சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

வரம் தருவாள் வைபவ லட்சுமி!

வரம் தருவாள் வைபவ லட்சுமி!

சென்னை குன்றத்தூர்- சோமங்கலம் சாலையில், குன்றத்தூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுகளத்தூர். திருக்காவனூர் என்றும் இந்தக் கிராமத்தை அழைப்பார்கள். இங்கே, சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது ஸ்ரீபர்வதவர்த்தினி சமேத ஸ்ரீராமநாதீஸ்வரர் கோயில். இந்த ஆலயத்தில், ஸ்ரீவைபவ லட்சுமிக்கும் சந்நிதி உள்ளது.

வனவாசத்தின்போது, ஸ்ரீராமர் இங்கு வந்து சிவலிங்கத்தை வழிபட்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். தவிர, முனிவர்களும் ரிஷிகளும் வணங்கி வழிபட்ட ஆலயம் இது.

இத்தனைப் பெருமைகள் கொண்ட ஆலயத்தில், ஸ்ரீவைபவ லட்சுமி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறாள் என்பது கூடுதல் சிறப்பு! திருமணம் போன்ற பல மங்கலகரமான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்னதாக, ஸ்ரீவைபவ லட்சுமியின் சந்நிதிக்கு வந்து, அம்பாளுக்கு அபிஷேகமும் சிறப்பு பூஜையும் செய்து வழிபட்டால், காரியங்கள் இனிதே நிறைவேறும்; கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்!

வரம் தருவாள் வைபவ லட்சுமி!

வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி திதி ஆகியன சேர்ந்து வரும் நாளில், ஆலயத்தில் மாக்கோலமிட்டு, செம்மண் பூசி, தென்னை மற்றும் பனை ஓலைகளால் அலங்கரித்து, ஸ்ரீவைபவ லட்சுமிக்கு மஞ்சள், குங்குமம், இளநீர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பிரார்த்தித்தால் மாங்கல்ய பலம் பெருகும், மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும் என்கின்றனர் பக்தர்கள்.  

அம்பிகைக்கு நீல நிற வஸ்திரம் சார்த்தி, பல வகை மலர்களால் கிரீடம் சூட்டி வழிபட, குடும்பத்தில் நிம்மதி நிலவும், கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் என்பர்.

குன்றத்தூரில் அவதரித்த சேக்கிழார் பெருமான், இங்கு வந்து வழிபட்டு கிரிவலம் வந்ததும்,  தென் திருவண்ணாமலை என்று போற்றப்படுவதுமான இந்தக் கோயிலை தற்போது புதுப்பித்துச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

- ஹெச்.ராசிக் ராஜா

படங்கள்: தி.குமரகுருபரன்