சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

'என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே!’

உழவாரப் பணி! இ.லோகேஸ்வரி

'என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றார் திருநாவுக்கரசர். திருக்கோயில்களில் சிதறிக் கிடக்கும் குப்பைக் கூளங்களைப் பெருக்கிச் சுத்தம் செய்து, கல் முள் அகற்றிச் சீர்படுத்தும் சேவையான உழவாரப் பணியை முதன்முதலில் தொடங்கியவர் அப்பர் சுவாமிகள்தான். அவரின் வழியில், உழவாரப் பணி திருத்தொண்டில் ஈடுபட்டு, இறைப்பணி ஆற்றி வருகிறார்கள் அண்ணாமலையார் அறப்பணிக் குழுவினர்.

''நாங்க கடவுள் பணியில் ஈடுபட்டிருப்பதற்கான மூலகர்த்தா, நடமாடும் தெய்வமா கடந்த நூற்றாண்டுல வாழ்ந்த காஞ்சி மகா பெரியவாதான். 'புதுசு புதுசா கோயில்களைக் கட்டுறதுக்குப் பதிலா, சிதிலம் அடைஞ்சிருக்கிற எத்தனையோ கோயில்களைச் சரி பண்ணி, பூஜை பண்ணினாலே மகா புண்ணியம்’னு காஞ்சி மகான் அடிக்கடி சொல்லுவார். அவரது வார்த்தையை வேதமா எடுத்துக்கிட்டோம். ஆனா, என்ன செய்யறது, எங்கிருந்து தொடங்கறதுன்னு ஒண்ணும் புரியலே.

ஏழு வருஷத்துக்கு முன்னாடி, சக்திவிகடன்ல உழவாரப் பணி சம்பந்தமா ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதைப் படிச்சப்போ, நாங்க என்ன செய்யணும்னு ஒரு தெளிவு கிடைச்சுது. எங்களுக்கான பாதை கிடைச்சிட்ட மாதிரி பூரிச்சுப் போனோம்'' என்று உணர்வு பொங்கச் சொல்கிறார் ராமச்சந்திரன்.

'என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே!’

'அண்ணாமலையார் அறப்பணிக்குழு’ எனும் பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதன் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிற ராமச்சந்திரன், சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிகிறார். இவரும் இவரின் நண்பர்களுமாகச் சேர்ந்து, உழவாரப் பணி செய்வதையே கடமையாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

'என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே!’

''அண்ணாமலையார்மீது கொண்ட பக்தியால், அவரோட பேர்லயே அறப்பணிக் குழுவை ஆரம்பிச்சோம். 2006-ம் வருஷம் இந்தக் குழுவைத் துவங்கினப்ப, குரங்கணில்முட்டம் ஸ்ரீபூரணகங்கண தாரிணி சமேத ஸ்ரீவாலீஸ்வரர் கோயில்லதான் எங்களோட முதல் உழவாரப் பணியைத் தொடங்கினோம். அன்னிக்கி இந்தக் குழுவில பத்து பேர்தான் உறுப்பினர்களா இருந்தோம். இப்ப நூத்துக்கும் மேற்பட்ட அன்பர்கள் உறுப்பினர்கள். எட்டு வயசுக் குழந்தைகள்லேருந்து எண்பது வயசு முதியவர்கள் வரை, பலரும் இருக்காங்க. குறிப்பா, முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் இதுல உறுப்பினர்களா இருக்காங்க. தவிர, உழவாரப் பணியில நேரடியா பங்கெடுத்துக்க முடியாத அன்பர்கள் சிலர் எங்க அறப்பணிக் குழுவுக்குத் தங்களால முடிஞ்ச உதவிகளைச் செய்றாங்க!'' என்கிறார் ராமச்சந்திரன்.

''ரெண்டு மாசத்துக்கு ஒரு கோயில்னு ஆரம்பத்துல உழவாரப் பணி செஞ்சுட்டு வந்தோம். அப்புறம் நிறைய அன்பர்கள் சேர்ந்ததால, இப்ப மாசம் ஒரு கோயிலுக்குப் போய் பணி செய்துக்கிட்டிருக்கோம். உழவாரப் பணி செய்ய ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையைத்தான் தேர்வு செய்யறோம்கிறதால, நிறையப் பேர் வந்து கலந்துக்கறாங்க. எங்களோடு கல்லூரி மாணவர்களும் இணைஞ்சு ஆர்வத்தோடு உழவாரப்பணி செய்யும்போது, மனசெல்லாம் பூரிச்சுப் போகுது. இப்படித் துடிப்பும் ஆர்வமும் மிக்க  இளைஞர் படை உருவானால்தான், அடுத்தடுத்த தலைமுறையிலயும் ஆன்மிகம் செழிச்சு வளரும்'' என்கிறார் ராமச்சந்திரன்.

'என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே!’

''முதல்ல சிலர் மட்டும் கோயிலுக்குப் போய் பார்த்து, கோயிலோட பிரமாண்டத்துக்கும் பிராகாரத்துக்கும் தக்கபடி, அங்கே உழவாரப் பணி செய்ய எத்தனை பேர் தேவை, என்னென்ன பொருள்கள் எல்லாம் கொண்டு போகணும்னு தீர்மானிப்போம். இன்ன தேதியில வந்து உழவாரப் பணி செய்யப் போறோம்னு கோயில் நிர்வாகத்துக்கிட்ட அனுமதியும் வாங்கிப்போம். ஆரம்பத்துல, பாடல் பெற்ற தலங்களுக்கு மட்டும் போய் உழவாரப் பணி செஞ்சோம். அப்படிப் பிரிக்கறது தப்புன்னு உணர்ந்து, சிதிலம் அடைஞ்சிருக்கிற கோயில்களுக்கும் போய் உழவாரப் பணி செய்யறோம்!'' என்றார்.

இப்படியொரு அறப்பணிக் குழு இருப் பதையும், அவர்களின் சேவையையும் அறிந்த கோயில் நிர்வாகிகள், 'எங்கள் ஊர் கோயிலுக்கு வந்து உழவாரப் பணி செய்யுங்கள்’ என்று கேட்கிறார்களாம். கோயிலைச் சுத்தம் செய்தல், பூஜைப் பொருட்களைத் தூய்மைப்படுத்துதல், கோயிலில் வர்ணங்கள் பூசுதல் எனப் பல பணிகளைச் செய்து வரும் இந்த அறப்பணிக் குழுவினர், விளக்கு ஏற்றக்கூட வழியோ வசதியோ இல்லாத ஆலயங்களுக்கு விளக்கு ஏற்றுவதற்காக மாதந்தோறும் 500 ரூபாய் அனுப்பி வருகிறார்களாம். அதேபோல், கோயிலில் இட வசதி இருந்து, அனுமதியும் கிடைத்தால், அங்கே அழகிய நந்தவனம் அமைத்துத் தருகிறார்கள். தவிர, ஆதவரற்ற குழந்தைகள் காப்பகத்துக்கு உதவி செய்தல், ஏழைக் குழந்தைகளுக்குத் துணிமணிகள், விளையாட்டுப் பொருட்கள் வழங்குதல் என மனிதநேயத்துடன்கூடிய சேவைகளையும் செய்துவருகிறார்கள் இவர்கள்.

அண்ணாமலையார் அறப்பணிக்குழுவில் உள்ள கணபதியும் ஒரு வங்கி ஊழியர்தான். ''நாலு வருஷமா உறுப்பினரா இருக்கேன். கடவுள் குடியிருக்கும் கோயிலைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடறதால, எங்க மனசும் சுத்தமாயிடுது; தெளிவாயிடுது!'' என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் இவர்.

'என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே!’

''ஒருமுறை, உழவாரப் பணி செய்யறதுக் காகப் போயிருந்தப்ப, ஊருக்குள்ளே நுழையும் போதே செம மழை! 'என்னடா இது... நம்ம பணியெல்லாம் முடிஞ்ச பிறகு, மழை பெஞ்சா நல்லாருக்குமே! ஈஸ்வரா... அருள் செய்யப்பா!’னு மானசிகமா வேண்டிக்கிட்டே போனோம். என்ன ஆச்சரியம்..! அடுத்த அஞ்சாவது நிமிஷம், மழை சுத்தமா நின்னுருச்சு. அப்புறம் நாங்க உழவாரப் பணியெல்லாம் முடிச்சிட்டுக் கிளம்பி, அந்த ஊர் எல்லையைக் கடக்கும்போது பெஞ்சுது பாருங்க மழை... அப்படியொரு அடை மழை! சிலிர்த்துப் போயிட்டோம்'' -  நெக்குருகிச் சொல்கிறார் கணபதி.  

தன் தந்தையுடன் கடந்த ஒன்றரை வருடங்களாக உழவாரப் பணியில் ஈடுபட்டு வரும் சிறுமி திவ்யாவுக்கு வயது எட்டுதான். ''அப்பா ஒருநாள் உழவாரப் பணிக்குக் கிளம்பறப்போ, ஜாலியா டூர் போற மாதிரி நானும் வரேன்னு அடம் பிடிச்சேன். அப்பா என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. கோயில்ல எல்லாரும் வேலை செய்யறதைப் பார்த்து, எனக்கும் அதுபோல செய்யணும்னு ஆசையா இருந்துச்சு. அதான், அப்பா கிட்ட சொல்லி என்னையும் உறுப்பினரா சேர்த்துவிடச் சொல்லி, இந்த குரூப்போடு நானும் கோயில் கோயிலா போய் க்ளீன் பண்ணிட்டிருக்கேன்'' என்று மழலைக் குரலில் சொல்கிறாள் திவ்யா.

''உடம்புல அயர்ச்சியும் மனசுல வலியுமா நிறையப் பேர் வாழ்ந்துட்டிருக்கோம். அவங்க ஒரேயொரு முறை உழவாரப் பணியில ஈடுபட்டா போதும்... மனசே மலர்ச்சியாயிடும்! மொத்த வலியும் காணாம போயிடும். இது எங்க குழுவுல இருக்கிற எல்லாருமே அனுபவிச்ச ஒரு விஷயம். கடவுள் பணியில ஈடுபடுறதும், அவர் குடியிருக்கிற கோயிலைச் சுத்தம் செய்யறதும் நமக்குக் கிடைச்ச பாக்கியம். கோடி ரூபா கொடுத்தாக்கூட கிடைக்காத நிம்மதி!'' என்று சொல்லும்போதே பரவசத்தில் நா தழுதழுக்கிறது கணபதிக்கு.  

''இன்னிக்கு விஞ்ஞானம் அசுரத்தனமா வளர்ந்திருக்கு. ஆனாலும், தஞ்சைப் பெரியகோயில் மாதிரி ஒரு கோயிலை அத்தனை நேர்த்தியா இப்ப நம்மால கட்ட முடியுமா? இதுமாதிரியான புராதனமான கோயில்களை நம்மால கட்ட முடியாட்டாலும், பராமரிக்கவாவது செய்யலாமே? பாதுகாக்கலாமே? கோயில்களைச் செப்பனிடறதும், சீர்படுத்துறதும் நம்ம கடமை!'' என்று சொல்லும் கண்ணன், கடந்த ஏழு வருடங்களாக இதில் உறுப்பினராக இருக்கிறார்.  

மனோஜ்குமாருக்கு 12 வயது. பார்வையில் பிரச்னையாம்.  ''என்கூட யாரும் விளையாட வர மாட்டாங்க. அதனால வெளியே போகாம வீட்டுலேயே முடங்கிக் கிடப்பேன். அப்புறம் அம்மாவோட வழிகாட்டுதலால, உழவாரப் பணிக்கு போக ஆரம்பிச்சேன். இங்க இருக்கிறவங்களோட அன்பும், கோயில் கோயிலா போய் வேலை செய்யும்போது கிடைக்கிற சந்தோஷமும் தெம்பா இருக்கு!'' - பெரியமனுஷன் போலப் பேசுகிறான் மனோஜ்.

'என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே!’

''பிறவியிலேயே கண்பார்வை இழந்த தண்டி அடிகள், நமக்கெல்லாம் மிகச் சிறந்த ரோல்மாடல்! பார்வை இழந்த தண்டி அடிகளே உழவாரப் பணியில் ஈடுபட்டிருந்தார்னா, நாமெல்லாம் எம்மாத்திரம்? இந்த உடம்பு இருக்கிற வரை, உடம்புல உசுரு இருக்கிற வரை இறைப் பணி செய்து கிடப்பதே என் கடன்னு நினைச்சு வாழ்ந்தோம்னா, வாழ்க்கை நிம்மதியா சந்தோஷமா இருக்கும். சொல்லப்போனா, அதுதான் உண்மையான வாழ்க்கை!'' என்று உணர்ந்து பேசுகிறார் ராமச்சந்திரன்.

டிரைவர் வேலை பார்த்த ஜெயராமன் எனும் அன்பர், இந்தக் குழுவில் உறுப்பினர். ''மனுஷனாப் பொறந்ததுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சப்பதான், இந்தக் குழுவின் உழவாரப் பணி பத்தி தெரிஞ்சுது. ஆறு வருஷமா இந்தக் குழுவுல இருக்கேன். கடவுளுக்குச் சேவை செய்ற பாக்கியம் கிடைச்சது புண்ணியம்'' என்று நெகிழ்ந்து சொல்லும் இவர், விபத்து ஒன்றில் இரண்டு கால்களையும் இழந்தவர்.

''என்னால முடிஞ்ச வேலையைச் செய் றேன். என் கைக்கு எட்டுற வேலையைச் செய்யறேன்'' என்று பளீர் சிரிப்புடன் சொல்கிற ஜெயராமனைப் போன்றவர்களும் நமக்கு ஆகச் சிறந்த ரோல்மாடல்கள்தான்!