சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

குபேரனுக்கு அருளிய சிவனுக்கு மகா கும்பாபிஷேகம்..!

நல்லது நடந்தது - 1

மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய கோயில் ஒன்று, திண்டிவனம் அருகில், அன்னம்புத்தூரில் உள்ளது. அடிமுடி தேடிப் புறப்பட்டு, பொய் சொல்லி மாட்டிக்கொண்டு சாபம் பெற்ற பிரம்மா, சிவனாரை வணங்கி வழிபட்ட தலம் என்பதால், பிரம்மாவின் வாகனத்தை நினைவுபடுத்தும் வகையில் அன்னம்புத்தூர் என்றானது. இது திருவண்ணாமலைக்கு நிகரான தலம் என்று, கடந்த 28.12.10 அன்று 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் எழுதியிருந்தோம்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - புதுச்சேரி சாலையில், சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது வரகுப்பட்டு. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் 4 கி.மீ. பயணித்தால், அன்னம்புத்தூர் கிராமத்தை அடையலாம். இங்கே ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீநிதீஸ்வரர்.

குபேரனுக்கு அருளிய சிவனுக்கு மகா கும்பாபிஷேகம்..!

ஒருகாலத்தில் பிரமாண்டமாக இருந்த ஆலயம், சகலத்தையும் இழந்து, லிங்கத் திருமேனி மட்டுமே வெட்டவெளியில் கிடப்பதையும், தற்போது ஓலைக் கொட்டகையில் சிவலிங்கத்தை வைத்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தோம்.

1008-ஆம் வருடம், தன்னுடைய 23-வது ஆட்சியாண்டில், அன்னம்புத்தூர் கோயில் ஸ்ரீநிதீஸ்வரருக்கு ராஜராஜ சோழ மன்னன் திருப்பணி செய்ததைத் தெரிவிக்கிற கல்வெட் டுகள் உள்ளன. ஆனால், இப்போது கோயிலே இல்லாமல், சந்நிதிகளும் பிராகாரங்களும் இல்லாமல், மூலவர் மட்டுமே இருப்பதைக் கவலையுடன் குறிப்பிட்டிருந்தோம்.

'நிதிகளுக்கெல்லாம் தலைவரான குபேரனுக்கு அருளியதால் ஸ்ரீநிதீஸ்வரர் எனும் திருநாமத் துடன் சிவனார் அருளும் இந்தக் கோயில் திருப்பணிக்கு நாம் தரும் ஒவ்வொரு காசும் பல நூறு காசுகளாக, பெரும் செல்வமாக வளர்ந்து நம்மை வாழ வைக்கும்’ என்று எழுதியிருந்தோம்.

இதைப் படித்துவிட்டு, ஸ்ரீநிதீஸ்வரருக்கு நிதியைத் தர முன்வந்தார்கள் வாசகர்கள். சிவனார் சந்நிதி, அம்பாள் விக்கிரகம்,   அர்த்த மண்டபம், மகா மண்டபம், பிராகாரம் என அமைப்பதற்கு ஆயிரக் கணக்கான வாசகர்கள் முன்வந்தார்கள்.

''சக்திவிகடன் வாசகர்கள் அள்ளித் தந்த நிதியைக் கொண்டு, திருப்பணியைத் துவக்கினோம். பிரதோஷ பூஜைகளும், ஐப்பசி அன்னாபிஷேகமும், மாசி மகா சிவராத்திரி விழாவும் விமரிசையாக நடந்தேறின. சந்நிதிகளைக் கட்டும் பணியில் இறங்கினோம். அப்போதுதான், சக்திவிகடன் வாசகர்கள் மூலம் இன்னும் ஏராளமான நிதி சேர்ந்திருப்பதை அறிந்து, நம்மூர்க் கோயிலை ஏன் முழுக்க முழுக்கக் கருங்கல் கோயிலாக, கற்றளிக் கோயிலாகவே கட்டக்கூடாது என யோசித்தோம்'' என்கிறார், ஸ்ரீநிதீஸ்வரர் ஆலயத் திருப்பணி வளர்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த எழில்வண்ணன். அதையடுத்து, கோயிலின் நிர்வாகிகளான சண்முகம், தெய்வநாயகம், ப்ரியா, முருகானந்தம் மற்றும் ஊர்மக்கள் அனைவரும் இதைக் கற்றளிக் கோயிலாகக் கட்டுவது எனத் தீர்மானித்தனர். இதோ... கருங்கல் திருப் பணிகள், அதில் அழகழகாய் சிற்ப நுட்பங்கள், கோஷ்டத்தில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் என புதுப்பொலிவுடன் திகழ்கிறது ஸ்ரீநிதீஸ்வரர் ஆலயம்.

குபேரனுக்கு அருளிய சிவனுக்கு மகா கும்பாபிஷேகம்..!

''எங்கிருந்தெல்லாமோ வந்து கோயிலுக்கு நிதி தந்தார்கள். எந்த எந்த ஊர்களில் இருந்தெல்லாமோ வாசகர்கள் குடும்பத்து டன் வந்து தரிசித்தார்கள். இங்கு வந்து வேண்டிக் கொண்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கிறது. மருத்துவப் படிப்புக்கான சீட் கிடைத்திருக்கிறது. வழக்கில் ஜெயித்திருக்கிறார்கள். வீடு, மனை வாங்குகிற யோகம் வந்திருக்கிறது. நிம்மதியும் ஆனந்தமுமாக அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீநிதீஸ்வரர். இவை அனைத்துக்கும் வழிவகுத்துக் கொடுத்த சக்திவிகடனுக்கு நன்றி!'' என்று நெகிழ்ச்சியுடன் சொல் கிறார்கள் அன்னம்புத்தூர் கிராம மக்கள்.

வருகிற 9.4.14, புதன்கிழமை காலை 10 முதல் 11 மணிக்குள் ஸ்ரீநிதீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக பூஜைக்கு பெயரும் புகழும் பெற்ற பிள்ளையார்பட்டி கோயில் பிச்சை குருக்களும் அவர்தம் சகாக்களுமாக நான்கு கால பூஜைகள் செய்து, கும்பாபிஷேகத்தை நடத்துகிறார்கள்.

ஸ்ரீநிதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளுங்கள். உங்கள் குடும்பம் மொத்தத்தையும் ஆசிர்வதித்து அருளக் காத்திருக்கிறார் ஸ்ரீநிதீஸ்வரர்.