூரியன், தட்சிணாமூர்த்தி, துர்கை, பிரம்மா போன்ற தெய்வமூர்த்தங்களுடன் பிரம்மஹத்தீஸ்வரர் சிலையும் கண்டெடுக்கப்பட்டு, இட வசதி இல்லாததால், அத்தனை சிலைகளையும் அருகிலுள்ள விநாயகர் கோயிலில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

ஒவ்வொரு சிலையும் அத்தனை வேலைப்பாட்டுடனும், கலை நயத்துடனும், கோயிலின் புராதனத்தை எடுத்துக் கூறுவதாகத் திகழ்கின்றன. சில சிலைகள் சிதிலமடைந்து இருந்தன. ஆவுடையார் பெரியதாக இருப்பதால், இது சோழர்காலத்திய கோயில்தான் என்பது தெரியவருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, திருவந்தீஸ்வரருக்குத் தேரோட்டம் நடைபெற்றதாம். காலப்போக்கில் அந்தத் தேர்கூட இன்று இல்லாமல் போய்விட்டது. கருங்கல்லால் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பல கல்வெட்டுகள் நமக்குக் கோயிலின் தொன்மையைச் சொல்கின்றன.

இத்தனைப் பழைமையான திருவந்தீஸ்வரருக்குக் கடந்த 12 வருடங்களாக எளிமையான முறையில் தினப்படி பூஜைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார், திருவந்தவாரைச் சேர்ந்த சந்திரன்.

ஆலயம் தேடுவோம்

''எங்களுக்கு நினைவு தெரிந்து, இந்தக் கோயில் அப்படியேதான் இருக்கிறது. நாங்களும் படித்து முடித்து, வேலையின் காரணமாக வெளியூருக்குப் போய் செட்டிலாகிவிட்டோம். எங்கள் சொந்த ஊரில் இருக்கிற ஒரு கோயில் இப்படிச் சிதிலமடைந்து இருப்பதை நினைக்க நினைக்க, நாங்கள் எவ்வளவு சுயநலமாக இருக்கிறோம் என்று புரிய வந்தது. நாங்கள் இந்தக் கோயிலைப் பராமரித்து பூஜைகள் செய்யாமல் விட்டிருந்தாலும்கூட, இந்த இறைவன் எங்களை ஒரு குறைவும் இல்லாமல் நன்றாகத்தான் பார்த்துக் கொண்டார். அதுதான் இறைவனின் கருணை!

12 வருஷங்களுக்கு முன்பு, ஊர்மக்கள் கலந்துபேசி, திருப்பணிக் குழு அமைத்துச் செயல்பட்டு, இந்தக் கோயிலைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புதுப்பித்து வருகிறோம். கட்டுமானப் பணிகள் தொடங்கியதும், அத்தி மரத்திலான சிவலிங்கத்துக்குப் பாலாலயம் செய்து வழிபட்டு வருகிறோம். ஈஸ்வரனுக்கும், அம்பிகைக்கும் மட்டும் இப்போது மண்டபம் கட்டி இருக்கிறோம். மற்ற தெய்வங்களுக்கான சன்னிதிகள், கோயில் சுற்றுச் சுவர், கோபுரம் கட்டும் பணிகளையெல்லாம் இனிமேல்தான் துவங்க வேண்டும். இதுவரை எங்களை அந்தப் பரமேஸ்வரன்தான் வழி நடத்தி வந்தான்; இனியும் அவன்தான் எல்லாவற்றையும் செய்யப் போகிறான். நாங்கள் வெறும் கருவிகள்தான்!'' என்கிறார் சந்திரன்.

கோயிலுக்கு இரண்டு வாசல்கள் இருந்தனவாம். ஒன்று, துவார தரிசனத்துக்கான கிழக்கு வாசல், மற்றும் தெற்கு வாசல். கோயில் குளத்துக்கு 'சங்கு குளம்’ என்று பெயர். 12 வருடத்துக்கு ஒருமுறை இந்தக் குளத்தில் சங்கு உருவாகும் என்பது ஐதீகம். இத் திருக்கோயில் அருகே திருவந்தியாறு என்ற ஆறு ஓடியதாகவும், அந்த ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்துதான் திருவந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ததாகவும், அந்த ஆறு நாளடைவில் தூர் வாராமல் விடப்பட்டதால் திட்டுத் திட்டாகப் பிரிந்து, சின்னச் சின்ன ஏரிகளாக மாறிவிட்டதாகவும் சொல்கிறார்கள் திருவந்தவார் ஊர் மக்கள். இந்த ஊரின் அருகில் பல சிறு ஏரிகள் காணப் படுவதே இதற்கு சாட்சி!

ஆலயம் தேடுவோம்

வீரராகவலு என்பவர்தான் இந்த ஊரிலேயே மிக மூத்தவர். 85 வயது.

''இது பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி தலம். இங்கு இருக்கும் பிரம்மஹத்தீஸ்வரர் ரொம்பச் சக்தி வாய்ந்தவர். கோயில் இடிந்த நிலையில இருந்தாலும், இந்தச் சிலைக்கு மட்டும் ஏதும் ஆகவில்லை. ஒரு முனிவர் இங்கு வந்து தவம் செய்து, சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றாராம். இங்கே ஈஸ்வரனுக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று அக்காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னனிடம் அவர் கேட்டுக்கொன்டாராம். அதன்படியே இங்கு பெரிய கோயில் எழுப்பி, அதற்கென கொஞ்சம் நிலங்களையும், அவற்றைப் பராமரிக்கச் சில ஆட்களையும் மன்னர் வழங்கியதாக எங்கள் தாத்தா சொல்வார்'' என்றார் வீரராகவலு.

ஈசனுக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்துவிட்டு, பிரம்மஹத்தீஸ்வரருக்கு வெண்பொங்கல் நிவேதனம் செய்து வழிபட்டு, தெற்கு வாசல் வழியாக வெளியேற, பிரம்மஹத்திதோஷம் விலகிவிடுவதாக ஐதீகம்.

''கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பெரியவங்க சொல்லி இருக்காங்க. அதனால்தான் பல கோயில்களை நம் முன்னோர்கள் கட்டி வைத்துள்ளனர். எங்கள் ஊரில் இருந்த கோயிலை நாங்கள் பராமரிக்கத் தவறிட்டோம். நாங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது தான் புரிகிறது. திருவந்தவாரில் தற்போது 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். திருவனந்தீஸ்வரருக்குக் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று எல்லோரும் ஒருமனதாக முடிவெடுத்து, ஒன்றுபட்டு உழைத்து வருகிறோம்'' என்றார், திருப்பணிக்குழு கமிட்டியில் ஒருவரான சண்முகம்.

கோயிலைப் பற்றிய தெளிவான விவரம் ஏதும் தெரியாத நிலையில், நமக்கு உதவியது கோயில் கல்வெட்டு கள்தான். அவற்றை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியத்திடம் காட்டியபோது, நமக்குப் பல தகவல்களைத் தந்து உதவினார். இங்கே இருந்த கல்வெட்டுகள் பலவும் 'திரிபட்ட குமுதப் படை’ அமைப்பில் இருப்ப தாகவும், அவை சோழர்கால கல்வெட்டுகள் எனவும் தெரிவித்தார்.

ஆலயம் தேடுவோம்

கி.பி.1118-ம் ஆண்டு, விக்கிரம சோழன் இந்தக் கோயிலைக் கட்டியதாகவும், இந்த ஊரின் பழைய பெயர் வடசாலைபாக்கம் என்றும் கூறினார்.

மேலும், நாராயணன் என்ற இடையன் கோயிலுக்கு விளக்கேற்றுவதற்காக தன்னுடைய ஆடுகளைக் கொடுத்ததாக ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. ராஜநாராயண சம்புவரையர், விஜயநகர அரசர் அச்சுத தேவராயர், ராமதேவராயர் ஆகியோரும் இங்கு வந்து வழிபட்டதற்கான கல்வெட்டு கள் இங்கே உள்ளன.

தங்கள் ஊர் கோயிலின் அருமையையும் தெய்வ சாந்நித்யத்தையும் புரிந்து கொண்ட ஊர்மக்கள், திருவந்தீஸ்வர் திருக்கோயில் திருப்பணியில் தங்களை ஆத்மார்த்தமாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கப் பார்க்க நம் உள்ளம் பூரிக்கிறது.

அவர்களின் திருப்பணிக்கு நாமும் தோள்கொடுப்போம். இறைவனின் திருவருளுக்குப் பாத்திரமாவோம்.

படங்கள்: தி.குமரகுருபரன்

எங்கே இருக்கிறது? எப்படிச் செல்வது?

செங்கல்பட்டிலிருந்து உத்திரமேரூர் செல்லும் வழியில் 15 கி.மீ. தொலைவில் உள்ள நடராஜபுரம் வரை பேருந்து வசதி இருக்கிறது. நடராஜபுரத்திலிருந்து திருவந்தவார் 2. கி.மீ. தொலைவில் இருக்கிறது. ஆட்டோ வசதி உண்டு.