சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

சித்திரைக் குளம்!

சித்திரைக் குளம்!

கோயிலில் உள்ள தீர்த்தக் குளத்தை, புஷ்கரணி என்பார்கள். சென்னை, மயிலாப்பூர் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில் திருக்குளத்தை சந்திர புஷ்கரணி என்றும், சந்திர தீர்த்தக் குளம் என்றும் அழைத்தார்கள். காலப்போக்கில், இது சித்திரைக் குளம் என்று மருவியதாம்.

சுமார் 6,000 வருடங்கள் பழைமை மிக்கது இந்தத் திருக்குளம் என்கிறது ஸ்தல புராணம். சந்திர பகவானுக்குச் சாபம் ஏற்பட்டு, அதனால் உடலில் நோய் தாக்கி அவஸ்தைப்பட, அதில் இருந்து விமோசனம் பெற வழி தெரியாமல் தவித்தார் சந்திர பகவான்.

பிறகு, ஸ்ரீஆதிகேசவ பெருமாளை நோக்கிக் கடும்தவம் இருந்தார். 'ஏழு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தத்தை எடுத்து வந்து, இங்கே திருக்குளம் உருவாக்கி, அதில் நீராடினால், உன் சாபமும் நீங்கும்; சரும நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்’ என அருளினார் ஸ்ரீஆதிகேசவ பெருமாள். அதன்படி, சந்திர பகவான் இந்தத் திருக்குளத்தை அமைத்து, அதில் ஏழு புண்ணிய தீர்த்தங்களையும் கலந்து நீராடி, பெருமாளை ஸேவிக்க... சாபம் நீங்கப் பெற்றார்.

இந்தத் திருக்குளத்தில் மலர்ந்திருந்த செந்தாமரையில் இருந்துதான் ஸ்ரீமயூரவல்லித் தாயார் எழுந்தருளி, திருக்காட்சி தந்தார்; தாயாரின் உபதேசம் பெற்று, பெருமாளுக்குப்  பேயாழ்வார் சேவைகள் புரிந்த தலமும் இதுவே என்கிறது ஸ்தல புராணம்.  

சித்திரைக் குளம்!

தீராத நோயால் அவதிப்படுவோர், இங்கு வந்து திருக்குளத்தில் நீராடினால், விரைவில் பிணிகள் நீங்கும்; பழைய பொலிவைப் பெறலாம் என்பது ஐதீகம்!

பண்டிகை மற்றும் முக்கியமான திருவிழா நாட்களில், இந்தத் திருக்குளத்து நீரைக் கொண்டு, ஸ்ரீஆதிகேசவ பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெறும். பங்குனி மாதத்தில், இங்கே பிரம்மோத்ஸவம் பிரமாண்டமாக நடைபெறும். 9-ம் நாள் விழாவில், இந்தக் குளத்தில் தீர்த்தவாரி உத்ஸவம் சிறப்புற நடைபெறும்.

முக்கியமாக, தை அமாவாசையின்போது நடைபெறும் ஐந்து நாள் விழாவில், இங்கே சித்திரைத் திருக்குளத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது தெப்பத் திருவிழா.

- ரெ.சு.வெங்கடேஷ்

படங்கள்: தி.குமரகுருபரன்