சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

பாவம் போக்கும் பாப மோசனிகா!

ஏற்றம் தரும் ஏகாதசிபி.சந்த்ரமௌலி

திதிகளில் 11-வது இடத்தைப் பெற்றிருக்கும் ஏகாதசிக்கு சிறப்புகள் அதிகம் உண்டு. விரதங்கள் பல இருக்கின்றன. எல்லாவற்றிலும் உயர்ந்தது ஏகாதசி விரதம்.

பாவம் போக்கும் பாப மோசனிகா!

கங்கையை விடச் சிறந்த தீர்த்தம் இல்லை.

விஷ்ணுவை விட உயர்ந்த தெய்வம் இல்லை.

காயத்ரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை.

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.

ஏகாதசியை விடச் சிறந்த விரதம் இல்லை.

என்கின்றன ஞான நூல்கள். தேய்பிறையில் வரும் ஏகாதசி, வளர்பிறையில் வரும் ஏகாதசி என மாதத்துக்கு இரண்டாக, ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். ஒருசில வருடங்களில், ஒரு ஏகாதசி அதிகமாகி 25 ஏகாதசிகளும் வருவது உண்டு.

இவற்றின் மகிமைகள் குறித்தும், இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் உண்டாகும் பலன்கள் குறித்தும் விரிவாக விளக்கும் 'ஏகாதசி மகாத்மியம்’ எனும் நூல், கிருத யுகத்தில் நிகழ்ந்த அற்புதமான சம்பவம் ஒன்றை எடுத்துரைக்கிறது.

கிருத யுகம் நடந்துகொண்டிருந்தது. அது நல்ல யுகம்தான்; மேன்மையானதுதான். இருந்தாலும், ஒளி வீசும் விளக்கின் அடியில் கொஞ்சம் இருள் இருப்பதைப் போல, கிருத யுகத்தில் முரன் என்று ஓர் அரக்கன் இருந்தான். இரக்கம் என்பதே அணு அளவுகூட இல்லாத அவன், தேவர்களையும் தேவர்களின் தலைவனான இந்திரனையும் தேவலோகத்தை விட்டு வெளியே விரட்டினான். வேத வல்லுநர்களை வாட்டி வதைத்தான்.

முரனின் பலம் கண்டு பயந்த தேவேந்திரன், கயிலாயம் சென்று, ''சிவபெருமானே! என்னைக் காப்பாற்றுங்கள்!'' என்று வேண்டினான்.

சிவபெருமானோ, ''தேவேந்திரா! பரிபாலன முதல்வரான மகா விஷ்ணுவிடம் போ! அவர்தான் இப்போது உன்னைக் காப்பாற்றக் கூடியவர்!'' என்று வழிகாட்டினார்.

அதன்படி பாற்கடலுக்குப் போய், பகவான் திருவடிகளில் விழுந்தான் தேவேந்திரன். ''கவலைப்படாதே!'' என்று அபயமளித்த கருடத்வஜன் உடனே போர்க்கோலம் பூண்டு கிளம்பினார். தேவர்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.

அச்சுதனுக்கும் அரக்கர் படைக்கும் கடும் போர் மூண்டது. சக்ரபாணியின் சக்ராயுதம், அரக்கர் படைகளை அழித்தது. மூர்க்கனான முரன் கோபாவேசம் கொண்டு, தானே முன்னின்று தேவர் படையை சிதறடித்ததுடன், நேருக்கு நேராக மகாவிஷ்ணுவுடன் போரிட்டான். சண்டை நீண்டது.

திடீரென்று, மகாவிஷ்ணு பயந்தவர் போல தம்மைக் காட்டிக்கொண்டு, போர்க்களத்தை விட்டு அகன்று பத்ரிகா ஆசிரமம் சென்றார். அங்கே சிம்ஹாவதி என்னும் குகையில் போய் பள்ளி (படுத்துக்) கொண்டார்.

தெய்வத்தை உணராமல், அவர் தந்த சந்தர்ப்பத்தை நல்லவிதமாக உபயோகப்படுத்திக் கொள்ளத் தெரியாத முரன், ''ஹ்ஹெ! பயந்து ஓடுகிறான் பார்... விடப் போவதில்லை அவனை!'' என்று அகங்காரத்துடன் கொக்கரித்துக்கொண்டு, வேதங்களாலும் தேடிக் கண்டுபிடிக்க முடியாத பெருமாளைப் பின் தொடர்ந்தான்.

சிம்ஹாவதி குகையில் ஸ்வாமி பள்ளிகொண்டு இருப்பதை அறிந்து, ''இவனை இப்போதே கொல்கிறேன்!'' என்று வாளை உருவினான் முரன்.

அப்போது எதிர்பாராத ஒன்று நடந்தது. பரம்பொருளான பகவானின் திருமேனியில் இருந்து, அழகான பெண் ஒருத்தி தோன்றினாள். அவள் கைகளில் இருந்த ஆயுதங்கள் மின்னின. ''முரனே! வாடா, போருக்கு!'' என்று அழைத்தாள்.

''ஒரே அம்பினால் உன் கதையை முடிக்கிறேன்!'' என்று எகத்தாளம் பேசியபடியே முரன் அம்பை எடுக்க முயன்றான்.

அதற்குள் அந்தப் பெண், ''ஹும்!'' என்று ஓர் ஒலி எழுப்பினாள். அச்சுத னையே அழிக்க நினைத்த முரன், அந்த ஒலியால் அப்போதே சாம்பலானான். அதே நேரத்தில், மகாவிஷ்ணு உறக்கத்தில் இருந்து எழுந்தார். தன் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தியையும் அவள் செயலையும் பாராட்டினார். அவளுக்கு 'ஏகாதசி’ என்று திருநாமம் சூட்டினார்.

மேலும், ''ஏகாதசியே! நீ தோன்றிய இந்த நாளில் உபவாசம் இருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, வைகுண்டவாசம் அளிப்பேன். வாழ்நாளில் அவர்களுக்கு ஆரோக்கியம், செல்வம் என எல்லாவித சுகங்களையும் வழங்குவேன்'' என்று வாக்களித்தார்.

ஏகாதசி தேவி, மார்கழி மாதம் தேய்பிறையில் உதித்ததால், அந்த நாளுக்கு உற்பத்தி ஏகாதசி என்று பெயர் உண்டானது. மார்கழியின் வளர் பிறையில் வருவது, மோட்ச ஏகாதசி எனப்படும் வைகுண்ட ஏகாதசி ஆகும்.

இதுபோன்று, மாதம்தோறும் வரும் ஏகாதசிகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனிப் பெயரும், சிறப்பும் உண்டு (இதுகுறித்த விவரம் தனியே பெட்டிச் செய்தியாக தரப்பட்டுள்ளது). ஏகாதசி விரத மேன்மையை விளக்கும் அற்புதமான கதைகளை எடுத்துரைக் கிறது ஏகாதசி மகாத்மியம். அதில் ஒன்று- மன்னர் ருக்மாங்கதன் கதை.

பாவம் போக்கும் பாப மோசனிகா!

விதர்ப்ப நாட்டின் மன்னர் ருக்மாங்கதன். அவர் மனைவி சந்தியாவளி. அவர்களின் அன்பு இல்லறத்தின் பயனாகப் பிறந்த மகன் தர்மாங்கதன். நாட்டை நல்ல முறையில் நிர்வாகம் செய்து வந்த ருக்மாங்கதன், தன் மகனையும் நல்ல முறையில் வளர்த்து வந்தார். அமைதியாகப் போய்க்கொண்டிருந்த ருக்மாங்க தனின் வாழ்வில் ஒரு மாபெரும் திருப்பத்தை உண்டாக்கியது, அவரது நந்தவனம்தான்.

அந்த நந்தவனத்தில் மணம் வீசி மனத்தை மயக்கும் வண்ண மலர்கள் ஏராளமாக இருந்தன. தவம் செய்யும் முனிவர் ஒருவரும் அங்கு தங்கியிருந்தார். ஒரு நாள், தேவலோகக் கன்னிகள் சிலர் பூஜைக்குப் பூப்பறிக்க வேண்டி பூலோகத்துக்கு வந்தார்கள். அவர்களின் கண்களில் ருக்மாங்கதனின் நந்தவனம் தென்பட்டது. அப்புறம் என்ன?

எங்கும் அலைந்து திரியாமல் தினந்தோறும் அந்த நந்தவனத்துக்கு வந்து பூக்களைப் பறித்துக் கொண்டு போவது தேவ கன்னிகைகளின் அன்றாட வாடிக்கையாகிவிட்டது.

மலர்கள் திருடுபோவது தெரிந்ததும் நந்தவனத்துக் காவலாளி பொறுப்பாக இரவெல்லாம் கண் விழித்துப் பார்த்தான். தேவ கன்னிகைகள் அவன் கண்களில் அகப்பட வில்லை.

காவலாளிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நந்தவனத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரைக் கண்டு, 'யாரும் வராத, வர முடியாத நந்தவனத்தில் இருந்து, இவர்தான் பூக்களைத் திருடி இருக்க வேண்டும்’ என்று தீர்மானித்து, முனிவரைக் கொண்டு போய் மன்னர் முன்னால் நிறுத்தி விவரங்களைச் சொன்னான்.

மன்னர் பதறிப் போய், முனிவரின் கால்களில் விழுந்து, ''தெரியாமல் செய்துவிட்டான். மன்னித்து விடுங்கள்!'' என்று வேண்டினார்.

பாவம் போக்கும் பாப மோசனிகா!

முனிவரோ, ''மன்னா! அவனிடம் கோபிக்காதே! உன் நந்தவனத்தில் இருந்து பூக்கள் எல்லாம் திருடு போவதற்கான காரணம் எனக்குத் தெரியும். தேவலோகக் கன்னிகள், மஹா விஷ்ணு வைப் பூஜை செய்வதற்காக உன் நந்தவனத்தில் இருந்து பூக்களைப் பறித்துப் போகிறார்கள். அவர்கள் சாதாரணமாக யார் கண்களிலும் தென்படமாட்டார்கள். அவர்களைப் பிடிக்க வேண்டுமானால் உன் நந்தவனத்தில் கொம்மட்டி விதைகளை விதைக்கச் சொல்!  கொம்மட்டிக் கொடி, காலில் பட்டால் தேவ கன்னிகள் தங்கள் சக்தியை இழந்துவிடுவார்கள். அவர்களால் மேல் உலகம் போக முடியாது. நீயும் அவர்களைப் பார்க்கலாம்'' என்றார்.

அதன்படியே கொம்மட்டி விதைகள் விதைக்கப்பட்டு, நன்கு வளர்ந்தன. தேவலோகக் கன்னிகள் வழக்கம் போல் பூப்பறிக்க வந்தார்கள். அவர்களுள் ஒரு பெண்ணின் காலில் கொம் மட்டிக் கொடி பட்டுவிட்டது. அவள் மேல் உலகம் போகும் சக்தியை இழந்தாள். மற்றவர்கள் தேவலோகம் திரும்பினார்கள்.

நடந்தது அனைத்தையும் அறிந்த முனிவர், மன்னரை அழைத்து வரச்செய்து, நந்தவனத் தில் இருந்த தேவகன்னியைக் காட்டினார். தேவகன்னியின் அருகில் போய், அவள் கால்களில் விழுந்து வணங்கினார் ருக்மாங்கதன்.

''மன்னா! மஹாவிஷ்ணுவின் பூஜைக்காக உன் நந்தவனத்தில் இருந்து பூக்களைப் பறித்தது தேவகன்னியான நானும் என் தோழிகளும் தான். நாங்கள் முனிவர்களின் கண்களில் மட்டும் தென்படுவோம். உன் புண்ணியப் பலன் காரணமாக, இன்று உன் கண்களில் தென்படுகின்றேன். கொம்மட்டிக் கொடி என் காலில் பட்டதால் சக்தி இழந்துவிட்டேன். நான் மேலுலகத்துக்கு திரும்பிச் செல்வது உன் கையில்தான் உள்ளது'' என்றாள் தேவ கன்னி.

''தாயே! என்ன செய்ய வேண்டும், கூறுங்கள்?'' எனக் கேட்டார் ருக்மாங்கதன்.

''மன்னா! ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதன் பலனை எனக்குத் தானம் செய்தால் போதும். இழந்த சக்தியை நான் மீண்டும் பெற்று, தேவலோகம் போய்விடுவேன்'' என்றாள் தேவகன்னி.

''அம்மா! நீங்கள் சொல்லும் விரதத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டது கூடக் கிடையாதே. அப்படி இருக்க, தங்கள் விருப்பத்தை நான் எப்படி நிறைவேற்ற முடியும்?'' என்றார் ருக்மாங்கதன். தேவலோகப் பெண்ணல்லவா? அவளே வழியைக் காட்டினாள்.

''மன்னா! அரண்மனையில் உன் மனைவிக் காக உணவு சமைத்துப் போடுபவள் ஒரு நாள் சரியாக சமைக்கவில்லை என்று கோபம் கொண்டு, அவளைச் சிறையில் அடைத்தாள் உன் மனைவி. தசமி திதி நாளான அன்று அவள் ஒரு வேளை மட்டும் உணவு உண்டிருந் தாள். அடுத்த நாளான ஏகாதசி அன்றும் சிறையிலிருந்த அந்த சமையல்காரி எதுவும் சாப்பிடவில்லை. தண்ணீர்கூடக் குடிக்கவில்லை. மறுநாள் துவாதசி அன்று உன் மனைவி, அவளை மன்னித்து விடுதலை செய்து உணவு உண்ணச் செய்தாள்.

தெரிந்தோ தெரியாமலோ ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தாலும் பலன் உண்டு. அந்த முறையில் உன் அரண்மனை சமையல்காரியிடம் ஏராளமான பலன் இருக்கிறது. அதை அவள் எனக்குத் தானம் செய்தால் போதும். நான் மேலுலகம் போவேன்'' என்றாள் தேவகன்னி.

பாவம் போக்கும் பாப மோசனிகா!

ருக்மாங்கதன் அரண்மனைக்கு விரைந்தார். தேவகன்னி குறிப்பிட்ட அந்த சமையல்காரியை அழைத்து, அவள் பெற்றிருந்த ஏகாதசி விரதப் பலனைத் தேவகன்னிக்குத் தானம் செய்ய ஏற்பாடுகளைச் செய்தார்.

தானம் பெற்றதும் தேவகன்னி, மறுபடியும் தேவலோகம் செல்லும் சக்தியைப் பெற்றாள்.

''மன்னா! துர்வாசரின் சாபத்தால் அனைத்து செல்வங்களையும் இழந்த தேவர்கள், அன்ன - ஆகாரம்-தூக்கம் இல்லாமல் பாற்கடலைக் கடைந்தார்கள். துவாதசியன்று உதயத்தில் பாற்கடலில் இருந்து மகாலட்சுமி தோன்றினாள். மஹாவிஷ்ணு அவளைத் திருமணம் செய்து, தேவர்களுக்கு அருள் புரிந்தார்.

தேவர்களும் முனிவர்களும்கூட அன்று முதல் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து உயர்ந்த நிலையை அடைந்தார்கள். நீயும் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடி. உன்னத நிலை அடைவாய்!'' என்று சொல்லிவிட்டு, தேவகன்னி மேலுலகம் சென்றாள்.

பிறகு ருக்மாங்கதன், நந்தவனத்தின் காவலாளியை அழைத்து,

''இங்குள்ள கொம்மட்டிக் கொடிகளை யெல்லாம் முழுவதுமாக அப்புறப்படுத்து! இனி இந்த நந்தவனத்தில் உள்ள பூக்கள் எல்லாம் தேவகன்னிகளின் உபயோகத்துக்காகவே இருக்கட்டும்'' என்று சொல்லி அரண்மனை திரும்பினார்.

மேலும் அவர், ''இன்று முதல் நம் நாட்டில் உள்ள அனைவரும் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும்'' என உத்தரவிட்டு அதற்குண்டான ஏற்பாடுகளையும் செய்தான். அதன்படி ஒவ்வொரு மாதமும் தசமி அன்றே முரசம் அறைந்து ஏகாதசி விரதம் அறிவிக்கப்பட்டது. அனைவரும் ஏகாதசி விரதம் இருந்து அல்லல்கள் நீங்கப் பெற்றார்கள்.

அரண்மனை சமையற்காரி அறியாமல் கடைப்பிடித்த விரதத்துக்கே இவ்வளவு மேன்மை எனில், அதன் மகத்துவத்தையும், கடைப்பிடிக்கும் முறையையும் அறிந்து பயபக்தியுடன் உளப் பூர்வமாக நாம் ஏகாதசி விரதம் இருந்தால் கிடைக்கும் மேன்மையைச் சொல்லவும் வேண்டுமா?

ஏகாதசி விரதம் இருக்க வேண்டிய முறை...

தசமி அன்றும், துவாதசி அன்றும் ஒரு வேளைதான் உணவு உண்ண வேண்டும்.

ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நித்திய கர்மாக்களை (காலை வழிபாடு) செய்ய வேண்டும். ஏகாதசி அன்று துளசியைப் பறிக்கக் கூடாது. முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

மஹாவிஷ்ணுவை முறைப்படி பூஜை செய்ய வேண்டும். முடிந்தவர்கள், தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். முடியாத பட்சத்தில் ஸ்வாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம்.

ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் பஜனை அல்லது மஹாவிஷ்ணுவின் கதைகளைக் கேட்பது முதலியவற்றில் ஈடுபட்டு கண் விழிக்க வேண்டும். கோபம், கலகம், அகங்காரம், காமம் முதலியவற்றை விட்டுவிட வேண்டும்.

பாவம் போக்கும் பாப மோசனிகா!

துவாதசி அன்று காலையில்  ஸ்வாமியைப் பூஜை செய்து விட்டுப் பிறகே உண்ண வேண்டும். ஓர் ஏழைக் காவது உணவு தந்து, அதன்பிறகே நாம் உண்பது நல்லது. அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை உண்பது நல்லது.

சரி! ஏகாதசியின் பொதுவான சிறப்புகளை அறிந்தோம். இதோ... சீர்மிகு சித்திரையில் வரப்போகும் இரண்டு ஏகாதசி திருநாட்களின் சிறப்பு என்ன என்பதைத் தெரிந்துகொள்வோமா?

பாப மோசனிகா ஏகாதசி: சித்திரை மாத தேய் பிறையில் வரும் இந்த ஏகாதசியில் விரதம் இருந்து, பெருமாளை வழிபடுபவர்களது சகல பாவங்கள் தொலையும். மாந்தாதா என்ற மன்னனுக்கு லோமச முனிவர் இதன் பெருமையை விவரிக்க, அதை ஏற்று விரதம் இருந்து அவன் மேன்மை அடைந்தான்.

காமதா ஏகாதசி: சித்திரை வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசி நாளில் விரதம் இருந்து வழிபட, தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என திலீப மகராஜாவுக்கு வசிஷ்டர் இதை எடுத்துரைத்ததாகப் புராணங்கள் சொல்லும்.

திருமாலின் திருவருளால் நமது வாழ்வும் செழித்தோங்கிட, ஏகாதசி புண்ணிய தினங்களில் நாமும் விரதம் இருந்து ஏற்றம் பெறுவோம்.