சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

மதிப்புக்குரிய வாசகர்களே...

வயது 11

அன்பான வணக்கம்.

'ஜய’ வருடம் தொடங்கவிருக்கிறது. நாம் தொட்டது துலங்கும், எடுத்த காரியங்கள் வெற்றி பெறும் என்று நம்பிக்கையூட்டும் விதமாக இந்த ஆண்டின் பெயர் அமைந்திருப்பது நமக்குள் மகிழ்ச்சியை விதைக்கிறது.

மங்கலம் பொங்கும் 'தாரண’ தமிழ்ப் புத்தாண்டில் தொடங்கிய உங்கள் சக்தி விகடனின் ஆன்மிகப் பயணம், 11-வது ஆண்டில் 'ஜய’ வருடத்தில் வெற்றிகரமாகப் பீடு நடை போடுவதற்கு முழுமுதற் காரணம், இதைச் சரியான திசையில், சரியான விதத்தில் வழிநடத்தும் வாசகர்களாகிய நீங்கள்தான் என்பதில் ஐயமில்லை.

மதிப்புக்குரிய வாசகர்களே...

கடிதங்கள், தொலைபேசி, இமெயில், ஃபேஸ்புக் மூலம் நீங்கள் எங்களைத் தொடர்புகொண்டு அவ்வப்போது அளித்துவரும் ஆலோ சனைகளைப் பரிசீலித்து, எதையெல்லாம் சாத்தியப்படுத்தமுடியுமோ அதையெல்லாம் கட்டுரைகள், பேட்டிகள், துணுக்குகள் எனப் பலவிதங்களில் வழங்கி வருவதால்தான் சக்தி விகடனுக்கு உங்கள் மனத்தில் ஓர் உயர்ந்த இடத்தை அளித்துள்ளீர்கள் என்பதை அறிவோம்.

அதே போன்று இந்தப் புத்தாண்டிலிருந்தும் பல புதிய பகுதிகளை உங்களுக்குச் சமர்ப்பிக்க விழைகின்றோம்.

துங்காநதி தீரத்தில்...

ஆதிசங்கரர் ஸ்தாபித்த மடங்களில் முதன்மையானது சிருங்கேரி மடம். 'துங்காநதி தீரத்தில்...’ என்னும் இந்தத் தொடர் மூலம், மகத்துவம்  மிகுந்த சிருங்கேரி மடத்தைப் பற்றியும், அதன் பீடாதிபதிகள் குறித்தும் சிலிர்ப்பான தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் பழம்பெரும் எழுத்தாளர் பாரதிகாவலர் கே.ராமமூர்த்தி.

என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே!

உழவாரப் பணியில் ஈடுபடுதல், ஆடல்- பாடல் மூலம் பக்தியைப் பரப்புதல், ஆன்மிகப் பொருள்கள் சேகரித்தல், தெய்வத் திருவுருங்களை வரைதல்... இப்படி ஏதேனும் ஒருவகையில் தங்களை ஆன்மிகத் தொண்டில் அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் அன்பர்களை வெளிச்சப்படுத்தும் தொடர் இது. 'நாமும் இதுபோல் ஏதேனும் இறைத் தொண்டில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்’ என்கிற எண்ணமும் ஆர்வமும் இத்தொடரைப் படிக்கும்போது உங்களுக்கு ஏற்படுவது திண்ணம்.

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்!

புகழ்பெற்ற திருத்தலங்கள், திருவிழாக்கள், ஆன்மிகச் சொற்பொழிவுகள் மற்றும் வைபவங்களை நாள் முழுக்க இருந்து அனுபவித்து மகிழ யார்தான் விரும்பமாட்டார்கள்? ஆனால் வேலை, குடும்பம் எனப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய தினத்தில் நம்மில் பலருக்கு அந்த இனிய அனுபவம் சாத்தியப்படுவது இல்லையே! அதனால்தான், நம் சார்பாக நமது நிருபர் அதுபோன்ற பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒரு நாள் முழுக்க இருந்து, அந்த அனுபவத்தை ஒரு நேர்முக வர்ணனை போல் சிலிர்ப்புடன் விவரிக்க உள்ளார். அதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தாங்களே அந்த நிகழ்வில் கலந்துகொண்டு இன்புறும் அனுபவத்தை அடைவார்கள் என்பது நிச்சயம். இந்த இதழில்... மயிலை அறுபத்துமூவர் விழா நிகழ்வின் வர்ணனைகள் உங்களைச் சிலிர்க்கச் செய்யும்.

மதிப்புக்குரிய வாசகர்களே...

ஆஹா... ஆன்மிகம்!

ஆன்மிகம், பக்தி இவையெல்லாம் தலை நரைத்த பெரியவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை; இளைஞர்களுக்கும் அதில் ஆர்வமும் நம்பிக்கையும் உண்டென்பதை விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் கலந்துகொண்டு கல்லூரி மாணவ மாணவியர் அனுப்பும் படைப்புகளிலிருந்து அறிகிறோம். இளைஞர்களுக்குள் இருக்கும் ஆன்மிகப் பக்கத்தின் பிரதிபலிப்பே 'ஆஹா... ஆன்மிகம்’ எனும் இந்தப் புதிய பகுதி. உங்கள் பகுதியில் உள்ள கல்லூரிக்கும் வருவோம்; காத்திருங்கள்!

பாடல் சொல்லும் பாடம்!

பழம்பெரும் நூல்களின் பெருமைகளை விவரித்துச் சொல்லி உங்கள் மனங்களில் சப்பணமிட்டு அமர்ந்த 'சொல்லின் செல்வர்’ பி.என்.பரசுராமன், இந்தப் புதிய தொடர் மூலம், ஒவ்வொரு பழந்தமிழ்ப் பாடலில் உள்ள நுட்பமான சங்கதிகளை விவரித்துச் சொல்லி, உங்களை வியப்பூட்ட வருகிறார்.

அருட் களஞ்சியம்

நமது தாய்ப் பத்திரிகையான ஆனந்த விகடன், அரசியலுக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளதோ, அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு ஆன்மிகத்துக்கும் பங்களித்துள்ளதை வாசகர்கள் அறிவார்கள். ஆனந்த விகடனிலும், விகடன் தீபாவளி மலர்களிலும் இடம்பெற்றிருக்கும் பக்திக் கட்டுரைகளையும் ஓவியங்களையும் இன்றைக்கு எடுத்துப் பார்த்தாலும் சிலிர்க்கிறது. சாந்நித்தியம் மிகுந்த ஒரு புராதன கோயிலுக்குள் சென்று தரிசித்து வந்த உணர்வை அவை ஏற்படுத்துகின்றன. அந்த அனுபவத்தை இன்றைய தலைமுறையினரும் பெற்று மகிழவேண்டும் என்னும் நோக்கில், அவற்றிலிருந்து ஒருசிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

ஹலோ சக்தி!

திருத்தலங்கள் தொடர்பான விவரங்கள், ஆன்மிகம் தொடர்பான சந்தே கங்கள் மற்றும் முந்தைய சக்தி விகடன் இதழ்களில் வெளியான கட்டுரைகள் குறித்த மேலதிக விளக்கங்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டு வருகிறீர்கள். சம்பந்தப்பட்ட வாசகருடன் தொடர்புகொண்டு அவற்றுக் கான பதில்களையும் தகவல்களையும் உடனுக்குடன் தெரிவித்து வருகிறோம். அவற்றில் சில தகவல்கள், அனைத்து வாசகர்களுமே அறிந்து பயன்பெறத் தக்கவை. அவற்றின் தொகுப்பே இந்த 'ஹலோ சக்தி’!

சக்தி சபா!

இது முழுக்க முழுக்க உங்களுக்கான பகுதி! உங்களின் இறை அனுபவங்கள், உங்களுக்குத் தெரிந்த ஆன்மிகத் தகவல்கள், துணுக்குகள் முதலானவற்றை மற்ற வாசகர்களுடன் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்ளும் உங்களுக்கான மேடை இது!

அன்பு வாசகர்களே...! ஒவ்வொரு பகுதியையும் படியுங்கள்; ரசியுங்கள்; உங்களின் மேலான கருத்துக்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

மிக்க அன்புடன்,

ஆசிரியர்.