சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

'உங்கள் வீட்டுக்கு வருகிறான் ஐயப்பன்!’

சபரிமலை ஸ்வாமிக்கு விபூதி அபிஷேகம்!வி.ராம்ஜி

வாசகர்களே..! உங்களின் நலனுக்காகவும் உலக நன்மைக்காகவும் இறைவனுக்குச் சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் செய்து விபூதி, குங்குமம், ர¬க்ஷ முதலான பிரசாதங்களை அவ்வப்போது உங்களுக்கு வழங்கிவருகிறது சக்திவிகடன் என்பதை அறிவீர்கள்.

'சக்திவிகடன் 11-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய தருணத்தில், சபரிமலை ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு விபூதி அபிஷேகம் செய்து, அந்தப் பிரசாதத்தை வாசகர்களுக்கு வழங்கலாம்’ என்கிற எங்கள் யோசனையை, பிரபல ஐயப்பப் பாடகர் வீரமணி ராஜூவிடம் தெரிவித்தோம். உடனே அவர், ''அருமையான விஷயமாச்சே! மகா புண்ணியம். என்னால் ஆன எல்லா உதவிகளையும் செய்யத் தயார்'' என்றார்.

'உங்கள் வீட்டுக்கு வருகிறான் ஐயப்பன்!’

அதையடுத்து, கடந்த 19.3.14 அன்று சபரிமலையில் பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த இதழ் சக்திவிகடனில் அறிவிக்கப்பட்டது. ஆனால், நம்பியார் குருசாமியின் குழுவில் உள்ள மணிகண்டன் குருசாமி, ''நல்ல காரியம் செய்கிறீர்கள். ஆனால், 19-ம் தேதி அன்று திடீரென யாரேனும் கலசாபிஷேகம் நடத்தப் பதிவு செய்துகொண்டால், விபூதி அபிஷேக பூஜையைச் செய்ய முடியாமல் போய்விடும். தவிர, அன்றுதான் நடை சார்த்தப்படுகிறது. எனவே, முதல் நாளே, அதாவது 18-ம் தேதியே விபூதி அபிஷேகம் செய்துவிடுவது நல்லது!'' என்று அக்கறையுடன் சொன்னார்.

எனவே, 17-ம் தேதியன்று காலையிலேயே, சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி கோயிலில், வீரமணி ராஜூவை குருசாமியாகக் கொண்டு இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை யாத்திரையைத் தொடங்கி விட்டோம். கேரளாவில், சபரிமலையின் அடி வாரத்தில், பம்பா எனும் புண்ணிய நதிக்கரைக்கு நள்ளிரவு வேளையில் சென்றடைய... அங்கே பரவியிருந்த குளுமை, உடலிலும் மனத்திலுமாக வியாபித்து, ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது. ''ஸ்வாமியே... சரணம் ஐயப்பா!'' என்று உற்சாகமாகக் குரலெழுப்பியபடி மலையேறத் தொடங்கினோம்.

'உங்கள் வீட்டுக்கு வருகிறான் ஐயப்பன்!’

ஹரிஹரசுதன் குடிகொண்டிருக்கும் ஆலயத்தை அடைந்தபோது அதிகாலை 4 மணி. பங்குனி மாதத்தில், பெரிய அளவு கூட்டம் இருக்காது என்று நினைத்திருந்ததற்கு மாறாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், காவி, கறுப்பு நிற வேட்டிகளை அணிந்து, இருமுடி சுமந்து, சுவாமி தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ கேம்ப் ஆலோசகர் கே.கே.மூர்த்தி சுவாமி, நாம் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

விடிந்தது. கொண்டு வந்திருந்த இருமுடியைச் சமர்ப்பிப்பதற்காக 18 படிகளில் ஏறினோம். இருமுடியுடன் ஸ்ரீஐயன் ஐயப்ப ஸ்வாமியைக் கண்ணாரத் தரிசனம் செய்தோம். அடுத்து, விபூதிப் பாக்கெட்டு களைப் பிரித்து, அகன்ற தாம்பாளத்தில் வைத்துக்கொண்டோம். வழக்கம்போல, சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் கோயில் சண்முக சிவாச்சார்யர் (அவருடைய தந்தையின் பெயரிலான சாம்பமூர்த்தி சிவாச்சார்யர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக) அபிஷேகத்துக்கான விபூதியை அளித்திருந்தார்.

விபூதி கவர்களை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு, சபரிமலை தலத்தின் தந்த்ரி, கண்டரரு மகேஸ்வருவைச் சந்தித்து, விவரம் சொன்னோம். ''ஓ... ஆனந்த விகடனோ...'' என்று கேட்டுக்கொண்டார்.

'உங்கள் வீட்டுக்கு வருகிறான் ஐயப்பன்!’

''ஏதொரு பத்தரமும் (பத்திரிகை) இத்தரயுங்காலம் இங்ஙனயொரு அபிஷேகம் செய்து, ப்ரியேஸகர்களுக்குப் பிரசாதம் கொடுத்துட்டில்லா! இந்த பஸ்மம் ஏது வீட்டில் இரிக்கினோ, ஆ வீட்டில் ஐயப்பன் இரிக்கும்'' (இந்த சபரிமலை சந்நிதியில் இதுவரை எந்தப் பத்திரிகையும் இப்படியொரு சிறப்பு அபிஷேகம் செய்து, வாசகர்களுக்கு ஐயப்ப பிரசாதத்தை இதுபோல் வழங்கியது இல்லை. இந்த விபூதி எவர் வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டில் ஐயப்பன் இருப்பான்) என்று விழிகள் விரியச் சொல்லி, ஆசிர்வதித்தார்.

அடுத்து, சபரி சந்நிதானத்தின் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரியிடம் சென்றோம். ''விகடன்தானே? தெரியும், தெரியும். ரொம்பப் பெரிய விஷயம் இது. லட்சக்கணக்கான வாசகர்களும் அவர்களின் குடும்பங்களும் க்ஷேமமா இருக்கட்டும். நானே அபிஷேகம் பண்ணித் தரேன்'' என்று விபூதித் தட்டை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டார். 'ஐயப்பா... ஐயப்பா’ என்று முணுமுணுத்தார்.

அதன் பிறகு, உதவியாளர்கள் விபூதித் தட்டுகளை எடுத்துக்கொள்ள, மேல்சாந்தியின் திருக்கரத்தால் மூலவர் ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு குளிரக் குளிர நடந்தது விபூதி அபிஷேகம்! அதைத் தொடர்ந்து, இருமுடியில் கொண்டு சென்ற நெய்யைக் கொண்டும் அபிஷேகம் நடந்தது. அதே நேரம், ஐயனின் சந்நிதானத்தில், வீரமணிராஜூவின் கணீர்க் குரலில் 'நெய்யபிஷேகம் ஸ்வாமிக்கு... கற்பூர தீபம் ஸ்வாமிக்கு...’ என கானாபிஷேகமும் நடந்தேறியது.

'உங்கள் வீட்டுக்கு வருகிறான் ஐயப்பன்!’

''பலமுறை ஐயப்ப மலைக்கு வந்திருக்கிறோம். என்றாலும்,  சக்திவிகடன் நடத்தும் சிறப்பு பூஜையின்போது இங்கு வந்து அதை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது எங்கள் பாக்கியம்!'' என்று தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள், சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹெச்.சி.எல். அலுவலக ஊழியர்கள்.

'உங்கள் வீட்டுக்கு வருகிறான் ஐயப்பன்!’

பூஜைகள் முடிந்து, நிம்மதியும் நிறைவுமாக பிராகாரத்தில் வந்து அமர்ந்தோம். அங்கே, வரிசையாக வைக்கப்பட்டிருந்த 1008 பித்தளைச் சொம்புகள் பளபளத்தன. மறுநாள் நடை சார்த்தப்படுகிற தினத்தில், கலசாபிஷேகத்துக் காகத் தயார் நிலையில் இருக்கும் கலசங்கள் அவை! மணிகண்டன் குருசாமி ரூபத்தில் அந்த மணிகண்டனே எங்களை உஷார்படுத்தி, முன்னதாக அழைத்து விபூதி அபிஷேகம் நடத்திக்கொண்டானோ?! நினைக்கும்போதே சிலிர்க்கிறது!  

இதோ... ஐயப்பனின் திருமேனியில் ஆடையெனத் தழுவியிருந்த விபூதி, உங்கள் கரங்களில்! 'ஸ்வாமியே சரணம் ஐயப்பா’ என்று மூன்று முறை சொல்லி, விபூதியை இட்டுக்கொள் ளுங்கள். தீய சக்திகள் எதுவும் அண்டாது. உள்ளுக்குள் மனோதிடம் பெருகி, மங்கல காரி யங்கள் இல்லத்தில் நடந்து, வீடே சுபிட்சமாகும்! ஸ்ரீஐயன் ஐயப்ப ஸ்வாமி, எப்போதும் உங்கள் பக்கத் துணையாக, உங்கள் இல்லத்தில் இருந்து காப்பான்!

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

படங்கள்: வீ.சிவக்குமார்