சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்! சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ரிஷபம் துலாம் இவ்விரு ராசிகளில் ஒன்றில்... பிறந்தவேளை (லக்னம்) சந்திரன் ஆகியவை புத த்ரிம்சாம்சகத்தில் இருக்கும் வேளையில் பிறந்தவள், குரல் வளத்தோடு இசை வளமும் பெற்றிருப்பாள். இசைக் கருவிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்குவாள். அங்கீகாரம் பெற்ற பாடகியாகத் திகழ்வாள். அவளது தாலாட்டுப் பாட்டில் குழந்தை மகிழும்!.

கண்ணனின் புல்லாங்குழல் ஓசையில் பசுக்கள் மெய்ம்மறக்கும். பாம்பாட்டியின் மகுடி இசையில் லயித்து பாம்பு ஆடும் என்று சொல்வது உண்டு (பசுர்வேத்தி சிசுர்வேத்தி வேத்திகாரைஸம்பணி:). இசையோடும் இசைக் கருவியோடும் நில்லாமல் 64 கலைகளிலும் தேர்ச்சி பெற இயலும் என்கிறது ஜோதிடம் (கலாஞ்ஞா...). 18 கல்வியில் காந்தர்வமும் (பாட்டு) அடங்கும். மூன்று வேதங்களில் சாம வேதம் பாட்டு வடிவில் ஓதப்படும். 'சாம கானம்’ என்பார்கள். 'சாமகானப்ரியே, சரோஜ நிலையே’ என்ற ஸாஹித்ய வரிகள், பாட்டுக்கு சாம கானம் ஆதாரம் என்று சொல்லாமல் சொல்லும்.

புத த்ரிம்சாம்சகம் ஒற்றைப்பட ராசியில் 18 பாகைகளுக்கு மேல் 25 பாகைகள்வரை இருக்கும். இரட்டைப்பட ராசியில் 5-க்கு மேல் 12 பாகை வரை இருக்கும். ஒற்றைப்பட ராசியில் இரண்டாவது ஹோரையின் இணைப்பில், சந்திரனின் (சூரியனின் 15 பாகைகளுக்கு மேல்) 10 பாகைகள் இணைந்திருக்கும். இரட்டைப் படை ராசியில் சூரிய ஹோரையின் 5-க்கு மேல் ஏழு பாகைகள் இணைந்திருக்கும். ஒற்றைப்படை ராசியில் 3-வது த்ரேக்காணமும், இரட்டைப்படை ராசியில் முதல் த்ரேக்காணமும் இணைந்திருக்கும்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

ராசியின் 30 பாகைகளைக் கொண்டிருப்பான் சுக்கிரன். ஹோரையில் சந்திரனும்; த்ரேக்காணத்தில் சனியும், சுக்கிரனும்; த்ரிம்சாம்சகத்தில் புதன். சந்திரன், சுக்கிரன், குரு, புதன் ஆகிய நான்கு தட்பக்கிரகங்களும் தத்தமது ஒத்துழைப்பில், கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக மாற்றியிருக்கின்றன. சூரியன் பயணிக்கும் ராசிகளில் முன்னும் பின்னும் ஒன்றிரண்டு ராசிகளுக்கு உட்பட்டு, புதனும் சுக்கிரனும் பயணிப்பார்கள். சூரியனின் தாக்கம் இருவரிலும் இருக்க இடம் உண்டு. அந்த வெப்பக் கிரகத்தின் தாக்கமும் இணைந்துதான் கலைகளில் தேர்ச்சி பெற்றவளாக மாற்ற முடிகிறது.

சூரியனின் நெருங்கிய சேர்க்கையில் சுக்கிரனும் புதனும் களை இழப்பது உண்டு. உணர்வுப்பூர்வமான விஷயங்களில் மாறுதல் தென்படும். உலகவியல் பெருமைகளைப் பாதிக்காது. தங்களது தனித்திறமைகளை அது ஒடுக்காது. சுக்கிரனும் சூரியனும் 7-ல் இருந்தால் இடையூறை சுட்டிக்காட்டுமே தவிர, மனைவியின் இழப்பைச் சொல்லாது. விவாஹ காரகக் கிரகத்துக்கு அதாவது சுக்கிரனுக்கு பாபயோகம் அதாவது சூரியனின் சேர்க்கை இடையூறைச் சுட்டிக்காட்டும். அதுவும் விலகக்கூடிய இடையூறாகவே இருக்கும். வெப்பதட்ப கிரகங்கள் (சூரியன் - சுக்கிரன்) சமமாக இணைந்திருக்கும் வேளையில், குழப்பத்தைச் சுட்டிக்காட்டும். 7-க்கு உடையவனின் ஒத்துழைப்பில் மனைவியின் தரம் இருக்கும். காரகக் கிரகம் அதாவது சுக்கிரன். அதை நடைமுறைப் படுத்துபவனுக்கு மனைவியின் தரத்தை நிர்ணயம் செய்ய உரிமை இருக்காது.

தட்பக் கிரகம் சுக்கிரன். வெப்பக் கிரகம் சூரியன். இருவரின் சேர்க்கையில் இருவரது இயல்பு இடம் மாறும். சுக்கிரனின் சேர்க்கையில் சூரியனின் வெப்பம் இறங்கிவிடும். சூரியனின் (வெப்பம்) சேர்க்கையில் சுக்கிரனின் (தட்பம்) மென்மை அகன்றுவிடும். இந்த இரண்டின் தன்மையில் இடையூறு தென்படுமே தவிர, ஒன்று மற்றொன்றை அழிக்காது. மனம் சார்ந்த உணர்வுப்பூர்வமான அனுபவம் என்பது வேறு; லோகாயதமான உலக சுகங்கள், பெயர், புகழ், வெகுமதி, பதவி பட்டம் போன்றவை வேறு. இரண்டில் ஒன்றான உணர்வுகளில் மாறுதல் இருக்கும். உலகவியலில் நிறைவு கிடைத்துவிடும்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்
சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

புதனும் சூரியனும் நெருக்கமாக இணையும் போது புதன் களை இழப்பான். இங்கும் இயல்பு இடம் மாறும். சூரியனின் வெப்பம் தணியும்; புதனின் மென்மை குறையும். இருவரது இணைப்பில் 'நிபுண யோகம்’ உருவாகும் என்கிறது ஜோதிடம். பிறர் விரித்த வலையில் எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டவன், அந்த வேளையில் மனத்தில் தோன்றிய செயல்பாட் டில் எளிதாக வெளிவந்து விடுவான். சந்தர்ப்பத்துக்கு உகந்தவாறு செயல்படும் திறமையை சூரியனோடு இணைந்து புதன் தோன்ற வைப்பான். களை இழந்த புதனுக்கும் அது தடைப்படாது என்கிறது ஜோதிடம். திறமை இருந்தாலும் லோகாயத சுகங்களைப் பெறுவதில் சுணக்கத்தை ஏற்படுத்தி இழக்கவைக்கும். இரு பலன்கள்... ஒன்று நிறைவேற்றப்பட்டு ஒன்று இழப்பை சந்திக்கும். ஜீவபரமான பலன்,  லோகாயத பலன் என்று பாகுபடுத்தும் ஜோதிடம்.

கேந்திரம் (1, 4, 7, 10 ஆகிய வீடுகள்), த்ரிகோணம் (1, 5, 9 வீடுகள்) சேர்க்கை, பார்வை ஆகியவற்றை வைத்து எல்லாம் நன்மையில் முடிவுறும் என்று சொல்ல இயலாது. த்ரிகம் (6, 8, 12 வீடுகள்) ஷஷ்டாஷ்டகம் ( 6, 8 வீடுகள்) த்வித்வாதசம் (1, 12 வீடுகள்) ஆகியவற்றை வைத்து எல்லாம் தீமையில் முடிவுறும் என்று சொல்ல இயலாது. மனம் சார்ந்த உணர்வுப்பூர்வமான பலன்கள் (ஜீவ பரமான), லோகாயத சுகங்கள் (மெட்டீரியல் பெனிபிட்) என்ற பிரிவுகளில், ஒன்றை இணைத்து ஒன்றை விடுவிக்குமே தவிர, ஒட்டு மொத்த நன்மை அல்லது ஒட்டு மொத்த தீமை என்று விளக்குவதில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை. ஆராய்ந்து சொல்லும் பொறுப்பு ஜோதிடனுக்கு இருக்க வேண்டும். அப்போது, அவரது சேவை சமுதாய சேவையாக மாறும்.

கலைகளில் தேர்ச்சி பெற்றவனின் திறமை, மூச்சுக்காற்று இருக்கும்வரை மங்காமல் இருக்கும். 'நிபுணயோகம்’ பெற்றவரும் அப்படியே. அவர்களில் பொருளாதாரத்திலும் சமுதாய வாழ்விலும் மங்கலும் பொங்கலும் தென்படலாம். திறமை ஏற்றமும் இறக்கமுமாக இருக்காது. மறைவிடங்களில் (6, 8, 12-ல்) 7-க்கு உடையவனை வைத்து மனைவிக்குக் கெடுதல் என்று முடிவெடுப்பதும், ஷஷ்டாஷ்டகத்தை (6, 8 வீடுகள்) வைத்து எப்போதும் சச்சரவோடு திகழும் மனைவி அமைவாள் என்பதும், த்வித்வாதசம் (2, 12-ல் இருவரில் சந்திரன் இருந் தால்) எனில் மனைவி மனத்துக்கு இனியவளாக இருக்கமாட்டாள் என்று முடிவெடுப்பதும் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லாதவை. வெட்பமும் தட்பமும் இணையும்போது, வெப்பத்தின் உக்கிரம் தணிந்து மனம் அமைதி பெறும். அதேநேரம் அதே சேர்க்கையில் பலவிதமான நோய்கள் உடலைப் பற்றுவதும் உண்டு.

'தற்போது கொட்டிய அடைமழை, வெப்பத்தின் தாக்கத்தில் தவித்த மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது’ என்று நாளேடுகள் சொல்லும். அதேநேரம், அப்போது தோன்றிய பிணிகளில் அகப்பட்ட மக்கள் மருத்துவ மனையைச் சரணடையும் சம்பவங்களும் உண்டு! வெட்ப தட்ப கிரகங்களின் சேர்க்கையில் அத்தனை பலன்களும் சொல்ல வேண்டும். அவற்றின் சேர்க்கையின் நெருக்கம், அதன் தரம், பதினாறு வகை பலன்களின் பாகுபாடு ஆகிய அத்தனையையும் நுணுக்கமாக ஆராய வேண்டிய கட்டாயம் ஜோதிடருக்கு உண்டு. ஜோதிடரைக் கடவுளாகப் பார்ப்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். அந்தப் பெருமையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

இது வியாபாரம் அல்ல; அறம், அறிவியல் ஒத்துழைப்பு. துயரத்திலிருந்து விடுவிக்கும் ஆசான் ஜோதிடர். அவர் இல்லாத கிராமத்தில் குடியிருக்கக்கூடாது என்று சொல்வார்கள். ஜோதிடத்தின் வாடையே தொடாதவர்களும் கணினியின் துணையோடு ஜோதிடம் சொல்லும் நடைமுறை, இப்பொழுது பிரபல மாகிக் கொண்டிருக்கிறது. அப்பாவி மக்கள் அல்லலுக்கு ஆளாகிறார்கள். மாசு படிந்த ஜோதிடம், மாசு அகன்று மிளிரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ரிஷபம், துலாம் இந்த இரண்டு ராசிகளில் ஒன்றில், பிறந்த வேளை (லக்னம்) சந்திரன் ஆகியவை சுக்கிர த்ரிம்சாம்சகத்தில் இருக்கும் வேளையில் பிறந்தவள், நல்ல குணங்களுடன் இணைந்த ஒழுக்கம் உள்ளவளாக இருப்பாள். மனிதனை மனிதனாக மாற்றுவது ஒழுக்கம். அது அவளிடம் குடிகொண்டிருக்கும். ஒழுக்கம் எந்த தீய குணங்களையும் அண்டவிடாது. அதை, சுக்ர த்ரிம்சாம்சகம் இறுதி செய்யும்.

ஒற்றைப்படை ராசியில் கடைசி 5 பாகைகள் சுக்கிர த்ரிம்சாம்சகம். இரட்டைப்படை ராசியில் முதல் 5 பாகைகள் சுக்கிர த்ரிம்சாம்சகம. ஒன்றில் சூரிய ஹோரையும் மற்றொன்றில் சந்திர ஹோரையும் 5 பாகைகள் இணைந்திருக்கும். ஒன்றில் முதல் த்ரேக்கோணம், மற்றொன்றில் கடைசி த்ரேக்கோணம். அதில் ஐந்தைந்து பாகைகள் இணைந்திருக்கும் ராசியில் 30 பாகைகளிலும் சுக்கிரன் இருப்பான். ஒற்றைப்படை ராசியில் கடைசி 5-க்கும் சுக்கிரன் ஹோரையிலும் சந்திரனின் பங்கு உண்டு. இப்படி, தட்பக் கிரகங்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பு, அவளை எல்லோரும் விரும்பும் குணவதியாக மாற்றியது.

இரட்டைப்படை ராசியில் சூரியனின் தொடர்பு குணத்தை மிளிரவைக்க உதவுகிறது. வெப்ப கிரகச் சேர்க்கை எதிரிடையான பலனை அளிக்கவில்லை. காரம், புளி, துவர்ப்பு போன்ற சுவைகளில் உப்பு அளவோடு சேரும்போது சுவைக்கும் திறமையை வலுப்படுத்துமே தவிர, அதை அழிக்காது, வெட்பதட்ப கிரகங்களில் மாறுபட்ட கலவைகள், சிந்தனை மாற்றத்துக்கும் செயல்படும் திறனுக்கும் காரணமாகிவிடும்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்
சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

சுக்கிரன், லலித கலைகளுக்கு ஊக்கமளிப் பான் என்கிறது ஜோதிடம். லோகாயத சுக போகங்களை வரையறுப்பவனும் அவன்தான் என்று சொல்லும். ஆன்மிகத்தோடு இணையாத இந்த பலன்கள் அனுபவத்துக்கு வரவேண்டும் எனில், ஆன்ம காரகன் சூரியன், மனத்துக்குக் காரகன் சந்திரன் ஆகியோரின் இணைப்பு நிச்சயமாக வேண்டும். சுக்கிர த்ரிம்சாம்சகத்தில் லக்னம் (சூரியன்) சந்திரன் (மனம்) இவை இரண்டும் இணைந்து இருக்க வேண்டும். எந்த பலனின் உணர்வும் மனம் வாயிலாக நிகழவேண்டும். ஆன்மாவுடன் இணைந்த மனம் மட்டுமே உணர இயலும். ஆகையால் மனம் (சந்திரன்) மட்டும் இருந்தாலோ, பிறந்த வேளை (லக்னம்) மட்டும் இருந்தாலோ சுக்கிர த்ரிம்சாம்சகம் பலனை அளிக்கத் தயாராகி விடும். பலனை ஏற்படுத்துபவன் சுக்கிரன். அதை உணரவைப்பது மனம். ஆக மனத்தின் தொடர்பு இல்லாமல் உணர முடியாது.

லக்ன வேளையிலும் (பிறந்த நேரம்) சந்திரன் இணைந்திருப்பான். நம் உடலில் ஆன்மாவோடு இணைந்த மனம் செயல்பட தகுதி பெறுகிறது. ராசி புருஷனிலும் ஆன்மாவோடு இணைந்த சந்திரன், பலன்களை உணர்ந்து செயல்பட்டு மகிழக் காரணமாகிறது. பஞ்சபூதங்களின் கலவையில் உருப்பெற்ற உடல், ஆன்மாவோடு இணைந்த மனத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மனம் செயல் இழந்தால் செயல்பாடு தாறுமாறாக மாறுவதைப் பார்க் கிறோம். சந்திரனின் சுறுசுறுப்பில், அதன் தாக்கத்தில், அதன் கட்டுப்பாட்டில் பலன் இறுதி வடிவம் பெறுகிறது.

ஆன்மா (சூரியன்) இருந்து சந்திரன் ஒளிபெற்று செயல் திறனைப் பெறுகிறான். எந்த பலனும் இறுதியை எட்டுவதற்கு, ஏதாவது ஒரு வகையில் சூரியன் அல்லது சந்திரனின் பங்கு இருக்கும். ஒவ்வொரு ராசியிலும் சூரியனும் சந்திரனும் சம பங்கு பெறுகிறார்கள். அதை ஹோரை என்றும் விளக்கும். எந்த த்ரிம்சாம்சகம் ஆனாலும் சூரியன் அல்லது சந்திரனின் பங்கு ஏற்றக்குறைச்சலுடன் இணைந்திருக்கும். பலனின் மாறுதலை அந்த ஏற்றக்குறைச்சல் இறுதி செய்யும். சூரியன் - சந்திரன் ஆகியோரது ஏற்றக்குறைச்சலின் பங்களிப்பே பருவ காலங்களைத் தோற்றுவித்து, உலக இயக்கத்துக்குக் காரணமாகிறது.

வெப்பம் - குளிர் இரண்டும் அதிகமானால், சுணக்கம் ஏற்படுவதை உணருவோம். இரண்டும் அளவுடன் இருக்கும் வேளை அமைதியை ஏற்படுத்துகிறது. தனித்தனியாக எதிரிடையான பலனை அளிக்கும் (வெப்பம், தட்பம்) இவர்கள், சேர்க்கையால் ஆனந்தம் அளிப்பவர்களாக மாறுவது கண்கூடு. உழைப்பு துன்பத்தை அளித்தாலும் ஏற்பதுண்டு. வருங்கால இன்பம் குறித்த நினைவு அதை ஏற்கவைக்கும். உழைப்பு இன்பத்தைத் தராது. உழைப்பு பலன் தரும் தறுவாயில் இன்பத்தை உணரவைக்கும். வெட்பதட்ப கிரகங்களின் சேர்க்கையில் பலன் உருவெடுக்கும். வெப்பக் கிரகம் மட்டுமோ, தட்பக் கிரகம் மட்டுமோ பலனை இறுதி செய்ய இயலாது. ராசியில், ராசி, ஹோரா, த்ரேக்காணம், த்ரிம்சாம்சகம் அத்தனையும் இணைந்த பலன் த்ரிம்சாம்சகத்தில் வெளி வருகிறது. நவாம்சம், தசாம்சம், த்வாதசாம்சமும் பலனை இறுதி செய்யப் பயன்படும். ஜடமான ராசி கிரகங்களின் சைதன்யத்தின் இணைப்பில் உயிர்ப்பெற்று செயல்படுகிறது. 12 ராசிகளையும் சரம், ஸ்திரம், உபயம் என்று மூன்று மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். உபய ராசி என்று சொன்னால், சரிபாதியாக சரமும் ஸ்திரமும் கலந்தது. வெட்ப தட்ப கிரகங்கள் எல்லா ராசியிலும் தொடர்பு கொண்டிருக்கும். ஒற்றைப்படை ராசியிலும் இரட்டைப்படை ராசியிலும் வெட்பதட்பக் கிரகங்கள் சம அளவில் இடம்பெற்று இருக்கும்.

கிரகங்களின் பெயர்கள் மாறுப்பட்டு இருந்தாலும் வெட்ப தட்பங்கள் அவற்றின் இயல்பாக இருக்கும். ஒரு பொருள் உருவாக தட்பமும், அதன் மாறுபாட்டுக்கு வெப்பமும் தேவை. ஒற்றைப்படை ராசியான மேஷத்துக்கு செவ்வாய் என்றால், இரட்டைப்படை ராசியான விருச்சிகத்திலும் அவன் பங்கு உண்டு. அத்தனை ராசிகளும் சூரியனோடும் சந்திரனோடும் இணைந்திருக்கும்.

சந்திரனுக்குப் பின் ராசிகளில் புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி இருப்பர். சூரியனுக்குப் பின்னால் புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி இருப்பர். அத்தனை கிரகங்களும் சூரிய- சந்திரனுடன் சம அளவில் தொடர்பு கொண்ட வர்கள். இதையெல்லாம் மனத்தில் வைத்து ரிஷபம், துலாம் இரு ராசிகளில் ஒன்றில் (லக்னம்) பிறந்த வேளை, அல்லது சந்திரன் இருக்கும் வேளை... சுக்கிர த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள் ஒழுக்கம் உடையவளாக இருப்பாள் என்று முடிவுக்கு வந்தது ஜோதிடம்.

சந்திரன் மனம், அதுதான் பலனை உணர வேண்டும். லக்னம் (அதன் காரகன் சூரியன்), சந்திரன் (மனம்) இவை இரண்டையும் சுட்டிக்காட்டுவதில் இருந்து, எந்த பலனும் ஆன்மா வோடும் சந்திரனோடும் இணையாமல் பலனாகாது என்பதை வரையறுத்துச் சொல்கிறது ஜோதிடம் இவை எல்லாவற்றையும் மறந்து ராகு கேதுப் பெயர்ச்சி யாகம் என்று சொல்லி ஜோதிடத்துக்குப் புறம்பான விஷயத்தில் பாமர மக்களை ஈடுபடுத்தும் எண்ணம் நமக்கு வரக்கூடாது. எதுவானாலும் ஆராய்ந்து முடிவெடுப்பது நன்மை தரும்.

- சிந்திப்போம்...