மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம் சிவம் சாகசம்! - 39

சித்தம் அறிவோம்... இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியம்: ஜெயராஜ்

ஞ்ஞானம் போயிற்று என்று தும்பீபற - பர
மானந்தங் கண்டோம் என்று தும்பீபற
மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபற - மலை
மேலேறிக் கொண்டேன் என்று தும்பீபற

  - இடைக்காடர்

சித்தம் சிவம் சாகசம்! - 39

பாபாஜி, தான் யோகம் கற்றுத்தர விரும்பியவருக்கு இட்ட மூன்று கட்டளைகளின் பின்னே பெரும் சூட்சுமம் உள்ளது. அதற்கு முன் நாம் அறியவேண்டியவை என பல முக்கிய செய்திகள் உள்ளன.

பாபாஜி போன்ற சித்த புருஷரின் தரிசனம்,  விதி இருந்தால்தான் ஏற்படும். இதை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்.

பழநிக்கு அருகில் கணக்கன்பட்டி எனும் ஊரில், சித்த புருஷர் ஒருவர் இருந்தார். அவரை பழநி சுவாமிகள், கணக்கன்பட்டி சித்தர் என்றெல்லாம் அழைப்பார்கள்.

இருபது வருடங்களுக்கு முன்பு, பழநி பாத யாத்திரை யின்போது, அவரைத் தரிசித்திருக்கிறேன். அவரைப் பார்த்ததும், எப்படி இவரால் இப்படித் திரிய முடிகிறது என ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவருடைய இருப்பிடத்தில், நானும் நண்பர்களும் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுத்துவிட்டுக் கிளம்பினோம். நிர்வாண கோலம், ஒற்றை நாடி சரீரம், சுறுசுறுப்பான நடை, எவரையும் கவனிக்காத போக்கு என அவரின் தோற்றமும் செயல்களும் எங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தின. மற்றபடி அருள்வாக்கு, அதிசயம் என்று எந்த அனுபவமும் நிகழவில்லை.

கடந்த மாதத்தில், அவருடைய பக்தர்களில் ஒருவர் என்னைச் சந்தித்து, மதுரையில் உள்ள கணக்கம்பட்டி சித்தரின் ஞானசபையில் 10-ம் ஆண்டு துவக்க விழா இருப்பதாகவும், அதில் நான் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கணக்கம்பட்டி சித்தரின் செயல்பாடுகள் உருவாக்கும் பிரமிப்பு பற்றி, அப்போது அவர் நிறையவே கூறினார்.

நான் சித்தர்கள் குறித்து வாசிப்பவன்; எழுதுபவன். மற்றபடி சித்தானுபவம், குரு கிருபை என்பதெல்லாம் எனக்கு காஞ்சி மகா பெரியவாளோடுதான்! சித்த புருஷர்களுக்கெல்லாம் மேலானவர் அவர். சித்தர்களுக்கான இலக்கணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்.

இந்த நிலையில், கணக்கம்பட்டி சித்தர் குறித்து அறியும் வாய்ப்பும், அவருக்கான விழாவில் பேசுகிற வாய்ப்பும் கிடைத்தது. முன்னதாக, கணக்கம்பட்டி சித்தரின் சிலிர்ப்பானதொரு சித்து விளையாட்டை அந்த நண்பர் பகிர்ந்துகொண்டார்.

இன்றைக்குத் தமிழகத்தில் மழை பொய்த்து, வறட்சிக்கு ஆளாகியிருப்பதை அறிவோம். ஆறு, குளங்கள் காய்ந்து கிடக்கின்றன. கடந்த மாதம் ஒரு பெண்மணி, கணக்கம்பட்டி சித்தரிடம் மழை வேண்டி, மிகவும் வருந்தியுள் ளார். ''சாமி... ஆடு மாடு குடிக்கத் கூட தண்ணி இல்ல சாமி. நீங்கள்ளாம் இருக்கிற பூமில இப்படி இருக்கலாமா?'' என்று கேட்டார்.

அதைக்கேட்ட கணக்கம்பட்டி சுவாமிகள், ''மழைய வரவிடாம பண்றதும் நீங்கதான்; வரணும்னு ஆசைப்படுறதும் நீங்கதான். மழை என்ன, நீ வளக்கற ஆடா, மாடா... வான்னா வரதுக்கும், போன்னா போறதுக்கும்..?'' என்று தத்துவார்த்தமாய்க் கேட்டார்.

இன்றைய வாழ்வியில் முறையால், வானமே பொத்தல் விழுந்து, புண்ணாகிக் கிடக்கிறது. நாம் மரங்களை வளர்ப்பதைவிட வெட்டுவதே அதிகம். பின், எங்கிருந்து வரும் மழை?

ஆனாலும், சித்தர் அந்தப் பெண்மணியிடம், ''போ, போ! எல்லாம் வரும், கொட்டித் தீர்க்கும், போ!'' என்று கூறியுள்ளார். அன்று இரவே, பழநி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் மூன்று மணி நேரம் கொட்டித் தீர்த்தது மழை. பழநி மட்டுமின்றி, அப்போது தமிழகத்திலும் பரவலாகப் பெய்திருந்தது மழை! ஊட்டியில், காட்டாற்று வெள்ளம் பெருகி, கரையோர வீடுகளே மூழ்கும் அளவுக்கு மழை பெய்தது.

சித்தம் சிவம் சாகசம்! - 39

இது மழைக் காலமில்லை; இப்போதெல்லாம் மழைக்காலத்திலும் மழை பெய்வது இல்லை. சித்தர் சொன்னபோதும் அதற்கான சுவடே இல்லை. எனினும், அவர் சொன்னது நடந்துள்ளது.

இப்படி அந்தச் சித்தர் குறித்து பல அரிய தகவல்களை, அந்த அன்பர் என்னிடம் தெரிவித்தபோது, பிரமித்துப் போனேன். எனக்கும் சுவாமிகளைப் பார்க்கும் ஆவல் எழுந்தது. ஆனால், அதற்கான வேளை வருவதற்குள், கடந்த 11.3.14 அன்று செவ்வாய்க்கிழமை மதியம், சுவாமிகள் அமரத்துவம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ந்தேன். அப்போதுதான், 'எட்டப் போறேன். எட்டறதுன்னா என்னன்னு தெரியுமா, உனக்கு?’ என்று பேச்சினிடையே சுவாமிகள்

கேட்டதை நண்பர் விவரித்தது நினைவுக்கு வந்தது. அப்போது அது ஒரு சாதாரண வாக்கியமாகவே எனக்குப் பட்டது. இப்போது யோசிக்கையில், 'எட்டப்போறேன்’ என்று சுவாமிகள் சொன்னது இதைத்தானோ எனப் புரிய, அதிர்ந்து போனேன். அவரைத் தரிசிக்கிற பாக்கியம் அமையவில்லையே என வருந்தினேன்.

எதிர்காலத்தில், கணக்கம்பட்டி சித்தரின் பரமானந்தமான அனுபவங்கள் பலராலும் வெளிப்படலாம். அது அவர் சித்தம்! ஏன் என்றால், ஒவ்வொரு அனுபவத்தாலும் யாரோ ஒருவருக்கு கிடைக்காத விடை கிடைத்து, ஞானத்தெளிவும் உருவாகிறது. அது ஒரு சக்கர சுழற்சியாக நடைபெற்றபடியே இருக்கிறது என்பதே உண்மை.

மீண்டும் பாபாஜியிடம் வருகிறேன்.

பாபாஜியை தரிசனம் செய்த அன்பருக்கு, அவர் யோகியா வதற்கு இடையூறாக சில பாக்கிகள் இருந்தன. அது நீங்கிவிட்டால் அவர் முழு யோகியாகி இந்த உலகின் பாச பந்தங்களில் இருந்து எளிதில் விடுதலை பெறும் சாத்தியங்கள் பாபாஜிக்குத் தெரிந்ததாலேயே அன்னதானம், ஏழைப் பெண்ணுக்குத் தாலி, வைதீக வஸ்திர தானம், ஏழு புனித நதிகளில் நீராடல் மற்றும் மாட்டுக்குக் கீரை, காக்கைக்குச் சோறு என்கிற பரிகாரார்த் தங்களைக் கூறியிருந்தார்.

கர்ணன் இறந்து, சொர்க்கம் போகிறான். அங்கே அவனுக்குப் பசியெடுக்கிறது. சோறு யாசிக்கிறான். பட்டுத்துணி போர்த்திய தட்டை நீட்டுகிறாள் ஒரு தேவதை. துணியை விலக்கிப் பார்த்தால், தட்டில் தங்கம், வைரம், மாணிக்கம் என இருந்ததாம். 'பசிக்குச் சோறு கேட்டால், இதைத் தருகிறாயே?’ என்று கேட்டானாம் கர்ணன். 'என்ன செய்வது! இதைத்தானே நீ தானமாக பிறருக்குத் தந்தாய்’ என்றாளாம் அந்தத் தேவதை.

சொர்க்கத்தில் பசிக்குமா, இப்படியும் நடக்குமா என்று கேட்கக் கூடாது. இது புனைக்கதை, அன்ன தானத்தின் அவசியத்தையும் மேன்மையையும் வலியுறுத் துவதற்காகச் சொல்லப்பட்ட சத்விஷயம். அதனாலேயே ஆழ்வார்களும், நாயன்மார்களும் அடியவர்களுக்குச் சோறிடுவதை முதல் கடமையாகக் கொண்டிருந்தனர்.

இப்படி, பாபாஜி கூறிய ஒவ்வொரு பரிகாரச் செயலுக்குப் பின்னாலும் கர்மக் கணக்குகள் ஒளிந்துள்ளன.

சித்தம் சிவம் சாகசம்! - 39

ஏழைப் பெண்ணுக்குத் தாலி என்பதன் பின்னாலே, ஒரு பெண்ணின் திருமண வாழ்வைக் கெடுத்த பாவம் இருந்திருக்கலாம். வைதீக வஸ்திர தானம், மானம் காக்கும் ஒரு செயல். யார் மானத்தை வாங்கிய பாவத்துக்கு இது பரிகாரமோ? ஏழு புனித நதிகளில் நீராடுவது என்பதும் பெரும் புண்ணியம்.

இந்து மதம் மட்டுமே, நதிகளை தெய்வமாக்கி, நமக்கான விமோசனம் நதிகளில் உள்ளது என்கிறது. நதி நீர் என்பது மலையில் உருவாகி, கடலில் சங்கமிப்பது ஆகும். உயரே உருவாகி வழியெங்கும் செழிப்பாக்கி தாகம் தீர்த்த நிலையில், கடல் சங்கமத்தில், உலகின் மிகப் பெரிய விஷயம் ஒன்றில் கலந்து ஒன்றாகிவிடுகிறது. இதில் மூழ்கும்போது, நமக்கும் மலையின் தொடர்பு முதல் மடுவாகிய பெரிய சமுத்திரத் தொடர்பு வரை சகலமும் ஏற்படுகிறது. எல்லாமே பெரிதினும் பெரியவை!

பெரிதாக முடிந்த விதி இருக்கும்போது, எப்படிச் சிறிதான வினைகள் நம்மைச் சிதைக்க முடியும்? நதி நீராடல் என்பது உடம்புக்கான ஆனந்தம் மட்டுமல்ல; உள்ளத்துக்கான பெரும் விமோசனம். பசுவுக்கும் காகத்துக்குமான உணவு, பித்ரு தோஷத்தை நீக்கும்.

இவ்வளவையும் ஈடேற்ற முடிந்தவனுக்கு, ஞானம் எப்படி வசப்படாமல் போகும்? அதன்பின், அவர் பாபாஜியை நாட, அந்த அன்பரைக் கடைத்தேற்றியிருப்பார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

சித்த புருஷர்கள் இப்படி நமக்கு ஞான வழிகாட்டிகளாகவும், நல்லாசிரியர்களாகவும் விளங்கி வருகின்றனர். இந்த வழிகாட்டுதல் என்பதுகூட பலவிதங்களில் என்று சொல்லலாம். பேசியும் உபதேச மொழி கூறியும்தான் வழிகாட்ட வேண்டும் என்றில்லை; உற்று நோக்கி ஒரு பார்வையால்கூட அவர்களால் நமக்கு விமோசனம் அளிக்க இயலும்.

இந்த உலகில் நாம் பெரிதாகக் கருதும் எல்லாமே சித்தர் களுக்கு அற்பமானவைதான். அவர்களுக்குத் தங்களின் மேலான அனுபவங்களே உன்னதமானவை.

திருமந்திரத்தில் ஒரு பாடல்.

'வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண்டோடினர் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே!’

- எனும் பாடலில் சித்தர்களின் மறைபொருள் ஞானத்தை உணர்த்தியிருப்பார் திருமூலர்.

கத்தரிக்காய் விதைக்க பாகற்காய் விளைந்ததாம்! அப்படி விளைய முடியுமா?

எங்காவது புழுதியைத் தோண்டினால் பூசணி பூக்குமா? இதைப் பார்த்துத் தோட்டத்துக் குடிகள் பயந்து ஓடுகின்றனராம், இது என்ன மாயமோ என்று! அதற்குப் பிறகு, வாழைக்கனி நன்றாகப் பழுத்தது என்கிறார்.

இதன் நுட்பமான உட்பொருள் என்ன தெரியுமா? யோகப் பயிற்சியில் ஈடுபடுவதே கத்தரி விதைப்பது. அதில் பாகற்காய் முளைப்பது என்பது, கசப்பு நீங்குவதைக் குறிக்கிறது. இதனால் மனம் திண்மை அடைகிறது. புழுதியைத் தோண்டுவது என்பது எல்லாவித ஆன்ம தத்துவங்களையும் அலசுவதைக் குறிக்கிறது. அதன் விளைவாக, சிவமே ஜீவன் என்று உணர்த்துகிறார் திருமூலர். இதையே முழுதும் பழுத்தது வாழைக்கனியே என்கிறார்.

சித்தம் சிவம் சாகசம்! - 39

பெரும் சித்தானுபவங்கள் இப்படி மறை பொருளையே கொண்டிருக்கும். நமக்குக் கொஞ்சமாவது ஞானமிருந்தால்தான் இதை அறிந்து, தெளிய முடியும்.

'காகம் கரையும், குயில் கூவும்’ என்று சிறுவர் களுக்குச் சொல்வது போல, அவர்கள் எதையும் எழுதிவைக்கவில்லை. அப்படி எழுதிவைத்தால், அதைக் காலம் விழுங்கியிருக்கும்.

நம் அனுபவங்களை எதற்குப் பிறருக்குச் சொல்லவேண்டும் என்று, எதையுமே கூறாமல் தங்கள் வழியை மட்டும் பார்த்துக்கொண்டு சென்ற சித்த புருஷர்களும் உண்டு. 'எனது அனுபவங் களை உனக்குக் கொடுக்க முடியாது. உன் அனுபவங்களாலேயே நீ சித்தத்தை அறிய முடியும்’ என்பது அவர்களின் கோணம். எனில், தங்கள் அனுபவங்களைப் பாடல்களாக்கி சமூகத்துக்கு விட்டுச்சென்றவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்கிற கேள்வி எழுகிறது.

அந்தப் பாடல்கள், சித்தத்தின் பெருமைக்கும் அருமைக்கும் சாட்சிகளாக விளங்குகின்றன என்பது உண்மை. மற்றபடி, அவற்றை வாசித்து அதன் மூலம் ஒருவர் தன்னைச் சித்தன் என்றாக்கிக்கொள்ள முடியாது என்பதே என் கருத்து.

இந்தச் சித்தர் பெருமக்களில் ஒரு சிலர் நீங்கலாக, அவ்வளவு பேரும் சிவனையே பெரிதாகக் கருதக் காரணம், லிங்கத்தின் தோற்றமே! அதை வடிவுடையது என்போமா, வடிவமற்றது என்போமா? அது ஒரு ஞானக் குறியீடு! தத்துவத் தோற்றம்! பூட்டி வைக்கப்பட்ட புதையல். இதனால், சிவத்தை வியந்து, சாகசங்கள் செய்தருளினார்கள் சித்தர்கள்.

சித்த புருஷர்களுக்கு சாகசம் என்பது ஒரு விளையாட்டு. பொழுதுபோக்கு. அவ்வளவுதான்! பெரும்பாலும் எந்த ஒரு சித்தரும் அதைப் பெரிதாகக் கருதியதில்லை. கொஞ்சம் அது போலக் கருதிய கொங்கணவருக்குக்கூட ஒரு பத்தினி, 'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?’ என்று குட்டு வைத்து, சாகசங்கள் அற்பமானவை என்பதை அவருக்கும் உணர்த்திவிட்டாள்.

ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் யோகி ஒருவர், நீர் மேல் நடந்து வந்து காட்டிப் பெருமிதப்பட்டாராம். இந்தச் சாகசம் கைகூட தனக்குப் பல காலம் தேவைப்பட்டது என்றாராம்.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் உடனே, 'அடடா! ஓரணா கொடுத்தால், படகில் ஏற்றி, சில நொடிகளில் மறு கரைக்குக் கொண்டுவந்து விடப்போகிறான் ஓடக்காரன். இந்த அல்ப விஷயத்துக்குப் பல காலம் வீணடித்துவிட்டீரே?’ என்று கேட்டுச் சிரிக்க, சாகசங்களில் ஏதுமில்லை என்பது புரிந்ததாம் அந்த யோகிக்கு.

சித்தம் ஞானம் பெற்றால், அதையடுத்து சிவம் சுலபமாக வசமாகிவிடுமே...? எனவே, 'சித்தம் சிவம் சாகசம்’ என்று தொடங்கியதை 'சாகசம் சித்தம் சிவம்’ என்று கூறி நிறைவு செய்வதே பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

சாகசம்- சித்தம்- சிவம்!  

(நிறைவுற்றது)