சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

பிரளய கால அம்மன்!

பிரளய கால அம்மன்!

ஸ்ரீஏகாம்பர நாதரை மணக்க விரும்பிய ஏலவார்குழலி அம்மையால் உருவாக்கப்பட்ட காவல் தெய்வமே சம்ஸ்கிருதத்தில் பிரளய பத்தினி என அழைக்கப்படும் ஸ்ரீபிரளய கால அம்மன். கடந்த 55 வருடங்களாக, ஸ்ரீஏகாம்பர நாதர் கோயிலில் குருக்களாக உள்ள உ.ஞ.ஏகாம்பர குருக்களிடம் பேசினோம்.

''திருக்கயிலாயத்தில், விளையாட்டாக சிவனாரின் கண்களை மூடினார் பார்வதி தேவி. சிவனாரின் இரண்டு கண்களாகத் திகழும் சூரிய சந்திரர்கள் இல்லாமல், பூமியே இருண்டு, ஸ்தம்பித்தது.

சிவனார் கோபம் கொண்டு, உமையம்மையை ஏகாம்பரத்துக்கு அனுப்பினார் சிவன். காஞ்சி வந்த பார்வதிதேவி, 32 அறங்களையும் செய்து அறம்வளர்செல்வியாகத் திகழும் தலம் இது. சுமார் 3,500 வருடப் பழைமையான காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் கோயிலில் இன்றைக்கும் அந்த மரத்தைக் காணலாம். இதன் நான்கு கிளைகளிலும் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு என நான்கு சுவை கொண்ட மாம்பழங்கள் காய்க்கின்றன. மணல் லிங்கத்தை வைத்து வழிபட்ட ஏலவார்குழலி அம்மை, தன் தவத்துக்கு இடையூறு வராமல் இருக்க, காவலுக்குப் பிரளய கால அம்மனைத் தோற்றுவித்தார். இந்தக் காவல் தெய்வம், ஈஸ்வர அம்சம்.

பிரளய கால அம்மன்!

சௌமிய சொரூபமாகக் காட்சி அளிக்கும் இந்தப் பிரளய கால அம்மன், காஞ்சி பெரிய கோயிலின் (ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில்) வெளிப்பிராகாரத்தில் காட்சி அளிக்கிறார். மாமரத்தடியில் தபஸ் செய்த அம்மையைச் சோதிக்க விரும்பிய இறைவன், கங்கையை அனுப்பினார். காவல் தெய்வம் பிரளயகால அம்மனின் தலைக்கு மேல் கங்கை வெள்ளம் சீறிப் பாய்ந்தது. இதனால் பிரளய கால அம்மன் சிரசில் கங்கை உள்ளது. சிவனாருடன் சக்தி இணைந்து இடபாகம் பெற்ற தலம் இது. இங்குள்ள மூலவர்க்கு அபிஷேகம் இல்லை. பூஜைகள் மட்டும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இன்றும் காஞ்சிக்கு கீழே கங்கா நதி ஓடுவதாக ஐதீகம். பலருக்குக் குலதெய்வமாகத் திகழும் பிரளயகால அம்மனை வழிபட, மனச் சங்கடங்கள் தீரும் என்பது உறுதி'' என்கிறார் ஏகாம்பர குருக்கள்.

-  த.நல்லிசைஅமிழ்து  

படங்கள்: கு.கார்முகில்வண்ணன்