சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

'பாட்டும்... பாவமும்!’வீயெஸ்வி, ஓவியம்: சசி

மீபத்தில் இசைக் கலைஞர் ஒருவரைச் சந்தித்தேன். ஃபீல்டில் மிகவும் பிரபலம் அவர். சீஸன் அல்லாத நாட்களிலும், உள்ளூரிலும் வெளியூரிலுமாக மாதம் இருபது கச்சேரிகளுக்குக் குறையாமல் பாடிக் கொண்டிருப்பவர். கொஞ்சம் ஃபிரீயாக இருப்பதுபோல் தோன்றினால், விமானம் ஏறி பிசினெஸ் கிளாஸில் உட்கார்ந்து டாலர் தேசத்துக்குப் பறந்துவிடுவார்.

''தியாகராஜர் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?'' என்று அவர் வாயைக் கிளறினேன்.

'நீ என்ன லூஸா?’ என்பது போல் என்னை பார்த்தவர், பிறகு ''மகான் சார் அவர்... அந்த மகானுபாவுலு போட்டுவிட்டு சென்ற ஸ்வரப் பிச்சைலதான் எங்க காலம் ஓடிக்கிட்டு இருக்கு' என்றார்.

கலகல கடைசிப் பக்கம்

''சரி... போன ஜனவரில திருவையாறு ஆராதனைக்குப் போயிருந்தீங்களா? எல்லா வித்வான்களோடயும் உட்கார்ந்து பஞ்ச ரத்தினங்கள் பாடி அஞ்சலி செலுத்துனீங்களா...?''

''அது ரொம்ப கமர்ஷியலா போயிடுச்சு சார். டி.வி-ல லைவ் ரிலே பண்றாங்கன்னு பாடகிகள் அத்தனை பேரும் முகம் பூராவும் மேக்கப் அப்பிண்டு, இருக்கற நகையெல்லாம் போட்டுக்கிட்டு முதல் வரிசைல உட்கார்ந்துடறாங்க. டி.வி. கேமிராவும் அவங்களையே வட்டம் அடிச்சிக்கிட்டு இருக்கு. கைக்காசு செலவழிச்சுட்டு போயி, பின் வரிசைல உட்கார எனக்குப் பிடிக்கல...' என்றார்.

அடுத்து நான் கேட்டேன்... ''சரி! இங்க சென்னைல மார்ச், ஏப்ரல் வரைக்கும் ஒவ்வொரு சபாவும் தனித்தனியா தியாகராஜர் ஆராதனை கொண்டாடுதே, ஏன்?'

'இதை நீங்கள் சபாகாரங்களைத்தான் கேட்கணும்...'

''நீங்கள் எல்லா சபாவுக்கும் போய் கலந்துக்கறது உண்டா?'

''அதுக்குத்தான் இளைய தலைமுறை இருக்கே. அவங்க போகலேன்னா அடுத்த டிசம்பர்ல தேதி கிடைக்காது. அதனால போவாங்க. தேங்காய் மூடிக்காகவெல்லாம் நான் போறதில்லே'' என்றார். நானும் விடுவதாக இல்லை. ''போகட்டும்... சென்னைல இருக்கற எல்லா வித்வான்களும் ஒண்ணு சேர்ந்து, ஒருநாள் ஒரே இடத்துல கூடி பஞ்ச ரத்னங்கள் பாடி தியாகபிரம்மத்துக்கு அஞ்சலி செலுத்தலாமே?'' என்றேன்.

''அதெல்லாம் முடியாது சார். அதுக்கு ரெண்டு காரணம் இருக்கு. ஒண்ணு, எங்களுக்குள்ளே ஒற்றுமை கிடையாது. அப்படியே பாடினாலும் எங்களுக்கு எவன் சார் பைசா கொடுப்பான்?' என்று சற்று குரலை உயர்த்திச் சொன்னார் இசைக் கலைஞர்.

''கடைசியா ஒரு சந்தேகம்...'' என்றேன்.

''கேளுங்க..''

'’உங்களுக்குப் பிடிச்ச தியாகராஜர் கீர்த்தனை எது?''

''நிதி சாலா சுகமா, ராமுநி சந்நிதி ஸேவ சுகமா...'' என்று ராகமாகவே பாடிக்காட்டியவர், ''இதற்கான அர்த்தம் என்ன தெரியுமோ?'' என்று கேட்டுவிட்டு, ''ஹூம்... உங்களுக்கு எங்கே தெரியப் போறது? நானே சொல்றேன்...'' என்றபடி விவரித்தார்.

அவர் சொன்ன அர்த்தம்: ''செல்வம் முதலான விஷயங்கள், மிகுந்த இன்பத்தை அளிக்குமா அல்லது ஸ்ரீராமனின் சந்நிதியில் சேவை செய்வது சுகம் தருமா?''

இது எப்படி இருக்கு?!