சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

'மாசம் தவறாம மீனாட்சியை தரிசிக்கப் போயிடுவேன்!’

சொற்பொழிவில் அசத்தும் 13 வயதுச் சிறுவன்உபந்யாசம் பரவசம்! இ.லோகேஷ்வரி

'முத்தைத்தரு பத்தித் திருநகை, அத்திக்கிறை சத்திச்சரவண...’ - முருகப்பெருமான்மீது கொண்ட பக்தியால், அருணகிரிநாதர் உளமுருகப் பாடிய பாடல் இது. அருணகிரிநாதர் வழங்கிய திருப்புகழை அதே உருக்கத்தோடு, தேன் குரலில் பாடிக்கொண்டிருந்தான் ஒரு சிறுவன்.  

வயது 13. நெற்றி நிறைய விபூதி; கழுத்தில் ருத்திராட்ச மாலை; பேசி முடிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் 'சிவ... சிவ...’ என முணுமுணுக்கும் சிவ நாமம்; திருப்புகழின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அழகாகப் பதவுரை, தெளிவுரை சொல்லி அசத்திக் கொண்டிருக்கிறான். அந்தச் சிறுவன்... நந்திகேஸ்வரன்.

''சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள மாடர்ன் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். சின்ன வயதில் 'ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்’ என்று கோயிலில் நான் பாடியதைக் கேட்டுவிட்டு, எங்கள் அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் பாராட்டினாங்க. உடனே, பாட்டுக் கத்துக்கறதுக்கு ஒரு பக்கம், தேவாரம், திருவாசகம் எல்லாம் தெரிஞ்சுக்கறதுக்கு இன்னொரு பக்கம்னு என்னைச் சேர்த்துவிட்டாங்க என் அம்மா. ஆனாலும், என் முதல் குரு அம்மாதான்!'' - சொல்ல நினைப்பதை எந்தக் குழப்பமும் தடுமாற்றமும் இல்லாமல் தெளிவாக, நிதானமாகச் சொல்கிறான் நந்திகேஸ்வரன்.

'மாசம் தவறாம மீனாட்சியை தரிசிக்கப் போயிடுவேன்!’

''அபிராமி அந்தாதி, திருப்புகழ், மீனாட்சி திருக்கல்யாணம், பெரியபுராணம், அம்பாள் கருணை, மீனாட்சி பிள்ளைத்தமிழ் இவற்றைப் பற்றித்தான் அதிகமா சொற்பொழிவுகள் பண்ணிட்டிருக்கேன். கடந்த அஞ்சு வருஷமா, அதாவது என் எட்டு வயசுலேருந்து சொற்பொழிவு பண்ணிட்டிருக்கேன். இதுவரை சுமார் 60-க்கும் மேற்பட்ட மேடைகள்ல பேசியிருக்கேன்.

திருக்கடையூர் அபிராமி அம்பாள்மேல எனக்கு அளவு கடந்த பக்தி. அதனாலயோ என்னவோ, அபிராமி அந்தாதி பத்தி சொற்பொழிவாற்றும்போதெல்லாம், உடம்பு என்னவோ செய்யும். அதேபோல, மதுரைல சொற்பொழிவு செய்யப் போனப்ப, மீனாட்சி அம்பாளைத் தரிசனம் பண்ணி, அவளோட சரிதத்தையும் அருளாடல் களையும் தெரிஞ்சுக்கிட்டேன். அன்னிலேருந்து மீனாட்சி அம்பாளும் என் இஷ்ட தெய்வமாயிட்டா! இப்ப, மாசம் ஒரு தடவையாவது மதுரைக்குக் கிளம்பிடறேன்'' என்று உற்சாகம் ததும்பச் சொல்லும் நந்திகேஸ்வரன், எப்போதும் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருக்கிறான். தவிர, மோதிரத்திலும் ருத்ராட்சம் பதித்து அணிந்திருக்கிறான்.

அதுகுறித்துக் கேட்டால்...சென்னை பவானி ஈஸ்வரி கோயிலில்,  மூன்று வயதிலேயே சிவ தீட்சை பெற்றுவிட்டானாம் நந்திகேஸ்வரன். மதுரை ஆதீனத்திடமும் அனுஷ்டான தீட்சையும் பெற்றிருக்கிறான்.

''மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு, சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு எனும் திருஞானசம்பந்தரின் பதிகத்தைப் பாடி சொற்பொழிவு செய்து, எல்லாருக்கும் விபூதி தர்றது என் வழக்கம். ஒருமுறை, குற்றாலம் சத்சங்கத்தில் சொற்பொழிவு முடித்துவிட்டு, அங்கே உள்ள சிவாலயத்துக் குச் சென்றேன். அங்கே சித்தர்கள் இன்றளவும் வாழ்ந்து வருவதாக ஐதீகம்!'' என்று சொல்லிச் சிலிர்க்கிறான் நந்திகேஸ்வரன்.  

''இவன் பிறந்ததும், விருத்தாசலம் ஸ்ரீவிருதகிரீஸ்வரரைத்தான் முதலில் தரிசிச்சோம். அன்னிக்குப் பிரதோஷம். அங்கே, நந்தியம் பெருமானுக்கு அமர்க்களமா அலங்காரம் பண்ணியிருந்தாங்க. அப்ப என் மனைவி, குழந்தையோட எதிர்காலத்துக்காக நந்தியின் காதில் வேண்டிக்கிட்டா. பிறகு தெய்வாதீனமா, பையனுக்கு நந்திகேஸ்வரன்னே பேரு வைக்கும்படி அமைஞ்சது. எல்லாம் கடவுள் கிருபை!'' என்று பெருமிதத்துடன் சொல்கிற அவனுடைய தந்தை பாஸ்கரன், எம்.டி.சி.யில் டிரைவராகப் பணிபுரிகிறார்.

'மாசம் தவறாம மீனாட்சியை தரிசிக்கப் போயிடுவேன்!’

நந்திகேஸ்வரனின் தாய் கமலா, வீட்டில் இருந்தபடியே பாடல்களையும், புராண- இதிகாசங்களையும் மகனுக்குச் சொல்லித் தந்தபடி இருக்கிறார். எங்கே, எந்த ஊரில் சொற்பொழிவு நடந்தாலும் தாய், தந்தை இருவரும் நந்திகேஸ்வரனுக்குப் பக்கபலமாக இருந்து வழிநடத்தி வருகின்றனர். சிவ பூஜை, பிரதோஷம் என்று எதுவானாலும் இவர்கள் வீட்டில் உள்ள சிவனாரின் சிலைக்கு, தேவாரம் திருமறைகள் பாடி, நந்திகேஸ்வரனின் கையால் குளிரக் குளிர நடைபெறுகிறது அபிஷேகம். அப்போது, அந்தத் தெருவில் வசிப்பவர்கள் அனைவரும் வந்து 'நமசிவாயம்’ சொல்லி, சிலிர்த்துப் போகிறார்கள்.

தவிர, கடந்த மூன்று வருடங்களாக, வீட்டுக்கு அருகில் உள்ள குழந்தைகள் சிலருக்கு தேவாரம், திருவாசகம் பாடல்களைக் கற்றுக் கொடுத்துவருகிறானாம் நந்திகேஸ்வரன்.

''எனக்குத் தெரிஞ்சது குறைவுதான். தெரிஞ்ச அந்தச் சொற்பத்தை மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுக்கறேன்; அவ்வளவுதான்! அதேபோல, தெரியாத விஷயங்களைத் தேடித் தேடி கத்துக்கிட்டும் இருக்கேன். கத்துக்கறது எவ்வளவு நல்லதோ, மத்தவங்களுக்குக் கத்துக் கொடுக்கறதும் அவ்வளவு நல்லதுன்னு எங்க தாத்தா சொல்லுவார்'' என்று சொல்லிச் சிரிக்கிற நந்திகேஸ்வரன் மேன்மேலும் புகழ்பெற்று வளர, வாழ்த்தி விடைபெற்றோம்.

படங்கள்: ப.சரவணகுமார்