மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்-27

ஆலயம் ஆயிரம்திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

நாற்புறமும் மலைகள் சூழ்ந்த கொங்குநாடு பழங்காலத்தில் வட கொங்கு, தென்கொங்கு, மீ கொங்கு, மழ கொங்கு என நான்கு பெரும் பிரிவுகளாகவும், 24 உட்பிரிவுகளாகவும் கொண்டு திகழ்ந்தது.

கொங்கு நாட்டில், காவிரி வடக்கு தெற்காகப் பாய்வதால், காவிரியின் மேல்கரைப் பகுதி மேல்கரைப் பூந்துறை நாடு என்றும், கிழக்கில் உள்ள பகுதி கீழ்க்கரைப் பூந்துறை நாடு என்றும் அழைக்கப்பட்டது.

சேதி சொல்லும் சிற்பங்கள்-27

கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் நடுநாயகமாக திருச்செங் குன்றூர் எனப்படும் திருச்செங்கோடு விளங்குகிறது. செங்கோட்டு மலையின் உச்சியில் திகழும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலின் தற்போதைய கட்டுமான அமைப்புகளில் பெரும் பகுதி, விஜய நகரப் பேரரசர்களின் ஆட்சிக் காலத்தில், கொங்கு தேசத்தை ஆட்சி செய்த கட்டிமுதலிகள் செய்த திருப்பணிகளாகும்!

'திருச்செங்கோட்டு திருப்பணி மாலை’ எனும் நூல், சதாசிவ பண்டிதர் என்பவரால் இயற்றப்பட்டது. இந்த நூலில், மோரூர் காங்கேயர்கள் பலரால் இந்தக் கோயிற் பணிகள் நிகழ்ந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

செங்கோட்டு வேலவன் சந்நிதிக்கு முன் உள்ள பெருநிலை மண்டபம், கொங்கு நாட்டுச் சிற்பக் கலையின் உன்னதத்தை வெளிப்படுத்துகிறது. இதன் விதானத்தின் நடுவில், அலர்ந்த தாமரை மலர் விரிந்திருக்க, அதைச் சுற்றி வட்டமாக இரண்டு வரிசைகளில் கிளிகள் அமர்ந்தபடி தாமரை மொட்டைக் கொத்துகிற காட்சி, தத்ரூபத்தின் உச்சமாகத் திகழ்கிறது.

அருகில், அச்சு அசல் மரச் சட்ட வேலைப்பாடுகள்போல் கல்லில் வடிக்கப்பட்டு, அவற்றுக்கு இடையே தெய்வத் திருவுருவச் சிற்பங்கள், புராணக் காட்சிகள், கிரக தெய்வங்கள், கல்லால் ஆன தொங்கும் சங்கிலி என நம் கண்ணையும் கருத்தையும் கவரும் சிற்ப நுட்பங்களை ரசிப்பதற்கு ஒருநாள் போதாது. விதானம்தான் இத்தனை அழகு என்று பார்த்தால், அதைத் தாங்கி நிற்கும் தூண்களில் திகழும் சிற்பங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவருவதாகத்  திகழ்கின்றன.

சேதி சொல்லும் சிற்பங்கள்-27

அந்தத் தூண்களில் திகழும் அந்த மண்டபத்தை எடுத்த கொடை யாளர்களின் உருவங்கள், ஊர்த்துவதாண்டவராக ஆடும் சிவபெருமான், அவருடன் ஆட முடியாமல் சோர்ந்து நிற்கும் ஸ்ரீகாளிதேவியின் திருவடிவம், ரதி மன்மதன் மற்றும் குதிரை வீரர்களின் சிற்பங்கள் நம் உள்ளத்தை நிச்சயம் கொள்ளை கொள்ளும்!

தென்புறமும், மேற்புறமும், வடக்குப் புறமும் இருக்கிற மண்டபங்களும் சிற்பக் களஞ்சியங்களாகவே அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மண்டபங் களுடன் இணைந்து தனித்தனி ஆலயங்களின் புறச்சுவர்கள் முழுவதும் சிற்பக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆலயத்தின் அதிஷ்டானம், பித்தி எனும் வகையில் செய்யப்பட்ட சுவர் ஆகியவற்றில் வேலைப்பாடுகளுடன் கொண்ட சிற்பங்கள், கலையின் பிரமாண்டத்தை எடுத்துக்காட்டுகின்றன.

சேதி சொல்லும் சிற்பங்கள்-27

இன்னொரு விஷயம்... இங்கே இசைக் கலைஞர்களின் சிற்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வடிக்கப்பட்டுள்ள விதம் மிகச் சிறப்பு! பறை எனப்படும் தோல் கருவியை இயக்கும் கலைஞனின் உருவமும், நின்றபடியே வீணை வாசிக்கும் வல்லான் ஒருவனின் உருவமும் கவனிக்கத்தக்கவை! அதிஷ்டானத்தின் அடித்தளத்தில் உள்ள கண்டம் எனப்படும் பகுதியில் பூ வேலைப்பாடுகளும், கொடிகளும் அமைந்துள்ளன. அவற்றுக்கு ஊடே அன்னப்பறவைகள், கிளிகள், ஆங்காங்கே கோபுரக் கட்டுமானம் எனப் பலவகையான அழகுப்படைப்புகளை சிற்பங்களாக வடித்த சிற்பிகளுக்கு, மன்னர்கள் நிச்சயம் வெகுமதி தந்து கௌரவித்திருப்பார்கள்.

பத்மம் எனும் அதிஷ்டான கட்டுமானப் பகுதியின் மேல் பலவகையான தெய்வ உருவங்களும், சிறு கோயில் அமைப்புகளும், குரங்கு முதலான விலங்கினங்களும் சிற்பங்களாகக் காணப்படுவது புதுமையாக உள்ளது. அமர்ந்த கோலத்தில் திகழும் முனிவர்கள், தலைக்கு மேல் கையை உயர்த்தியபடி நின்ற கோலத்தில் தவம் மேற்கொள்ளும் ரிஷிகள், நடனமாடும் கலைஞர்கள், குள்ள பூதங்கள் என எழிலார்ந்த சிற்பங்களை கலையழகுமிக்க கோஷ்டமாடங்களுக்கும் கும்ப பஞ்சரங்களுக்கும் இடையிடையே காண முடிகிறது.

ஓரிடத்தில்... மகர தோரண வாயிலின் கீழ் வில், அம்புடன் ஸ்ரீராமன் நிற்க, வெளியே ஒருபுறம் மண்டியிட்டு அமர்ந்து வணங்கும் ஸ்ரீஅனுமனையும், எதிர் திசையில் ஸ்ரீகருடனையும் அழகிய சிற்பங்களாகக் கண்டு ரசிக்கலாம். அரசன் ஒருவன் தன் ஆசனத்தில் அமர்ந்திருக்க, அவனுக்கு முன்னே நிற்கிற தொப்பி அணிந்த மேலை நாட்டவர் ஒருவர் அரசனுக்கு மாலை அணிவிக்க முயலும் வரலாற்றுச் சிற்பக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. அதேபோல், கோயில் ஒன்றில் ஸ்ரீவராஹி தேவி அமர்ந்திருக்க, ஒரு பூதம் சங்கு ஊத, இன்னொரு பூதம் தாளம் தட்ட... அந்த லயமும் முகத்தில் உள்ள பாவனைகளும் வெகு அற்புதமான சிற்ப நுட்பத்துக்குச் சான்றாக உள்ளன.

திருவாசி நடுவே, மாலை அணிவிக்கப்பட்ட சிவலிங்கம் திகழ, அருகில் பாம்பாட்டி ஒருவன் முன்னே படமெடுத்தாடும் நாகத்தின் சிற்பமும் இங்கு உள்ளது. இறைத் தன்மையால் செங்கோடு எவ்வளவு உயர்ந்து செம்மாந்து நிற்கின்றதோ, அதே அளவு கொங்கு நாட்டுச் சிற்பக்கலையும் உயர்ந்து நிற்கிறது என்பது உண்மை.

கொங்கு தேசம் என்றில்லாமல், தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள ஆயிர மாயிரம் ஆலயங்களில் லட்சக்கணக்கான சிற்பங்களையும், அவற்றின் நுட்பங்களையும் கண்டு ரசிக்க, இந்த ஒரு ஜென்மம் நிச்சயம் போதாது!

(நிறைவுற்றது)